சமீபத்தில் அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங் (stephen hawking ) எழுதி அவரது மகள் லூசி தொகுத்த “ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்” (Brief answers to the Big questions )என்கின்ற புத்தகத்தை படிக்கும்போது கடவுள் இருக்கிறாரா என்ற சுவாரசியமான கேள்விக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்த நேர்மையான பதில் என்னை மிகவும் கவர்ந்தது.
கடவுள் பற்றிய அவரது கருத்திற்கு பலரும் கடவுள் மறுப்பு சார்ந்த நாத்திக வண்ணம் பூசுவதை அவர் மென்மையாக மறுக்கிறார். டைம் பத்திரிக்கையில் கடவுள் எதிர் ஸ்டீபன் ஹாக்கிங் என குறிப்பிட்டு கட்டுரை வெளியானதை பற்றி குறிப்பிட்டு அந்தப் படம் என்னவோ தன்னை சாத்தான் போல குறிப்பிடுகிறது என நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார்.
அவரைப் பொறுத்தவரையில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற கேள்விக்குள்ளேயே செல்லவில்லை. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி ஆய்வு நடத்தும் அவர் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு கடவுள் தேவைப்படவில்லை என்கின்ற ஒரு கருத்துக்கு வருகிறார். இந்த நூற்றாண்டு முடிவதற்குள் இந்த உலகம் தானாகத்தான் தோன்றியது என்கின்ற அறிவியல் பூர்வமான தர்க்கத்திற்கு முடிவு கண்டுவிடும் என அவர் உறுதியாக நம்புகிறார்.
இதை பற்றி ஒரு கூட்டத்தில் பேராசிரியர் சுபவீ பேசும்போது இந்தக் கருத்தை அவருக்கே உரித்தான “திராவிட நாத்திகத் தன்மையோடு” விதந்தோதி , அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங்கை திராவிடர் கழகத்தின் உறுப்பினராக மாற்றிய துயரத்தை(?) காண நேர்ந்தது.
நம் மண்ணின் தொல் நிலத்து கடவுள் மறுப்பு சிந்தனைகளை குறித்து நிறைய புத்தகங்கள் வந்திருக்கின்றன. சங்ககால பாடல்கள் தொடங்கி திருக்குறள் பௌத்த சமண இலக்கியங்களில் கடவுள் மறுப்பு சம்பந்தமான குறிப்புகள் காணப்படுகின்றன.
சொல்லப்போனால் கடவுள் மறுப்பு கூட இங்கே தனித்த தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெளத்தத்தில் கடவுளுக்கு இடமில்லை. கடவுளை முன்வைத்து காலம் காலமாய் வகுக்கப்பட்ட விதி, பாவம், புண்ணியம், போன்ற பல சிந்தனை மரபுகள் பெளத்தத்தால் நிராகரிக்கப்பட்டு ‘ஆசையே அனைத்திற்கும் காரணம்’ என்கிற ஒற்றை புள்ளிக்குள் மனித வாழ்க்கை அடைக்கப்படுகிறது.
குறிப்பாக அண்ணல் அம்பேத்கரை ஆழ்ந்து கற்க விரும்புபவர்கள் அனைவரும் அம்பேத்கர் மீதான பௌத்தத்தின் தாக்கம் குறித்து கவனிக்காமல் கடந்து செல்ல முடியாது. அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் எப்படி இந்த உலகத் தோற்றத்திற்கு கடவுள் தேவைப்படவில்லை என்பதை உணர்ந்தாரோ அதேபோல, பெளத்தமும் இந்த உலகத்திற்கு கடவுள் தேவையில்லை என்பதை அறிவிக்கிறது. அவரவர் செய்த கர்ம விதிகளின் அடிப்படையிலேயே அவரவர்களுக்கான உலகம் இயங்குகிறது என பௌத்தம் தீர்மானிக்கிறது.
