Namo

ஒரு ஆக்டோபஸ் தனது கரங்களை பல் திசைகளில் விரித்து எப்படி இரையை கவ்வ முயலுமோ, அது போல இந்துத்துவா என்கிற பேராபத்து ,பல்வேறு தேசிய இனங்கள் ,அவற்றின் பல்வகை பண்பாடுகள் ஆகியவற்றில் ஊறிக் கிடக்கிற இப்பெருநிலத்தினை ஆக்கிரமிக்க முயலுவதை நாம் சமீப காலமாக உணரத் தொடங்கி இருக்கிறோம்.  ஆதித்தமிழ் நிலத்தில் இந்துத்துவத்தின் தலையெடுப்பு அறவே இல்லை என்பதைதான் சமீப ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆதித்தமிழர் பண்பாட்டில் பல்வேறு வகையிலான மெய்யியல் நம்பிக்கைகள் நிலவி வந்திருக்கின்றன.

 சைவம்,புத்தம்,வைணவம்,சமணம்,ஆசீவகம்  என பல்வகையிலான மெய்யியல் நம்பிக்கைகள் தங்களுக்கே உரிய தனித்துவங்களோடு திகழ்ந்திருக்கின்றன. வைணவம்-சைவம், சமணம்-சைவம், பெளத்தம்-சமணம், என பல்வேறு வகையிலான மத நம்பிக்கைகளுக்கு இடையிலான விவாதங்களையும், பூசல்களையும் நாம் வரலாற்றின் பாதையில் நெடுக காணுகிறோம்.  ஆனால் இவைகளை ஒர்மைப்படுத்தி தங்களது வாழ்வியல்,அரசியல் பிழைப்புகளுக்காக பார்ப்பனர்கள் இந்துத்துவம் என்கிற புள்ளியில் இணைத்ததுதான் இப்பெருநிலத்தில் நடந்த மாபெரும் அரசியல் நடவடிக்கையாக நாம் கருதலாம்.

இந்து,இந்தியா போன்ற சொல்லாடல்கள் ஆங்கிலேயரால் உருவகம் செய்யப்பட்ட சொற்களாக இப்பெருநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. 1904ல் பார்ப்பனீய நாளிதழான இந்து, ஆரிய தேசிய இனம் என இந்திய சமூகத்தினை வரையறுக்க தொடங்கியதாகவும், 1930 களில் சென்னையில் தொடங்கப்பட்ட Hindu Literary Society என்ற கல்விச் சங்கம் கிருஸ்துவர்களும்,முஸ்லீம்களும் அல்லாத இதர உள்நாட்டவரை குறிக்கும் சொல்லாக ’இந்து’ என்கிற சொல்லை பயன்படுத்தியதாகவும் பேரா.தொ.பரமசிவன் கூறுகிறார்.[1] இவ்வாறாக பல்வேறு மதநம்பிக்கைகள் உடைய, தங்களுக்குள் மெய்யியல் நடவடிக்கைகளில் முரண்களை உடைய வெவ்வேறு குழு மக்களை தங்களுக்கு கீழாக அடிமைப்படுத்திக் கொள்ள இந்து என்கிற சொல்லை திட்டமிட்டு ஒர்மை சொல்லாக பார்ப்பனீயம் பயன்படுத்தி வந்ததை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது .மேலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட பத்திரிக்கையான இந்து நாளிதழை தொடங்கியதும்,அக்காலத்திய பல இந்து என்ற பெயர் வரும்படியான பல பத்திரிக்கைகளை தொடங்கியதும் பார்ப்பனர்களே என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஹிட்லர் தனது உரத்தக் குரலில் முழங்கிய ஆரிய பெருமிதம் இங்கே பார்ப்பனீயமாக மாறி இந்துத்துவம் என்கிற அரசியலாக மாறி இருக்கிறது . மேலை ஆரியர்கள் ஜெர்மானியர்கள் என்றால் கீழை ஆரியர்களாக இந்துத்துவ பெருமிதம் பேசுகிற பார்ப்பனர்கள் திகழ்கிறார்கள். எனவே தான் நாசிசம்,பாசிசம் போன்ற புள்ளிகளில் இயல்பாகவே இந்துத்துவா தன்னை மிக எளிதில் பொருத்திக் கொள்கிறது . இப்படி ஆரியர்களின் தத்துவமான இந்துத்துவாவை நிறுவ துடிக்கும் தலையாய  ஆரியஅமைப்பாக ஆர்.எஸ்.எஸ் திகழ்கிறது. சமூக பண்பாட்டு தளங்களில் ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங் தள்,இந்து முன்னணி  போன்ற  பல இந்துத்துவா அமைப்புகளும், அரசியல்-அதிகார தளங்களில் பாஜக,சிவசேனா போன்ற அமைப்புகளும் கைக்கோர்த்து திட்டமிட்டு செயல்படுவதை நாம் கண்கூடாக கவனித்து வருகிறோம்.

