————————————————-

( 2025 ஈரோடு இடைத்தேர்தல் முடிவின் அசலான குறுக்குவெட்டுத் தோற்றம்)

எப்போதும் தேர்தல் களம் என்பது கொள்கையற்ற சுயநலப் பிழைப்புவாதிகளுக்கு அது தான் சுரண்டுகிற மற்றுமொரு வாய்ப்பு .ஆனால் கொள்கைப் பற்றுறுதி என்ற கனவின் தணலோடு நிற்கிறவர்களுக்கு தேர்தல் களம் என்பது கருணையற்ற வேட்டைக்களம்தான்.

ஏனெனில் நாம் தமிழர் அரசியலை விரும்பி ஏற்ற கூட்டமல்ல. அவர்கள் அதிகாரத்தைத் தேடி அலைபவர்களும் அல்ல. அவர்கள் இன அழிவின் வலியால் வீதிக்கு வந்தவர்கள். மலிந்த ஜனநாயகத்தின் துருவேறிய ஈட்டி முனைகளுக்கு முன்னால் எதனையும் இழக்கத் துணிந்து இலட்சிய இன்முகத்தோடு நிற்பவர்கள்.

தேர்தல் வணிகம் ஆகிவிட்ட நிலையில்,பெரும்பாலும் தகுதி வாய்ந்த கொள்கைவாதிகள் தேர்தல் களத்தை தவிர்த்துப் போவதற்கு மிக முக்கியமான காரணம்.. அது கோருகின்ற அளவற்ற உழைப்பும், இறுதியில் அடைகிற துளியும் நியாயமற்ற முடிவும்தான்.

ஆனால் இதில் அண்ணன் சீமான் வித்தியாசமாக யோசித்தார். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுவது. அதுவும் தனித்து போட்டியிடுவது. இளம் தமிழ்த் தேசியர்கள் தேர்தல் என்ற அந்த வேட்டைக்காட்டில் தனித்து திரிந்து, வேட்டையாடப் பழகிப் பழகி இறுதியில் புலியாகவே மாற்றுகிற நம்பிக்கை வித்தை அது .

உண்மையில் ஈரோடு இடைத்தேர்தலைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு ஒன்று தெரியும். நேற்றைய இரவில் எந்த திராவிட ஆதரவாளர்களாலும் நிம்மதியாக தூங்கியிருக்க முடியாது. அவர்களது மகத்தான நம்பிக்கையை அண்ணன் சீமான் உடைத்ததோடு மட்டுமல்லாமல், இனி அந்த நம்பிக்கையை யாரும் சுமக்க முடியாத அளவிற்கு ‘தேவையற்றச் சுமையாக’ மாற்றியதுதான் அவர் செய்ததிலேயே மகத்தான “சம்பவம்”.

எங்களை ஒவ்வொரு நொடியும் எதிர்ப்பதற்காகவே இயங்கிக் கொண்டிருந்த ஊடகங்கள், ஏறக்குறைய எல்லா கட்சியினரும் ஒன்றாக நிற்கும் நிலை, மறுபக்கம் எங்கள் கட்சியிலிருந்து எல்லோரும் போய்விட்டார்கள் என்கிற தோற்றம்‌ ,

மறுபுறம் அண்ணன் தலைவரை சந்திக்கவே இல்லை என்கிற அவதூறு, அதற்கு ஆதரவாக திராவிடக் கூட்டம் உலகம் தழுவி செய்த ஊடறுப்பு வேலைகள், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் எல்லாவற்றிலும் தடை, அனைத்திலும் போராட்டம், ஓட்டு கேட்க செல்லும் இடங்களில் எல்லாம் கூலிப்படைகளை வைத்துக்கொண்டு செய்த தடுப்பு வேலைகள் என நாற்புறமும் பகைச் சூழ்ந்து நிற்கும் களத்தில் அண்ணன் சீமான் அனைத்திற்கும் முகம் கொடுத்து தனித்து நின்றார்.

அவரை வன்மத்தோடு அழுத்தினார்கள்.

அவர் தண்ணீரில் அழுத்தப்பட்ட பந்தாய் மாறினார். எதிரிகள் அழுத்த அழுத்த அவர் எகிறிக் கொண்டு பாய்ந்தார். சிறு தீபமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தவரை ஊதி ஊதி காட்டுத் தீயாய் மாற்றினார்கள். அவர் கொழுந்து விட்டு எரியத் தொடங்கினார்.

அந்த சவாலை அவர் விரும்பி ஏற்றார். பிரச்சாரம் முடிவடையும் முந்தைய நாள் இரவில் அவர் எங்களிடத்தில் அழுத்தமாக ஒன்று சொன்னார். ” எது நடந்தாலும் இதுவரை நடக்காத ஒன்றுதான் இனி நடக்கும்” என. நடந்தேவிட்டது.

