⚫
“வரலாறு கொடியது. எப்போதும் புனித பிம்பங்களை உடைத்துக் கொண்டே அது நகர்வது. ” என நேற்று என்னிடம் பெரியார் கருத்துக்கள் பற்றி சமகாலத்தில் நிகழ்கிற வாத/ பிரதிவாதங்களை பற்றி பேசிக் கொண்டிருந்த ஒரு மூத்த இயற்பியல் பேராசிரியர் சொன்னார்.ஏனெனில் புனித பிம்பங்கள் நிரந்தரமானவை அல்ல. எல்லா காலத்திலும் அவற்றின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் புனித பிம்பங்கள் அந்த நிலையில் இருந்து அகற்றப்பட்டு வேறு நிலையில் நகர்த்தப்படுகின்றன.
எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியது என எந்த தத்துவமும் இல்லை. அதற்கு பெரியார் கருத்துக்களும் விதிவிலக்கல்ல என்று சொன்னால் நாம் ஆரிய அடிமைகளாக காட்டப்படுவோம், “பிஜேபியின் B டீம்” ஆக கட்டமைக்கப்பட்டு விடுவோம் என்கிற அறிவுப்பரப்பில் திராவிட ஆதரவாளர்களால் எப்போதும் விடுக்கப்படுகிற மிரட்டலை அண்ணன் சீமான் அடித்து நொறுக்கி விட்டார்.ஏனெனில் இங்கே காலங்காலமாக பெரியார் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஏதேனும் குரல் எழுந்தால் அந்தக் குரல் ஆரியத்தின் குரல்/ ஆர் எஸ் எஸ்ஸின் குரல் என கூக்குரலிட்டு,தொண்டை குரல்வளை நெறிக்கப்படுகின்ற காட்சிகள் தான் இதுவரை நடைபெற்று இருக்கின்றன. தமிழக வரலாற்றில் இன்று அண்ணன் சீமான் பெரியாரின் கருத்துக்கள் மற்றும் திராவிட ஆதரவு நிலைகளை நோக்கி எழுப்பி இருக்கிற எதிர்க்குரலை நேர்மையாக எதிர்கொள்ளும் துணிச்சலற்று, சாலைகளில் கட்டப்பட்டு இருக்கின்ற நாம் தமிழர் கட்சி கொடிகளை அறுப்பது, ஆபாசச் சுவரொட்டிகளை ஒட்டுவது என மும்முரம் காட்டுகிற பெரியார் ஆதரவாளர்களின் நிலை மிக பரிதாபகரமானது.
இந்திய வரலாற்றில் எண்ணற்ற பெருந்தலைவர்கள் விமர்சனங்களால் மறுவாசிப்புக்கு/ மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காந்தி குறித்தும் நேரு குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் இது போன்ற விமர்சனங்கள் வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் யாரும் பெரியார் ஆதரவாளர்கள் போல பதட்டம் அடைவதில்லை. சமீபத்தில் கூட ஜவகர்லால் நேரு, எட்வினா மவுண்ட்பேட்டன் பிரபவிற்கு எழுதிய கடிதங்களை குறித்து வட இந்தியாவில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்கள் இவ்வளவு பதட்டங்கள் நிறைந்தது அல்ல. சொல்லப்போனால் அது ஜவகர் மற்றும் எட்வினா என்கின்றதனி நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சார்ந்தது.அந்த மீறலை கூட உரையாடல்களாக, விவாதங்களாக வடக்கர்கள் வைத்துக் கொண்டார்கள்.இதுதான் பெரியாரின் கருத்துக்களுக்கு நிகழ்கிறது.
பெரியார் மீண்டும் மறுவாசிப்புக்கு உள்ளாவது பெரியார் ஆதரவாளர்களால் தாங்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் “கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை” என்று சொன்ன பெரியாரை கடவுள் ஆக்கிவிட்டு, பெரியார் தந்த புத்தி போதும் என்ற அகங்காரத்தில், உன்மத்த வெறியில், எதிர்க்கருத்து கொண்டவர்களைத் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பெரியார் மீது இப்போது எழுந்திருக்கும் விமர்சனங்கள் எப்போதும் இருப்பவைதான். ஆனால் பதட்டத்தின் அளவு எப்போதும் இல்லாதது. பிம்பங்களாக மாற்றப்பட்டவர்களின் அடையாளங்களுக்கு எதிராக எதிர்வினைகள் நிகழ்ந்து கொண்டே இருப்பது என்பது இயற்கை. இதில் எவரும் பதட்டமடையவோ வன்முறை வெறிக் கொள்ளவோ எதுவும் இல்லை.பெரியார் ஆதரவாளர்களை, அதிதீவிர பெரியார் எதிர்ப்பாளர்களாக மாற்றியது பெரியாரைப் பற்றி திட்டமிட்டு புனையப்பட்ட மிகை பிம்பமும், காலத்திற்கு ஒவ்வாத முரண்பாட்டு மூட்டையான பெரியாரின் கொள்கைகளும், பெரியார்/ திராவிட ஆதரவாளர்களின் “சகல வியாதிகளுக்கும் மருந்தாக பெரியாரை” மாற்றி வழிபட்ட தொழுகிற மனநிலையும் தான்.
