அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு.
வணக்கம் தல. மாநாடு படத்தை உடனே பார்க்க முடியாததற்கு மன்னிக்கவும்.படம் வெளியாகி சில நாட்கள் கழித்து தான் பார்க்க நேர்ந்த போதிலும், கூட்டம் நிறைந்து அரங்கம் முழுமையாக இருந்ததை பார்த்த போது உண்மையிலேயே உங்கள் முகம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.
மற்றபடி இந்த கடிதம் மாநாடு பற்றி அல்ல. திரையரங்கில் இருந்து நான் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய குரல் பதிவில் சொன்னதுபோலவே உங்கள் பெயர் திரையில் மின்னிய உடன் நான் எழுந்து நின்று கை தட்டினேன். வழக்கமாக கதாநாயகனுக்கு, இயக்குனருக்கு, இசையமைப்பாளருக்கு என கைத்தட்டல்கள் குவியும் ஒரு அரங்கில் தயாரிப்பாளருக்கு எழுந்து நின்று கை தட்ட வேண்டிய நிலையில் இன்றைய தமிழ் சினிமா வந்து விட்டது உங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன்.
கடந்த சில ஆண்டுகளாக உங்களை கவனித்து வந்ததில் நீங்கள் இந்த இடத்தை அடைவதற்காக எதிர்கொண்ட போராட்டங்கள் பற்றி அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் வலிமையாகி கொண்டே சென்றதை பரவசத்தோடு கவனித்திருக்கிறேன். அந்த வலிமையிலும் நண்பர்கள் மத்தியில் நீங்கள் எளிமையாகிக் கொண்டே போவதை கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
அந்த எளிமை தான் உங்கள் வலிமை தல.திரை உலகம் ஒரு கனவு தொழிற்சாலை என்பார்கள். கனவுகளை தயாரிக்கும் தொழிற்சாலை என்பதால் அங்கே நிஜ மனிதர்களுக்கு இடமில்லை என்பதாகப் புரிந்துகொள்ள நம் அருகில் இருக்கின்ற திரைத் துறையைச் சார்ந்த அசலான மனிதர்களே உதாரணமாக இருக்கின்றார்கள். ஆயினும் நீங்கள் தடம் மாறாமல், தடுமாறாமல் தொடர்ச்சியாக போராடி கொண்டிருந்தீர்கள்.ஒரு கட்டத்தில் எனக்கே அச்சமாக இருந்தது. இவர் திரைத்துறை மீது கொண்டிருக்கும் அதீத விருப்பத்தினால் எங்கே, எல்லாவற்றையும் இழந்து விடுவாரோ என்றெல்லாம் நான் யோசித்திருக்கிறேன்.
அதை நம் நண்பர் வெற்றியிடம் கூட பேசியிருக்கிறேன். ஆனாலும் நீங்கள் விடாப்பிடியாக காத்திருந்தீர்கள்.ஒரு முறை கோடம்பாக்கத்தில் தீவிரமாக திரைத்துறையில் முன்னேற வேண்டுமென கனவு கொண்டு அலைந்து கொண்டிருந்த, தற்போதும் அதே நம்பிக்கையில் லயித்திருக்கிற நமக்கு மிகவும் வேண்டிய ஒரு அண்ணனிடம் ஒரு கேள்வி கேட்டேன். எந்த நம்பிக்கையில் இங்கு இருக்கிறீர்கள்..??அவர் சிரித்துக்கொண்டே சொன்ன பதில் இதுதான்.. “சுற்றி நான்கு திசையிலும் தண்ணீர் சூழ்ந்த நீல கடல்தான். திசைகள் அற்ற பெருவெளி தான். ஆனாலும் கரையேறி விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் கடலில் இறங்கினோம்” என்றார்.
அந்த நம்பிக்கையை இறுதியாக என்னால் ஒரு வழியாக புரிந்து கொள்ள முடிந்தது.அதே நம்பிக்கை தான் உங்களை சந்திக்கும்போதெல்லாம் விழிகளில் மின்னிக் கொண்டு இருந்ததை நான் கவனித்தேன். அடுத்தடுத்து சில முயற்சிகள் செய்வதாக நீங்கள் சொல்லும் போதெல்லாம், வாழ்த்துகள் என மேலோட்டமாக சொன்னாலும் சத்தியமாக உள்ளுக்குள் எனக்கு கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும்.ஆனால் நீங்கள் நம்பிக்கையை இழக்காத விக்ரமாதித்தன் போல, சினிமா வேதாளத்தை ஆசையோடு தோளில் சுமந்து அலைந்து கொண்டு இருந்தீர்கள்.முன்பு ஒரு பொழுதில் உங்களது மிக மிக அவசரம் என்கிற உங்களது திரைப்படத்தின் திரைக்கதை வடிவத்தை நீங்கள் எனக்கு அனுப்பி இருந்தீர்கள்.