கிடைத்திருக்கும் 24,182 வாக்குகளும் அதிமுக பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு‌ அளித்த வாக்குகள் என அறிவாலயத்தில் கூலி வாங்கிக் கொண்டு கூவுகிறவர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொண்டு சமாதானம் அடையலாம்.

உண்மை வேறு மாதிரியானது. 25% அதிமுக / பாஜக Core கட்சிக்காரர்கள் எப்போதும் நாம் தமிழரை விரும்பாதவர்கள்.அவர்கள் திமுகவிற்கும் ஓட்டு போட முடியாமல் நோட்டாவில் குத்தினார்கள். மீதம் 75% diluted கட்சிக்காரர்களை ஆளுங்கட்சி ஒட்டுமொத்தமாக எளிதாக விலைக்கு வாங்கியது.

பிறகு நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகள்… அண்ணன் சீமானின் அனல் தெறிக்கும் பிரச்சாரத்திற்கு கிடைத்த வாக்குகள்.திராவிடம் vs தமிழ்த் தேசியம் என்று கிளம்பிய விவாதத்தால் ஈர்க்கப்பட்ட முதல் தலைமுறை இளைஞர்களின் வாக்குகள். திமுகவின் திறமையற்ற ஊழல் மலிந்த ஆட்சி முறைக்கு எதிராக ஒற்றை மனிதனாய் கலகம் செய்யும் சீமானின் ஆளுமைக்கு கிடைத்த வாக்குகள்.

மற்றக் கணக்குகள் அவரவர் கற்பனைக்கு ஏற்றது‌. ஒரு இடைத் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு நிற்கின்ற ஆளுங்கட்சியை, எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல், பொருளாதார/சாதியப் பின்புலம் இல்லாமல், ஒரு எளியப் பெண் வேட்பாளரை முன்னிறுத்தி, துணிவுடன் கூட்டணி இல்லாமல், தேர்தலை எதிர்கொண்டு, ஏறக்குறைய 25 ஆயிரம் வாக்குகளை ஒரு எளிய கட்சி பெறுகிறது என்றால்.. அது வலுவான ஆளுங்கட்சி முழுமையாக அடைந்திருக்கிற தோல்வி. இனி வரப்போகிற தோல்விகளுக்கெல்லாம் எழுதப்பட்டிருக்கிற முன்னெழுத்து.

நோட்டாவை விட நாம் தமிழர் கட்சி குறைந்து வாக்கு வாங்கி விட வேண்டும் என கணக்கு போட்டு நோட்டு கொடுத்த ஆளுங்கட்சி தனது உள்ளார்ந்த விருப்பத்தில் தோற்றுப் போனது அதன் உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி.

கூடுதலாக எல்லாவற்றிலும் மிக முக்கியமான சுவாரசியமான விஷயம் எதுவென்றால்.. இந்தத் தேர்தலில் பெரியார் ஒரு காரணி அல்ல என்ற உண்மை புலப்பட்டதுதான். நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகளுக்கும் பெரியார் ஒரு காரணி அல்ல, திமுக வாங்கிய வாக்குகளுக்கும் பெரியார் ஒரு காரணி (Factor ) அல்ல. திமுக வாங்கிய வாக்குகள் பெரியார் தாத்தாவால் அல்ல, காந்தி தாத்தாவால் என்கிற சமூக வலைத்தள மீம்ஸ்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஈரோட்டு மக்கள் அதைத்தான் காட்டியிருக்கிறார்கள்.

ஏறக்குறைய 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட ஈரோட்டில் பதிவானது என்னவோ ஒரு லட்சத்து 55 ஆயிரம் வாக்குகள் மட்டுமே. 66 சதவீதம் வாக்குகளில் திமுக பெற்றிருக்கும் வாக்குகளை விட, தேர்தலில் வாக்களிக்காமல் இருந்த மற்றும் திமுகவுக்கு எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகளுக்கு வாக்களித்து இருக்கின்ற, நோட்டாவில் வாக்களித்திருக்கின்ற என இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகள்தான் அதிகம். உண்மையான ஜனநாயகப் போரில் ஆளுங்கட்சியான திமுக தோற்றுவிட்டது. அதை மறைக்கத்தான் யாரும் டெப்பாசிட் வாங்கவில்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சில சுவாரசியமான காட்சிகளும் நடந்தன.

