பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 44 of 57

பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்

        பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே  கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம்  சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும்  கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து  வெளியாகி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி எரியும். உறக்கமும், விழிப்புமாக அலைகழித்த என் கனவின் நினைவில்.. பாலச்சந்திரன் மார்பின் மீது எதிரியின் குண்டுகள் பாய்ந்தன. அந்த ஒலியில்,வலியில்  என்னருகே படுத்திருந்த என் மகன் பகலவன் ஓங்காரமாய் அழத் துவங்கினான். திடுக்கிட்டு விழித்த என் கழுத்தின் ஓரத்தின் வன்ம விலங்கொன்றின் பற்களின் தடம் ரத்தமாய் கசிந்து கொண்டிருந்தது.  என் அருகே படுத்திருக்கும் என் மகனும், தாய்நிலத்தில் வீழ்ந்திருக்கும் பாலச்சந்திரனும் வெவ்வேறானவர்கள் அல்ல என என் ஆதி அறிவு உணர்கிறது. மகனை இழந்த வலியில் தளர்ந்த தந்தையாய் கணிணி திரை முன் அமர்கிறேன்.

  எனக்கு முன்னால் ஒளி விடும் அந்த கணிணி திரையில் பாலச்சந்திரன் அசையாமல் அமர்ந்திருக்கிறான். சற்றே சரிந்து அமர்ந்திருக்கும் அவனது முறை அவனது தந்தையை நினைவுப் படுத்துகிறது.  அவனது விழிகளில் இருந்து அந்த நொடியில்..அவன் விழிகளின் எதிரே நிகழ்ந்த, நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை நான் அப்படியே வாசிக்க முயன்று தோற்கிறேன். சலனமற்ற விழிகளை அவன் அவனின் தந்தையிடமிருந்து பெற்றுள்ளான். புகைப்படங்களில் பார்க்கும் போது கூட துளியளவும் வஞ்சகம் பேசாத நேர்மையாளனின் கண்கள் அவை . களங்கமற்ற அந்த விழிகள் உண்டு,படுத்து,முயங்கி,வாழும் சராசரி மானுட இனத்திற்கு உரித்தானவை அல்ல. மாறாக  மானுட பாவத்தை செரித்து தன் உடலின் குருதியாய் கசிய விட்ட தேவனுக்கு உரித்தானவை.  
 
         வரலாற்றில் எப்போதாவது தோன்றும்  ஒரு மகத்தான மன்னனுக்கு மகனாக பிறந்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை அவன். ஒரு தேசிய இனத்தின் மரபியல் அடையாளமாக அந்த குடும்பம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கு பாலச்சந்திரன் சாட்சியாக இருக்கிறான் . வரலாற்றின் நதி முடிவிலியாக கால ,தேச,தூரங்களின் கரைகளை தழுவி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது தன் பயணத்தில் இப்படிப்பட்ட ஒரு இளவரசனை சந்தித்ததே இல்லை.  வீழ்த்தப்பட்ட நிலமொன்றின் மன்னனாக இருக்கும் அவனது தந்தை ஒரு நொடி நினைத்திருந்தால்.. தன் மகன்களை,தன் மகளை,தன் மனைவியை பாதுகாப்பான தேசமொன்றில்  அரண்மனை ,பணியாளர்களோடு ஆடம்பரமாக வாழ வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படியல்ல. உயிருடன் உருக்கும் போதே உதட்டிற்கு அருகேயே மரணத்தை தொங்கப் போட்டு திரிந்த மனிதர் அவர். மரணத்தையும், வாழ்வினையும் செய்கின்ற செயல்களை வைத்து எடை போடும் உளவியல் அவருக்கானது.  அவர் மரபு சிதையாத ஆதித் தமிழனின் நேரடி பிள்ளை. தமிழ் தொல்குடியின் ஆதித் தொழிலான விவசாயத்தினை போலவே விடுதலையையும் விதைத்து அறுத்து விடலாம் எண்ணினார் அவர். அலை அலையாய் விதைகளை நிலமெங்கும் வீசித் திரிந்த அவரது கரங்கள் ஒரு போதும் சோர்ந்ததே இல்லை. தாய்ப் பெரு நிலத்தில் முளை விட்ட விடுதலை பசுமையை மூர்க்கமாய் பேரினவாத வல்லூறுகள் தாக்க பறந்து வருகையில் தாய்ப் பறவையாய் தன் இறகை விரித்து காத்து நின்றார் அவர். விதைகள் தீர்ந்த நாள் ஒன்றில் இறுதியாய் அவர் தேர்ந்தெடுத்து தூவியது தன் மகனை..
 
விதையாய் விழுந்து கிடந்த மகனின் சற்று திறந்திருந்த விழிகளில் ..சிறுவயதில் அவனை தூக்கி கொண்டாடிய தளபதிகள்,வீரர்கள் ஆகியோர் மங்கலான தோற்றத்தில் தெரிந்திருக்கவும் கூடும்.
 
ஒரு இளவரசனாக பிறந்த அவன் எப்போதும் இளவரசனாக வாழ்ந்ததில்லை.மண்ணின் விடுதலை ஒன்றே மகத்தான இலக்காக நினைத்து இயங்கும் அவனது தந்தை மிகவும் கறாரானவர்.  வயதான தன் தாய் தந்தையரை பொதுமக்களோடு மக்களாய் அனுப்பி வைத்தவர் . தனது மூத்த மகனை போர்க்களத்தில் நிற்க வைத்து சகப் போராளிகளோடு சாவினை தழுவச் சொன்னவர். தன் மகளை சீருடை அணிய வைத்து படையணியில் முன்னணியில் நிறுத்தியவர். நம் நிலம் போல மூத்த மகனுக்கு மத்தியில் பதவி,இளைய மகனுக்கு மாநிலத்தில் பதவி ,மகளுக்கு பாராளுமன்றத்தில் பதவி என்றெல்லாம் நினைத்துப் பார்க்க அவர்களில் யாருமே இல்லை. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் மரணத்தை விட நமக்கு அதிர்ச்சியூட்டுவது தன் குடும்பம்,தன் மகன்,மகள் குறித்து அவனின் தந்தை கொண்டிருந்த மதிப்பீடுகளே. கண் மூடுவதற்கு முன் தன் மகனுக்கு அரசியல் அரியணையில் முடி சூட்டி விட வேண்டும் என்கிற கணக்குகளும்,பிணக்குகளும் மலிந்திருக்கின்ற மண்ணில் இருக்கின்ற நம்மால்  விடுதலை வேட்கையின் பால் எழுந்து விட்ட ஆழமான பற்றுறுதியை புரிந்துக் கொள்ள முடியவில்லை. 
 
