❤️

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதை என்னை பற்றி பேசும்

.உங்களையும் பற்றி பேசக் கூடும்.

உங்களுடையது என நீங்கள் உணரும்போது

கதை என்னுடையதாக இருப்பதை

நீங்கள் மறப்பீர்கள்..

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதையில் ஒரு காடு இருக்கிறது.

அந்தக் காட்டில் தான் நான் இருக்கிறேன்

.நீங்களும் இருப்பீர்கள்.

அந்தக் காட்டில் நீங்கள் இருப்பதை உணரும்போது

நான் இருப்பதை மறப்பீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் வெளிறிய மதிய நேரம் ஒன்று இருக்கிறது.

அப்போது நான் எதுவும் செய்யாமல்

எனக்கு முன்னால் இருக்கின்ற

ஜன்னல் கண்ணாடிக்கு அப்பால் இருக்கிற

வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒருவேளை நான் பார்த்துக்கொண்டிருப்பது

உங்களுடைய வானம் என்று

உங்களுக்கு கோபம் வரக்கூடும்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் சில நட்சத்திரங்களை கொண்ட

ஒரு இரவு இருக்கிறது.

இரவில் நிலவு இருக்கிறது.

நிலவில் ஒரு கனவும் இருக்கிறது.

அதே கனவு உங்கள் விழிகளில் மிதக்கும்போது

அந்த இரவு உங்களுடையது என்று நினைத்து

நான் எட்டிப் பார்த்ததாக நீங்கள் ஆவேசம் அடைவீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் நான் விலங்காக உலவி

சக ஆன்மாவை உலரா மாமிசமாக

குதறி இருக்கிறேன்.

அதே கதையில் கடவுளாக கண்ணீர் ததும்பி

கருணை கொண்டு காயம்பட்ட மனதிற்கு

மயிலிறகு தடவி இருக்கிறேன்.

அதே கதையில் நீங்களும் விலங்காக உலவி,

கடவுளாக கசிந்து இருக்கிறீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

பல தோல்விகள். மிகச்சில புன்னகைகள்.

பல முறிவுகள்.சில தோள்கள்.

பெரும்பாலும் தனிமை.

காலியான மேசை.

எதுவும் இல்லாத கண்ணாடி கோப்பை.

அந்த மேசையில் என் எதிரே

நீங்கள் அமர்ந்திருப்பதாக நான் உணர்கிறேன்.

உங்களுக்கும் அப்படித்தான்.

நான்தான் அமர்ந்திருப்பதாக

நீங்கள் நம்புகிறீர்கள்.

ஆக..

நம்மிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதையில் நாமும் இருக்கிறோம்.

❤️