⚫

வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என பல கொள்கை வழிகள் பார்ப்பனிய ஆரிய மதமான இந்து மதத்திற்கு எதிரான கலகக் குரல்கள் மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு வழி தீர்வுகள்.

கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழ்த் தேசிய அரசியல் உருவான காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்ப்பனிய ஆரிய இந்து மதத்தின் ஆதிக்க நிலை உச்சத்தில் இருந்ததை உணர்ந்தோம். எனவே தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்துக்கள் அல்லர் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய ஒரு நிலைக்கு நாங்கள் உந்தப்பட்டோம்.மேலும் தமிழரின் பல பண்பாட்டு விழுமியங்களை அடையாளங்களை ஆரிய இந்து மதம், செரித்து உள்வாங்கி தனது அடையாளங்களாக வெளிப்படுத்துகிற வரலாற்றுத் திரிபுகளை அடித்து நொறுக்க வேண்டும் என இந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் முடிவெடுத்தோம்.லிங்காயத்துகள் போல சீக்கியர்கள் போல நாங்களும் இந்துக்கள் அல்ல என நாம் தமிழர் என்கின்ற வெகுஜன அரசியலாக கட்டமைக்கப்படுகிற இனத்திற்கான அரசியலின் ஊடாகவே தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதையும் நாங்கள் கொள்கை முடிவாக அறிவித்தோம்.

இந்தக் கொள்கை முடிவை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்ற எல்லா இடங்களிலும் முழங்குகிறோம். தமிழர்கள் ஏன் இந்துக்கள் அல்ல என்கின்ற கேள்வி இருந்து தமிழர்கள் யார் என்பதான அறிவுத்தேடல் பிறக்கும் என நாங்கள் நம்புகிறோம். அப்படி தமிழர்கள் யார் என தேடுகிற அறிவுத்தேடல் மூலம் தமிழர் என்கின்ற தேசிய இனம் வலிமையற்ற உதிரிச் சமூகமாக மாறுகின்ற அபாயம் தடுக்கப்படும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.எனவே தொன்ம இனமான தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் பண்பாட்டை மீட்க காலப்புழுதியில் புதைந்து கிடக்கும் எம் இனத்தின் மெய்யியல் சிந்தனைகளை மீண்டும் இந்த மண்ணிலே விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது பயணம் அமைகிறது.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒரு மதம் என்ற அடிப்படையில் அதற்கான அடிப்படைத் தகு நிலைகளை கொண்டிருக்கின்றன. ஆனால் சர் வில்லியம் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேய அதிகாரி உருவாக்கிய சொல்லான “இந்து” என்பது ஒரு மதத்தின் பெயர்ச்சொல் அல்ல. அது இந்த மண்ணை ஆண்ட ஆங்கிலேயர் தனது வசதிக்காக உருவாக்கிக் கொண்ட அரசியல் நிர்வாகச் சொல்.இஸ்லாமும் கிறிஸ்தவமும் தங்களுக்கென தனித்த வழிபாட்டு முறைகளை கொண்டிருக்கின்றன. அதற்கென தனித் தனியாக புனிதநூல்கள் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்து என்று ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்ட மதம் இதுபோன்ற ஓர்மைக் கூறுகளை கொண்டிருக்கவில்லை என்பதோடு மட்டுமில்லாமல், ஒரு மதம் என்கிற முறைமையில் ஆய்வாளர்கள் வரையறுக்கிற காரணிகளோடு இந்து மதம் ஒத்துப் போவதில்லை.

யார் இந்துக்கள் என்கின்ற கேள்விக்கு இந்து என்கின்ற சொல்லை இந்த நிலத்தில் வாழக்கூடிய கோடிக்கணக்கான மக்களுக்கான பொதுச் சொல்லாக மாற்றிய சர் வில்லியம் ஜோன்ஸ் அளித்த பதில் மிக விசித்திரமானது.யார் இஸ்லாமியர்கள் இல்லையோ, யார் சீக்கியர்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என போகிற போக்கில் வரையறுத்த விபரீதத்தை தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.ஏற்கனவே தமிழர் நிலத்தில் சைவம்,மாலியம், பௌத்தம் சமணம் என பல்வேறு நம்பிக்கைகள் இங்கே இருந்தன. மேலும் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாகவே இருந்த ஆரிய புராதான வைதீக பார்ப்பனிய மதத்திற்கு எதிராக , வருணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராக தமிழர் மண் உளவியலாகவே எதிர்ப்பு நிலையை கொண்டிருந்தது. ஆனால் ஆங்கிலேயர் தனது நிர்வாக வசதிக்காக இந்து என்கின்ற பொது அடையாளத்துக்குள் தமிழர்களின் அனைத்து விதமான நம்பிக்கைகளையும் அடைத்து ஏற்கனவே இருந்த ஆரிய வைதீக மதத்திற்கு வலுவை சேர்த்தனர்.