பாலச்சந்திரனின் மரணத்தை வீரமரணம் என்றெல்லாம் வார்த்தை மெழுகு பூசி செழுமைப்படுத்திக் கொள்ள என்னால் முடியவில்லை. அந்த பாலகனின் கொலை இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை உரத்து அறிவிக்கிறது. அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு சிறுவனை கொலை  செய்யும் உளவியல் உலவும் உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்கிற செய்தி. பார்த்த உடனேயே அள்ளிக் கொள்ள தோணும் அச்சிறுவனின் மென்மையான உடலை துளைக்க பேரினவாத பயங்கரவாதத்திற்கு மட்டுமே வலு இருக்க இயலும்.  விடுதலை கோரி குருதி தோய்க்கும் அந்த ஈரப் பெரு நிலத்திற்கு மட்டுமே பாலச்சந்திரன்களை உருவாக்க,சுமக்க,விதைக்க,முளைக்க வைக்க இயலும்.
இதையெல்லாம் காண உலகிற்கு எத்தனை மனவலிமை உண்டோ, அதே  சதவீதத்தில் ஒரு தேசிய இனமே ஆழ்மன வன்மத்தோடு அமைதியாய் காத்திருக்கிறது. எந்த எதிரி என் பிள்ளையை கொன்றானோ, அந்த எதிரியை எம் கண் முன்னால் சிவப்பு கம்பளம் விரித்து அழைத்து உபசரிக்கும் இந்தியாவின் இரண்டக எள்ளலையும் பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது. என்னடா முடியும் உங்களால் என எதிரி உதிர்க்கும் எகத்தாள அறைக்கூவலை கனவிலும் செவியெடுத்துக் கொண்டு கவனமாக காத்திருக்கிறது. கண்களில் வெடிக்கும் அழுகையை கழுத்திலேயே தேக்கி ..கண் சிவந்து காத்திருக்கிறது…காத்திருக்கிறது…கணக்குத் தீர்க்கும் கவனத்தோடு. மெளனமாக..
 
கனன்று எரியும் கண்களில்
நிழலாய் நிற்கிறாய்..
வடித்தெடுத்த  வார்த்தைகளில்
எதிரிகளின் மீது
உமிழும் வன்மமாய் மிஞ்சுகிறாய்..
பால்யம் சுமக்கும் உன் விழிகளை
ஒத்த குழந்தைகள் மீண்டும்
இம் மண்ணில் பிறக்க கூடும்..
அவற்றில் ஏதேனும் ஒன்று
ஏக்கமாய் என்னை பார்க்கும்
தருணத்தில் உன்னை
என்னுள் தருவித்து கொள்வேனடா..
என் மகனே…பாலச்சந்திரா..
-மணி செந்தில் 