சமீப காலமாக அதிகரித்து உள்ள விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் ஊர்வலங்களுக்கு பின்புலமாக இருப்பதும் இப்படிப்பட்ட இந்துத்துவ அரசியல் என்பதை உணர முடிகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வட மாநிலங்களில் பிளேக் நோய் பரவிய போது அப்போது பெருகி இருந்த எலிகளை ஒழிக்க ஆங்கிலேயர் நடவடிக்கை  எடுத்தப் போது,அதற்கு எதிரான கலகமாக பிள்ளையார் ஊர்வலத்தை திலகர் நடத்தினார்.  இந்த பிள்ளையார் ஊர்வலம் தான் இன்று முஸ்லீம்களை குறி வைத்து இந்துத்துவ ஒர்மையை நிறுவ முற்படும் அரசியல் நடவடிக்கையாக மாறி இருக்கிறது. மேற்கண்ட பால கங்காதர திலகரும் ஆரிய சமாஜ்  என்ற இந்துத்துவ இயக்கத்தினை சார்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.

இந்துத்துவாவின் மாபெரும் அரசியல் நடவடிக்கைதான் இந்தியா என்கிற பெருந்தேசமாகவும் மாறி இருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் , வேறு பட்ட பருவ காலங்கள் உடைய நிலச்சூழல் ,பல்வேறு மொழிகள், பல்வகையிலான பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவைகளை தனது பிழைப்பிற்காக இந்துத்துவா இந்தியாவாக இணைத்து வைத்திருக்கிறது.

தன்னை ஒரு இந்துவாக காட்டிக் கொண்டாலும் பல்வகை பண்பாடுகளுக்கும், பல்வகை மத நம்பிக்கை உணர்ச்சிகளுக்கும் மதிப்பளித்த காந்தியடிகளை ஆர்.எஸ்.எஸ் கொன்றது கூட அவர் இஸ்லாமியர்களிடத்திலும் சரிசமமான நியாயம் பாராட்டியதுதான் என்பது வெளிப்படை.  இன்று தேசத்தந்தையாக உருவகப்படுத்தப்பட்டுள்ள காந்தியடிகளை கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆளுங்கட்சி தரப்பிலாலேயே எழுப்பபடுவதன் அரசியல் காந்தியடிகள் போதித்த பல்வகை மதங்களுக்கு இடையிலான இணக்க உணர்வு,சகிப்புத்தன்மை போன்ற நல்லிணக்க உணர்வுகளுக்கு எதிரான இந்துத்துவ உளவியலை அடிப்படையாக கொண்டது .

இந்துத்துவம் தற்காலத்தின் நவீனத்தன்மைகளை உள்வாங்கி நவீன இந்துத்துவாவாக மாறி விட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் இந்துக்களின் நாயகனாக அடையாளம் காட்டப்பட்ட அத்வானி ஓரங்கப்பட்டு, இன்று மோடியை நவீன இந்துத்துவா முன் நிறுத்துகிறது.  பாபர் மசூதியை இடித்த அத்வானியை விட 2002 –ல் குஜராத் கலவரங்களில்  2000 முஸ்லீம்களை கொன்ற இந்துத்துவா அமைப்புகளின் பிம்பமான நரேந்திர மோடியே நவீன இந்துத்துவாவின் வடிவமாக முன்நிறுத்தப்படுகிறார்.

