மனிதனின் மிகப்பெரிய பலமும், பலவீனமும் அவனது மறதி தான் என்கிறார் எமர்சன். எத்தனையோ வலிமிக்க நினைவுகளை, காயங்களை மனித மனம் மறதி என்கின்ற மருந்தினால் காலத்தின் துணைக் கொண்டு ஆற்றுப் படுத்துகிறது. ஆனாலும் சில நினைவுகள் வாழ்நாள் முழுக்க நம்முள் அழிக்கமுடியாத படிமமாய்பதிந்து கிடக்கின்றன.குறிப்பாக அண்ணன் சீமான் பற்றிய நினைவுகள் கடந்த சில நாட்களாக என் நெஞ்சில் அலை மோதிக் கொண்டிருக்கின்றன.
எதனாலும் மறக்கமுடியாத அந்த 2009 இன அழிவு நாட்களும், அந்த நாட்களில் அண்ணன் சீமான் அவர்களின் வகி பாத்திரமும் மறக்கமுடியாத காலத்தால் கடக்க முடியாதவை.உண்மையில் சீமான் தனி மனிதனாகத் தான் வந்தார். அவர்தான் முன்னால் நின்றார்.ஐந்து முறை தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைப்பட்டு, அடக்குமுறைகளுக்கு உள்ளாகி, தனது வருமானத்தை இழந்து, எதிர்காலத்தை அழித்து, உதிரமென தன் உடலில் வழிகிற வியர்வையால் அவர் கட்டியெழுப்பிய வலிமையான கோட்டை தான் நாம் தமிழர் கட்சி.இதில் எங்கள் எவருக்கும் பங்கு இல்லை. அவரோடு நாங்கள் நிற்கவில்லை. சொல்லப்போனால் அவர் நின்றிருந்த காலங்களில் நாங்கள் இல்லவே இல்லை. அவர் முன்னால் நின்றார். சிறைப்பட்டார். வதைப்பட்டார். தெருத்தெருவாய் அலைந்து முழங்கித் தீர்த்தார். பிறகுதான் நாங்கள் பின்னால் போய் நின்றோம். அப்போதும் அவர் முன்னால் தான் நின்றார்.இப்போதும் அவர் முன்னால் தான் நின்று கொண்டிருக்கிறார்.
ஏதேதோ ஊர்களில், முகமற்ற, முகவரியற்ற எங்களை எல்லாம் தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்து, தான் அடைந்த வெளிச்சத்தில் எங்களுக்கும் பங்கு கொடுத்து, எங்களை மேடையேற்றி, தன் நேரத்தை எங்களுக்கு தாரைவார்த்து எங்கள் ஒவ்வொருவரையும் அண்ணன்தான் உருவாக்கினார்.என்னைப் புகழ்ந்து பேசாதே. பேச வந்த கருத்தினைத் தெளிவாக பேசு.வாழ்க முழக்கம் போடாதே. தேசியத் தலைவரைப் போற்று.சால்வை அணிவிக்காதே. புத்தகங்கள் அளித்து அறிவினை விரிவு செய் என எங்களுக்கு வகுப்பெடுத்த எங்களது ஆசான் அண்ணன் சீமான்.ஐநா மன்றம் வரை எங்களில் பலரை அவர்தான் அனுப்பி வைத்தார். பேச வைத்தார். வெளிச்ச வீதிகளில் எங்களை உலவ வைத்தார். புகழ் மழையில் எங்களை நனைய வைத்தார். அனைத்தும் அவர் எங்களுக்கு அளித்தது.அவருக்கான மேடையில் எங்களுக்கு இடம் அளித்தார். எங்களைப் பேச வைத்து அழகு பார்த்தார். நாங்கள் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது கண்கள் பெருமிதத்தால் ஒளிரும். அது தாய்மைக்கே உரிய பண்பு. எங்களை அவையத்து முந்தி இருக்கச் செய்துவிட்டு, நான் தலைவர்களை உருவாக்க வந்த எளியவன் என தன்னைத்தானே அவர் அறிவித்துக் கொண்டார்.