கர்ம விதிகளுக்கு மேலான இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இயங்குவதை பௌத்தம் தீவிரமாக மறுக்கிறது. பௌத்தத்தை தோற்றுவித்த புத்தர் கூட பௌத்தத்தில் கடவுள் இல்லை. அவர் விடுதலை பெற்ற மனிதர் அவ்வளவுதான்.
புத்தரின் போதனைகள் பௌத்தத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. புத்தரின் போதனைகள் அல்லது அறவுரைகள் சுத்த பிடகம், விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்கின்ற மூன்று வகையான திரிபீடகங்கள் ஆக தொகுக்கப்பட்டுள்ளன. இதில் சுத்த பிடகம் என்று அழைக்கப்படுவது ஒருவரின் உள்ளொளியை வெளிப்படுத்தி அவரை ஆத்ம விடுதலைக்கு தயார் செய்யும் நோக்கத்தை கொண்டது.
சுத்த பிடகம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தீக நிகாயம், மச்சிம்ம நிகாயம், சம்புட்த நிகாயம், அங்குத்தர நிகாயம், குட்டக நிகாயம் என்கிற ஐந்தில் குட்டக நியாகத்தில் இரண்டாம் பகுதியாக தம்மபதம் அமைந்துள்ளது. மனித வாழ்வியலுக்கு அவன் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தேவையான பதில்களை எளிமையான கவிமொழியில் அமைத்து பாலி மொழியில் 423 அறவுரைகளாக தொகுப்பட்ட தம்மபதம் உலகின் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். கே ஸ்ரீ தம்மானந்தா என்பவர் தொகுத்த தம்மபதம் தமிழில் யாழன் ஆதி மொழிபெயர்ப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
(எதிர் வெளியீடு, விலை 130/-)
மனம், உலகம், பிரியம், சினம், நீதி, வழி, தீமை, அழகு, விழிப்பு, தண்டித்தல், உலகம், புத்தர் உள்ளிட்ட இருபத்தியாறு தலைப்புகளில் தம்மபதம் 423 எளிமையான கவிதைகளில் விவரிக்கப்படுகிறது.
இணை என்ற தலைப்பில் ஆறாவது கவியாக
“அவர்களுக்குத் தெரியாது
விவாதித்துப் பகைக்கிறார்கள்
அவர்களுக்குத் தெரியும்
அமைதியாய் இருக்கிறார்கள்
எல்லோருக்கும் உண்டு
மரணம் என்பது”
எல்லோருக்கும் மரணம் உண்டு என்பதை தெரிந்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். தெரியாதவர்கள் தேவையில்லாமல் விவாதித்துக் கொண்டு பகைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை எளிய மொழியில் சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக தம்ம பதத்தில் ஆழமான கருத்துகளுக்கு எளிய உதாரணங்கள் பல இயல்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.
“ருசித்த உணவு
காமம் புசித்த உடல்
வேட்கையின் வெளி
இயக்கமற்ற சோம்பல்
இவை மிகுந்த வாழ்வு
பெரும் புயலில் விசிறி அடிக்கப்பட்ட
வேரற்ற மரம்”
என்ற அற உரையில் வாழ்வு என்பது எப்போது பெரும் புயலில் சிக்கி அழிந்த வேரற்ற மரம் ஆக மாறுகிறது
என்பதை காட்சியியல் பூர்வமாக தம்மபதம் ஆழமாக விவரிக்கிறது.
இதோ மனம் என்னும் தலைப்பில்
” நீரினின்று எடுத்து
நிலத்தில் விடுபட்ட மீன் துள்ளும்.
மனமும் துள்ளும்.
துள்ளுவதை அடக்குவதே நல்லது”
என அலைபாயும் மனதை நீரில் இருந்து பிரித்து நிலத்தில் விடப்பட்ட மீனாக உருவகப்படுத்துகிறது தம்மபதம்.
பௌத்த மரபில் பிக்கு என்பவர் யார் என்பதற்கு தம்மபதம் ஒரு விளக்கம் அளிக்கிறது.