வழமையான வணிக சமரசங்கள் எதுவும் இல்லாத அந்த வடிவம் எனக்கு மகிழ்வைத் தந்தாலும், இந்தப் படம் எப்படி மக்களை சென்று சேரும் என்றெல்லாம் அச்சப்பட்டேன். அதுபற்றி எல்லாம் நீங்கள் கவலை படுவதே இல்லை எனக் கேள்விப்பட்ட பிறகு இன்னும் அதிகம் கவலைப்பட்டேன். பல மாதங்களுக்கு முன் மாநாடு திரைக்கதையை சுருக்கமாக நீங்கள் சொன்ன போது அதை புரிந்து கொள்ளவே திரைக்கதை பற்றிய புரிதல் தேவையாக இருந்தது என உணர்ந்த போது ஏன் இந்த மனிதர் இவ்வாறெல்லாம் துணிகிறார் என எனக்குள்ளாக யோசித்தேன்.இந்த நெருக்கடிகளுக்கு நடுவிலும், உங்களுக்கென இருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் பார்வையை நீங்கள் எங்கும் வெளிப்படுத்த தயங்கியதே இல்லை.
அண்ணன் சீமான் அவர்கள் மீது பெரு நம்பிக்கை கொண்டு பயணிக்கின்ற எங்களைப்போன்ற எத்தனையோ தம்பிகளுக்கு மத்தியில் நீங்களும் ஒருவராக பயணித்துக் கொண்டு அதே சமயத்தில் கலைத்துறையில் உங்களுக்கென மதிப்பு வாய்ந்த ஓர் இடம் பிடிக்க போராடிக் கொண்டிருந்தீர்கள்.இப்போது மாநாடு படம் வெளிவந்து விட்டது. இந்த படம் குறித்து வெளிவந்த அனைத்து எதிர்மறை செய்திகளுக்கெல்லாம் அப்பால் நாங்கள் உங்களைக் குறித்து தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக உங்களை அறிந்தவர்கள் அனைவருக்கும் இருந்த அச்சம் உங்களுக்கு இருந்ததா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.
அச்சம் படத்தைப் பற்றி அல்ல. உங்களைப் பற்றி. நீங்கள் செல்லும் பயணத்தின் எல்லையைப் பற்றி. அந்த எல்லையையும் மீறி செல்வதற்கு எதையும் இழக்கத் தயாராகும் உங்களது மனநிலை பற்றி.படம் நன்றாக வந்திருக்கிறது என என் தம்பி இடும்பாவனம் கார்த்தியும், என் மைத்துனர் பாக்கியராசனும் சொன்னபோது தான் நிம்மதியாக இருந்தது.உண்மையில் வாழ்வதற்கு இதுபோன்ற வலிகள் தேவைதானா என்கின்ற கேள்வி இப்போதும்கூட எழுகிறது. அதற்கு கனவுகள் நிறைந்த உங்கள் விழிகளின் புன்னகை ஒன்றே பதிலாக இப்போது அமைந்துவிட்டது.
இந்த படத்தின் வெற்றியால் இந்த படத்திற்காக நீங்கள் அடைந்த உங்களது பொருளாதார இழப்புகள் சரிசெய்யப்பட்டு விட்டனவா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. அது பற்றிய கவலைகள் நீடிக்கும் இப்பொழுதிலும் கூட வெற்றி தரும் மினுமினுப்பு மகிழ்வாக இருக்கிறது.அதையும் தாண்டி , நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்த்துவிட்ட ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு அதிகாலை எழும்போது சற்று நிறைவாக உணர்ந்திருப்பீர்கள் என்று மட்டுமே நான் உணர்கிறேன்.அது நிறைவுக்காக, அந்த நிறைவு தரும் கிளர்ச்சிக்காக மீண்டும் இன்னொரு பயணத்தை நீங்கள் தொடங்கி இருப்பீர்கள். அந்தப் பயணத்தையும் ஒரு எல்லை மீறும் போராட்டமாக உங்களுக்குள்ளாக நீங்கள் உருவாக்கிக் கொண்டு போராட தயாராக இருப்பீர்கள்.கரையேறும் நம்பிக்கை இருக்கும் வரை தான் கடலின் வசீகரம் குறையாமல் இருக்கும்.திரைத்துறையும் அப்படித்தான் . துணிபவர்களால்தான் திரையின் வசீகரம் குறையாமல் இருக்கிறது.நீங்கள் துணிந்து இருக்கிறீர்கள் தல.அதுதான் இங்கு வசீகரமாக இருக்கிறது.
பேரன்பு வாழ்துகளுடன்
213You, தில்லை நாதன் சந்திரன், Arunkumar and 210 others9 comments7 shares
LoveCommentShare
மறுமொழி இடவும்