பெரியாரைப் பற்றி அண்ணன் சீமான் முதல் முதலாக விமர்சனம் வைப்பவர் அல்ல. இதற்கு முன்னால் பெரியாரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன. சமகாலத்தில் தீவிர தமிழ்த் தேசிய தளங்களிலிருந்து எப்போதும் பெரியாரைப் பற்றி விமர்சனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கின்றன.
பெரியார் மிக நீண்டகால அரசியல் வாழ்வைக் கொண்டவர். அவரது தத்துவம் என எதையும் நிலை நிறுத்த முடியாத முரணான/ சீரற்ற அரசியல் நடவடிக்கைகளை உடையவர். காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்து காங்கிரசை எதிர்ப்பதற்காக முதல் மொழிப்போரை ஆதரித்த பெரியார், அதே காங்கிரசை ஆதரிப்பதற்காக, இரண்டாம் மொழிப்போரை எதிர்த்தார். மொழிப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களை “காலிகள்” என்று அழைத்தார். ஏனெனில் அவருக்கு மொழி பற்றி எந்த அபிமானமும் கிடையாது.அதனால்தான் தமிழ் காட்டுமிராண்டி மொழியானது. சனியன் ஆனது. முதல் குடியரசு இதழ் 02-05-1925 தொடங்கும் போது “ஈசன் அருளால்” தொடங்கியுள்ள பெரியார், 1-1-1962 ல் எழுதிய விடுதலை கட்டுரையில் “10 வயதில் இருந்து தான் நாத்திகன்” என கூறியுள்ளார். முதல் குடியரசு இதழை தொடங்கும் போது அவருக்கு வயது 46. ( ஆதாரம் முருகு ராசாங்கம் எழுதிய பெரியாரும் குடியரசும்).1925 ஆம் வருடம் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்த சர் பி.டி. தியாகராயர் இறந்தபோது “அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்கிறார். ராமசாமி நாயக்கர் என தன்னை அழைத்துக் கொண்ட அவர் தனக்கான சாதிப் பெயரை 1927 ஆம் வருடம் தான் நீக்கினார்.ஆதிக்க எதிர்ப்பு என்கிற நிலையில் வெண்மணி படுகொலையில் பெரியார் முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவாக தான் நின்றார்.
காங்கிரசு கட்சி கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டத்தைப் போல ஒரு காத்திரமான போராட்டத்தை பெரியார் ஏன் தமிழ்நாட்டில் முன்னெடுக்கவில்லை என்பது கேள்விக்குரியது. குடியரசு முத்திரைக்கு கீழாக பாரதியாரின் வரிகள் “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந்திய மக்கள்” என இடம் பெற்றிருந்தது. 1930க்கு பிறகாக பாரதியாரை பெரியார் நிராகரித்தார். அண்ணா மனமுவந்து ஏற்றுக் கொண்ட இந்தியாவின் சுதந்திர தினத்தை கருப்புத் தினமாக அறிவித்தார்.நாத்திகம்/ சாதி எதிர்ப்பு/ இந்திய எதிர்ப்பு/ இந்தி எதிர்ப்பு -ஆதரவு என்பதெல்லாம் பெரியாருக்கு காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றம் என்றால்,இதே கருத்து மாற்றம் பட்டறிவு மூலம் அண்ணன் சீமானுக்கு நிகழும் போது ஏன் வலிக்கிறது என்பதுதான் நமது கேள்வி.
பெரியாரின் நிலைப்பாடுகள் காலந் தோறும் மாறி வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் தத்துவார்த்த ரீதியில் அமையாமல் அந்தந்த சூழ்நிலைகளுக்கு தகுந்தாற் போல்/ நபர்களுக்கு தகுந்தாற் போல் பெரியார் என்ற தனி மனிதனின் எண்ணத்திற்கும் முடிவுக்கும் ஏற்றாற் போல் அமைந்தன.பெரியார் வாழும் காலத்திலேயே அண்ணல் தங்கோ, கி ஆ பெ விசுவநாதம், ம.பொ.சி போன்ற தமிழினத் தலைவர்களால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.இறுதிக்காலத்தில் தன் பாடல்களில் திராவிடத்தை நீக்கிய பாரதிதாசனோடு முரண்பட்டார் என்றெல்லாம் தகவல்கள் உண்டு.
