????
ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்டன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை மேனகாவோடு நேற்று பேசிய போது “விடுடா தங்கை, இன்னும் கடுமையாக உழைத்து எதிர்காலத்தில் வெல்வோம்..” என்று ஆறுதலாய் சொன்னபோது, அவள் சொன்ன பதில்தான் இது.
“நிகழ்காலத்திலேயே நாம் வென்று விட்டோம் அண்ணா …”
????
உண்மைதான். பல்வேறு அனுபவங்களையும், உண்மையான போராளிகளையும்,எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இனத்திற்காக உழைக்க வந்த உழைப்பாளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற அண்ணன் சீமான் ஏற்கனவே வெற்றி பெற்றவர் தான்.
…….
இதுவரை நடந்த தேர்தலில் இந்தத் தேர்தல் மிக மிக வித்தியாசப்பட்டது. ஏற்கனவே திருமங்கலம் ஃபார்முலா கண்டுபிடித்த திராவிட அறிஞர்களால் ‘ஈரோடு ஃபார்முலா’ என்கின்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஈரோடு கிழக்கு மண்ணில் பிறந்தது.
“சனநாயகத்தினை தாண்டிய மக்கள் உரிமை வேறு எதுவும் இல்லை” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். ஆனால் கடந்த சில நாட்களாக பட்டப் பகலில்,
நள்ளிரவில், சந்து பொந்துகளில், மக்கள் சாரை சாரையாய் அழைத்து வரப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட பட்டிகளில்,
மக்களாட்சி என்கின்ற மகத்தான தத்துவம் ரூபாய் தாள்கள் மூலம் செய்யப்பட்ட கூர்மையான வெட்டரிவாளால் படுகொலை செய்யப்பட்டதை ஊடகங்கள்/ தேர்தல் ஆணையம் /காவல்துறை என அனைத்துமே பதறாமல், குற்ற உணர்ச்சி இல்லாமல், பதட்டமில்லாத கண்களோடு பார்த்துக் கொண்டிருந்ததை
அதே மண்ணில் காசு கொடுக்காமல் வெறும் கொள்கைகளை வைத்து ஓட்டு கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.
குற்ற உணர்ச்சி என்கிற அடிப்படை மானுட உணர்ச்சியைக் கொன்று விட்ட பிறகுதான் ஒரு திராவிடக் கட்சிக்காரன் பிறக்கிறான் என்பதை ஈரோடு கிழக்கு மண்ணில் சுற்றிக் கொண்டிருந்த கரைவேட்டிக்காரர்கள் எங்கள் கண்முன்னால் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஆனாலும் நாம் தமிழர் இளைஞர்கள் எதற்கும் சளைக்காமல் கண்கள் முழுக்க கொள்கைக் கனல் ஏறிய சூட்டோடு,ஓங்கி உயர்ந்த முழக்கங்களோடு
சுடும் வெயிலில் அலைந்து கொண்டிருந்தார்கள்.
தங்குமிடம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லா விடுதிகளிலும் கரைவேட்டிக்காரர்கள் துண்டு போட்டு இடம் பிடித்திருந்தார்கள். இடம் பிடிக்க, பணம் கொடுக்க, அவர்களுக்கு அதிகாரம் என்கின்ற வெறிபிடித்த ஒற்றை நாய் உலவிக் கொண்டிருந்தது.
சரியான உணவும், தரமான இடமும் நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கு இல்லை தான். ஆனாலும் அவர்கள் ஆன்மாவில் அண்ணன் சீமானின் மொழி நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது. அது அவர்களது உறக்கத்தை கொன்று பசியை தொலைத்து விட்டது.
தம்பி இசை மதிவாணன் போன்றோர் அதிகாலையில் தொடங்கி நள்ளிரவு வரை எங்கும் அமராமல் ஓடிக் கொண்டிருந்த காட்சியை காணும் போது “எந்த நம்பிக்கை உங்களை இப்படி ஓட வைக்கிறது..” என்கிற கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு முறை தனிப்பட்ட முறையில் அவனிடம் கேட்டும் விட்டேன்.
அவனிடம் அதற்கு சரியான பதில் இல்லை. ஆனால் அவன் அணிந்திருந்த உடையில் தேசியத் தலைவர் சிரித்துக் கொண்டிருந்தார். அதுதான் அதற்கான பதில்.
குமரியில் இருந்து வந்த ஹிம்லர்,சட்டக் கல்லூரி மாணவன் அபூபக்கர், கோவை பேரறிவாளன், அனீஸ் பாத்திமா போன்ற எண்ணற்ற இளம் தளிர்கள் இந்தப் போர்க்களத்தில் சளைக்காமல் சண்டையிட்டார்கள்.
…. எல்லாவற்றையும் தாண்டி அண்ணன் சீமான்.
உழைப்பால் உருவேறிய உன்னதன் அவர்.