ஈழ விடுதலை உணர்வை வீழ்த்த துடிக்கிற விகடனின் வில்லங்கம்.. — மணிசெந்தில்

            இன்னும் சில நாட்களில் மாவீரர் தினம் உலகத் தமிழர்களால் அனுசரிக்க இருக்கின்ற நிலையில்  இந்த வார ஆனந்தவிகடனில் வெளிவந்திருக்கும் ’பெண் போராளி ’யின் பேட்டி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது . ஒட்டு மொத்த போராளிகளின் உணர்வினையும் பிரதிபலிப்பதாக படிப்பவர் கருதும் வகையில் மிக திறமையாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பேட்டியை நாம் வெறுமனே கடந்து விட முடியாது.   
               இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பின்  தமிழ்த் தேசிய இனம் தன்னகத்தே அடைந்திருக்கின்ற  மாற்றங்கள் மகத்தானவை . ஈழம் என்கிற நாடு தமிழ்த் தேசிய இனத்தின் தணியாத தாகமாய் இன்று உருவெடுத்து நிற்கின்றது.  12 கோடிக்கும் குறைவில்லாத இனமாக தமிழ்த் தேசிய இனம் தழைத்து நின்றாலும் தன் பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போனதற்கான  காரணங்களையும், அதனை சார்ந்த  உலக ஒழுங்கினையும் ஆய்விற்கு உட்படுத்தி, எதிர்காலம் ஒன்றை புதிதாக சமைக்க தமிழ்த் தேசிய இனம் தன்னையே தயார் படுத்தி வரும் நிலையில் ..விகடனின் இந்த பதிவினை நாம் சாதாரணமான ஒன்றாக கருதிவிட இயலாது
                தீரமும், தியாகமும் நிறைந்த ஒரு விடுதலைப் போராட்டம் என்பது தோல்வி, வெற்றி நிலைகளுக்கு அப்பாற்பட்டது . உலகத்தில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் கடுமையான பல இன்னல்களையும், இழப்புகளையும் தாண்டி தான் விடுதலை காற்றை சுவாசிக்கின்றன . முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பது ஒரு சாதாரண சொற்றொடர் அல்ல. நம் கண்ணில் வழிகின்ற கண்ணீரை துடைத்து விட்டு..இன்னும் மூர்க்கமாக..இன்னும் திறமையாக.. மீண்டெழுதலுக்கான உந்துதல்.  அத்தகைய உந்துதலைத்தான் ஒரு பெண் போராளியின் பேட்டியாக விகடன் வெளியிட்டு இருக்கும் பதிவு மிகத் திறமையாக சிதைக்கிறது.  ’எல்லாம் முடிந்து விட்டதுஎன்பதான குரல் தொடர்ந்து இயங்குவதற்கான  மனநிலையை வீழ்த்துகின்ற அரசியலாகவே நம்மால் உணர முடிகிறது.
 தலைவர் இல்லை என்கிற குரலை சற்று உயர்த்தியே முழங்கும் அந்த பதிவு குறிவைத்து மாவீரர் மாதத்தில் ஏவப்பட்டதன் நோக்கம் ஆராயத் தக்கது. எம் தேசிய தலைவர் பிரபாகரன் இல்லை  என்பதை உலகத் தமிழினம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற அழுத்தமும் அந்த பதிவில் தொனிக்கிறதுதேசியத் தலைவர் பிரபாகரன் உலகத் தமிழினத்தின் முகமாக ,முகவரியாக, அறவியல் அடையாளமாக திகழ்கிறார்அவரது உன்னத தலைமையும், அர்ப்பணிப்பும், தியாகமும் உலகத் தமிழர் வாழும் நிலங்களில்..குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழல்களில் மிகப் பெரிய தாக்கத்தினை இன்று ஏற்படுத்தி இருக்கின்றன. நேர்மையும், தியாகமும் உடைய சமரசமற்ற தலைமை குறித்தான இக்கால தமிழின இளைஞர்களின் கனவாக தேசியத் தலைவர் திகழ்கிறார். அவரது நிலைப்பாடுகளை இன்று பெருகி வரும் நூல் வாசிப்பு மூலம், இணையத்தின் மூலம் அறிந்துக் கொள்ளும் இளையத் தலைமுறையினர் சுயநல ,சமரச, வியாபார அரசியல் தலைவர்கள் மீது  கடுமையாக ஆவேசம் கொள்கின்றனர். ஒரு தலைமை மாசற்ற வடிவமாக, புனிதத்துவமாக திகழ வேண்டும் என்கிற எளிய இளைஞனின் அக விருப்பம் ..எம் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒப்பற்ற தியாகம்,வீரத்தினால் விளைந்தது  ஆகும் . எனவே தான் அவர் இருக்கிறார் என்கிற நினைவோடு தாயக கனவை நோக்கி உலகத் தமிழர் இன்று பயணப்படுகின்றனர்.
 வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குமாவீரர் தினம்குறித்த அளவீடுகள் புனிதத் தன்மை வாய்ந்ததாக மேம்பட்டு  நிற்பதன் காரணமும் இது தான்.இன்று  உலகம் முழுவதும் தமிழர் வாழ்கின்ற நிலங்களில் மாவீரர் தினம் அனுசரிக்காத பகுதி இல்லை என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது. சாதி மறுப்பு,பெண்விடுதலைபொருளாதார சமநிலை வாழ்வு, விடுதலை உணர்வு ஆகியவற்றின் குறியீடாக தேசியத் தலைவர் திகழ்கிறார்அதனால் சிங்கள பேரினவாதம் உடல் ஒன்றினை காட்டிய போதும், அவ்வப்போது தமிழரின் உளவியலை சிதைக்கின்ற செய்திகளை கசிய விடுகின்ற போதும்.. மீறி வரும் கண்ணீரையும் கண்ணுக்குள்ளேயே தேக்கி, அடங்காத ஆவேசம் விளைவிக்கும் கனத்த மெளனத்தோடு, காயங்கள் தந்த வன்மத்தோடு தமிழர்கள் இறுகிக் கிடக்கிறார்கள்தங்களை இயக்கும் சக்தியாக  தலைவரின் இருப்பு குறித்த நம்பிக்கைகளை தங்களுக்குள் விதைத்து கொண்டு முன்னேறுகிறார்கள்இவையெல்லாம் விகடன் அறியாததா என்ன..?
                  ஒரு பெண் போராளி பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்டதன் சூழல் நமக்கு இன்னும் போராடுவதற்காக ஆவேசத்தினை ஏற்படுத்த வேண்டும். மாறாக அந்த பதிவுஎல்லாம் முடிந்து விட்டதுஎன உரத்த குரலில் அறிவிப்பது..இப்போது இருக்கின்ற கேடான சூழலில் இருந்து மீண்டு வருவதற்கான கதவுகளை அடைப்பதற்கு சமம். தமிழ்நாட்டில் இருக்கின்ற,புலம் பெயர்ந்து இருக்கின்ற தமிழர்கள் ஈழம் அழிவில் அரசியல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு..இதற்காக போராடி வருகின்ற அமைப்புகளை பின்னடைவிற்கு உள்ளாக்கும் செயலாக தெரிகிறதுஈழம், தலைவர் பிரபாகரன் போன்ற சொற்கள் பயன்படுத்தக் கூட தடையாகவும்,அச்சமாகவும் இருந்த இந்தியா உள்ளீட்ட உலகச்சூழல் இன்று மாறி இருக்கிறது. ஈழத்தின் அழிவும், நடந்த இனப்படுகொலைகளுமே சென்ற தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தலில் அதிகம் வாக்களித்த இளைய தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த காரணங்களாக விளங்கின. முகமூடியும்,புனைவும் அணிந்த அரசியல் தலைமைகள் இளைய தமிழ்ச் சமூகத்தின் ஆவேசத்தினால் நிர்மூலமாக்கப்பட்டு முடிந்திருக்கிறார்கள். எனவே ஈழத் தமிழர்களின் அழிவு என்பது பலவித காரணிகளை கொண்டு விரிவாக்கப்பட்ட ஆழ்நிலை காரணமாக, பல்வேறு அரசியல் செயல்களுக்கு மூலமாக இருக்கின்றதுஈழத்தின் அழிவு ஓட்டு மொத்த தமிழ்த் தேசிய இனத்தின் இழப்பு என்பதாலேயே அரச, நில எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட பல தமிழர்கள் தங்கள் உயிரை ஈகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் பிறந்த முத்துக்குமார் ஈழ நாட்டின் விடுதலையை தனது தாயக விடுதலையாக கருதினார். அங்கு விளைந்த இழப்புகளை தன் இழப்புகளாக உணர்ந்த காரணத்தினால் தான்   உயிர் ஈகம் செய்யும் அளவிற்கு வலியை பெற்றார்ஒரு முத்துக்குமார் இறந்தார். ஆனால் இன்னும் பல முத்துக்குமார்கள் உயிருடன் உலவி, தன் இனத்திற்காக களமாடி நிற்பதற்கான நம்பிக்கைகளை விதைத்தது அந்த பிரபாகரன் என்கிற ஒற்றை சொல்.
தலைவர் இல்லை. நீ படுத்து தூங்கு. நாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்று சொல்ல ஈழத்தமிழர் மட்டுமல்ல யாருக்குமே உரிமை இல்லை. ஈழமும் ,தமிழகமும் ஒரு தேசிய இனத்தின் இரு தாய்நிலங்கள் என்பதாலேயே முத்துக்குமார் ,அப்துல் ரவூப் போன்ற இளைஞர்கள் தன் உயிர் தந்தனர். அதை தலைவர் பிரபாகரன் அவர்களும் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினால் தான் தமிழ்நாட்டில் உயிர் ஈகம் செய்த முத்துக்குமாருக்குமாவீரர்தகுதி அளித்து விடுதலை புலிகள் அன்று வீர வணக்கம் செலுத்தினர் .
 நம் கண் முன்னால் நம் இனம் அழிந்த  நிகழ்வு ஆறாத குற்ற உணர்ச்சியாய் இன்று தமிழர் மனதில் மாறி நிற்பதன் விளைவே இன்று கூடங்குளம் அணு உலை பிரச்சனையாக இருக்கட்டும், மூன்று தமிழரை மரண தண்டனையில் இருந்து காக்கும் போராட்டமாக இருக்கட்டும், காவிரி,முல்லை பெரியாறு என நதி நீர் சிக்கலாக இருக்கட்டும்  ..திரண்டு வருகின்ற இளைஞர் கூட்டம் அமைப்புகள் ,கட்சிகள் சாராத்து என்பது குறிப்பிடத்தக்கது .  இங்கு ஈழமே ஆதியாக இருக்கிறது அனைத்திற்கும்.
குளிர் நிறைந்த காலமென்றாலும் ,கொட்டும் பனியிலும் குழந்தை குட்டிகளுடன் நின்று சிங்கள இன அதிபர் ராசபக்சே விற்கு எதிராக ஆவேசமாக எதிர்ப்பினை காட்டிய புலம் பெயர் உறவுகளின் உணர்வினைஎல்லாம் முடிந்து விட்டதுஎன அறிவித்து உத்திரத்தில்  போட்டு விடலாமா ?
உலகத் தமிழர்களின் ஓயாத உழைப்பினால் போர் குற்றங்கள், இனப்படுகொலைக்கு எதிரான விசாரணை  என சிங்கள நாட்டிற்கு எதிராக வருகிற ஜனவரி மாதத்தில் வர இருக்கின்றதே.. அதையும்எல்லாம் முடிந்து விட்டதுஎன அறிவித்து அழித்து விடுவோமா..?
ஒரு பெண் போராளி பாலியல் தொழிலாளியாக மாறிய அவலத்திற்கு சிங்கள பேரினவாதம் காரணமே ஒழிய..இழிநிலை துடைக்க ,விடுதலை கனவோடு போராடியவர்களும், போராடுபவர்களும் காரணம் இல்லை. என் சகோதரி ஒரு பாலியல் தொழிலாளியாக எதிரியால் மாற்றப்பட்டிருப்பதன் சூழல்எல்லாம் முடிந்து விட்டதுஎன நான் முடங்கிப் போவதால் மாறி விடுமா..?.
         சுகமாக,பாதுகாப்பாக இருந்துக் கொண்டு ஈழத்தை பற்றி பேசுகிறார்கள் என்றால்.. நீரில் முழ்குபவர்களை கரையில் நிற்பவர்கள் தான் காப்பாற்ற இயலுமே ஒழிய..குறைந்த பட்சம் காப்பாற்ற கோரி கத்த முடியமே ஒழிய.. கரையில் நிற்கிறாய்..உனக்கென்ன தெரியும் முழ்குதலின் வலி..? ..கத்தாமல் அமைதியாக நில் என சொல்வதுதான் சரியானதா…?
தலைவர் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்றால்.. அவரை  நடமாடும் உடலாக பார்த்தவர்களுக்கு தான் இருப்பு,இறப்பு சிக்கல். அவரை அறவியல் அடையாளமாக , தமிழின மரபின் வடிவமாக, தானே தோன்றிய தத்துவமாக,உளவியல் வலிமையாக காண்கிற இளையத் தமிழ் பிள்ளைகளுக்கு  ’அவர் இருக்கின்றார்’ .
 
