இதுதான்
இறுதிச் சொல்..
அந்த சொல்
யூதாசின் காட்டிக்
கொடுப்புப் போல
ஒரு சாபச்சொல்லாகவோ..
சீசர் புரூட்டசை
நோக்கி வீசிய
வலிச்சொல்லாகவோ..
இருக்கட்டும்..
ஆனாலும்
உன்னோடு
இதுதான்
இறுதிச் சொல்.
முடிந்தது
எல்லாம் என
சொல்லின்
முடிவில்
இடப்படும்
முற்றுப்புள்ளியில்
எனது அனைத்து
விதமான
தர்க்கங்களையும்
குவித்து அழுத்தி
பொருத்தினேன்..
அடுத்த சொல்
நீளாத
அந்த உரையாடல்
இரவு நேர கடற்கரையில்
தனித்திருந்த..
காலடித்தடம் போல
மெளனித்திருந்தது.
இனி எதுவும்
இல்லை
என்பதில் தான்
எல்லாமும் இருக்கிறது
என சுய பிரகடனம்
கம்பீரமாய் ஆன்ம
வெளியில் உலவும் போது
சற்றே ஒரமாய்
வலித்ததை
கண்டுக் கொள்ள
கூடாது என்பதில் தான்
இருக்கிறது அனைத்தும்.
முற்றுப் பெறாத
ஒரு சொல்லில்
இருந்து தொடங்கட்டும்
ஒரு முற்று.
ஒரு ஆழமான சுவாசம்.
ஒரு நீளமான பயணம்.
காலக் கணக்கு அறியாத
மயக்கத் தூக்கம்..
தீர தீர குடிக்கிற
மது இரவுகள் சில..
கலங்க கலங்க
அழுது புலம்ப
தோழமை தோள்
ஒன்று..
கழுத்துக்குழியில்
துடிக்கிற வலியொன்றை
இளையராஜா இதமாக்கட்டும்..
நெஞ்சோரம் துடிக்கிற
துடிப்பொன்றை
அருகில் இருக்கிற
மழலையின் சிரிப்பு
பதமாக்கட்டும்..
இப்படியெல்லாம்
நீளமாக
தயாரான
பட்டியலை
பார்த்த அவளது
விழிகள்
சற்றே அலட்சியமாக
மொழிந்தன..
செய்ய இருக்கிற
உனது செயல்
வரிசைகளில்…
நீ மறக்காமல்
மீண்டும் மீண்டும்
செய்யப்போகிற
சிலவற்றை
எழுதாமல்
ஒளித்து
வைத்திருப்பதுதான்..
உனது பிரகடனம்
என்பதை நானறிவேன்..
என்றவளின் விழியில்
ஆதிகால விசத்தை
சுமக்கும் நாகமொன்றின்
கண்கள் ஒளிர்ந்தன..
அந்த விசம்
உண்மை என்பதாகவும்
இருக்கக் கூடும்
என்ற கணத்தில் தான்
அயர்ந்தேன் நான்..
மீண்டும்.