வெறுப்பலையும்
காடு.

🌑

உன்னை
வெறுப்பதிலும்
எனக்கு ஒரு வசதி
இருக்கிறது.

நான் என்னை
வெறுத்துக் கொள்கிறேன்.

வாழ்வின் கசப்பை
ஒரு மலையோரத்து
கடைத்தேநீரைப் போல
சுவைத்துக் குடிக்கிறேன்.

பார்வைகளில்
இழையோடும் வன்மத்தை
ஒரு மாய எதார்த்தவாத
ஓவியம் போல் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

சிறிய கைகுலுக்கலில்
ஆரத்தழுவலில்
தென்படும் சிறிய
ஒவ்வாமையை
இசைத்துளி போல
உணர்ந்துக் கொள்கிறேன்.

பாய்ந்து வரும் எதிர்ப்பின்
விஷ முனைகளில்
சகிப்பின் தேன் இருக்கிறதா
என்று சங்கடமாய் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இரவுகளை
உன்னை வெறுப்பதற்காக
நீட்டித்துக் கொள்கிறேன்.
தனிமையின் சாறு அள்ளி
வெறித்த என் விழிகளில்
ஊற்றிக் கொள்கிறேன்.

எங்கோ அலைதலின்
உச்சத்தில் நீரற்ற சுனை
ஒன்றை காணக் கண்டேன்.
யாருமற்ற பகலில்
நேசிப்பின் செதில்களோடு
அங்கே நீந்திப்பார்த்தேன்.

யாராவது
கருணையற்று
வீசும்
கொச்சை வசவுகளில்
ஒளிந்திருக்கும்
சுட்டெரிக்கும் வெயில்
துண்டுகளை என்
ஆன்மாவினுள் போர்த்தி
வைக்கிறேன்.

உன்னை
வெறுப்பதும்
நேசிப்பதும்
எனக்கு
சம தூரம் தான்.

இரண்டிலுமே
தொலைந்து
விடுகிறேன்.

தொலைவதில்தான்
நான்
கண்டெடுக்கப்படுகிறேன்.

உன்னை
வெறுப்பதிலும்
ஒரு வசதி இருக்கத்தான்
செய்கிறது.

❤️