             இறுதி கட்டப் போரின் போது விகடன் ஆற்றிய ஊடகச் சேவை மகத்தானது.ஆனால் சமீப காலமாக  விகடன் குரலின் தொனி பிசகி இருப்பதை நுட்பமான வாசகர்கள் கவனித்து தான் வருகிறார்கள் . தமிழினம் புத்தெழுச்சி அடைந்து..தம் இனத்திற்காக  ஒன்று பட்டு போராடி  சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ,இழைக்கப்பட்ட ,இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக,இனப்படுகொலைக்கு எதிராக..நம்பிக்கை ஒளியை பாய்ச்ச வேண்டிய விகடன் அவநம்பிக்கை குழியில் தள்ளியிருப்பது அதன் ஊடக நேர்மைக்கு நேர்ந்த சறுக்கல்.
              பேட்டி வழங்கி இருப்பதாக சொல்லப்படுகின்ற எம் சகோதரி பாலியல் தொழிலாளியாக மாறிய சூழல் தனி நபருக்கு விளைந்தது அல்ல. அது எம் இனம் அடைந்த இழிவு. இந்த இழிவும் ,அழிவும் ஏற்பட்டு விடக் கூடாது என்கிற காரணத்தில் தான்  தேசியத் தலைவர் பிரபாகரன் போராடினார். மறுக்கப்பட்ட தாயக விடுதலைக்காகவும், இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும்  எதிராகத்தான்   இன்றளவும் தமிழக வீதிகளிலும், உலக வீதிகளிலும்..எண்ணற்ற இளைஞர் கூட்டம்..தன் வாழ்க்கை, தன் சுகம் மறுத்து வீதிகளில்   போராடுகிறார்கள்.
              அவநம்பிக்கை ஒளி அளித்து இனத்தை ,இனத்தின் விடுதலையை முடிக்க சிங்கள பேரினவாதம் முனைந்திருக்கிறது. எத்தனையோ காட்சிகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன..உளவியல் உறுதி ஏற்பட்டு விட  கூடாது சாகசங்கள் புரியப்படுகின்றனஇந்த உளவியல் தாக்குதலையும் தமிழ்த்தேசிய இனம் வெல்லும்
             இனப்படுகொலைக்கு எதிராக,மறுக்கப்பட்ட தாயக விடுதலைக்காக போராடியவர்கள்போராடுபவர்கள் போரின் மீது விருப்பம் கொண்டவர்கள் அல்லர். மாறாக இது சிங்கள பேரினவாதம் திணித்த போர்போர் கொடுமையானது தான். அதை விட கொடுமையானது அடிமைகளாக வாழ்வதுஎல்லாவற்றையும் விட கொடுமையானதுஎல்லாம் முடிந்து விட்டதுஎன்றெண்ணி அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்வது. மெளனமாய் நிற்பது. அவநம்பிக்கையோடு அடங்குவது.. இதுதான் விகடன் விளைவிக்க விரும்புகிறதா..?
                 மேலும் ஒரு பெண் போராளியின் துயரம் மிகுந்த பதிவாக முடியும் அந்த பேட்டியில் .. அந்த துன்பத்திற்கான தீர்வாக காட்டப்படுவது எதுவுமில்லை என்பது மட்டுமல்ல..ஈழத் துயரத்தின் காரணமாக விளையும் அரசியலையும் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் கை விட்டு விட வேண்டும்  என்பதுதான். ஈழத்தின் துயரமும், இனப்படுகொலைகளும் இன்று ஒரு குறிப்பிட்ட நிலத்தின் அரசியலாக இருந்த நிலை மாறி , உலகத்தின் கண்களை திறந்திருக்கின்றன. ஈழத்தின் துயரம் தோய்ந்த முடிவு பக்கத்து நிலமான  தமிழ்நாட்டில் கூட அரசியலாக மாறாமல் போனால் அதை விட பின்னடைவு என்னவாக இருக்க இயலும்..? .மனித உரிமை,இனப்படுகொலை போன்ற பொதுவான அம்சங்கள் உலகச்  சமூகம் அனைத்திற்கும் தொடர்புடையது தானே..
  
