பசுமையேறிய
வனத்தினைப் பார்த்து
எதையோ தேட ,
அல்லது
தங்களை
ஏதோ ஒன்றில்
தொலைக்க,
என்னுடன் வந்தவர்கள்
வனமேறிப்
போனார்கள்.

நானோ
துவண்ட கால்களோடு
நான் தனிமையின்
குறுங்கத்தியால்
ஆழக் குத்தப்பட்டு
கைவிடப்பட்டத் தனியன்.

எவரோ செதுக்கி விட்டு
கைவிட்டுப் போன
குறைச் சிற்பம் போல
என் முன்னால்
ஒரு ஆதிமலை ஒன்று
அமர்ந்திருந்தது.

இருவரும்
பார்த்துக்கொண்ட போது
எங்களைப்
பார்த்துக் கொள்ள
யாரும் இல்லை.

தனிமையின்
மெல்லிய
நூலிழை
ஒரு சிலந்தி வலை போல
எங்களிடை படர,
விசித்திர காலத்தின்
விந்தைப் புள்ளியில்
நாங்கள் நெருங்கத்
தொடங்கினோம்.

எங்கிருந்தோ வந்த
இளங்குருவி ஒன்று
ஆதிமலை மடிப்பில்
ஒய்யாரமாய் அமர,
கர்வமாய்
என்னை பார்த்தது
மலை.

சில நொடிகளில்
சீண்டிய காற்றின் சிறகால்
அமர்ந்திருந்த குருவியும்
பறந்து போக,
கைவிடப்பட்ட
ஒரு புராதன கோவில்
போல மலை
இருள் அடைந்தது.

பல கோடி
ஆண்டுகளாய்
ஒரே இடத்தில்
தனிமையின்
நிழல் போர்த்தி
மௌனத்தின்
வலி சுமந்து
உறைந்திருக்கும்
ஆதிமலை அடிவாரத்தின்
பாறையை
ஏதோ ஒன்று நினைத்து
ஆறுதலாய்
வருடத் தொடங்கினேன்.

ஆதிமலை
விசும்பத்
தொடங்கியது.

❤️