——————————————–

“இருண்ட கிளிநொச்சி நகரத்தில் அசையும் ஆவிகள், அவளை அலை கழிக்கும் என்ற எண்ணம் எதுவும் அவளை ஆட்கொள்ளவில்லை. ஏனெனில் அவையெல்லாம் அலுப்புடன் கதவுகள் பத்திரமாக அகற்றப்பட்ட வீடுகளின் திண்ணைகளில் ஆங்காங்கே சாய்ந்து இருந்தன. அவர்களின் தோள்களில் மட்டுமல்ல, மடியிலும் உறைந்துக் கிடந்தன துவக்குகள். நிழல்களிலும் தெரியும் கட்டுறுதி அவர்களை அடையாளம் காட்ட போதுமானதாக இருந்தது.”

அன்னா- வாசு முருகவேல்.

⚫

” அன்னா” படித்து முடித்த இந்த நள்ளிரவில் வாசு முருகவேலோடு உரையாட விரும்பினேன். உரையாடுவதை எழுதி விடுவது இன்னும் நெருக்கமாக அமையக்கூடும்.

சொல்லப்போனால் எழுதி விடுவதைத் தாண்டிலும் அந்த சிறு நூலுக்கு முன்னால் மௌனமாகி அமர்ந்திருப்பது தான் எனக்கு நானே செய்து கொள்கின்ற நேர்மை.

என் முன்னால் அந்த சிறு பிரதி மெலிதான காற்றில் அசைந்துக் கொண்டிருக்கிறது.. நான் எதுவுமே செய்ய முடியாத நிராதரவு மனிதனாக

கையறு நிலையில் அந்தப் பிரதிக்கு முன்னால் தலை குனிந்தவாறு அமர்ந்திருக்கிறேன். எவ்வித அரிதாரமும் பூச்சுமற்ற அந்த நூலை ஆன்மாவால் வாசிப்பவர்கள் கைவிடப்பட்ட நிராதரவு மனநிலைக்கு உள்ளாவார்கள். இதைவிட அந்தப் புனைவு மொழி அடைய வேண்டிய உச்சங்கள் தான் எவை..???

அந்த சிறு குறுநாவலின் பக்கங்களை புரட்ட புரட்ட வருகின்ற கனவு மனிதர்கள் நாம் என்றுமே கடக்க முடியாத துயர்பாலையாய் , ஆழ்ந்த வடுவாய் நிலைத்துவிட்ட ஒரு காலத்தை நம் கண் முன்னால் கொண்டு வருகிறார்கள்.

எப்போதும் கடலுக்கு இப்பால் இருக்கின்ற எங்களுக்கு ஈழம் தணியா குற்ற உணர்வையும், எங்கள் உள்ளங்கை முழுக்க உதிரம் படிந்து உலர்ந்த உணர்வையும் தருவது எண்ணி ஈழ இலக்கியங்களை நான் படிக்கவே அஞ்சுவேன். சமகாலத்தில் வாசு முருகவேல் மற்றும் என் தம்பி அகரமுதலவன், தமிழ் நதி, தீபச்செல்வன் போன்றோலெல்லாம் இந்த தலைமுறையின் உச்சபட்ச ரணமேறி இருக்கும் துயரத்தை உலகத்தரம் வாய்ந்த நவீன புனைவின் வாயிலாக, இதுவரை இல்லாத புதிய படைப்பு மொழி ஒன்றைக் கண்டெடுத்து எக்காலத்திற்கும் நிலை நிறுத்தி ஆவணப்படுத்தி வருகிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய யூதர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு கொண்ட படைப்பு இலக்கிய எழுச்சிக்கு சற்றும் குறைந்ததல்ல ஈழத்தவர்களின் தரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாக்கங்களில் இல்லாத நிறைய பரிசோதனை முயற்சிகள் ஈழ எழுத்துக்களில் தான் எழும்புகிறது. இன்னும் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டுமானால் , ஈழத்திலிருந்து தான் சமகால தமிழின் நவீன இலக்கிய செழுமையை கண்டடைய வேண்டி இருக்கிறது.