                       முடிவாக விகடன் இந்த பெண் போராளியின் பதிவு மூலம் நிறுவ விரும்புவது ஈழத்தின் அவலம் மட்டும் தான் என்றால் இந்த எதிர்வினையே தேவையற்றது. ஆனால்  வேரோடும், வேரடி மண்ணோடும் ஈழ விடுதலைப் போராட்டம் பிடுங்கி எறியப்பட்டு விட்டது என்கிற பிரகடனம் தான் இதில் மிக முக்கிய அம்சமாக வெளிபடுகிறது. இந்த பிரகடனம் இன்றளவும் இனப்படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, தனி ஈழத்திற்காக, பொதுவாக்கெடுப்பிற்காக எடுக்கப்படும் முன்னெடுப்புகளை பலவீனப்படுத்துவதோடு வீழ்த்தவும் முயல்கிறது.
               எக்காலமும் சிங்கள பேரினவாதத்தின் முகம்எல்லாம் முடிந்து விட்டதுஎன்றெண்ணி சிரிப்பினை சிந்த வைக்க எம்மால் முடியாது. கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழம் சாத்தியமே என்ற செய்திதான்  உலகத் தமிழினத்தின் ஒற்றை பிரகடனம்.இதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
இதுவெல்லாம் விகடனுக்கு புரியும். இருந்தும் ஏன் இந்த வில்லங்க வேலை ..? யாருக்கு தெரியும்..? சிங்கள ரத்னாக்கள் புன்னகைக்கிறார்கள்.
     -மணி செந்தில்