 பண்டைய இந்துத்துவா சமூக அடுக்குகளில் மனுதர்மத்தின் படி வருணாசிரம ஏற்றத்தாழ்வுகளை  நிறுவ முயன்று வென்றது என்றால், நவீன இந்துத்துவா வாக்கரசியல் மூலம் பெற்ற அளப்பரிய அதிகாரங்கள் மூலம் சமூகத்தளம்,அறிவுத்தளம் என அனைத்து தளங்களிலும் தனது ஆதிக்கத்தினை உறுதிப்படுத்துகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை தனது வரலாற்றில் சுவைத்த பாஜக தனது வெற்றியை இந்துத்துவாவின் வெற்றியாகவே பதிய செய்ய விரும்பியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத்ரத்னா வழங்க முடிவெடுத்தது,பாஜக ஆட்சியேற்ற உடனேயே இந்தியாவை இந்துக்களின் தேசமாக அறிவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அறைகூவல் விடுத்தது, உயர் கல்வியியல் அமைப்பான இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் ( ICHR ) தலைவராக இந்துத்துவா சார்பாளரான சுதர்சனராவை நியமித்தது,பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கோருவது, சமஸ்கிருதம்,இந்தி திணிப்பு நடவடிக்கைகள் போன்றவை பதவியேற்ற மோடி அரசு நவீன இந்துத்துவாவின் முகமாகவே தன்னை காட்டிக் கொள்ள விரும்பியதை அப்பட்டமாக உறுதி செய்தன.

வருணாசிரம,மனு தர்ம அடுக்குகளை காப்பாற்றுவதும், அதற்கு எதிராக,அல்லது இந்துத்துவா நிறுவ விரும்பும் பண்பாட்டில் சலனம் ஏற்படுத்தினால், அது எதுவாக இருந்தாலும் இந்துத்துவத்தின் பாசிச தன்மை மோதி அழிக்கும்.

 அதற்கு சமீபத்திய உதாரணம் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் சார்ந்த இந்து அமைப்புகளின் எதிர்ப்பு.

பெருமாள் முருகனின் இதர படைப்புகளை போல ஒரு படைப்பாக மாதொரு பாகன் என்னை கவரவில்லை என்றாலும் கூட.. என்றோ ஒரு காலத்தில் நிலவியதாக எழுதப்பட்டிருக்கிற மரபு/புனைவு சார்ந்த தரவுகள் குறித்து எவ்வித அடிப்படை இல்லாமல் (தரவுகள்/தகவல்கள்/ஆதாரங்கள் பிரதியில் இல்லை) அணுகிய அரசியல்/ படைப்பாளர் செலுத்திய கனத்த மவுனம், சரணடைதல் போன்றவை மேற்கண்ட பிரதியில் காணப்படும் நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குரியதாக்கி விடுகிறது என்றாலும்.. மாதொரு பாகன் தொடர்பாக நிகழ்கிற அரசியல் பதட்டம் கொள்ளவே வைக்கிறது.

ஒரு அறிவாய்ந்த விவாதமாய், சமூக ஆய்வாய் விரிந்து, பல புள்ளிகளில் படர்ந்து.. கண்டடைய வேண்டிய முடிவுகளை..இந்து மதமும், சாதியும் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பது நாம் எத்தகைய மோசமான உலகில் வாழ்கிறோம் என்பதற்கு அடையாளங்களாக திகழ்கின்றன. உண்மையில் பல அறிவாய்ந்த விவாதங்களின் முடிவில் இப்பிரதி படைப்பாளனால் கைவிடப்பட்டிருந்தால்/ திரும்ப பெற்றிருக்கப்பட்டால்..அதிலாவது அர்த்தம் இருந்திருக்கும்.