இந்து மதத்தை பரப்புவதற்காக சாமி விவேகானந்தர் தமிழகத்திற்கு வந்திருந்தபோது எங்களை இந்துக்கள் என்று நீங்கள் எவ்வாறு அடையாளப் படுத்தலாம் என பேரறிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை வினா எழுப்பினார்.எனவே தமிழர்களின் தொன்ம அடையாளங்களை அழிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட இந்து என்கின்ற பொது அடையாள சொல்லை தமிழர்கள் நாங்கள் நிராகரிக்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல என பேரறிவிப்பு செய்கிறோம்.தமிழர்கள் எத்தனையோ மதங்களை சார்ந்து வாழ்கிறார்கள்.அயலில் இருந்து இறக்குமதியான இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களின் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை தாய் மதத்திற்கு திரும்பி வாருங்கள் என்று நாம் அழைக்கவில்லை. அது தேவையும் இல்லை. சொல்லப்போனால் வர்ணாசிரம அடுக்கை, ஆரிய இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெறுத்த தமிழர்கள்தான் இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் ஏற்றார்கள். வர்ணாசிரம கோட்பாட்டை வலியுறுத்துகிற இந்து மத எதிர்ப்பு புள்ளியில் அவர்கள் எங்களோடுதான் நிற்கிறார்கள்.

இந்தப் புரிதலோடு தான் இந்து என்கின்ற அடையாளத்தில் இருந்து தமிழர்கள் வெளிவர வேண்டும்‌ என்கிற அழைப்பினை தான்‌ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அழைப்பு விடுக்கிறார்.நாம் தமிழர் கட்சியில் எத்தனையோ இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் கட்சியின் உயர் நிர்வாக பொறுப்பில் இருக்கின்றார்கள்.

அண்ணன் சீமானின் கருத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அண்ணனோடு பயணிக்கிறார்கள். இஸ்லாமிய மக்களை பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு பள்ளிவாசலிலும் போராடிய இஸ்லாமிய தமிழர்களோடு களத்தில் நின்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அதன் காரணமாக தமிழகத்தில் வழக்கு பெற்ற ஒரே ஒரு அரசியல் தலைவர் அண்ணன் சீமான் மட்டும்தான்.

இதைப் புரிந்து கொண்டு , வெகு காலத்திற்குப் பிறகு இஸ்லாமிய, கிறிஸ்தவ இளைஞர்கள் திராவிட கட்சிகளை விட்டு தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டு நாம் தமிழர் கட்சியை நோக்கி நகருகின்ற காட்சிகளை பொறுக்க முடியாமல் தான் இதுபோன்ற வெட்டி ஒட்டி அவதூறுகளை பரப்ப வேலைகளை திராவிட ஆதரவாளர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள்.

எங்களுக்கு முன்னால் இருந்த முன்னோர்கள் வள்ளலார் வழி வைகுண்டர் வழி என்றெல்லாம் கட்டமைத்து விட்டு இந்து மதத்தில் சங்கமித்து விட்டார்கள் என தீவிர திராவிட ஆதரவாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.எங்களை அவர் எச்சரிக்க தேவையில்லை. தன் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் தான் இருக்கிறார்கள் என இந்து மதத்தை நம்புகிற திமுக தலைவரை அவர் எச்சரித்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.ஏனெனில் திராவிடம் தான் ஆரியத்தை தமிழக நிலத்தில் விதைத்த, காப்பாற்றுகிற, கூட்டணி அரசியல் செய்கிற வேலையை திறம்பட செய்து வருகிறது.இதை தெளிவாக புரிந்து கொண்டு, அண்ணன் சீமான் அவர்களது கருத்தை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புவர்களின் அரசியல் பிழைப்பு தனத்தை அம்பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காலை,மாலை,இரவு என மூன்று வேளையும் சீமான் போபியா பிடித்து அலையும் அறிவாலயத்து அடிமைகளை பார்க்கும்போது ஒருபுறம் வேதனையாகவும், மற்றொருபுறம் இப்படி இவர்களை நிம்மதியில்லாமல் எட்டு திசையிலும் கட்டி அடிக்கிறாரே அண்ணன் என்பதான மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

