1991 ஆம் வருடம் என நினைக்கிறேன். புகழ்பெற்ற நடிகர் விஜய் அவர்களின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் நண்பர்கள் என்ற ஒரு திரைப்படம் வந்தது.
அக்கால கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணி நகைச்சுவை தளத்தில் உச்சத்தில் இருந்தது. பார்ப்பதற்கு அப்பாவித்தனமான, இயல்பு வாழ்க்கையில் நாம் அடிக்கடி எதிர்கொள்கிற அவசரக் குடுக்கை போன்ற கண்ணாடி போட்ட அந்த இளைஞன் “நண்பர்கள்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தான். அதற்கு முன் அந்த முகத்தை கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் கண்டிருக்கிறேன்.
இரண்டு படத்திலும் சிறிய கதாபாத்திரங்கள் தான். தான் தோன்றும் இடங்களில் எல்லாம் பார்வையாளர்களிடம் வெடி சிரிப்பை வரவழைத்த அந்த இளைஞன் அடுத்த சில வருடங்களில்
உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாறிப் போனான்.அந்த இளைஞன் தான் நடிகர் விவேக். திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் நடிகர் விவேக் தனித்துவமானவர். Body shaming என்று சொல்லக்கூடிய உருவக்கேலி என்பதை தன் நகைச்சுவைகளில் முதன்மை படுத்தாமல் தனது அப்பாவித் தனத்தை, வார்த்தை தடுமாற்றத்தை, நகைச்சுவை தளமாக மாற்றிக் கொண்டதில் நடிகர் விவேக் ஒரு முன்னோடி.கோபமாக கத்திக் கொண்டிருக்கிற கதாநாயகி ஒருகட்டத்தில் ஆத்திர உச்சியில் “Shut up” என்கிறாள். எதிரே நின்று கொண்டு இருக்கின்ற நடிகர் விவேக் எளிமையாக “Same to you” என சொல்வது ஒரு சிறிய காட்சி என்றாலும் அது தமிழ்த் திரைப்பட நகைச்சுவை காட்சி வரலாற்றில் ஏற்படத் தொடங்கிய மாற்றம்.
அவரைப் பற்றி அறிந்தவர்கள் நிறையப் படிப்பவர் என்று சொல்கிறார்கள். அவரால் எந்த கதாபாத்திரத்திலும் மிக எளிமையாக பொருந்த முடிந்ததன் காரணம், அவர் இயல்பிலேயே அவர் அடைந்திருந்த கலை மேதமை தான். இது எழுதிக் கொண்டிருக்கும் போதே பல காட்சிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.மின்னலே திரைப்படத்தில் விபத்துக்குள்ளான வண்டிக்கு முன்னால் விழுந்து கிடக்கும் விவேக் வண்டி முன்புறத்தில் தொங்கிக் கொண்டிருக்கிற எலுமிச்சை பழத்தை எடுத்து பிழிந்து சாறு குடித்துவிடுவார். கேட்டால்” கேறா இருந்துச்சி அதான்” என அப்பாவித்தனமாக பதிலளிக்கின்ற நடிகர் விவேக்கின் Classic தனமான காமெடி இல்லாத தமிழ்த்திரையை நினைத்து பார்க்கவே சற்று அச்சமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
சென்ற வருடத்தில் கூட அவரால் “வெள்ளைப் பூக்கள்’ என்கின்ற திரில்லர் வகை திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வழங்க முடிந்ததை நினைத்தால் நாம் எப்படிப்பட்ட மகத்தான கலைஞனை இழந்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.அவருடைய மரணத்திற்கு ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். ஆனால் அவரால் பலர் வாய்விட்டு சிரித்து தனது மன இறுக்கத்தைத் தளர்த்தி தன் மரணத்தை தள்ளிப் போட்டு இருக்கிறார்கள்.
அந்தப் பல கோடி புண்ணியம் அவரை காப்பாற்றியிருக்கலாம்.
போய் வாருங்கள் விவேக். நீங்கள் நட்டு வைத்திருக்கிற பல லட்சக்கணக்கான மரங்கள் உங்கள் பெயர் சொல்லி பலருக்கு மூச்சுக்காற்றை தாரைவார்த்து கொண்டிருக்கும்.
248தமிழ வேள், Raju Janu and 246 others15 comments39 sharesLikeCommentShare
மறுமொழி இடவும்