????

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வெறும் அரசியல் கட்சியாக மட்டும் இது பயணித்து விடக்கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகுந்த கவனமாக இருந்தார். ஒரு இனத்திற்கான விடுதலை என்பது மண் விடுதலை மட்டுமல்ல , சாதிமத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற மானுட விடுதலை, தாய்மொழி மீட்சி, இழந்த உரிமைகளை போராடிப் பெறுவது, பல்வேறு ஊடுருவல்களால் சிதைந்துபோன இனத்தின் பண்பாட்டு மீட்டெடுப்பு போன்ற பல தளங்களில் நமக்கு வேலை இருக்கிறது என்று தீவிரமாக எங்களுக்கு அறிவுறுத்திய அவர் சில முடிவுகளை நடைமுறைப்படுத்த தொடங்கினார்.நடுகல் மரபினரான நம் இனத்தில் மூத்தோர் வழிபாடு , முன்னோர் வழிபாடு குலதெய்வங்கள், சிறுதெய்வ வழிபாடு என தமிழ்த் தேசியத்தின் பண்பாட்டு வேர்களை பலப்படுத்துவதற்கான பணிகளில் அவர் முழுமையாக ஈடுபட்டார்.

கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வேல் தூக்கி விட்டார். இந்துத்துவா பக்கம் சென்று விட்டார் என்றெல்லாம் கட்டுரைகள் எழுதினார்கள். புத்தகம் போட்டார்கள். ஆனால் அண்ணன் சீமானோ இதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பல பணிகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.அதில் மிக மிக முக்கியப் பணி நம் இனத்தின் தொன்ம தெய்வமான முருகனை ஆரிய வடிவத்திலிருந்து மீட்பது. இரவு பகலாக அதுகுறித்து அவர் சிந்தித்துக்கொண்டே இருந்தார். பல‌ வடிவமைப்புகளை பல எண்ணங்களை நாங்களெல்லாம் அவரோடு பகிர்ந்து கொண்டு இருந்தபோது அவர் வேறு மாதிரியாக சிந்தித்து கொண்டிருந்தார்.

சில நாட்கள் கழித்து எங்கள் அலைபேசியில் அவரிடத்தில் இருந்து ஒரு ‘முருகன்’ வந்திருந்தான்.அமுல் பேபி போல, செக்கச் செவேல் என்று கொழு கொழு என கடைந்தேடுத்த தயிர் பாலகன் போல ஓவியங்களில் காட்சியளித்த அக்ரகாரத்து முருகனை பார்த்துப் பழகிய எங்களது விழிகள் முதன்முறையாக பாட்டன் முருகனை கருமைநிற இளைஞனாக பார்த்தபோது மகிழ்ச்சியால் கலங்கின.ஆம் அசலான முருகன் அப்படித்தான் பிறந்தான். வலுவான உடற்கட்டு ,, கூரிய மீசை என அசலான தமிழ் முகத்தோடு வந்த முருகனை பார்த்துவிட்டு, ஏற்கனவே வீட்டுக்கு வீடு தொங்கிக் கொண்டு இருக்கிற அந்தக் கொழுகொழு முருகனை என்ன செய்வது அண்ணா என‌ சந்தேகத்துடன் அவரிடம் கேட்டேன்.அண்ணன் சிரித்துக்கொண்டே ..” தம்பி அவன் நம்ம ஆளு இல்லடா.. அவன் வடநாட்டு சுப்பிரமணி. நம்ம தாத்தன் செகப்பா இருப்பானா.. சதை மெழுகி குண்டா இருப்பானா.. காடு மலைகளில், வெயில் மழை என பாராது, வேட்டையாடி, அலைந்து திரிந்து இருக்கிறான்.

அப்படி என்றால் உடல் எவ்வளவு வலுவாக இருந்திருக்கும் . யோசித்துப் பார். அதுதான் 6 pack வைத்து கருப்பாக களையாக கம்பீரமாக நம் பாட்டன் உருவாகி இருக்கிறான். இனிமேல் இந்த கருப்பன் தான்டா நம்ம முருகன் .” என்றார் அவர்.அன்றுமுதல் நம் முருகன் அசலான நம் பாட்டனாக, நம் உள்ளம் கவர்ந்த கருப்பனாக, மாறி போனான். பல இடங்களில் நம் கருப்பு முருகன் இன்று ஊடுருவி விட்டான். தனியார் பேருந்துகளில் பிரம்மாண்டமான ஓவியமாக மிளிர்கிறான். பல பொதுவான சுவரொட்டிகளில் நம் கருப்பு முருகன் கையில் வேலோடு‌ ஒளிர்கிறான்.இப்படித்தான் சில வேலைகளை அதிரடியாக செய்ய வேண்டியிருக்கிறது. அதே போல் தான் நம் இனத்தின் பெருமைக்குரிய கலைஞன் இசைமேதை ஏ ஆர் ரகுமான் தன் தாய்மொழி உணர்ச்சியால் ஆஸ்கர் மேடையில் கூட எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் முழங்கியவர்.