பெரியாரை முன்வைத்து உங்களால் ஓட்டு வாங்க முடியுமா என அண்ணன் சீமான் போகிறப் போக்கில் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன பெரியாரிய அமைப்புகள் இந்த தேர்தல் களத்தினைத் தங்களுக்கான சவாலாக எடுத்துக்கொண்டு , பெரியாரை சீமான் திட்டுகிறார்/ புறக்கணிக்கிறார் /விமர்சிக்கிறார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, ‌ பெரியாரை முன்னிறுத்தி, ஈரோட்டு மண்ணில் வெண்ணிலா என்ற வேட்பாளரை 32 அமைப்புகள் சார்பாக நிறுத்தி, பெற்ற வாக்குகள் 222. உண்மையில் இதுதான் ஈரோட்டில் பெரியார் கொண்டிருக்கின்ற செல்வாக்கா என்றெல்லாம் நாம் கேள்வி எழுப்பப்போவதில்லை.உண்மையில் பெரியாருக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை.ஏற்கனவே சொன்னது போல அவர் ஒரு Factor இல்லை என்று பெரியாரிய அமைப்புகளே செய்து கொண்ட சுயச் சோதனையின் பதில்தான் இது.

திமுக வழக்கம் போல 2026 தேர்தலையும் இப்படி அணுகி விட முடியாது என்பதை உணர்த்தும் முடிவு தான் இது. அதே சமயத்தில் நாம் தமிழர் தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு மேலெழும்ப முடியும் என்பதற்கான நம்பிக்கையை தன் தம்பிகளுக்கு/ தங்கைகளுக்கு மீண்டும் ஒருமுறை வழங்கி அண்ணன் சீமான் அடுத்தப் பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக.. எங்கள் வேட்பாளர் அக்கா சீதாலட்சுமியை அருகில் பார்த்தபோது, காயம் பட்ட புலிப் போல கடுமையான களைப்போடு இருந்தாலும் ஆவேசத்தோடு களத்தில் நின்றார்.

சந்திரகுமார் சட்டமன்றத்தில் போய் மேசையை தட்டுவதை தாண்டி எதுவும் பேசப் போவதில்லை. ஆனால் அக்கா சீதாலட்சுமி போய் இருந்தால்…. அவரது அனல் மொழியில் சட்டமன்றம் தகித்திருக்கும். ஈரோட்டின் தலையெழுத்து மாறி இருக்கும். வெறும் சீதாலட்சுமி அல்ல அவர். சளைக்காத கடும் உழைப்பின் அடையாளம்.

நாம் தமிழர் கட்சியை எதிர்த்துப் பேசும் எல்லோருக்கும் ஒரு உண்மை தெரியும். எல்லா விமர்சனங்களையும் தாண்டி அந்தக் கட்சி நிற்கிறது என்று சொன்னால் அதன் உள்ளார்ந்த ஆற்றல் தான். இறுதிவரை மரபு ரீதியான போரிலேயே நிலைத்தவர்களிடத்தில் இருந்து நாங்கள் அடைந்தது.

அது தலைவர் தன் தம்பிக்கு தந்தது. அந்தத் தம்பி தன் தம்பிகளுக்கு தங்கைகளுக்கு தருவது.

“300” திரைப்படத்தில் ஸ்பார்ட்டன் நகரத்துச் சிறுவர்களை இளம் வயதிலேயே காட்டில் விட்டு விடுவார்கள். உறைய வைக்கும் குளிர், கொடும் பசி, உயிர்த் தின்ன அலையும் விலங்குகள்,வாழவே முடியாத நிலை என எல்லாச் சவால்களுக்கு முகம் கொடுத்து பிழைத்து வரும்போது

அவர்கள் வீரர்களாக திரும்புவார்கள்.

அப்படித்தான் இந்த ஜனநாயகக் காட்டில் நாங்கள் நுழைந்த போது இளம் சிறுவர்கள். ஆனால் இன்றோ..

திராவிடத் தலைநகருக்கே சென்று “திராவிட அரசனை” எங்கள் வினாக்களின் கூர்முனையில் நிறுத்தி, சுற்றி பாய்ந்த நரிக் கூட்டத்தை சம்பவம் செய்துவிட்டு, நாங்கள் நிற்கையில்.. நாங்கள் தோற்றாலும் பெருமிதமாக உணர்கிறோம்.

நாங்கள்தான் அந்த 300 பருத்தி வீரர்கள்.

இறுதியாக..

எங்களை வழிநடத்தும் எம் “King leonidas” ஆன அண்ணன் சீமான் அடிக்கடி சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.

” நாங்கள் நிரூபிப்பதற்காக போராடுபவர்கள் அல்ல. போராடுவதால் நிரூபிக்கப்பட்டவர்கள்.”

தொடர்ந்து நிரூபிப்போம்.

⚫

மணி செந்தில் .