[youtube]https://www.youtube.com/watch?v=pQj12Y7XPno[/youtube]
நிகழ்காலம் என்ற ஒன்று இருப்பதாலேயே இறந்தகாலம் இறந்து விடுவதில்லை. நினைவுகள் ஊறித்திளைக்கும் ஆன்மாவில் தான்
வேர்க்கொண்டு மலர்ந்த பூக்கள் என்றும் வாடுவதில்லை. அப்படித்தான் ஒரு மழைக்கால அந்தியில் ஒரு மஞ்சள் நிற உடையில் எப்போதோ நான் தவறவிட்ட அவள் கடந்த காலத்தின் நீல நிறப் பூவை எடுத்து வந்திருந்தாள். சொல்லப்போனால் அந்த சந்திப்பிற்கு நான் எந்தத் திட்டமும் இடவில்லை. திடீரென நேர்ந்துவிட்ட ஒரு விபத்து போல அந்த சந்திப்பும் நிகழ்ந்தது என்றும் வாடாத அந்த நீல நிறப் பூவை எனக்கு முன்னால் இருந்த மேசையின் மீது வைத்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அருகே இருந்த கண்ணாடி குவளையில் நான் குடித்து மீதம் வைத்திருந்த தண்ணீரை எடுத்து மென்மையாக பருகினாள். நேரடியாக என் கண்களை பார்த்து இவ்வளவு நாள் நான் எங்கிருந்தேன் ஏன கேட்க மாட்டாயா.. என்பதுபோல அவளது விழிகள் கேட்பதாக எனக்குத் தெரிந்தது. அந்த விழிகளில் விழுந்து மீண்டும் ஒரு பிறவி எடுத்து வாழ்வதென்பது இனி என்னால் முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்தாலும் முடிவிலியான அந்த பகடை ஆட்டத்தில் எப்படியேனும் நான் ஈடுபட்டு விடுவேன் என அவளுக்கும் தெரிந்தது. ஆனாலும் நான் கவனமாக இருப்பதாக அவளுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக..
“காலம் நிறைய மாறிவிட்டது” என்றேன்.
“ஆனால் நீ மாறவில்லை” என்றாள்.
இனி ஆயுதங்களை பயன்படுத்தி விட வேண்டியதுதான் என்பதற்காக அவள் ஆன்மாவிற்கு என நான் தனித்தே தயாரித்து வைத்திருந்த ஒரு குறுங்கத்தி பதிலை அவளிடம் இவ்வாறாக சொன்னேன். “இப்போது இன்னொருவள் என் அகம் புறம் என அனைத்தையும் நிரப்பி இருக்கிறாள்” என்றேன். அவள் சற்றே அலட்சிய சிரிப்போடு.. “ஆனால் நீ என்னவோ தளும்பிக்கொண்டு தான் இருக்கிறாய்” என்றாள்.
“உனக்கும் வயதாகி விட்டது போல” என்று சொல்லிப் பார்த்தேன்.
“இன்னும் நமக்குள் ஜோடிப் பொருத்தம் தான்” என சொல்லி விட்டு சிரித்துக்கொண்டாள்.
“எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று நேரடியாக அவள் மார்பில் என் கத்தியை சொருகினேன். அதை துளி கூட பொருட்படுத்தாமல் “அவர்களிடமும் நீ என் சாயலை தான் தேடிக் கொண்டிருப்பாய்” என எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.
“ஆனால் நீ பார்த்தவன் எப்போதோ இறந்து விட்டான்” என எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னேன். அவளோ என் மீது பார்வையை விலக்காமல்.. “அவனை என்னைத் தவிர யாராலும் கொல்ல முடியாது..” என்று விசித்திரமாக பதிலளித்தாள். நான் என் தலையைத் தாழ்த்தியவாறே.. “இப்போது நான் முழுவதுமாக வேறு மனிதன்” என்று உறுதியான குரலில் அவளுக்கு சொல்வது போல எனக்கும் சொன்னேன்.
” என்னை முதலில் நேருக்கு நேராக பார். மிக எளிதாக நான் அவனை அடைந்து விடுவேன்” என்று அவள் சொன்னாள் .
“இதுவெல்லாம் கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டும்தான் சாத்தியம்” என்றேன். “அவரவர் கதைகளைத்தான் பல காட்சிகளாக படம் பிடித்து மீண்டும் மீண்டும் திரைப்படங்களாக எடுக்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள்” என்றாள்.
“இறுதியாக என்னதான் வேண்டும்..?” என்கிற மன்றாடலில் என் கைகள் நடுங்கியவாறே தழுதழுத்த குரலில் அவளிடம் கேட்டேன்.
எனக்கு வேண்டியது ஒரு உண்மையின் மலர் என்றாள்.
“நான் இல்லாத இக் காலங்களில் எப்போதாவது என்னை மறந்த நேரம் என்ற ஒன்று உண்டா..” என தலை கவிழ்ந்த என் முகம் பார்த்து தலைச்சாய்த்தவாறே கேட்டாள்.
கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு..”உண்மையை சொன்னால் நீ எழுந்து போக மாட்டாய் என நான் அஞ்சுகிறேன்”.. என்றேன்.
“இது போதும்”. என்றாள் சிரித்துக்கொண்டே.
நான் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு நீல நிறப் பூவைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.