தம்பி இசை மதிவாணன் போல, மருமகள் பாத்திமா பர்கானா போல எண்ணற்ற சீமானின் பிள்ளைகள் வீடு வீடாய் சென்று தங்களுக்கான நீதியை, இத்தனை ஆண்டு கால திராவிட, தேசியக் கட்சிகளின் அநீதியை எடுத்து சொல்லி மிக உருக்கமாக வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் தான், பின்னால் வந்த திராவிடத் திருவாளர்கள் வீடு வீடாய் காசு கொடுத்து கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அது ஒரு முரண்பட்ட காட்சிதான். ஆனால் ஒரே இடத்தில் ஜனநாயகம் இரு முரண்பட்ட முற்றிலும் வேறுபட்ட காட்சிகளை கொண்ட அபத்த திரைப்படமாய் திராவிடத் திருவாளர்களால் மாற்றப்பட்டுவிட்டது.
பிறகு உண்மையான உழைப்பின், ஜனநாயகத்தின் மதிப்பு தான் என்ன... என்றெல்லாம் விரக்தியின் வானவில் மனதிற்குள் வளைந்து நெளிந்த போது நம்பிக்கைக்கீற்றாய் பலர் களத்தில் ஒளிவிட்டார்கள்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை மேனகா அவர்களின் கணவர் தம்பி நவநீதனை பற்றி சொல்ல வேண்டும். வீட்டிற்குள் பெண்ணை பூட்டி வைக்கின்ற ஆண்களுக்கு மத்தியில் தன் மனைவியை வேட்பாளராக முன்னிறுத்தி விட்டு, பேரணியின் முன்னும் பின்னும் ஆக ஓடிச்சென்று, ஒழுங்கு செய்து, அனைவரையும் வழிநடத்தி, சக போராளியாக மனைவியை மதித்து, அவன் சாதித்து நின்றது பேரழகு.
மனைவி தாமதமாக வந்தால் “எங்கே சென்று வந்திருக்கிறாய்..?எனக்கான சாப்பாடு எங்கே..? ” என்றெல்லாம் கேட்கின்ற சராசரி ஆண்களுக்கு மத்தியில் அவையத்தில் மனைவியை முன் நிறுத்தி
கணவனுக்கான கடமையை
கண்ணியமாக செய்து கணவன் மனைவிக்காற்றும் உதவி என்பதை புது குறளாக அவன் ஈரோட்டு வீதிகளில் எழுதிக் கொண்டிருந்தான்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை மேனகா. எல்லா இடத்திலும் தெளிவாக கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறி தொகுதிக்கு என்ன செய்யப் போகிறேன் என்ற தீர்வுகளை பற்றி பேசி, அவதூறு பிரச்சாரங்களை போகிற போக்கில் எதிர்கொண்டு, கூட பயணிக்கும் அனைவரின் நலத்திலும் கவனம் செலுத்தி, எதிரே நடக்கின்ற வன்முறை வெறியாட்டங்களை கூட புன்னகையோடு எதிர்கொண்ட அவளது உறுதி மிக்க மனநிலை, பலரையும் வியக்க வைத்தது.
அற்புதமான பல இளைஞர்களை நாம் தமிழர் கட்சியின் பேரணிகளில் காண முடிந்தது. இரவு தேர்தல் பணிமனைகளில் தூங்கும் போது நடந்து நடந்து வெடிப்பேறிய அவர்களது பாதங்களை பார்க்கும் போது எனக்கு ஏனோ காங்கோ காடுகளில் அலைந்து திரிந்த புரட்சியாளன் சே நினைவுக்கு வந்து போனான்.
உண்மையில் புரட்சிகர மனநிலை என்பது எல்லாவற்றையும் இழக்க துணிவது என்பதைத்தான் சீமானின் தம்பி தங்கைகள் நிரூபித்தார்கள். எதையும் எதிர்பார்க்காமல் அரசியல் மாற்றம் ஒன்றே அனைத்திற்கும் ஆன தீர்வு என்பதை வாக்காளர்களுக்கு உணர வைக்க அவர்கள் உழைத்த உழைப்பு என்பது ஜனநாயகம் என்கிற மானுட சாசனத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான செய்தி.
எத்தனை தூரம் என்றாலும் பரவாயில்லை, எவ்வளவு நேரம் என்றாலும் கவலை இல்லை, முழக்கங்கள் ஒரு நொடியும் குறையாமல் முழங்கித் தீர்த்து, எதிரிகளுக்கு பயத்தையும், ஈரோட்டு மக்களுக்கு வாக்குக்கான பணத்தையும், அதிகப்படுத்தி கொடுத்தார்கள்.
பதிலாக அவர்கள் முதலில் அவதூறை ஆயுதமாக கையில் எடுத்தார்கள். அருந்ததியர் மக்களை வந்தேறி என சீமான் பேசி விட்டார் என பொய்யாக பரப்புரை செய்து நாம் தமிழர் பிரச்சாரங்களில் திட்டமிட்டு கலகங்களை ஏற்படுத்தினார்கள். அடுத்தது வன்முறை. அண்ணன் அன்பு தென்னரசன் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான போது கூட முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்ய முடியாத அளவிற்கு காவல் துறையின் கைகள் அதிகாரத்தால் கட்டப்பட்டிருந்தன.
