எம் முகத்தில்
நீ காறி உமிழ்ந்த
அந்த
மஞ்சள்
எச்சிலுக்கு
மற்றொரு பெயர்
உண்டென்றாய்…
எம் செவியில்
நீ உரக்கச்
சொல்லிப்போன
அவமானச் சொற்களின்
பின்னால்
மகத்தான
உரிமை ஒன்று
மறைந்து கிடக்குதென்றாய்..
எம் கண்களை நோண்டியெடுத்து
உன் கால்களுக்கு கீழே போட்டு
நசுக்கி…
அதில் கசிந்த
உதிரத்தில் தான்
உன் மஞ்சள்
எழுத்திற்கான
மை தயாரித்தாய்..
உதிர சிவப்பேறிய
எம் விடுதலைக்கான பக்கங்களில்
உன் மஞ்சள் புத்தியை
பூசி விட்டு போனதைதான்
உன் ஆக்கத்திற்கான
ஊக்கமென்றாய்..
கல்குதிரையேறி
நீ கடக்க முயன்ற
குருதிப் புனலில்
அகப்பட்ட சடலங்களில்
நெளியும் புழுக்களை
தின்பதை தான்
உன் பசியாறல்
என பகிரங்கப்படுத்தினாய்..
……………….
இருண்டுக் கிடந்த
பேரிருள் நிலத்தில்
மின்னிட்ட
ஒரு சுடரின்
திசைவழி கண்டு
விழித்தெழ கூட
எமக்கு அனுமதி இல்லை.
ஆனால்
விடுதலை தாகத்தில்
உலர்ந்த எம் உதடுகளை
நனைக்க வந்த
பெருமழையினை
அது வானின் மூத்திரம்
என வசைபாட
உனக்கு வாய்ப்பு உண்டு..
………………
திறந்த எம் விழிகளை
நோண்டிப் போடும்..
எழுந்த எம் கரத்தினை
முறித்துப் போடும்…
உன் சொல் விளையாட்டிற்கு
இறுதியாய்
கருத்துரிமை என பெயர் சூட்டினாய்.
கல்குதிரையேறி வந்த
சதிகார சம்ராட்டிற்கு
எம் மண்டையோடுகளை
கொண்டு
இராஜப்பாட்டை அமைக்க
உரிமை உண்டெனில்…
எம் துயர் இருட்டை
நக்கி பிழைக்கும்
அந்த எழுத்தை
எரித்துப் போடுதலும்..
எம்மை உருக்குலைத்துப்
போட வந்த அந்த விரல்களை
உடைத்துப் போடுதலும்
எமக்கான கருத்துரிமைதான்..
– மணி செந்தில்