“கைகளை கட்டுப்படுத்தி
கால்களை கட்டுப்படுத்தி
பேச்சை கட்டுப்படுத்தி
மனதை கட்டுப்படுத்தி
தியானத்தில் மகிழ்ந்து
தனிமையும் அமைதியும் சூழ இருப்பவர் பிக்கு என அழைப்பர்”
முதுமை என்ற தலைப்பில்
“கவனி
இந்த அழகிய உடல்
தீராத வலிகளின் குவியல்.
நோய்க்கூடு.
அதில் என்ன இருக்கிறது
எதுவும் தொலைந்து விட.”
என வாழ்வின் நிலையாமையை போகிற போக்கில் நம் மனதில் அலைந்து உண்மையை பகிர்கிறது இந்த அறவுரை.
“யாரிடமும் வேண்டாம்
கடின வார்த்தைகள்
அவை எதிர்க்கப்படும்
கெடு நோக்குடை பேச்சு.
துக்க மூலம்.
பழிவாங்கப்படுவர்”
என்கிற தம்மபதம் சொற்களால் உண்டாகும் கேடுகளைப் பற்றியும் தண்டனை பற்றியும் ‘தண்டித்தல்’ என்ற அத்தியாயத்தில் எச்சரிக்கிறது.
“குற்றத்தை சுட்டிக் காட்டும்
அறிவரை பின்பற்ற வேண்டும்.
புதையலை காட்டும் வழிகாட்டியைப்
பின்பற்றுவதை போல்”
என நமக்கு நன்மை தீமையை பகுத்து குற்றத்தை சுட்டிக் காட்டும் “அறிவர்” யாரென தம்மபதம் அடையாளம் காட்டுகிறது.
பௌத்த சிந்தனை மரபுகளை பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மறைந்த புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குனர் கிம் கி டூக் ( Kim Ki Duk) இயக்கத்தில் 2003ல் வெளியான “Spring, Summer, Fall, Winter… and Spring ” என்ற பால்ய வயதிலிருந்து பௌத்த துறவி ஆவதற்கான ஒருவனின் போராட்டத்தைப் பற்றி அதிக உரையாடல்கள் இன்றி காட்சி பூர்வமாக விளக்குகிறது. ஒரு புத்த துறவியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் தன் பால்யத்தில் சிறு சிறு உயிர்களை வதைக்க என்னும் உணர்விலிருந்து, வாலிபத்தில் அலைகழிக்கும் காமம் வரைக்குமான ,உணர்வு அலைகளில் சிக்கிக்கொண்டு தவித்து மடாலயத்தை விட்டு வெளியேறி உலக மாயைகளில் சிக்குண்டு மீண்டும் மடாலயத்தை தேடி வருகிற உணர்வுபூர்வமான கதை. இது பெரும் காட்சியியல் அனுபவம். வழக்கமான கிம் கி டூக்கின் படங்கள் போல் இல்லாது மெல்லிய நீரோட்டம் போல் இயற்கை சார்ந்த காட்சி அமைப்புகளுடன் ‘கர்மா’ என்று சொல்லக்கூடிய மனித வினைகள் பற்றிய பௌத்தத்தின் பார்வை தான் இப்படத்தின் திரைமொழி.
அதேபோல் 2001 இல் பான் நளின் (Pan Nalin) இயக்கத்தில் வெளிவந்த சம்சாரா ( Samsara) என்கிற திரைப்படமும் பௌத்த சிந்தனைகளை சார்ந்த மிக மிக முக்கியமான ஆக்கம்.
பனி படர்ந்து லடாக் பகுதியில் கடுமையான தியானத்தில் ஈடுபட்டு கென்போ என்ற உயர் நிர்வாண நிலையை அடைந்த தாஷி(Tashi) என்ற பௌத்த பிக்கின் வாழ்வியல் அனுபவங்கள் தான் இந்தப் படம்.
