அந்த சாலையின்
முனையில் அவனை
நீ சந்திக்கக் கூடும்..
நிலைக்காத பார்வைகளோடும்..
குழறிய சொற்களோடும்..
கலைந்த கவனத்தோடும்..
கசங்கிய ஆடையோடும்..
முணுமுணுப்புகளோடு
திரியும் அவனை
நீ நிராகரித்து கடக்கலாம்.
நேர்த்தியான உன் ஆடைக்கு..
மின்னுகிற உன் ஆபரணங்களுக்கு..
இன்பம் மிதக்கும் உனது
பயணத்திற்கு..
உண்மையின் கண்களோடு
காத்திருக்கும் அவன்
ஒரு உறுத்தல் தான்..
உன் விழி அசைவுகள்
அவன் மீது படாதவாறு
லாவகமாக கடப்பதில்
இருக்கட்டும் உன் கவனம்..
இன்று நீ
அணிந்திருக்கிற
புனைவுகளின் அடவு
தெரிந்த அவன் சற்று
ஆபத்தானவன் தான்..
எதிர்பாராமல் சந்தித்து
விட்டால் கூட..
அந்த நொடியை
உடைத்துப் போட்டு
யாரிவன் என்கிற
அலட்சியத்தை மட்டும்
உன் ஆன்மாவில்
சேமித்துக் கொள்.
சொற்கள் ஏதேனும்
மிச்சப்பட்டிருந்தால்
உச்சரித்துப் போவதில்
கூட..
ஒன்றும் ஆகி விடப்
போவதில்லை..
எங்கிருந்தோ
யாரோ உன்
மீது கொட்டிய..
உன் அடி
நாக்கில் சேமித்து
வைத்திருக்கும்
கசப்பினை
அவன் மீது
காறி உமிழ்தல்
மிக நலம்.
அக்கணத்தில்
சட்டென உன்
நினைவில் பூக்கும்
அவன் பொழிந்த
நேச மழையை
கவனிக்காமல்
மிதித்துக்
கடந்துப் போக
கண நேர
வெப்பம்
சுமக்கும் காலணிகளை
தயாரித்து வை.
உன்னிடம்
இல்லாவிட்டாலும்
கவலையில்லை ..
உன் மீது யாரேனும்
எக்கணத்திலாவது
துப்பிய வெறுப்பினை
கடன் வாங்கியாவது
அவன் மீது கக்கு..
காரணங்களை
ஒரு
விருந்தினைப் போல
நேர்த்தியாய்
தயாரி.
விதவிதமான
கதைகளோடும்..
உன் விழிகளில்
இதற்கென
ப்ரத்யோகமாக
தயாரித்திருக்கும்
துளிகளோடும்..
அந்த விருந்தினை
உனக்கு நீயே
பரிமாறிக் கொள்..
ஏனெனில்
அவனை நீதான்
கடவுள் என்றாய்..
அவன் சாத்தானாக
உனக்குள் மாற்றிக்
கொள்ள இந்த
இறுதி விருந்து
அவசியம்…
ஆனால்…
அவனுக்கோ..
இவையெல்லாம்
தேவையே இல்லை.
ஏற்கனவே
நிராகரிப்பின்
சொற்கள்
நஞ்சாய்
தடவிய கத்தி
ஆழ பின்
கழுத்தில்
குத்தப்பட்டிருக்கும்
அவனுக்கு
தேவை…
அவன் ஆன்மா
மட்டுமே உணரத்தக்க..
நேர்மையான..
கண்களின் ஈரம்
மினுக்கும்
மதிப்பு மிகுந்த
ஒரு மரணம்.