“பண்டைப் பெரும்புகழ் உடையோமா ? இல்லையா..!
பாருக்கு வீரத்தை
சொன்னோமா ? இல்லையா..!”
என பாவேந்தரின் வரிகள் அண்ணன் சீமான் குரலில் வெடித்து எழும்பும்போது அவர் முன் திரண்டிருக்கும் நமது உடலில் உள்ள மரபணுக்கள் எல்லாம் கிளர்ந்து எழுகின்றன. ‘உலகின் மூத்த குடி தமிழினம். உலகை ஆண்டது எம்மினம்’ என்றெல்லாம் பேசுவது வெறும் பெருமிதப் பிதற்றல்கள் அல்ல. வரலாறு அவ்வாறாகத்தான் சொல்கிறது. வரலாற்றை ஒட்டி நிகழ்கிற அறிவியல் ஆய்வுகளும் அவ்வாறாகத்தான் சொல்கின்றன. உலகத்தின் மாபெரும் அறிஞர்கள் எல்லாம் தமிழர் என்கின்ற இனம் தான் இந்த பூமி பந்தின் மூத்த இனம் என்று சொல்கிறார்கள்.
“யாதும் ஊரே.. யாவரும் கேளீர்..” என உலகம் முழுக்க சொந்தமாக நினைத்து பாடிய நமது முன்னோன் சொல் காற்றில் கரையக்கூடிய கற்பூரம் அல்ல. உலகம் முழுக்க பயணப்பட்டு, பக்குவப்பட்டு விரிந்தெழுந்த தமிழ் இன மூத்தோனின் முதற்குரல். உலகம் முழுக்க பரந்து, விரிந்து, ஆண்டு, வரலாற்றின் பக்கங்கள் முழுக்க பெருமை பதக்கங்களை சூடிக்கொண்ட ஒரு இனம் காலப்போக்கில் குறுகி கடற்கரை ஓரங்களில் குற்றுயிரும், கொலையுருமாக குன்றி எஞ்சிப் போனது எதனால் என்பதை வரலாற்றியல் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆய்வு செய்த பெருமக்கள் இந்த மண்ணில் மிக மிக குறைவு. தமிழர் என்ற மூத்த இனத்தின் வெற்றிகளையும், பெருமைகளையும் பேச தமிழ் மொழியில் ஆயிரமாயிரம் இலக்கியப் பிரதிகள் காலங் காலமாய் தோன்றி கொண்டே இருக்கின்றன. ஆனால் இன்றோ ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு அடிமை தேசிய இனமாக மாறி இருக்கிற தமிழர் என்கிற இனத்தின் வீழ்ச்சியை ஆய்வு செய்கிற படைப்புகள் தான் இந்த இனம் மீள் எழுச்சிக் கொள்வதற்கான ஊக்கக் கருவிகளாக இருக்க முடியும்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் எல்லா பயணங்களிலும் சுமக்கும் புத்தக வரிசைகளை அருகில் இருந்து பார்க்கின்ற அனுபவம் எனக்கு உண்டு.அந்த வரிசையில் தவறாமல் இடம்பெறும் புத்தகங்கள்
1. தமிழன் அடிமையானது ஏன் ? எவ்வாறு..?
2. தமிழர் மேல் நிகழ்ந்தப் பண்பாட்டு படையெடுப்புகள்.
இந்த இரண்டு நூல்களின் முக்கியத்துவம் போகிற போக்கில் ஒரு கட்டுரையில் விவரிக்க முடிகிறவை அல்ல. அண்ணன் சீமான் அவர்கள் புத்தகங்களைப் பற்றி ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோது “தமிழர் என்கின்ற இனத்தின் விடுதலைக்காக களமாட வருபவர்கள் இந்த இரண்டு நூல்களையும் முழுமையாக மனனம் செய்து மனதில் ஏற்றி விட வேண்டும்” என்றார்.
