4853487286_8a81f5ba7f_z

 

 

பின்னே திரும்பி பார்க்காதவன் முன்னே பார்க்கும் பார்வையை இழக்கிறான் என்கிறார் மாவீரன் அலெக்சாண்டர். நம்முன்னே விரிந்துக்கிடக்கும் கடந்த காலங்களின் சுவடுகளை கவனிக்காது, அறியாது எதிர்காலத்தின் பாதையை நம்மால் தீர்மானிக்க முடியாது. எனவே தமிழன் எவ்வாறு ஒரு தேசிய இனமாக உருவாக்கம் கொண்டான் என்பதற்கான பயணத்தில், தமிழரின் வரலாற்றுப் பாதையையும் நம் அறிவு வெளிச்சம் கொண்டு ஒரு பார்வை பார்த்து விட்டு வருவோம்.

ஆற்றங்கரையோரம் பிறந்தான் மனிதன். ஆற்றங்கரைகளே மனித இனத்திற்கான தொட்டில்களாக அமைந்தன . சுமார் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அறிவாய்ந்த  குரங்கினம் பரிணாம வளர்ச்சியினால் மனி்த சாயலை அடைகின்றன. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்  ஹோமோ செப்பியன்ஸ் என்ற அழைக்கப்பட்ட சற்றே மேம்பட்ட மனித குரங்கினம் தற்கால மனிதனின் மூதாதை எனக் கொள்ளலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். குரங்கிலிருந்து உருமாறிய மனித இனம்  சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக தனக்குள்ளாக தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒரு வலிமை வாய்ந்த ஊடகத்தை தனது அறிவாற்றல் மூலம் அடைந்தது. அந்த தகவல் பரிமாற்ற கருவியே மொழியாகும்.

மொழியே மனித இனத்தை தனித்துவப்படுத்தும் வலிமை வாய்ந்த அடையாளமாகும்.  அதுவே மனித இனத்தை வளர்த்தெடுத்தது. விலங்காக திரிந்த மனித இனம் தனக்கென ஒரு மொழியை அடைந்த பிறகு அதன் பரிணாம வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. மொழி மூலமாகவே மனிதன் சிந்தித்தான். மொழி மூலமாகவே அவன் உரையாடினான். மொழி மூலமாகவே அவன் பலவற்றை கண்டறிந்தான். மொழி மூலமாகவே மற்ற விலங்குகளை காட்டிலும் மேம்பட்டவனாக மனிதன் மாறினான்.

எனவே தான் ஒரு தேசிய இனத்தின் தலையாய அடையாளமாக மொழி வகுக்கப்படுகிறது.  மனித இனம் கண்டறிந்த முதன் மொழியாக தமிழ் மொழி இருந்தது என்பதை பல ஆய்வுகள் மூலம் தமிழறிஞர்கள் நிறுவி உள்ளார்கள். கல் தோன்றி,மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்கிறார்கள்.  முதன் முதலாக மாந்த இனம் தோன்றியது ஆப்பிரிக்கா தொடங்கி தற்போது மடகாஸ்கர் இலங்கை,தென்னிந்தியா உள்ளீட்டு நீண்ட பரவிக் கிடந்த பெருநிலத்தில்தான் என நம்மினத்தின் மாபெரும் அறிஞர் பாவாணர் பல ஆய்வுகள் மூலம் நிறுவி உள்ளார். அந்த பெரு நிலமே லெமூரியா என்றும் கொந்துவானா என்றும் அழைக்கப்படுகிற குமரிக் கண்டமாகும்.  கால ஓட்டத்தில் விளைந்த பல்வேறு கடற்கோள்களால் குமரிக் கண்டம் அழிந்தது. ஒரே நிலமாக சேர்ந்திருந்த இலங்கை, தமிழ்நாடு ,ஆப்பிரிக்கா போன்ற பகுதிகள் படிப்படியாக பிரிந்து தனித்தனி நிலங்கள் ஆயின. இன்றும் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டு வருகிற பழம் பொருட்களில் தாயக தமிழகத்தின் வரலாற்று நிழல் படிந்துள்ளதை சிங்கள அறிவுலகம் திட்டமிட்டு இந்திய அரசுடன் கூட்டுச்சேர்ந்து மறைத்து வருகின்றன. “ பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள “ என இந்நிகழ்வுகளுக்கு சான்றளிக்கிறது தமிழரின் முதுபெரும் காப்பியமான சிலப்பதிகாரம்.