தாய்நிலத்தை நேசிக்கும் தீரர்களின் போராட்ட பூமி -இடிந்தகரை

அவர்கள் சுழன்றடிக்கும்கடல்காற்றில்படகேறிவந்துசாரைசாரையாய்அந்தகடற்கரையோரம்அமைதியாககாத்திருந்தார்கள். கம்பீரமானஅந்தஅமைதிமூலம்இந்தஉலகிற்குசெய்திஒன்றினைஅவர்கள்தெரிவிக்கமுயன்றார்கள். அந்தஎளியமக்கள்மாபெரும்கல்விஅறிவுகொண்டவர்கள்அல்ல. மதிப்பிற்குரிய அப்துல்கலாம்போல  ஏவுகணைநுட்பங்களைஅறிந்தவர்கள்அல்ல. அமைச்சர்நாராயணசாமிபோலஅதிகாரபலம்கொண்டவர்கள்அல்ல. திமுகதலைவர்கருணாநிதிபோலபோராட்டம்என்றபெயரில்நடிக்கத்தெரிந்தவர்கள் அல்லமுதல்நாள்வரைஆதரித்துவிட்டுநம்பிநிற்கும்மக்களைநிராதரவாய்கைவிட்ட  தமிழகமுதல்வர்ஜெயலலிதாபோலநிமிடமுடிவுகளைநொடிகளில்மாற்றும்வல்லமைகொண்டவர்கள்அல்ல. மாறாகஎளியகடற்கரைகிராமமக்கள். அன்றாடபிழைப்பிற்கு உயிரைப்பணயம்வைத்தால்தான்அன்றையஉணவுஎன்றநெருக்கடியில் வாழ்பவர்கள்.
கடந்த பலஆண்டுகளுக்குமுன்பாகதங்களைச்சுற்றி கட்டியெழுப்பப்பட்டு வரும்  மாபெரும்வல்லரசுஒன்றின்அதிகாரம்தோய்ந்தகனவினைஅவர்கள்தீரத்துடன்எதிர்த்துநின்றார்கள். சவரம்செய்யப்படாதஒருவர்..தான்தேவதூதனில்லைஎனஅறிவித்துக்கொண்டுஅமெரிக்காவில் பார்த்தவருமானம்வரத்தக்கபணியினைதூக்கிஎறிந்துவிட்டுஅவர்கள்மத்தியில்வந்துசேர்ந்தார். அண்ணல்அம்பேத்கர்உரைத்ததுபோலகற்பி.ஒன்றுசேர்.புரட்சிசெய்..    அனைத்தும் நடந்தது.  இதற்காக அவர் கொடுத்த விலை மிகப் பெரியது. அவரது பள்ளிக்கூட்த்தினை இடித்து தரைமட்டமாக்கினர். போராட்டத்திற்காக நிதி வசூலிக்கிறார் என ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழலில் திளைத்தவர்கள் குற்றம் சாட்டினர். அவர் அமைதியாக அங்குள்ள குழந்தைகளுக்கு வரப்போகும் ஆபத்து குறித்து வகுப்பெடுத்துக் கொண்டு இருந்தார். கடலுக்குப் போகும் மீனவன் ஒரு அறிவியல் விஞ்ஞானி அளவிற்கு புள்ளிவிபரங்களோடு ஆதாரப்பூர்வமாக விவாதிக்க துவங்கியது அங்குதான் நடந்தேறியது.
தன்னை ஒரு வளர்ந்து வரும் வல்லரசு என பீற்றிக் கொள்ளும் இந்தியாவின் ஜனநாயக முகத்திரையை கிழித்து எறிந்து இருக்கிறார்கள் இடிந்தகரை மக்களும், அண்ணன் உதயகுமார் அவர்களும்.  ராணுவம்,காவல்துறை,அதிகாரிகள்,அரசியல் தலைவர்கள்,ஊடகம் என அனைத்து விதமான சர்வாதிகாரமும் எளிய அம்மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அசரவே இல்லை. ஆரம்பத்தில் ஆதரவு தருவது போல நடித்து பின் நட்டாற்றில் கைவிட்ட தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் அம்மக்களை சற்றே பின்னடைய வைத்தாலும் அவர்கள் சோர்ந்து விடவில்லை . வல்லாதிக்க அரசின் பிரதிநிதியாகவே மாறிவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் கூட இடிந்தகரை மக்களுக்கு எதிராக நின்ற போதும் அவர்கள் உறுதியாகவே நின்றார்கள்.
இடிந்தகரையில் பிறந்திருக்கின்ற ஒரு சின்னஞ்சிறிய சிறுமிக்கு கூட அணு உலையின் ஆபத்து பற்றி புள்ளி விபரங்களோடு தெரிந்திருக்கிறது என்றால்..அது அண்ணன் உதயகுமார் அவர்களின் கடும் முயற்சியோடு வழங்கப்பட்ட பயிற்சி.
ஒரு வருட காலத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கில் மக்களை திரள வைத்துக் கொண்டு ஒரு கோரிக்கையை தீவிரமாக எடுத்து வைத்து போராடுவது என்பது மிக சுலபமல்ல. அந்த வகையில் இடிந்தகரை மக்களும், அண்ணன் உதயகுமாரும் சமூகப் போராட்டங்களை சளைக்காமல் முன்னெடுக்கும் சக்திகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறார்கள் . ஒரு மாபெரும் போராட்டத்தில் மக்கள் திரளை சளைக்காமல் பங்கெடுக்க வைப்பதற்கு மாபெரும் உளவியல் உந்துதல் தேவைப்படுகிறது. போராட்டங்களை எப்போதும் சாதாரண மக்கள் விரும்புவதில்லை. ஆனால் ஊழல் மலிந்த , பாகுபாடு நீதி முறை கொண்ட ,எப்போதும் அநீதிக்கு ஆதரவாக நிற்கின்ற அரசாதிகாரம் மக்களை போராட்டங்களுக்கு வலிந்து தள்ளுகின்றன. உடை, உணவு,உறையுள் ஆகிய 3 முக்கிய அம்சங்களில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டால் தான் சாதாரண மனிதன் வீதிக்கு வருகிறான் . ஆனால் இடிந்தகரை மக்கள் தம் மண்ணிற்காக, தன் எதிர்கால தலைமுறைக்காக போராடுகிறார்கள்.
மண்ணின் மைந்தர்கள் தங்கள் நிலம் காக்க  போராடுவதும்,அரச வல்லாதிக்க கரம் வன்முறை முகம் காட்டி அதனை முடக்க முயல்வதும் தமிழரின் வரலாற்றில் காலங்காலமாய் நடந்து வரும் நிகழ்வுகளாகும். எதிரி வலிமையானவன் என நன்கு தெரிந்தும் வேல் கொண்டும் வாள் கொண்டும் வெற்றிவேல், வீரவேல் என முழங்கி எதிரி நோக்கி பாய்ந்த பூலித்தேவன், மருது பாண்டியர், ராணி மங்கம்மாள் என நீளும் வீர மரபு மகத்தானது. தாய் மண்ணை காக்க போராடிய விடுதலைப் போராட்டம் தான் ஈழ மண்ணில் ரத்தம் சிந்தும் மாவீரர்களையும், தன்னையே இழந்து தன்னிலம் காக்க நின்ற தலைவனையும் இந்த உலகிற்கு அடையாளம் காட்டியது.  
  வெறும் வாழ்விடம் தானே..வெறும் நிலம் தானே.. அரசு காட்டும் வேற்றிடத்திற்கு போகவேண்டியது தானே.. என்றெல்லாம் குரல்கள் இடிந்தகரை மக்கள் மீது பாய்கின்றன. எம் பாட்டனும்,பூட்டனும் வழிவழியாய் வாழ்ந்து ,கலந்து,திரிந்து,சுமந்த நிலத்தினை அரச ஏதோச்சிக்கார வல்லாண்மை ஆசைக்கு பலி கொடுத்து விட்டு , பன்னாட்டு மயத்தின் மினுக்கத்தினால்  மேற்பூச்சில் மினுங்க நகர பொருளியல் வாழ்விற்காக  பூர்வீக பூமியை தொலைத்து விட்டு நகர தமிழ்த் தேசிய இனம் போன்ற தொன்ம இனங்களுக்கு எப்படி முடியும்..?
அணு உலை ஆபத்தானது என்றும், சுற்றுப்புற சூழலுக்கு எதிரானது என தெரிந்தும், தங்கள் அழிவிற்கு தாங்களே சம்மதிக்க வேண்டும் என கூடங்குளம், இடிந்த கரை மக்கள் மீது அரச பயங்கரவாதம் தொடுத்திருக்கும் இப்போர் அநீதியானது. ஆனால் உலகம் முழுக்க வாழும் பூர்வீக குடிகள் போலவே அம்மக்களும் தங்கள் மீது திணிக்கப்படும் அநீதி அணு உலையை அசராமல் எதிர்த்து வருகிறார்கள். மின்சாரம் தயாரிக்க மயானமாய் கூடங்குளமும்,இடிந்தகரையும் மாற வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. கனிம வள கொள்ளைக்காக தண்டகாரண்ய காடுகள் துவங்கி தனது பேராசை நாவினை அலைய விடும் இந்திய வல்லாதிக்கத்தின் கொடூர முகம் .. இன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற மக்களையும் தீவிரவாதிகளாய்,வன்முறை வாதிகளாய் அடையாளம் காட்ட ஆசையுடன் நிற்கிறது. வெள்ளைக் கொடி ஏந்தி போராடும் அம் மக்கள் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் கொடுங்கோன்மை பக்கங்களுக்கு வாழும் சாட்சிகளாக விளங்குகிறார்கள்.  தமிழ் மண்ணில் பிற இனத்தவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு, வசதி, தகுதிகளை ஏற்படுத்தி ஏற்றிவிடும்  தத்துவங்களாக ஒளிரும் திராவிடம், இந்திய தேசியம் என்பவற்றின் மீது நிற்கும் திராவிட தேசிய கட்சிகள்(விதிவிலக்கு மதிமுக மட்டும்) அணு உலைக்கு ஆதரவாக நிற்பதன் மூலமே புரியவில்லையா…? இது பூர்வீக குடி மக்களின் உரிமை போராட்டம் என.   காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. பொய்மையின் பூச்சினில் மிளிர்ந்த முகங்கள் அம்மணமாகி அம்பலப்பட்டுக் கொண்டே இருக்கின்றன..வெகு காலம் இப்படியே  நகர முடியாது. ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கு முன்னோடம் தான் தாய் மண்ணை தன் உயிருக்கு மேலாக நேசிக்கும் தீரர்களின் பூமி – இடிந்தகரை.
 