இப்போது புதிதாக “சீமானோடு நிற்கிறோம்” என்றெல்லாம் முழக்கங்கள் கேட்கின்றன. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும். நாம் சீமானோடு நின்றோமா… அவரைப்போல சிறைப்பட்டு வாழ்வினை இழந்து வதைபட்டோமா..அவரைப்போல் வழக்குகள் வாங்கி நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து கொண்டிருக்கிறோமா…உண்மையில் மனசாட்சி என்ற ஒன்று நமக்கு இருந்தால் அது சொல்லும்.நாம் சீமானுடன் நிற்கவில்லை. சீமான் பின்னால் நின்றோம் என.அனைத்து வதைளையும் அவர் வாங்கிக் கொண்டு சிறகுகளால் பொத்தி பாதுகாக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் போல தாய்க்கோழியாய் நம்மை பாதுகாத்த அவரது தாய்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா..நாம் மட்டும்தான் கட்சியில் இருக்கிறோமா..
எங்கோ சுடு பாலைவனத்தில் எண்ணெய்க் கிணற்றில் நின்றுகொண்டு, குளிர் மிகுந்த நாட்டில் நட்ட நடு இரவில் ஒரு விடுதியில் வேலை பார்த்துக்கொண்டு, இன்னும் எங்கெங்கோ தொலைதூர நாடுகளில் அடையாளங்கள் தெரியாத மனிதர்களாக வாழ்ந்து கொண்டு சொந்த ஊரில் புலிக்கொடி ஏற்றியதை பற்றியும், அண்ணன் சீமானை பற்றியும் பேசிக் கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையை “ஊடகங்கள்” மூலம் உடைக்க நினைப்பதை நாம் எப்படி ஏற்பது..??நமக்கு என்ன உரிமை இருக்கிறது.. மேடை போட்டு கொடுத்தார்கள். மக்களைத் திரட்டி நிறுத்தினார்கள். அது அனைத்தும் அண்ணன் சீமானுக்காக.. தலைவர் பிரபாகரனுக்காக.நாம் ஏறிப் பேசியதை தவிர , வெளிச்சத்தில் நின்றதை தவிர நாம் செய்த வேலை என்ன..??அமைதியாக ஒரு காலகட்டத்தை கடந்து இருந்தால் அனைத்துமே சரியாகி இருக்குமே.. அதை உணர்ந்து தானே அண்ணன் மௌனமாக இருந்தார். அந்த மௌனத்திற்கு பின்னாலும் அவர் சுமந்த வலிகளை நாம் அறிவோமா..?? எத்தனையோ நாடுகளுக்கு அவர்தானே அனுப்பினார்.. நம்பிக்கைகளோடு நம் தம்பிகளும் வளரட்டும் என நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அனுப்பி வைத்தவர் அண்ணன்தானே..அண்ணனை மிக இழிவுபடுத்தி சுந்தரவள்ளி, சவுக்கு சங்கர் மற்றும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோர் மூலமாக மூன்றாம்தர சொற்களில் வந்த விமர்சனங்களுக்கு, வசவுகளுக்கு மௌனத்தாலும், “மரியாதைக்குரிய” சொற்களாலும் விருதளித்து மகிழ்ந்தவர்கள் யார்..??ஜூனியர் விகடனில் அண்ணனை மிக இழிவுபடுத்தி வந்த அந்த மூன்று பக்க மொட்டை கடிதத்திற்கு நேர்மையோடு நாம் ஆற்றிய எதிர்வினை என்ன..?? அண்ணனையும், அமைப்பையும் நேசிப்பவர்களாக இருந்தால் அண்ணனைப் பற்றி இழிவுபடுத்திய அந்தக்கடிதத்தோடு உடன்படுகிறேன் என்ற வார்த்தைகள் உள்ளே இருந்து வந்திருக்குமா..??கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் புகழுரைகள் நம்மை புகழ்வதை காட்டிலும்,அண்ணனை இழிவுபடுத்துகிறது என்று நாம் சிந்தித்திருந்தால் அவர்களுடன் ‘எனக்கு பிடிச்சிருக்கு’ என இணைந்து நின்று இருப்போமா..கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. சரி.விலகவும் இல்லை. சரி .ஒரு உட்கட்சி உரையாடலாக, நமக்குள் இருக்கிற ஒரு பிரச்சினையை பொது வெளிக்குக் கொண்டு வந்து ஊரறிய செய்வதன் உள்நோக்கம் என்ன..??நமக்கு எத்தனை வாய்ப்புகளை அண்ணன் கொடுத்தார்..?? எத்தனை இரவுகளில் நமக்கு அவர் எத்தனை மொழிகளில் அறிவுறுத்தினார்..??