காலை 8 மணிக்கு எல்லாம் மக்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, ஆடு மாடுகளை பட்டி தொட்டிகளில் அடைப்பது போல அடைத்து, பகலெல்லாம் டிவி போட்டுக்காட்டி, ஆண்களுக்கு சாராயம் பிரியாணி கொடுத்து, இரவு 8 மணிக்கு போகும்போது ஒவ்வொருவருக்கும் தலா 2000 பணம் கொடுத்து அனுப்பி கொண்டிருந்தபோது, நாங்கள் எல்லாம் பூட்டிய வீடுகளுக்கு முன்னால் வாக்கு கேட்க முடியாமல் கொளுத்தும் வெயிலில், மங்கிய மாலையில், இரவின் களைப்பில் நம்மை வழி நடத்தும் லட்சிய வெறியோடு நடந்து சென்று கொண்டிருந்தோம்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், 2 ஆவது வாக்குப் பெட்டியில் 22வது வரிசை எண்ணிலிருந்த தங்கை மேனகா அவர்களுக்கு, விவசாயி சின்னத்தைத் தேடித்தேடி வாக்களித்த 10,827 நபர்கள் உண்மையிலேயே வேற்றுக்கிரகத்தில் வந்தவர்களா, தனித் தாதுக்களா, என்றெல்லாம் இன்று இந்த சமூகக் கட்டமைப்பில் யோசிக்க தோன்றுகிறது.
விவசாயி சின்னத்தில் முகமறியா விரல்கள் தொட்ட நொடி எல்லாம் இன்னும் இந்த மண்ணில் மனித உணர்ச்சி சாகாத , பட்டுப் புடவை ஸ்மார்ட் வாட்ச், அண்டா குண்டா, குக்கர்,காசு, சாராயம், பிரியாணி பொட்டலங்கள் என எதற்கும் விலை போகாத மக்கள் திரள் இம்மண்ணிலும் உண்டு என்று நமக்குள்ளும் உயிர்ப்பூ மலர்ந்த தருணங்கள் அவை.
நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் தங்களது விரல்களை நம்பிக்கையோடு தொட்டு 10827 ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் மாற்று அரசியல் புரட்சியை நிறுவிடப் போராடும் ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்திற்கு உண்மையில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சூழ்ந்து விட்ட மிகப்பெரிய இருளுக்கு நடுவில் சிறிது வெளிச்சத்தை அளிக்கிறது.
அந்த வெளிச்சக் கயிறு கொண்டு தான் நாங்கள் வெற்றி என்ற சிகரத்தை நோக்கி ஏறத் தொடங்கி இருக்கிறோம்.உலகில் ஏற முடியாத சிகரங்கள் என எதுவும் இல்லை.உறுதியாக ஒரு நாள் நாங்கள் சிகரம் தொடுவோம்.
இவ்வளவு உழைத்தும் உங்களை நோக்கி வெற்றி வரவில்லையே என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள்.
இதற்கான பதில் எங்களிடம் இல்லை தான். ஆனால் எங்கள் எதிரிகளிடம் உண்டு.
தேர்தல் முடிந்து ஈவிகேஎஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில் நம்ப முடியாமல், மென்று முழுங்கியவாறே, அச்சத்தோடும், ஆச்சரியத்தோடும் கேட்டாரே அந்த பதில் தான்.
அந்த பதில்.. 10827.
எல்லா தடைகளையும் தாண்டி 10,827 வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்பது போகிற போக்கில் கடந்துப் போகக்கூடிய செய்தி அல்ல.
10827- இது சாதாரண எண்ணிக்கை அல்ல. திமுக/ அதிமுக /காங்கிரஸ் /பிஜேபி என்கின்ற திராவிட தேசிய கட்சிகளை, அடிமனதில் ஆழத்திலிருந்து வெறுக்கின்ற வெறுப்புணர்ச்சியின் கூட்டுத்தொகை.
ஒரு நொடியும் இந்த கூட்டுத் தொகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அதிகார ஆட்டத்தால் பண மழையால் இந்த எதிர்ப்புணர்ச்சி சற்றே மட்டுப்படுவது போல தோன்றலாம்.
ஆனால் காலங்காலமாய் ஏமாற்றப்பட்டு வருகின்ற மக்களின் கோபம் வன்மமாய் மாறி அது விரல்களின் மூலம் வினை ஆற்ற தொடங்கி இருக்கிறது என்பதையும், ஓடப்பராய் இருந்த ஏழையப்பர்கள் உதையப்பர்களாக மாறி வருகிறார்கள் என்பதையும் 10827 சொல்லத் தொடங்கி இருக்கிறது.
நாம் தமிழர் காலம் பிறக்கிறது.
????
மறுமொழி இடவும்