இருண்மை வீதியில்
வெளிச்சத்துகள் உமிழும்
வெப்பம் சற்றே
காத்திரமானது தான்..
அதிகார நாவுகளின்
கொடுங்கோன்மை சொற்கள்
காலங்காலமாய் இதில் தான்
குளிர் காய்ந்தன..
ஏய்த்து மாய்மாலம் செய்த
முகங்கள் இதில் தான்
உல்லாச உவகையில்
சிவந்து திரிந்தன..
 பொய்மையில் நெளிந்த
நாவுகள் இதில் தான்
இந்த வெப்பத்தில் தான்
உண்மையின் உடலங்களை
பொசுக்கி பசியாறின..
அடுப்பில் நெருப்பாய்
அமைதியாய்
அமர்ந்திருக்கும்
இந்த நெருப்புத்தான் –நாளை
எரிமலையாய் எகிற இருக்கிறது
என்பது  இங்கு
எத்தனை பேருக்கு
தெரியும்….?
-மணி. செந்தில்

உதயகுமார் என்கிற தமிழன்



நான் தேவ தூதன் அல்ல – அண்ணன் உதயகுமார்.


அமெரிக்காவில் வகித்த உயர் பதவியை தூக்கி எறிந்து விட்டு, கல்வி அறிவு மறுக்கப்பட்ட , அப்பாவி மீனவ மக்களோடு தங்கி, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று,எந்த ஒரு அணு விஞ்ஞானிக்கும் சளைக்காமல் பதில் தரக்கூடிய அளவிற்கு அவர்களை அறிவு தெளிவூட்டி, தனது தெளிவான ,வெளிப்படையான ,நேர்மையான முறைகளால் ஒரு வருட காலத்திற்கு மேலாக போராட்டத்தினை முன்னெடுத்து, வன்முறையின் கரம் தீண்டி விட்ட பிறகும் கூட நிதானம் தவறாமல் ‘எம் அமைப்பின் புதிய தலைவர்கள்’ நாங்கள் தோற்கவில்லை..போராட்டத்தினை முன்னெடுப்பார்கள் என கம்பீரமாக அறிவித்து விட்டு..மக்களின் கண்ணீர் மழைகளுக்கு நடுவே சரண் அடைய காத்திருக்கும் அண்ணன் உதயகுமார் அவர்களே…

நீங்கள் தேவதூதன் அல்ல. நீங்கள் தான் தேவன்

 

அய்யா சுப.வீ அவர்களின் கொலை மிரட்டல் புகாரும்..அண்ணன் சீமான் அவர்களின் ’நச்’ பதிலும்..

அய்யா சுப.வீக்கு நீங்கள் கொலை மிரட்டல் விடுத்தீர்கள் என சுப.வீ சொல்கிறார் அண்ணா என்று அண்ணன் சீமானிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சீமான் சொன்ன பளிச் பதில் – ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவருக்கு நான் ஏன் கொலை மிரட்டல் விடுக்க வேண்டும்..?

புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..