தமிழ் மொழியே உலகின் மூத்த முதற் மொழி என்பதற்கு உலக மொழிகளில் பரவிக் கிடக்கும் தமிழின் வேர்ச் சொற்களே சாட்சி. உலகின் பெரும்பாலான மொழிகளின் எழுத்து முறையில் தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள்  நீக்கமற நிறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தொடர்ச்சியான தனது ஆய்வுகள் மூலம் நிறுவி இருக்கிறார்கள். மொழியியல் ஆய்வின் பெரும் வித்தகராக விளங்கும் பெருந்தமிழர். அய்யா. அருளியார் அவர்கள் தனது ஆய்வுகளில் பலவற்றில் உலக மொழிகளில் பரவிக் கிடக்கும் தமிழ் மொழியின் வேர்ச் சொற்களை கண்டறிந்து பதிவு செய்து இருக்கிறார்.

கி.மு.3500 முதல் கி.மு.2700 வரை நாகரீக வளர்ச்சியில் உச்சம் பெற்றிருந்த சிந்து சமவெளி நாகரீகமும் தமிழரின் நாகரீகமே என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  சிந்துசமவெளி நாகரீகத்தில் காணப்படும் எழுத்து வடிவங்களுக்கும், பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கும் நெருங்கிய வடிவ தொடர்பு இருப்பது ஏற்கனவே நிறுவப்பட்டு விட்டது. சமீபத்தில் பழனி அருகே தி.கூடலூரில் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களுடன்  கூடிய பழமையான கற்கால கருவி கிடைத்துள்ளது   இக்கருவியில் காணப்படும் எழுத்து வடிவம் சிந்துசமவெளி பகுதியில் பயன்படுத்தப்பட்ட 396 ஆவது எழுத்துடன் ஒத்துப் போவதாக இக்கருவியை கண்டுபிடித்த தொல்லியல் ஆய்வாளர் நாரயணமூர்த்தி மற்றும் ஆர்வலர் வெங்கடேசன் தெரிவிக்கிறார்கள்.(தினமணி 22-1-2015 )

சிந்துசமவெளி காணப்படும் சுட்ட களிமண்ணால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அமைப்பும், அதன் ஒழுங்கும் தமிழர் நாகரீக வளர்ச்சிப் போக்கிற்கு மிக நெருக்கமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிந்துவெளி மக்கள் சிவ வழிபாடு நம்பிக்கை உடையவர்களாக விளங்கியதற்கும் சான்றுகள் இருக்கின்றன. மேலும் சிந்துசமவெளி நாகரீகத்தில் காணப்பட்ட பல பொருட்கள் ,தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுடன் ஒத்துப்போவதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். சிந்துவெளி நாகரீகத்தின் மீது படையெடுத்த சுரா பானம் அருந்தும் ஆரியர் சுரா பானம் அருந்தாத அசுரர் என அழைக்கப்பட்ட தமிழர் வாழ்ந்த சிந்துவெளி நாகரீகத்தினை வென்று இந்திய துணைக்கண்ட பெருநிலத்தில் நுழைந்தனர் என்பதை ஆரியர்களின் பாடல்களை உள்ளடக்கிய ரிக் வேதம் தனது பாடல்களின் மூலம் அடையாளப்படுத்துகிறது.

ஏறக்குறைய சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே  இன்றிலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய பூம்புகாருக்கு கிழக்கே கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் உலகின் பழம் பெரும் நகர நாகரீகம் தமிழர்களுடையது.

எனவே மற்ற மாந்த இனங்கள் காட்டுமிராண்டிகளாய்,விலங்குகளாய், காட்டில் விலங்குகளாய் திரிந்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழர்கள் நகர நாகரீகம் கண்டு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .

