முகத்தில் மெல்லிய வெப்பம் பரவ நான் கண் விழித்தேன். விடிந்திருந்தது. அருகில் நீ இல்லை.
எழுந்து பார்த்தபோது அறைக்கு வெளியே பால்கனியில் நின்று கொண்டு கையில் ஒரு தேனீர் குவளையோடு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாய்.
இமைக்காத விழிகளோடு உறைந்திருந்த உன் பார்வை ஏதோ ஒரு இசை குறிப்பை எனக்கு நினைவூட்டியது. பெரும்பாலும் நீ கவனிக்காத பொழுதெல்லாம் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான். சாப்பிடும்போதும், தூரத்தில் எங்கோ நின்று கொண்டு திரும்பிப் பார்க்கும் போதும், சில சமயங்களில் நள்ளிரவு விழிப்பின் போதும் நீ பார்த்த பார்வைகளை எல்லாம் நான் இசைக்குறிப்புகளாக மட்டுமே சேமித்து வைத்திருக்கிறேன். அவை பின்னிரவு கனவுகளில் என் காதோரங்களில் கேட்பதாக உணருகிறேன்.
இப்போதெல்லாம் என் சட்டையை என்னை விட நீதான் அதிகம் அணிந்து கொள்கிறாய். என் இளநீல சட்டையை அணிந்துகொண்டு நீ கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது உன்னை என்னவோ கடலின் ஒரு பிரதியாக எனக்கு உணர்த்தியது.”என்ன.. காலையின் விடியலை பார்த்துக் கொண்டு இருக்கிறாயா..” என்று கேட்ட என்னை பார்த்து “இது காதலின் விடியல்” என்றாய்.
உன்னை பின்புறமாக அணைத்து கழுத்தில் முகம் புதைத்து கண் மூடினேன். “அதற்குள் உனக்கு இரவு வந்து விட்டது..” என்று சொல்லி சிரித்தாய். “ஆமாம்.. நிலா நட்சத்திரங்கள் கூட எனக்குத் தெரிகின்றன..” என்றேன் நான்.”ஒரு காலைப்பொழுதில் இரவை மிக எளிதாக கொண்டு வந்து விடுகிறாய்..” என்று சொல்லிக்கொண்டே என்னை விட்டு விலகி நின்றாய்.நீ கூடத்தான் நள்ளிரவில் கூட ஒரு விடியலை மிக எளிதாக கொண்டு வந்து விடுகிறாய் என நான் சிரித்துக்கொண்டே சொன்னதற்கு செல்லமாய் என் முடி கலைத்தாய்.
“ஏன்.. நமக்குள் பிரச்சனை.. நம்மைப் பொறுத்தவரை இரவும் இல்லை.. பகலும் இல்லை.. அவற்றை நாம் தான் உண்டாக்கிக் கொள்கிறோம்.” என்று நீ சொன்ன போதுஅந்த காலைப்பொழுதில் நிலாவும் ஒரே ஒரு நட்சத்திரமும் இருந்தது தற்செயலானதல்ல.