அறிஞர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற சிறு நூல் என் கைகளுக்கு கிடைத்த காலத்தில் நான் தீவிர பெரியார் ஆதரவாளன்.பிறகு அ. மார்க்ஸ் அந்தப் புத்தகத்திற்கான எதிர்வினை கட்டுரைகளை ஒரு நூலாக்கி இருந்தார். “குணா பாசிசத்தின் வடிவம்” என்று நினைக்கிறேன். அதன் பிறகு தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கின்ற ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் தாய் மண் இதழில் வெளியிட்ட கட்டுரைகள் பெரியார் குறித்து மீண்டும் விவாதப் பொருளாக மாறின. பிறகு பெரியார் குறித்து விமர்சனங்களோடு எண்ணற்ற புத்தகங்கள் காலம் தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதில் தமிழ்த் தேசிய தத்துவப் பேராசான் ஐயா பெ.மணியரசன் எழுதிய பெரியாருக்கு பின் பெரியார் , திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா..?, வெண்மணித் தீ வெளிச்சத்தில் காங்கிரசு கம்யூனிஸ்ட் திராவிட அரசியல், வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய “தமிழ்நாடு தமிழருக்கே! ,” வழக்கறிஞர் குப்பன் எழுதிய தமிழரின் இனப் பகை ஈவேரா, சுப்பு எழுதிய திராவிட மாயை, சடகோபன் எழுதிய ஆரிய திராவிட மாயை, முருகு ராசாங்கம் எழுதிய “பெரியாரின் முதல் குடியரசு இதழ் கிடைத்துவிட்டது” போன்ற பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக பெரியார் இடைநிலை சாதிகளுக்கு மட்டும்தான் ஆதரவாளர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அல்ல என்கிற நிலைப்பாட்டில் ஏராளமான நூல்கள் தாழ்த்தப்பட்டோர் பார்வை நிலையில் இருந்து எழுதப்பட்டு பெரியாரின் எழுத்துக்கள் மறுவாசிப்புக்கும், கடுமையான எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கின்றன.
பெரியார் மறைவுக்குப் பின்பு “பெரியாரின் கொள்கைகளை குழித் தோண்டிப் புதைத்த திராவிடர் கழகம்” என வே ஆனைமுத்து எழுதிய புத்தகமும் இருக்கிறது.
தமிழ்த் தேசியம் எதிர் திராவிடம் என வரும்போது திராவிடத்தின் வாளாகவும் திராவிடத்தின் கேடயமாகவும் பெரியாரே புனித பிம்பமாக முன்னிறுத்தப்படுகிறார்.எனவே காலங்காலமாக தமிழ்த் தேசியவாதிகளால் பெரியார் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். மேலும் தேசிய இனம், தேசம் ,மொழி, நிலப்பரப்பு போன்ற எதிலும் பெரியார் விருப்பம் கொண்டவர் அல்ல. எனவே தமிழர் இன உரிமைகளுக்கான கருத்தியலின் அரசியல் வடிவமான “தமிழ்த் தேசிய அரசியல்” பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானது தான்.
தமிழ்த் தேசியம் என்கின்ற இன விடுதலை அரசியல் பயணத்தில் நிற்பவர்களுக்கு திராவிடம் என்பது மிகப்பெரிய தடையாக எழும்போது, பெரியார் நிலைகள் தாக்கப்படுவது இயல்பானது. மேலும் பெரியாரை தமிழ் இன அறிவுலகத்தின் உச்சமாக வைத்து வழிபடும் அந்த வழிபாட்டு மனநிலை தான் அதிகாரத்தின் வழியாக பொது புத்தியாக மாறி இன்று பெரும் ஆபத்தாக மாறி நிற்கிறது.எனவே அண்ணன் சீமான் எழுப்பி உள்ள பெரியார் குறித்த விமர்சனங்களை சார்ந்து திராவிடக் கூடாரங்களில் எழும் வரையறையற்ற பதட்டம் அவர்களது கருத்தியல் வறட்சியை காட்டுகிறது.
மேலும் பெரியார் புத்தகங்களை முன்வைத்து நிகழும் இந்த உரையாடலில் சான்றுகளைத் தேடி இரு தரப்பும் தேடி அலைந்துக் கொண்டு இருக்கையில், அதை நாட்டுடைமை ஆக்காமல் தனி உடைமையாக வைத்திருப்பது குறித்து திராவிட ஆதரவாளர்கள் பேச மறுப்பதன் உண்மை பொருள் என்னவெனில்.. பெரியார் கருத்துக்கள் பல, இன்று ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு, ஒன்றுக்கொன்று முரண்பட்டு, அவரது பிம்பத்தை அவரே சிதைக்கின்ற வகையில் அமைந்திருப்பது தான்.
இது பெரியார் மறுவாசிப்புக்கு/ விமர்சனங்களுக்கு உள்ளாகிற, புனித பிம்பம் உடைகிற காலம். பெரியார் மட்டுமல்ல , காலம் என்கிற மாமலைக்கு முன்னால் எல்லாப் பெரிய மனிதர்களும் அணு அளவைத் தாண்டிலும் சிறியவர்களே.
⚫
மறுமொழி இடவும்