அப்படிப்பட்ட அறிவுத் தகவல்களை, வீழ்ந்த இனம் எழுச்சிக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி விரிவாக இந்த இரண்டு நூல்களும் பேசுகின்றன. இந்த இரண்டு நூல்களையும் எழுதியவர் மாபெரும் தமிழ் அறிஞர், மேனாள் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெருந்தமிழர் ஐயா க.ப. அறவாணன் அவர்கள்.
1987 ல் வெளியான தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள் என்ற நூலைப் பற்றி அக்காலத்தில் மேற்கோள் காட்டி பேசாத தலைவர்களே இல்லை எனலாம். பல்லாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்த இந்த நூல் யார் வேண்டுமானாலும் படிப்பதற்கு ஏதுவான எளிமையான மொழி கொண்டது.
இந்த நூலைப் பற்றி ஐயா அறவாணன் அவர்கள் சொல்லும்போது
” தமிழர் பல நூற்றாண்டுகள் பழமை உடையவர் .இலக்கிய இலக்கணச் செழுமை உடையவர். உயர்ந்த சமூக விழுமியங்களை உடையவர். சீரார்ந்த நுண் கலைகளை உடையவர். அஞ்சா நெஞ்சுடையவர். எனினும் கிபி மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழர் அயற் புல ஆட்சிக்கு இலக்காயினர்.
ஆரியம் /களப்பிரம் /பல்லவம் எனும் மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாகவும், ஒன்றன் மேல் ஒன்றாகவும் தமிழை அடிமைப்படுத்தின. இது எவ்வாறு நிகழ்ந்தது..?? என வினா எழுப்புகிறார்.
இந்த வீழ்ச்சியை பற்றி ஆய்வு செய்யும் ஐயா அவர்கள் “தமிழர் மொழி அடிப்படையில் ‘நாம் தமிழர்’ என்று ஒன்றாய் குவியாது, சேரர், சோழர், பாண்டியர், வேளீர் என பல வேறுபாடுகள் மற்றும் குடி அடிப்படையில் பிரிந்திருந்தனர்.” என்கிறார். மேலும் இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் அடித்தளம் வலியுறுத்தும் மிக முக்கியமான செய்தி.. “தமிழர் மொழி அடிப்படையில் ஒன்று பட வேண்டும் என்பதுதான்” என்று கூறும் இந்த நூல் தமிழில் இயற்றப்பட்ட நூல்களில் ஆகச்சிறந்த நூல்களில் ஒன்று.
முதல் அத்தியாயத்திலேயே நிறைய தகவல்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் மிகுதியான திரையரங்குகள், சாராயக்கடைகள் கசாப்புக் கடைகள், தொழு நோயாளிகள் அதிகம் என கூறும் ஐயா அறவாணன் அந்தக் காலத்தில் மலிந்து கிடந்த லாட்டரி சீட்டு மோகத்தையும் இடித்துக் காட்ட தவறவில்லை. தமிழர் எப்போதும் பிறரை சார்ந்து இருக்கும் போக்கினை வேதனையோடு பகிரும் ஐயா, இந்திரா காந்தி இறந்த போது இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொண்டது பிற மாநிலத்தை காட்டிலும் (3) தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் (6) தான் எனக் கூறி அதிர வைக்கிறார். போர்க்குணம் இல்லாமல் தாழ்வு மனப்பான்மை கொண்டமை, அயலாரை, அயல் பண்பாட்டை கண்மூடித்தனமாக போற்றும் குணம், தொலைநோக்கு இல்லாமல் போனது என்கின்ற நான்கு காரணங்கள் தான் தமிழினம் வீழ்ச்சிக்கு