அந்த சிவப்பு
மேசையில்..
இரவு என்ற
பொல்லாத
மிருகமும்..
நானும்..
தனித்திருந்தோம்..
நினைவுகளை
கடித்துக் குதறிய
செந்நிற பற்களோடு
சிரித்த இரவோடு..
வாழ்வை ஒரு
மதுவாக்கி குடிக்க
நானும் தயாரானேன்..
இரவின் விரல்
இடுக்கில்
சிகரெட்டாய்
புகைந்துக்
கொண்டிருந்த
என் ஆசைகளின்
கங்கொன்றின்
நுனியில் மின்னியது
ஒரு நட்சத்திரம்.
கனவுகளும்..
நிராசைகளும்..
சம விகிதத்தில்
கலக்கப்பட்டு
கோப்பைகள்
தயாராகின..
தத்துவச்சாரங்களும்
மெளனமாக்கப்பட்ட
சொற்களும்..
இரண்டு பீங்கான்
தட்டுகளில் நிரம்பி
இருந்ததை
முரண்களே நமது
இன்றைய
side dish என
குதுகலித்தது
இரவு.
சியர்ஸ்
என்றவாறே
உரசிய
கோப்பைகளின்
அதிர்வில் சிந்தி
சிதறிற்று
ஆன்மாவில்
என்னையும் மீறி
ஒட்டியிருந்த
முத்தமொன்றும்..
அதிகாலை
அணைப்பொன்றும்..
செந்நிற திரவமாய்
என் கடந்த காலம்
அந்த கோப்பையில்
கொப்பளித்ததை
பார்த்ததை கண்ட
இரவு தன் மினுக்கும்
கண்களின் அலட்சியப்
மொழியில் சொன்னது.
தண்ணீய ஊத்துடா…
..அடங்கியது காலம்.