ஜனநாயக நடைமுறையில் மக்களின் பங்கேற்பு என்பது முக்கிய அம்சம். மக்களிடமிருந்து நன்கொடை பெறுவது என்பதும், திரள் நிதி கேட்டுப் பெறுவது என்பதும் ஜனநாயக விழுமியங்களில் மிக முக்கியமானது. இடதுசாரி அமைப்புகளில்” லெவி” என்று சொல்லப்படக்கூடிய கட்சி உறுப்பினர் சந்தா கட்டாயமான ஒன்று. அதே போல் மக்களிடம் திரள்நிதி வசூலிப்பது என்பது இடதுசாரிகள் மட்டுமல்ல, திராவிட கட்சிகளின் தொடக்க வரலாற்றிலும் நிகழ்ந்த மிக முக்கியமான அரசியல் நடவடிக்கை. திராவிடக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு ஊழல் மற்றும் தன்னல அரசியலால் கோடான கோடி சம்பாதித்து விட்ட பிறகு , ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் வாரி வழங்க தயாராக இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்ட பிறகு மக்களிடம் திரள்நிதி வசூலிப்பதை நிறுத்தின. உலக அரசியல் கட்சிகளின் வரலாற்றினை , போராட்ட புரட்சிகர இயக்கங்களின் வரலாற்றினை படிக்கும் போது மக்களிடமிருந்தே நிதி பெறப்பட்ட “ஜனநாயக பங்கேற்பு” செய்திகளை அறியலாம்.
நாம் தமிழர் தொடக்க காலத்தில் இருந்து தனது அரசியல் நடவடிக்கைகளில் மக்களின் பங்கேற்பினை உறுதி செய்து கொண்டே வந்திருக்கிறது. இது மிகவும் இயல்பான ஒன்று.
ஆனால் இதையெல்லாம் ஒரு காவல்துறை அதிகாரி குறிப்பிட்டு எழுதி குறை கூற வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது என உண்மையிலேயே புரியவில்லை. இப்படி மக்களிடம் திரள்நிதி பெறுவது என்பது பிச்சை எடுப்பது என்றெல்லாம் வரம்பு மீறி பேசுவது ஒரு அரசு சம்பளத்தை வாங்குகிற ஒரு காவல்துறை அதிகாரிக்கான தகுதி ஆகாது. மக்களிடம் அரசியல் நடவடிக்கைகளுக்காக நிதி பெறுவது என்பது ஒரு அரசியல் நடவடிக்கை. அதை இழிவாக பார்க்க என்ன இருக்கிறது..?
இந்தப் பிரச்சனையின் தொடக்கத்தில் இருந்து ஒன்றை நான் வலியுறுத்தி சொல்லி வருகிறேன். அதிகாரிகளுக்கென்று ஒரு வரம்பு இருக்கிறது. அதை அவர்கள் மீறும்போது அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்படும் முரண்கள்/ சண்டைகள் நிரந்தரமானதோ, தீர்க்கமானதோ அல்ல. நாளை ஒரு பொது விழாவில் சந்திக்கும் போது கைக்குலுக்கி விட்டு நட்பு பாராட்டி விட்டுப் போய் விடுவார்கள்.
ஆனால் அதிகாரிகளின் நிலை அவ்வாறு அல்ல. கட்சிகளை சார்ந்து அரசாங்கங்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அரசு அதன் அதிகாரிகள் நிலையானவர்கள். அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள்.அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் போல ஒரு கட்சிக்கு எதிர் நிலைப்பாடு எடுத்து எல்லாவற்றிற்கும் எதிர்வினை செய்து கொண்டு இருப்பது அரசு ஊழியர் செயல்பாட்டு விதிகளின்படியும், அரசு மரபுகள் படியும் மிகப் பிழையானவை.
குற்றம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுத்து பரிகாரம் தேடிக்கொள்வதே சிறந்தது. அதை விடுத்து பதிவு போடுவதும், சிறிய இளைஞர்களை அழைத்து வந்து மிரட்டுவது போல பதிவு போடுவதும், அந்தப் பதிவினை பரப்பி உசுப்பேற்றும் ஒன்றுக்கும் ஆகாத உபிக்களின் வார்த்தைகளைக் கேட்டு பரவசம் அடைவதும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு இருக்கக் கூடாத மோசமான நிலைமை.
இந்தப் பிரச்சனை தொடங்கும் போது கைதுகள் நடைபெற்ற பிறகு, தொடக்கத்திலேயே மிகத் தெளிவாக நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை தனது அமைப்பு உறவுகளுக்காக வழிகாட்டு நெறிமுறை அடங்கிய ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அது ஒரு நேர்மறை நடவடிக்கை. தவறாக பதிவிடும் நபர்களை கட்டுப்படுத்த ஒரு கட்சி அமைப்பு எடுக்கின்ற செயல்பாடு. அதைப் புரிந்து கொண்டு விவாதத்தை நிறுத்தி இருந்தால் மோசமான சூழல் ஏற்பட்டிருக்காது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்கள், வழக்கினை சந்தித்தவர்கள் அதை சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொள்வார்கள். அதில் விவாதித்துக் கொள்ளவோ, வீர வசனம் பேசவோ, எள்ளி நகையாடவோ ஒன்றுமே இல்லை. வரம்பு மீறி மீண்டும் மீண்டும் செயல்படுவது என்பது இன்னும் மோசமான சூழலை ஏற்படுத்திக் கொண்டே தான் போகும். தவறு செய்தவர்களை கைது செய்யுங்கள். சட்டப்படி எதிர்கொள்ளுங்கள்.
அதைவிடுத்து மீண்டும், மீண்டும் பதிவு போட்டு விவாதமாக்கும் போக்கு , தினம்தோறும் அண்ணன் சீமான் அவர்களுக்கு பதில் சொல்லி, அல்லது அண்ணன் சீமான் அவர்களை பதில் சொல்ல நிர்பந்தங்களை ஏற்படுத்தி, பிரச்சனையை அப்படியே தொடர்ந்து வெப்பத்தில் வைக்கும் நிலை , என இவை எதுவுமே ஒரு காவல்துறை அதிகாரிக்கு தேவையற்ற நிலைமை.
அண்ணன் சீமான் சொன்னது போல “அவரவர் வேலையை அவரவர் பார்த்தால்” அனைத்தும் இங்கு நலம்.
நலமே நடக்கட்டும்.
🌑
மறுமொழி இடவும்