அவர் சாதாரணமாக பேசுவதில் கூட‌ எங்கே உள்ளே புகுந்து பொரணி பேசலாம் என்கின்ற கேடுகெட்ட மனநிலை உச்சத்தில் நின்று ஆடுகின்ற காலம் இது.குமரி மாவட்ட கனிமவளம் கொள்ளை போவது அவர்களுக்கு பிரச்சனை இல்லை. சாட்டை துரைமுருகன் திட்டி விட்டார் என்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை. நீட் தேர்வை இதுவரை நீக்க முடியவில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு பிரச்சனை இல்லை.

சீமான் இன்று என்ன பேசினார் என்பது தான் அவர்களுக்கு பிரச்சனை.இப்படி மண்டை முழுக்க அவர்களுக்கு பைத்திய சுமை ஏறி 24/7 ஒரே சிந்தனையில்‌ சீமான், நாம் தமிழர் என அவர்கள் கிறுக்கு பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.நெருங்கி நின்று என்ன பேசுகிறார்கள் என கவனித்து விடாதீர்கள். கடித்து வைத்து விடுவார்கள் கவனம்.

இன்று பனைத் திருவிழா தொடங்கிவைத்து அண்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பேசிய சில கருத்துக்களை திசைதிருப்பி வழக்கம்போல் சில வில்லங்க பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கியுள்ளனர்.தமிழர்கள் இந்துக்களே இல்லை, தமிழர்களை இந்துக்கள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை என்பதுதான் அண்ணன் சீமான் சொன்னது,

உடனே செய்தியாளர் இடைமறித்து கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களை நோக்கி ஏன் கேள்வி எழுப்புமாட்டேன் என்கிறீர்கள் என்றதற்கு , அவை வெளியிலிருந்து வந்த சமயங்கள்தானே, ஒன்று ஐரோப்பிய சமயம், மற்றொன்று அரேபிய சமயம்தானே என்று கூறிவிட்டு,மீண்டும் விட்ட பதிலை தொடர்கிறார்.. அதாவது மர செக்கு எண்ணெய்க்கு திரும்புவதுபோல் தமிழர்கள் தங்கள் சமயங்களின் மீது பூசப்பட்ட இந்து என்ற அடையாளத்தை விடுத்து சைவம் , மாலியம் என்று மீண்டு வாருங்கள் என்று சொல்லி அந்த பேட்டியை நிறைவு செய்கிறார்.ஆனால் முன்பாதியை வசதியாக மறைத்துவிட்டு திராவிடத் திருடர்கள் வழக்கம்போல் தங்கள் வெட்டி ஒட்டும் வழக்கமான வேலையின்படி, செய்தியாளர் இடைமறித்து கேட்ட கேள்விக்கான பதிலையும், நாங்கள் இந்துகள் அல்ல என்பதற்கு கொடுத்து வந்த பதிலின் தொடர்ச்சியின் மீதத்தையும் சேர்த்துசீமான் இந்து மதத்திலிருந்து மீண்டு சைவம், மாலியத்திற்கு மீண்டு வாருங்கள் என்று சொன்னதை இஸ்லாம், கிறித்துவத்திலிருந்து மீளச்சொன்னதுபோல் கேடுகெட்ட அவதூற்றுப் பொய்ப் பரப்புரையில் ஈடுபடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறார்களாம். வாங்கிய 200 ரூபாய்க்கு என்ன வேலை பார்த்தீர்கள் என ஓனர் கேட்கின்ற கேள்விக்கு திராவிட பஜனை கோஷ்டியினர் பதிலளிக்க எப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடிக்க வேண்டி இருக்கிறது..??இந்தப் கேடு கெட்ட பொழப்பிற்கு..!

⚫

வழக்கறிஞர் மணி செந்தில்.நாம் தமிழர் கட்சி.

59தமிழ வேள், பொன்வாசிநாதன் விஜயரெங்கன் and 57 others2 comments27 sharesLikeCommentShare

2 comments