அன்னா – வெறும் 70 பக்கங்களில் ஒரு பெரும் நாவலுக்கான எல்லா வகை உயிரோட்டத்தையும் உள்ளடக்கி ஒரு குறுநாவலாக எழுதப்பட்ட கனத்த படைப்பு. இந்த சிறு நூல் முழுக்க நாம் அறிந்த நம் தலைவர் வருகிறார். அண்ணன் தமிழ்ச்செல்வன் வருகிறார். அவரின் மரண இரவு நம் கண் முன்னால் விரிகிறது. செஞ்சோலை குழந்தைகள் வருகிறார்கள். மாத்தையாவின் தண்டனை வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கைவிடப்பட்ட கிளிநொச்சியின் வீடுகளில் கழற்றி வைக்கப்பட்ட கதவுகளின் காட்சி நம்மை உறைய வைக்கிறது.

தன் இரண்டு மகன்களை நாட்டின் விடுதலைக்காக தந்துவிட்டு தானும் அதே வழியில் பயணிக்கின்ற அன்னா என்ற தாயின் முன்னும் பின்னுமாக அலைகிற பிறழ்வு நினைவலைகளே இந்த கதை.அன்னாவில் புது சொல் முறையை கையாண்டிருக்கிற வாசுவின் புனைவு நேர்த்தி, படிக்கிற வாசகருக்கு அது உறுத்தாத வகையில் செழித்து இருப்பது இந்த பிரதியின் மேன்மை.

70 பக்கங்கள் தானே என எளிமையாக எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினால் ஒரு இரவு முழுக்க நம்மை வதைப்படுத்தி, காட்சிப்பூர்வமாக, கிளிநொச்சி இழந்த காலங்களுக்கு நம் கைபிடித்து அன்னாவின் ஊடாக அழைத்து செல்கிற வாசுவின் எழுத்து வளம் சற்றே பிசகினாலும் கவிதையாய் ஊறிவிடுகிற ஈரம் படிந்த நதிக்கரை ஓரம் போன்றது.

அந்த சிறு நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையாகவும், கூட்டிப் பார்த்தால் ஒரு பெருநாவலுக்கான சாத்தியங்களையும், இதையெல்லாம் கட்டுப்படுத்தி ஒரு குறு

நாவலாக வடிவமைத்திருக்கின்ற வாசு முருகவேல் மிகச் சிறிதாக அமைந்துவிட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தில் மூர்க்கக் காளை ஒன்றின் அசாத்தியமான அலைவுப் போல குருதி வீச்சு காயாத மொழி ஈரத்தோடு நகர்வது‌ வியக்க வைக்கிறது.

இந்த நாவலில் “கூல் கிளின்டன்'”என்ற ஒரு கதாபாத்திரம் வருகிறது. இறுதிக்கட்ட போர் சூழலில் அப்படி யாரேனும் இருந்திருக்கவும் கூடும். என் மனதில் கூல் கிளின்டனின் முகமும், லீலாவின் முகமும் அப்படியே இருக்கிறது. நிஜமாகவே இருந்திருக்கக் கூடிய அந்த மனிதர்களின் புகைப்படங்களை எப்போதாவது வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் பார்க்க நேர்ந்து விட்டால்… கண்டிப்பாக அவர்களை அடையாளம் கண்டு கண்கலங்கி அழுது விடுவேன்.

உயிர் கசிந்து உருகும் அந்த வேளையில்

என் அருகில் ஒருவேளை வாசு முருகவேல் இருந்தால் எப்படி நான் அவர்களைக் கண்டறிந்தேன் என்பது குறித்து வியப்படைய கூடும். அதே வேளையில் தன் புனைவின் காலத்தை மிஞ்சி நிற்கக்கூடிய ஆழம் குறித்து அவர் பெருமிதம் அடையவும் கூடும்.

…..

அன்னா – குறு நாவல்- எதிர் வெளியீடு.

விலை 130/- நூலைப் பெற 99 425 11302.