முக்கியமானவை என ஐயா வரையறுக்கிறார். அதற்கு ஆதாரமாக மாமேதை காரல் மார்க்ஸ் “தமிழர்களைப் பற்றி ஆங்கிலேயர்கள் தென்னிந்திய மக்களை அச்சுறுத்தி எளிதில் அடிமைப்படுத்தியது போல பஞ்சாபியரை அச்சுறுத்தி வெற்றி கொண்டு விடலாம் என தவறாக கணித்து விட்டார்கள்..” என்று எழுதிய வரலாற்றுக் குறிப்புகளையும் சான்றாக காட்டும் ஐயா 1311 ஆம் ஆண்டு மாலிகாப்பூர் படையெடுப்பின்போது வெறும் செய்திகளை கேட்டு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட தமிழர்களைப் பற்றியும் தகவல்களை தருகிறார். தமிழ்நாட்டின் மீது நிகழ்ந்த ஆயிரக்கணக்கான அரசியல் படையெடுப்புகள் காரணமாக தமிழர் பண்பாட்டில் ஊடுருவி நிற்கின்ற நடைமுறைகள் குறித்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்த நூல், பண்பாடு என்றால் என்ன என்பதை மிக ஆழமாக ஆய்வு செய்கிறது. இந்தியப் பெருநிலம் முழுக்க கிமு 1500 ஆண்டு வாக்கில் பரவி இருந்த ஒரு இனம் படிப்படியாக தமிழ்நாடு என்கின்ற சிறிய நிலப்பகுதிக்குள் எவ்வாறு குறுகி சிக்குண்டது என்பதை பற்றி இந்த நூல் முழுக்க வரலாற்று செய்திகள் மற்றும் பன்னாட்டு அறிஞர்கள் தந்த கருத்துக் குவியல்கள் நிரம்பித் ததும்புகின்றன.
அதேபோல் ‘மொழிக் காப்பியம்’ என்கின்ற இரண்டாவது அத்தியாயத்தில் மொழி உணர்வை இழந்த தமிழர்களின் நிலையை ஆய்வு செய்யும் ஐயா அறவாணன் அவர்கள் , கிரேக்கர்/ இஸ்லாமியர்/ தெலுங்கர்/ ஐரோப்பியர் என்கிற ஒவ்வொரு அயலார் படையெடுப்பின் போதும் இந்த நிலம் அடைந்திருக்கின்ற பண்பாட்டு மாற்றங்களை, தமிழர்கள் அடைந்த உளவியல் கேடுகளைப் பற்றி பற்றி நுட்பமாக ஆய்வு செய்கிறார். தமிழ் பண்பாட்டுக்குள் ஊடுருவி இருக்கின்ற அயலார் பண்பாட்டுப் புள்ளிகளை குறிப்பிட்டுக் காட்டும் இந்த நூல், நம் பண்பாட்டில் விரவி இருக்கின்ற மூடத்தனங்களையும், பிற்போக்குத்தனங்களையும் மிக அழுத்தமாக சுட்டிக் காட்டுகின்றது. குறிப்பாக “நாயக்கர் படையெடுப்பில் நீங்கா படிமங்கள்” என்கின்ற அத்தியாயம் மிக மிக முக்கியமானது. தெலுங்கரின் ஆதிக்கத்தினால் தமிழர் இழந்த நிலம்/ உரிமைகளைப் பற்றி இந்த அத்தியாயம் ஆழ்ந்து ஆய்வு செய்கிறது. அயல்நாட்டில் இருந்து நம் நாட்டில் மதம் பரப்ப வந்த துறவிகள் தமிழர்களைப் பற்றி எழுதி வைத்திருக்கின்ற குறிப்புகளை சேகரித்து அவற்றின் வாயிலாக தமிழரின் பண்பாடு அடைந்திருக்கின்ற வீழ்ச்சியை ஆய்வு செய்யும் இந்த நூல்
தமிழர் வரலாற்றைக் கொண்டு, சுய பரிசோதனை செய்து கொண்டு தமிழின மீட்சிக்கு களம் புகும் வீரர்கள் படிக்க வேண்டிய அடிப்படை ஆவணமாக அமைகிறது.
இந்த நூலின் தொடர்ச்சியாக ஐயா க.ப. அறவாணன் அவர்களின் தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? என்கின்ற 2002 ல் வெளியான மற்றொரு முக்கியமான நூலும் அமைகிறது.
