suicide-hanging-e1442464610195

 

மரியாதையென்பதை காசு பணத்தால் அளவிடும் இந்த மானம்கெட்ட சமூகத்தில் தற்கொலை நியாயமாகவே படுகிறது…

என்ன வாழ்க்கைடா…

– என் தம்பி ஒருத்தன்..

ஆனால் தற்கொலை என்பது இன்னும் மரியாதை கெட்டது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை பார்த்து இருக்கிறாயா…. காயமும், வலியும் நிறைந்த அந்த விழிகள் எதனாலும் ஆறுதல் கொள்பவை அல்ல. ஒரு முறை தற்கொலை முயற்சி செய்து விட்டு வாழ நேருகிற துயரம் மரணத்தை விட கொடுமையானது. காயமானது. இன்னொரு செய்தி.. மற்றவர்களால் நமக்கு தர கோருகிற எதுவும் நமக்கு நேர்மை செய்யாது. ஈடு ஆகாது. மரியாதை என்பதும் அதற்கு விதிவிலக்கு அல்ல. உன் வாழ்க்கை . நீ வாழ். மற்றவர் மதிப்பதும், இகழ்வதும் அவரவர் பாடு. உன் வாழ்க்கையை உன் போக்கில் நீ வாழ யாரிடமும் அனுமதியோ, எதிர்பார்ப்போ கொள்ள தேவையில்லை. மதிப்பு என்பது நம் மீது நாம் கொள்வது. அது மற்றவர்களை சார்ந்திருக்க தொடங்கும் போதுதான் துயரம் சூழ தொடங்கிறது. எதுவும் மற்றவர்களை சார்ந்து பிறக்கவும் கூடாது. எழவும் கூடாது. நாம் தான் நமக்கு. வாழடா தம்பி. உன் போக்கில். அதுவே அழகானது. உண்மையானது. சொல்லப்போனால்… உனக்கு நீயே மதிப்பு செய்து கொள்வது.

உண்மையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவனின் அம்முயற்சிக்கு முந்தைய நிமிடங்கள் விசித்திரமானவை. தன்னுடைய முயற்சிக்கான தர்க்கங்களை ,நியாயங்களை தனக்குள்ளாக ஏற்படுத்துகிற அந்த நிமிடங்களை கடப்பதென்பது ஆள் அரவற்ற ..வெக்கையும், தனிமையும் நிரம்பிய கொடும் பாலையை கடப்பதற்கான உளவியல் சவால்களை கொண்டது. வாழ முடியாததற்கான சூழல்களின் இறுக்கத்தினை நமது மனது கடும் துயராக கொண்டிருக்கும் போதுதான்.. இனி வாழ்வது என்பது எல்லா துயரைக் காட்டிலும் மேலான துயராக நீடிக்கும் என்கிற எண்ணம் ஆழப் பதியும் போதுதான்.. நமக்கு நாமே செய்து கொள்கிற நேர்மையாக தற்கொலை எண்ணம் எழும்பும்.

ஒரு சுவையான தேநீர் அருந்தும் போது ஏற்படும் ஆசுவாசம் போன்ற உணர்வோடு தற்கொலை உணர்ச்சியை எதிர்கொண்ட சிலரை நான் அறிவேன். ஆனால் அந்த முயற்சியில் தோல்வியுற்று சராசரி வாழ்க்கைக்கு திரும்பும் போது …உள்ளுக்குள் கவிழும் குற்ற உணர்ச்சியும், ஏமாற்றமும், சற்றே எதிர்காலம் குறித்த அச்சமும் மிஞ்சிய நாட்களை காயப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அவரவருக்கான நியாயங்களை கொண்டிருந்தாலும்.. தற்கொலை என்பது ஒரு போதும் கொண்டிருக்கும் காயங்களுக்கான நியாயம் ஆகாது. அந்நேரச் சூழலின் பொருட்டு தப்பித்தலுக்கான வழிதான்…என்றாலும் கூட ..

உயிர் விட்ட பிறகு தப்பித்து என்ன தான் ஆகப்போகிறது.. தப்பிக்கிற உணர்ச்சியை அனுபவிக்க யார் இருப்பார்கள்..??

– மணி செந்தில்