புராண,இதிகாசங்களில் தேங்கிக் கிடக்கிற புனைவின் கோடிக்கணக்கான மீறல்களை கண்டு கொள்ளாமல்…கடக்க வைக்கிற சாதி, இந்துத்துவ அரசியல்… மாதொரு பாகனை கொளுத்திப் போடுகிறதென்றால்.. படைப்பிற்கு வெளியே படைப்பாளியை இழுத்து அரட்டி,மிரட்டுகிறது என்றால்..நவீன இந்துத்துவாவின் பாசிச முகத்தினை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடியும்.

இப்பாசிச தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தான்எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்து விட்டான் என அவரே அறிவித்து.. இனி, தன்னை வெறும் பெ.முருகன் என அறிவித்து விட்டு தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளுவதாகவும் அறிவித்து விட்டார் .  தனக்கு எதிராக, தான் நிறுவி இருக்கிற சாதீய அடுக்குகளுக்கு எதிராக சுட்டு விரல் அசைந்தால் முறித்துப் போடுகிற கோபம் கொள்வது நவீன இந்துத்துவாவின் அடிப்படைத்தன்மை. இதுதான் பாசிசத்தின் குணம்.

              எப்போதும் இந்துத்துவம் தேசிய இனங்களின் நலனிற்கு எதிராகவே பணிபுரியும் . ஏனெனில் தன்னை ஒரு தேசிய இனமாக இந்துத்துவம் நிறுவ முயலுவதோடு மட்டுமில்லாமல் தேசிய இனங்களின் உரிமைகளை சிதைத்து ,அந்த தேசிய இனத்தையே முழுங்க காத்திருக்கும் முதலையாகவே இந்துத்துவா விளங்குகிறது. மண்ணின் பூர்வகுடி மக்களின் தனித்துவங்களை அழிப்பதில் தான் தன் வெற்றி இருக்கிறது என்பதை நவீன இந்துத்துவம் மிகச்சரியாகவே கணித்து வைத்துள்ளது. அதனால் தான் ஈழ விடுதலை, மீத்தேன் எதிர்ப்பு,கச்சத்தீவு மீட்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, போன்ற தமிழக பூர்வக்குடிகளின்  போராட்டத்தினை இந்துத்துவாவின் அரசியல் வடிவமான மத்திய பாஜக அரசும் நசுக்கவே முயலுகிறது. அதுமட்டுமில்லாமல் சுற்று சூழலியலுக்கு எதிராக வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் பொருளாதார-கனிம சுரண்டலுக்கு எதிராக வட கிழக்கு மாநிலக் காடுகளில் அணிவகுத்து நிற்கிற பூர்வீக குடி மக்களின் போராட்டங்களையும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்த கரை மக்களின் போராட்டத்தினையும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான வெளிநாட்டின் சூழ்ச்சி என துரோகப்பட்டம் கட்டுவதில் இந்துத்துவ பாஜக அரசு முனைப்பாக உள்ளது.

இச்சூழலில் தனித்த தேசிய இனமான தமிழர் தேசிய இனம் தனது எழுச்சிக்கும்,வளர்ச்சிக்கும்,மீட்சிக்கும் அப்பட்டமான எதிரியாக இருக்கிற நவீன இந்துத்துவாவின் பாசிச முகத்தினை அடையாளம் கண்டு, அதன் நடவடிக்கைகளில் கவனம் கொண்டு.. தனது மண்ணையும்,மக்களையும் காப்பாற்ற போராட வேண்டியது அதன் மிக  முக்கிய கடமையாக இருக்கிறது.

ஓடாத மானும்,போராடாத இனமும் வரலாற்றில் வாழ்ந்ததாகவே சரித்திரம் இல்லை என்கிறார் நம் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள்.  எனவே நாம் போராடி வாழ போகிறோமா, இல்லையேல் சகித்து போராடாமல் அமைதி காத்து வீழப் போகிறோமா என்பதை நாம் உறுதி செய்து கொள்வோம்.

எங்கள் தேசம் இதழ் மார்ச் 15-2015