அடிமை என்ற சொல்லை ஆய்வு செய்வதிலிருந்து தொடங்கும் இந்த நூல் தமிழரைப் போல் இல்லாமல் ஜப்பானியர், தாய்லாந்தினர், சீனர் போன்ற மற்ற இனத்தார் எப்படி வேற்று இனத்தாருக்கு அடிமையாகாமல் தடுத்துக் கொண்டார்கள் என்பதை பற்றி வரலாற்றுத் தகவல்களோடு விரிவாக ஆய்வு செய்கிறது. பிறகு தமிழர் அடிமை வரலாறு என்ற தலைப்பில் பழந்தமிழகத்தில் அடிமை முறை எவ்வாறு இருந்தது என்பதற்கான சங்க இலக்கிய , வள்ளுவச் சான்றுகளை பேசுகிறது. தமிழர் அரேபியருக்கும், தெலுங்கருக்கும், ஐரோப்பாவினருக்கும் எப்படி அடிமை ஆனார்கள் என்பதை விரிவாக ஆய்வு செய்யும் ஐயா அறவாணன் அவர்கள் அதற்கு ஆதாரமாக பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை பன்மொழி அறிஞர்கள் நூல்களில் மற்றும் சுய வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து பயன்படுத்துகிறார். தமிழர் அடிமை வரலாறைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த இந்த நூல் அதற்கான காரணங்களான தமிழர் தொலைநோக்கு இல்லாமல் போனது, கல்வி அறிவின்மை, தமிழர் பின்பற்றிய மதங்கள், பெண்ணடிமை, மன்னனுக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லாமை, அறிஞர் பெருமக்கள் அநீதி இழைக்கபடும் போது போராடாமல் இருந்தது, தமிழ் மன்னர் இடையே ஒற்றுமை இல்லாமை, வெள்ளை நிற மோகம் போன்ற பல காரணங்களை ஆய்வு செய்வதோடு மட்டுமில்லாமல், இதற்கான தீர்வழிகளையும் மூன்றாம் பகுதியில் அலசுகிறது. தன்னம்பிக்கை இன்மை தாழ்வு மனப்பான்மை, அடிமை மனப்போக்கு ஆகிய மூன்றும் தமிழர் வரலாற்றில் திட்டமிட்டே நுழைக்கப்பட்டன என அரசியல் பொருளாதார சமுதாய காரணங்களை முன்வைத்து நிறுவுகின்ற இந்த நூல் தமிழர் வளம் பெற வழிகளாக அறிவின் ஆட்சி நடைபெற வேண்டும் என வரையறுக்கிறது.’ கட்சி வழி அரசியல் ஒரு சாய்ஸ்( வைரஸ்) நோய்’ என அடித்துச் சொல்லும் இந்த நூல் உலகமயமாதலின் கேடுகளைப் பற்றியும் நுகர்வு கலாச்சார படையெடுப்பை பற்றியும் தொலைக்காட்சி மோகத்தைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்கிறது.
இந்த நூலின் நோக்கம் பற்றி ஐயா அறவாணன் அவர்கள் கூறும்போது..
“நம்மைப் பற்றி சிறுமைகளை அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்படவில்லை. அவற்றை அறிந்து கொள்ள வேண்டும், ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், என்பதற்காகவும் தவறுகளுக்காக வருந்துவதற்காகவும், வருங்காலத்தில் அவை மீண்டும் மீண்டும் நிகழாமல் இருக்க திருந்துவதற்காகவும், மேற்கொள்ள வேண்டிய தற்காப்புக்காகவும் இவை எழுதப்படுகின்றன.” என்கிறார்.
இந்த இரண்டு நூல்களிலும் பல நூறு செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. முக்கியமான இந்த இரண்டு புத்தகங்களை படிப்பவர் தமிழர் வரலாற்றைப் பற்றி மாபெரும் தெளிவை அடைவார்கள்.
புரட்சியாளர் லெனின் கூறுவது போல “வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சிக் கொள்ள முடியாது” என்பதை உணரும் காலகட்டத்தில் வாழ்கின்ற நாம், நமக்கென இருக்கின்ற வரலாற்றின் அடிப்படைச் செய்திகளை ஐயா அறவாணன் எழுதிய இந்த இரண்டு மாபெரும் நூல்களின் வாயிலாக கற்க வேண்டியது காலத்தின் கடமையாகும்.