தாய்மொழிக்கென சங்கம் வைத்து அதன் மூலமாக தன் மொழி விழுமியங்களை காப்பாற்ற தமிழர் படைத்தவைதான் சங்க இலக்கியங்களாக ,மாபெரும் வரலாற்றியல் ஆவணங்களாக நம் முன்னால் காணக்கிடைக்கிறது. தொல்காப்பியம் தொடங்கி, எட்டுத்தொகை,பத்துப்பாட்டு என விரிந்துக் கிடக்கின்றன பண்டைத்தமிழரின் வாழ்வும்  அறிவும் . அகமும்,புறமும் என காதலும்,வீரமும் கொண்டு “யாதும் ஊரே,யாவரும் கேளீர்” என உலகம் தழுவி நேசித்த மாபெரும் இனம் தமிழினம்.

 

1414923376319297_430844540292273_1507862722_n download (1)

குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐவகை நிலங்கள் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு ,ஒவ்வொரு திணைக்குமாக தனித்தனி பண்பாட்டியல் சுவடுகளோடு வாழ்ந்தான் தமிழன். கி.மு 500 முதல் கி.பி 600 வரையிலான காலக்கட்டத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் கடல் கடந்து சென்றும், வடவரை வென்றும் தமிழர் பெருமைகளை நிலைநாட்டினர். கரிகாற் சோழன் சிங்களம் மீது படையெடுத்து  சிங்களர்களை பிடித்து வந்து காவிரிக்கு கரை எழுப்பினான். கல்லணை கட்டி ஆற்று நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியும் என உலகத்திற்கே நீர் மேலாண்மை அறிவியலை முதன்முதலாக அறிமுகம் செய்தவன் கரிகாற்பெருவளசோழ மன்னன்.  வடவரான ஆரியனை வென்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாய்  பாண்டியன் மிளிர்ந்தான். சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படையெடுத்து சென்று இமயமலையில் வில் கொடியை பொறித்து திரும்பினான்.  கனக விசயர் என்ற வட மன்னர்களை வென்று அவர்கள் தலையில் கல் சுமக்க செய்து, கண்ணகிக்கு கோவில் கட்டினான் சேரன் செங்குட்டுவன்.

பண்டைய தமிழ் மன்னர்களை களப்பிரர்கள்,பல்லவர்கள் ஆகிய பிற இன மன்னர்கள் படையெடுப்பினால் வீழ்த்தி தமிழ்ப்பெரு நிலத்தின் ஆட்சி அதிகாரத்தினை ஆண்டனர். இவற்றில் களப்பிரர்கள்,பல்லவர்கள் பிற இனத்தவர் இல்லை ..அவர்களும் தமிழர்களே என சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

களப்பிரர்,பல்லவர் வீழ்ச்சிக்கு பிறகு பிற்கால சோழர் ஆட்சியிலும், பிற்கால பாண்டியர் ஆட்சியிலும் தமிழர் மாபெரும் புகழ் வாழ்க்கையை வாழ்ந்தனர். உலகம் முழுக்க படையெடுத்து வெல்லும் திறன் உடையவராக புலிக்கொடி ஏந்திய தமிழர்கள் விளங்கினார்கள் என்பதற்கு பிற்கால சோழர் வரலாறு சான்று பகிர்கிறது. பிற்கால சோழர் வரலாற்றினை ஆய்வு செய்த பெருந்தமிழர் சதாசிவ பண்டாரத்தார் பிற்கால சோழர் குறித்து பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

இன்று நமக்கு  கிடைத்துள்ள பல தரவுகளும், ஆவணங்களும்,கல்வெட்டுகளும்,நூல்களும் இவற்றின் அருமை உணர்ந்து பாதுகாத்து  வைத்த பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தவை என நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

-தொடர்ந்து கற்போம்..கற்பிப்போம்…புரட்சி செய்வோம்.

 

வாசிப்போம்..அறிவை யாசிப்போம்

ஏன் வேண்டும் தமிழ்த்தேசியம் … கோவை ஞானி வெளியீடு –புதுப்புனல்.  பக்கங்கள் -64 விலை:ரூ.50/-