சாதாரண மனித வாழ்வின் இச்சைகளுக்கும் பௌத்த வாழ்வியலின் சவால்களுக்கும் இடையே அல்லாடிக் கொண்டு பௌத்த பிக்கு ஆக விரும்பும் ஒரு இளைஞனை அழைத்து இந்த உலக வாழ்க்கையை சகலவிதமான உணர்ச்சி கொந்தளிப்புகளோடு வாழ்ந்து விட்டு வா என அனுப்புகிற மூத்த துறவியின் அறிவுரைப்படி ஒரு கிராமத்தை நோக்கி கிளம்பும் இளைஞன் எப்படி மீண்டும் மாபெரும் பௌத்தத்திற்கு ஆக மாறி நிர்வாண நிலையை அடைகிறான் என்பதை மிக ஆழமாக விவாதிக்கின்ற திரைப்படம்தான் சம்சாரா.
இந்த மானுட வாழ்வு அவனுக்கு முன்னால் தத்துவார்த்தமாக ஒரு கேள்வியை எழுப்புகிறது.
அது என்னவெனில் “how can you stop a drop water from disappearing..?” ஒரு நீர்த்துளி ஆவியாகாமல் எப்படி காப்பாய்..?
அதற்கும் பதிலை காமமும் இச்சையும் ஆசையும் நிரம்பிய அவனது வாழ்வே அளிக்கிறது.
“அதை தூக்கி கடலில் வீசு.”
கடலோடு கலந்த நீர்த்துளியும் கடலாகிறது. இனி அது ஒருபோதும் ஆவியாக போவது இல்லை.
“ஆசையை வெல்வது என்பது வேறு. ஆசையை பூர்த்தி செய்வது என்பது வேறு” என்கிற நுட்ப வேறுபாட்டினை
மிக அழகிய திரைமொழியில் சம்சாரா திரைப்படம் விளக்கிறது.
அதேபோல் பௌத்தம் சார்ந்த சில முக்கிய புத்தகங்களை பார்ப்போம்.
கௌதம புத்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஹெர்மன் ஹெஸ்ஸே 1922 ல் நாவலாக எழுதினார். அது தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.( வளரி வெளியிடு, விலை ரூ 130/-)
அதே போல மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய புத்தர் வரலாறு என்கின்ற நூலும் மிக மிக முக்கியமானது.
சமீபத்தில் விலாஸ் சராங் எழுதிய The dhamma man” என்ற நூலை எனது நண்பர் காளி பிரசாத் தமிழில் “தம்மம் தந்தவன்” என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.( நற்றிணை வெளியீடு விலை ரூ 260)
புத்தரின் வரலாற்றை நவீன இலக்கிய மொழியில் ஒரு புதினமாக இந்த நூல் கட்டமைக்கிறது. புத்தரைப் பற்றி ஒரு அறிமுகம் அடைந்துகொள்ள ‘தம்மம் தந்தவன்’ மிகப்பெரிய உதவி செய்கிறது.
“கடவுள் இல்லை என்று யார் சொன்னது..? இருந்திருந்தால் நன்றாக இருக்கும் .”என்கிற ஒரு புகழ்பெற்ற திரைப்பட வசனம் போல பாடுகள் நிறைந்த மனித வாழ்வு ஏதேனும் ஒன்றை செயற்கையாக உருவாக்கிக் கொண்டு அதையே பற்றிக்கொள்ள துடிக்கிறது. பௌத்தம் அதற்கு எதிராக சிந்தித்து மனித வாழ்வின் பாடுகளை களைய அதன் காரணங்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.
“உங்கள் காலணிகள் சரியாக இருக்கும்போது
அதை மறந்து விடுகிறீர்கள்..”
என்கிறது பெளத்த மரபை சார்ந்த ஒரு ஜென் கவிதை.
அப்படித்தான் வாழ்வின் பாடுகளை, துயரங்களை போக்கிக்கொள்ள நிழல் தருகிற மரமாக அறிவார்ந்த பௌத்த மரபு இருக்கிறது.
எத்தனை நிழல் கிடைத்தாலும் வேட்கையும் , ஆசையும் நிரம்பிய மனித வாழ்வு என்னவோ பாலைவனத்தில் பட்டாம்பூச்சி ஆகத்தான் அலைகழிந்து கொண்டு இருக்கிறது
மறுமொழி இடவும்