நமது ஆன்மா நேர்மையானதாக இருந்திருந்தால் இந்த நேரத்தில் நாம் பேசாமல் அமைதியாக இருந்திருப்போம். கடந்திருப்போம்.சொல்லப்போனால் அவைகளே பிரச்சனைகளை தீர்க்கின்ற வழிகளாக கூட அமைந்திருக்கும். உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினை என்ற ஒன்றே இல்லை. ஒன்றே ஒன்று இருக்கிறது. அது “தான்” என்ற எண்ணம். எல்லா நேரத்திலும் நாம் பேசும் பொருளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கால ஓட்டத்தின் சில தருணங்களில் நாம் அமைதியாகத்தான் இருக்கவேண்டும். அந்த அமைதி தான் அந்த சூழலுக்கான பதில் என்கிற பக்குவம் அண்ணனிடம் இருந்தது. நம்மிடம் இருந்ததா..??இந்தப் பதிவையும் நான் எழுதுவதற்கு ஒரு வேளை அண்ணன் சீமான் என்னை கண்டிக்கக் கூடும். ஆனாலும் இனிமேலும் பேசாமல் இருப்பது என்னை நானே தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும்.
2011 நாகப்பட்டினம் இளைஞர் பாசறை மேடை எனக்கு நினைவுக்கு வருகிறது. எந்த அடையாளமும் இல்லாத நம்மை முன்னிறுத்தி “இதோ இவர்கள் என் தம்பிகள்” என நம்மை அறிமுகப்படுத்திய அந்தத் தாய்மைக்கு முன்னால் என்றென்றும் பற்றுறுதியோடு நிற்பது ஒன்றும் தவறல்லவே. அது என் பிறப்பின் கடமை. பெருமை.அழைத்துப் பேசி இருக்கலாமே என சிலர் சொல்கிறார்கள். எத்தனை முறை அண்ணன் நம்மிடம் எடுத்துச் சொல்லி இருப்பார்.. ஒவ்வொரு முறையும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோர் அண்ணனை இகழ்ந்து எழுதும் பதிவுகள் குறித்து அந்த நேரத்தில் எழுதப்பட்ட விளக்கம் என்ன..?? அந்தப் பதிவு எழுதியவர்கள் அனைவரும் மறுபுறம் யாரை புகழ்ந்து எழுதினார்கள் என்பது உலகத்திற்குத் தெரிந்ததுதான். அப்படி புகழ்ந்து எழுதும் போதும் கூட என் அண்ணனைப் பற்றி எழுதாதே என்று ஒற்றை வார்த்தை வந்திருக்குமா..??இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். இனி பேசி ஒன்றும் இல்லை. அண்ணனும் மனிதர்தானே. நம்மை தம்பிகளாக அவரும் தானே தாய்போல உயிரென நேசித்தார்.. அவருக்கும் மனது இருக்கிறதே.. வலிக்கும் தானே.. எத்தனைதான் அவரும் தாங்குவார்..??அதனால்தான் அவர் அமைதியாகிப் போனார்.
என்னைப் பொறுத்தவரையில் அவரது அந்த அமைதி மிகுந்த மரியாதைக்குரியது. கண்ணியமும், கவனமும் கொண்டது.நான் பெற்ற உயரம், நான் அடைந்த வெளிச்சம் அனைத்தும் அண்ணன் சீமான் தந்தது. அவர்தான் என்னை உருவாக்கினார். அவரைத் தவிர நான் நம்பிக்கை கொள்வது எதுவும் இல்லை.மீண்டும் மீண்டும் என்னை நானே உறுதிப்படுத்திக்கொண்டு,என் ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து சொல்கிறேன்.நான் ஒருபோதும் அண்ணன் சீமானோடு நிற்கவில்லை.அவர் பின்னால் நிற்கிறேன்.
நாம் தமிழர்.