பேரறிஞர் ஐயா க.ப.அறவாணன் தஞ்சை மாவட்டம் கடலங்குடியில் 1941 இல் பிறந்தவர். ஐயா தமிழியம் சார்ந்தும் கல்வியியல் சார்ந்தும் தமிழர் வரலாறு அரசியல் தமிழரின் உளவியல் இன்னும் பல்வேறு துறைகள் சார்ந்தும் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தமிழரின் அற உணர்வை பற்றி தீவிரமாக ஆய்வு செய்து “அற இலக்கிய களஞ்சியம்” என்ற தொகுப்பு நூலை உருவாக்கியதில் ஐயா அறவாணனின் பங்கு முதன்மையானது.
ஐயா எழுதிய ‘ஈழம் தமிழரின் தாயகம்” என்கின்ற நூல், பிழைக்க போன நாட்டில் தமிழர்கள் ஏன் தனி நாடு கேட்கிறார்கள் என கேட்கும் அறிவற்றவர்களுக்காக எழுதப்பட்ட அறிவாயுதம். அவரது “சமணம் வளர்த்த தமிழ் இலக்கணம்” மிகச்சிறந்த ஆய்வுப் படைப்பு. தன் 27 ஆம் வயதில் கல்லூரி முதல்வரான ஐயா நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர். அவரது காலத்தில் எனது பெரிய தந்தை எழுத்தாளுமை ச. கல்யாணராமன் அவர்களின் பெரும் முயற்சியால், கும்பகோணத்திற்கு வந்து என் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தது எனது வாழ்நாள் பெருமை. ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு ஒவ்வொரு மணித்துளியும் வீணாக்காமல், தன் வாழ்நாள் முழுக்க தமிழரின் உயர்வுக்காக உழைத்த ஐயா அறவாணன் தன் வெற்றியின் ரகசியமாக “பொறுத்துப்போ, புறக்கணி, கடந்து போ..” என்கிற மூன்று கருத்துக்களை முன் வைக்கிறார். “பேசுவதைக் குறை. முடிந்தால் நிறுத்து.” என போதிக்கும்
ஐயா அவர்கள்
“முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்!
முடிந்தால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்!
இயன்றால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்!”என முழங்கினார்.
உண்மையில் தமிழர் இனத்தில் தோன்றிய தனிமனித வரலாறு ஐயா க.ப. அறவாணன் அவர்கள்.2018 ல் நிகழ்ந்த ஐயாவின் மறைவிற்குப் பிறகு அவரது துணைவியார் அம்மா தாயம்மாள் அறவாணன் அவர்கள் “தமிழ்க்கோட்டம்” பதிப்பகம் மூலம் ஐயாவின் எழுத்துக்களை தொடர்ந்து பதிப்பித்து மாபெரும் தமிழ்ச்சேவை ஆற்றி வருகிறார்.
“பிறந்த ஊரில் கூட பாசை மாறி பேசும் காக்கைகள் உள்ளன. அவை காக்கைகள்தான். அப்படித்தான் மாறிப் பேசும். குயிலாக இருந்தால் மாறுமா ? மாற நேர்ந்தால் மடிந்து போகும் குயில் சாதி!
தமிழர் குயிலாக இருக்கட்டும் வேழமாக பிளிரட்டும்! வேங்கைப் புலியாக உறுமட்டும்! “
என தன் ஆன்மாவிலிருந்து எழுதிய பேரறிஞர் ஐயா க.ப.அறவாணன் அவர்களது படைப்புக்கள் இருண்டுக் கிடக்கும் தமிழர் மீள் எழுச்சிக்கான வரலாற்று வெளிச்சங்கள்.
தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள்.- க.ப.அறவாணன்/ பக்கங்கள் 273./ விலை ரூ 300
தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு ? – க.ப.அறவாணன் /பக்கங்கள் 336. விலை ரூ200.
ஐயா அறவாணன் அவர்களின் அனைத்து நூல்களையும் வெளியிடுவது
தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, சென்னை.
மறுமொழி இடவும்