வடநாட்டு கச்சேரிகளில் அலை பாய்ந்து வரும் எதிர்ப்புகளை புறக்கணித்துவிட்டு தமிழில் பாடல்களைப் பாடுபவர். தமிழ்நாட்டு மேடையில் ஆங்கிலம் ஒலிக்கும்போது தமிழில் பேசுங்கள் அப்போதுதான் மேடையில் இருப்பேன் என கம்பீரமாக சொல்பவர். ஆளப்போறான் தமிழன் என இசையமைக்கும் போது என் உள்ளுக்குள் ஏதோ ஒன்று என்னை ஆட்டி வைத்தது என பெருமிதப் படுபவர். கனடா நாட்டில் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்கு மத்தியில் “உன் தேசத்தின் குரல்‌ ” என கண் கலங்க பாடி நம்மை மெய்சிலிர்க்கவும் கலங்கவும் வைத்தவர்.சமீபத்தில் துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஒரு தமிழ் பாட்டு பாடுவோமா எனக் கேட்டுவிட்டு அப்படியே உணர்ச்சியில் ஊறி தமிழ் தமிழ் தமிழ் என‌ முழங்கிக் கொண்டே நின்றவர். மூப்பில்லா மொழி எங்கள் மொழி என தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பவர். அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு என்கின்ற ஓவியத்தை வெளியிட்டதற்கு சங்கிக் கூட்டம் வழக்கம் போல் துள்ளிக்குதித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.கூடுதலாக.. இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என அமித்ஷா சொன்னதற்கு, தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனச் சொல்லி ஏற்கனவே வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டிருக்கின்ற சங்கிகளின் தலையில் ரகுமான் நெருப்பு அள்ளி வைத்திருக்கிற பரவசக் காட்சியை நாமெல்லாம் மகிழ்ச்சியோடு கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்று கொண்டிருக்கிறோம்.

நேற்று கூட தொழில் முனைவோர் மாநாட்டில் பேசிய இசைமேதை ஏ ஆர் ரகுமான் நம் நிறம் நமக்கு. தென்னிந்தியாவில் கருப்பான நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என நம் இனத்தின் நிறத்திற்கு ஆதரவாக மீண்டும் துணிவுடன் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்த் தாயை கருப்பாக அசிங்கமாக வரைந்திருக்கிறார்கள், அதை இந்த ரகுமான் வெளியிடுகின்றார், என ஓநாய் கண்ணீர் வடிக்கிறது ஒரு கூட்டம். இவர்களைப் பொறுத்தவரையில் கருப்பு என்பது அழகின்மை.அருவெறுப்பு , அசிங்கம்.ஆனால்.. தமிழர்கள் நமக்கோ அதுதான் நிறம். அதுதான் அடையாளம்.நமது தாய் தமிழணங்கு. அவள் கருப்பாகதான் இருப்பாள்.‌ எங்கள் பாட்டன் முருகன். கருப்பாக தான் இருப்பான்.இதில் பத்ரி சேஷாத்ரி வகையறாக்கள், சங்கி மங்கி கூட்டங்கள் பதறுவதற்கு எதுவுமே இல்லை. எமது அழகை இவர்கள் வரையறை படுத்த எவ்வித உரிமையும் அற்றவர்கள். எம் இனத்தின் அடையாளம் கருப்பு. எங்கள் குலசாமி ஒன்றின் பெயர் கருப்பு.கருப்பு என்பது ஒருபோதும் எமக்குப் பெருமை குறைவல்ல. சொல்லப்போனால் அதுதான் எமது தகுதி. எமது பெருமை.கர்வமாக சொல்வோம்.இது கருப்பர் நாடு. காவியே ஓடு.இசைமேதை ஏ ஆர் ரகுமானுக்கு நெகிழ்ச்சியுடன் புரட்சி வணக்கம்.

❤️

மணி செந்தில்.

தொடர்புடைய சுட்டிகள்.

https://youtu.be/efmKKC8XD8ohttps://youtu.be/B5wZZ565iPY