இன்று நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர்கள் வழக்கறிஞர்கள் அண்ணன் சங்கர், அண்ணன் ஸ்ரீதர், மற்றும் வழக்கறிஞர் பாசறை உறவுகள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

குறிப்பாக அண்ணன் வழக்கறிஞர் ஸ்ரீதர் அவர்கள் Fair Criticism மற்றும் Defamation என்கிற இரண்டு இருக்குமான வேறுபாட்டை தெளிவான வழக்கறிஞர் மொழியில் எடுத்து வைத்தது மிகச் சிறப்பாக இருந்தது.

எப்போதும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை தாண்டி சுய விருப்பு வெறுப்புகளுக்காக செயல்பட்டு, ட்விட்டரில் பொது மனிதன் போல (like a Common Man) பதிவு போடுவது, கைது செய்யும் நபர்களை இரவு முழுக்க வைத்து அடிப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடும்போது, உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எங்களது வழக்கறிஞர்கள் தெளிவாக பத்திரிகையாளர்கள் முன்பாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொது மனிதர்களோ, அரசியல்வாதிகளோ அல்லர். அவர்கள் உரிய சட்டத்தின் படி நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டியவர்கள். அரசு என்பது எப்போதும் நிலையானது. அரசாங்கம் என்பது மாறிக் கொள்வது. அரசாங்கத்தை வழிநடத்தும் அரசியல்வாதிகள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறி விடுவார்கள். ஆனால் நிர்வாக பொறுப்பில் இருக்கின்ற அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும் வரை நிர்வாகப் பொறுப்பில் தான் இருப்பார்கள். எனவே நிர்வாக பொறுப்பில் இருக்கின்ற அரசு அதிகாரிகளுக்கு இன்னமும் பொறுப்பும், கடமையும் அதிகம். ஆனால் இந்த மரபுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு அரசு அதிகாரிகள் கட்சி அரசியல்வாதிகள் போல செயல்பட தொடங்குவதில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

ஒரு காவல்துறை அதிகாரி சமூக வலைதளங்களில் தன்னை திட்டுகிறார்கள் என்ற அடிப்படையில் ஒரு புகார் கொடுத்தவுடன் 24 மணி நேரத்திற்குள்ளாக உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 2 இரண்டு பேரை உடனே கைது செய்து, இரண்டு பேரையும் காட்டுமிராண்டித்தனமாக அடித்து, அண்ணன் சீமான் உள்ளிட்ட பலர் மீது அடிப்படையற்ற வழக்கு பதிவு செய்து இருக்கின்ற காவல்துறை வேறு எதற்காவது இவ்வாறு செய்திருக்கிறதா என்கிற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

கடந்த மாதம் சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசால் கைது செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட இரண்டு அலைபேசியில் இருந்து எப்படி தனிப்பட்ட உரையாடல்கள் திமுக ஆதரவு இணையதள ஆட்களிடம் சட்டத்திற்கு புறம்பாக கசிய விடப்பட்டன என்பது பற்றி தமிழக காவல்துறை பதில் சொல்ல மறுக்கிறது. இதுகுறித்து நாங்கள் மாண்பமை மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். ஆனால் அதற்கு இதுவரை தமிழக காவல்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை.

சமூக வலைதளங்களில் திட்டுகிறார்கள் என வழக்கு போட ஆரம்பித்தால், ஒரு திமுக இணையதள ஆதரவாளர் கூட வழக்கு இல்லாமல் தப்பிக்க முடியாது. ஆனால் அவர்கள் மீது நாங்கள் வழக்கு கொடுத்தால் வழக்குப் பதிய மாட்டார்கள்.எங்களது கட்சியைப் பற்றி, எங்கள் கட்சியின் தலைமை அமைப்பாளர் அண்ணன் சீமானை பற்றி, எங்களது குடும்பத்தினரை பற்றி மிகவும் தரக்குறைவான ஆபாச வார்த்தைகளில், பொய்யான செய்திகளை அவதூறு பரப்ப வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தில் பரப்பி வருகிற திமுக ஆதரவு யூ டியூபர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் மீது தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்களைப் பற்றிய அவதூறுகள் குறித்த பல நூறு புகார் மனுக்கள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழக சைபர் கிரைம் பிரிவிடம் நாங்கள் அளித்தும் இதுவரை ஒரு நடவடிக்கை கூட, ஒரு விசாரணைக்கு ஒரு அழைப்பானை அனுப்பப்பட்டதாக கூட தகவல் கிடையாது.

காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினரை கொலை மிரட்டல் செய்து ஆபாசமாக எழுதுவது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல, அதை நாம் எந்த விதத்திலும் நியாயப்படுத்தவில்லை. அதற்கு உரிய சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.அதே சமயத்தில் எங்கள் குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாக பேசும் இணையதள திமுகவினர் மீது நாங்கள் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தமிழக காவல்துறை விளக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும்.

சட்டத்தின் அடிப்படையிலும், எங்கள் தலைவர் எங்கள் ஆன்மாவில் பதித்திருக்கிற அறத்தின் அடிப்படையிலும் எங்கள் மீது ஏவப்படும் எல்லாவித எதிர்ப்புகளையும் சந்திப்போம்.

சிறப்பாக செயல்பட்ட வழக்கறிஞர் பாசறை உறவுகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

🌑
வழக்கறிஞர் மணி செந்தில்.
நாம் தமிழர் கட்சி.