🌑

உடைந்த
என் மனம்
பெருமழைக்
காலத்தில்
பசுங்கொடியேறிய
கோவில் சுவற்றோரம்
நடுநடுங்கி நிற்கும்
நனைந்த ஒரு நாய்க்குட்டி.

அதன் பரிதாபக்
கண்களுக்கு
பின்னால் இருக்கும்
சிராய்ப்புகள்
குறித்து ஆராயாதே.

நீ ஆழ் மனதில்
சேகரித்து வைத்திருக்கிற
இரக்கத்தின்
ரொட்டித் துண்டுகளை
அதை நோக்கி வீசாதே.

உலர்ந்த உன்
சொற்களைக் கொண்டு
அதன் துயரத்தை துவட்ட நினைக்காதே.

அதன்
காரணக் காரியங்களை
ஆராய
காரிருள் காயங்களின் மீது
உன் மெய்யறிவு
மின்மினிகளை வீசாதே.

வலி போக்கும்
வாஞ்சை நிறைந்த
உன் பாடல்.
கூடவே
உன் பச்சாதாபம்
தங்கத்துகள்களாய்
மிதக்கும்
கரிசனையின் மது.
துன்பம் வருட
காற்றிலலையும்
உன் தயாளத்தின்
இசைத் துண்டு.
பரவசமூட்டும்
உனதன்பின் சாரல்
அணிந்த ஒரு ரோஜா.

என
எதுவும் வேண்டாம்
அதற்கு.

இப்போதைய
தேவை.

எவ்வித விளக்கமும்
கோராத ஒரு
சிறிய மெளனம்.

பிறகு ..

கதகதப்பாய்
ஒரு பார்வை.

அவ்வளவே.

இந்த அளவில்
கருணை,
இந்த அளவில்
ஆறுதல்,
இந்த இரவுக்கு
போதுமானது.

❤️