என் அன்பிற்கினிய கல்யாண்..,
இந்த பொழுதில் இமைகளில்
துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு..
உன் உயிர் அண்ணனாகிய
நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் .
என் பாசமுத்தங்கள் உனக்கு..
ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ்
போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் .
நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற
ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட,
நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில்
கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட,
நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக்
கொடுத்திருக்கிறோம் …
புரட்சி என்பது சொல் அல்ல. அது வாழ்க்கை
என புரிந்து வைத்திருக்கிறோம்..
நம் உயிரையும் விட மகத்தானது-இம் மொழி
காக்க, இந்த இனம் காக்க  தன்னுயிர் தந்த
மாவீரர்களின் கனவு என்பதனை தெரிந்து
வைத்திருக்கிறோம்..
எத்தனையோ இரவுகளில் தனியே பயணப்படும் போது
நாம் நமது தாய்நாட்டிற்காக,தாய்மொழிக்காக
நமது அடுத்த தலைமுறையின்
ஒளிமயமான எதிர்காலத்திற்காக
உழைக்கிறோம் என்கிற பெருமிதம் நம்முள் பொங்கும்..
சராசரி வாழ்வில் கொண்டாடி
மகிழ்ந்திருக்க வேண்டிய சுகங்களை நாம்  இழந்தோம்..
நாம் இரவுகளை இழந்தோம்..
பகல்களில் பறந்தோம்..
சராசரி இளைஞர்களின் ஆவலான
 பணம் தேடும் வேட்கையை இழந்தோம்..
ஏன்   ,,சில சமயங்களில் நம் குடும்பத்தினையும்,தாய் தந்தையையும்
மறந்து நின்றோம்… நாம் சராசரிகள் அல்ல ..அல்ல என்பதனை
உலகிற்கு உரக்கச் சொன்னோம்..
இவையெல்லாம் எதற்காக..
புன்னகையுடன் நீ நெஞ்சு நிமிர்த்தி சொல்வாய்..
எம் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரனுக்காக..
ஆம்..உண்மைதான்..
தேசியத்தலைவர் வேறு..தேசம் வேறு இல்லை.
அவர் வேறு..இந்த இனம் வேறு இல்லை..
அவர் தான் வீழ்ந்தும் கிடக்கும்
இந்த இனத்தின் மீள் எழுதலுக்கான அடையாளம்..
அந்த அடையாளத்தினை நம் ஆன்மாவில் சுமந்து…
உயிருக்குயிராய் நம்மைப் போன்று தலைவரை
நேசிக்கின்ற ,நம் அண்ணன்
சீமான் அவர்களின் சீரிய தலைமையில்
நாம் களத்தில் நிற்கிறோம்.
அண்ணன் பிரபாகரனின்
கனவினை சுமக்கும் தம்பியாக
அண்ணன் சீமான் நிற்கிறார்.
மாவீரர்களின் மூச்சுக்காற்று
அண்ணன் சீமானை உறங்க விடுவதில்லை..
சுழலும் சொற்களாக…கம்பீர முழக்கங்களாக
சதா ஒலிக்கும் அண்ணன் சீமானின் குரல் தான்
இனி தமிழினத்தின் முகவரி..
அனுதினமும் இந்த இனத்திற்கான பெருங்
கனவினை சுமக்கும்
அவர் வரைந்திருக்கின்ற வானத்தில்
தான் ஒளிரும் சிறகுகளோடு
நாம் பறக்கிறோம்..
நமக்குள்ள இலட்சிய தாகம் பெரிது .
கொண்டிருக்கும் கனவு பெரிது..
விலை தலையே ஆனாலும் தரத் துடிக்கும்
தாகம் பெரிது..
ஆம். இலக்கு ஒன்று தான்.எம்மினத்தின் விடுதலை.
சராசரிகளை போல நாம் வாழ விரும்பவில்லை
என்பதை நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும்
உறுதிப்படுத்தினோம்.
உரக்க பேசுகிறோம்..நம் மொழியில் கோபமும்
வேகமும் நீடிக்கிறதா என்பதை ஒவ்வொரு
நொடியிலும் கவனம் கொள்கிறோம்..
இலட்சிய தாகம் கொண்ட போர் வீரனாக
நமது வாழ்வை நாம் அமைத்துக் கொண்டு
விட்டோம்.
தலைமையின் மீது ஆழ்ந்த பற்றுறுதி
கொண்டிருக்கும் கொள்கை மீது தீவிர
விசுவாசம் என நமக்கான கோடுகளை நாமே
வரைந்து கொண்டு விட்டோம்..
நாம் வாழும் ஒவ்வொரு நொடியையும்
இந்த இனத்திற்காக என எழுதி வைத்து விட்டோம்.
இந்த நிலையில் தான்
செளமியா வருகிறார்.
உன் இணையாக..துணையாக..
இனி உன் பயணத்தின் நிழலாக..
ஒரு இலட்சிய வீரனுக்கு வாழ்க்கைப்
பட்ட வாழ்க்கை துணைவியும்
ஒரு இலட்சிய வீராங்கனையே..
இரவு நேர பயணம் முடிந்து வரும்
கணவனிடம் எவ்வித சலிப்பும் காட்டாமல்
கூட்டம் எப்படி..?
சீமான் மாமா எப்படி பேசினார் ?
என்பதை அவர்கள் தான் எவ்வித சங்கடமும்
இல்லாமல் கேட்கிறார்கள்.
குழந்தை படிக்கும்
பள்ளியில் தந்தை வரவில்லையா என கேட்கும்
ஆசிரியரிடம் அவர் முக்கிய கூட்டத்திற்காக
போய் இருக்கிறார் என கண்ணியத்தோடு
அவர்கள் தான் பதில் சொல்கிறார்கள்…
அவசர அவசரமாய் ஊருக்கு கிளம்பும்
போது வீட்டுக்குள் நிலவும்
பொருளாதார சங்கடம் பற்றி பேசாமல்
பெருமை காக்கிறார்கள்..
அவர்கள் நம் தாய்மொழி போலவே
பெருமை வாய்ந்தவர்கள்..
பொறுமை வாய்ந்தவர்கள்..
பாரங்களை தன் மீது சுமத்திக்
கொண்டு சமூக பாரம் தூக்கித்
திரிய நம்மை வெளியே அனுப்புகிறார்கள்..
எம்மால் எமது மொழியையும், நாட்டையும்
எம் உயிருக்கு மேலாக நேசிக்கும் எம்மால்
எம்மோடு வாழ்வில் பயணிக்கும் சக தோழமையை
தாய்மையின் மற்றொரு வடிவத்தினை நேசிக்க முடியாதா என்ன..?
என் தம்பி கல்யாண் செளம்யாவை உயிராக..
உயிருக்கு உயிராக நேசிப்பான் .
அந்த வகையில் இன்று எம் இல்லத்தில்
நுழைந்திருக்கும் செளமியா மிகவும் கொடுத்து
வைத்தவர் .
இனமானம் சிறக்க..தமிழ்க் கொண்டு
களமாடும் என் தம்பி கல்யாண் அவர்களுக்கு
செளமியா அவர்கள் மொழியாய்..விழியாய்
இருக்க வேண்டும்..
அவனால் ஆக வேண்டிய
காரியம் நிறைய இருக்கிறது..
வீரியமாய் செளமியா இருப்பார்.
நம் அண்ணன் சொல்வது போல
நமது பயணம் வெகு தொலைவு..
அந்த பயணத்தின் முதன்மை தம்பியாய்..
அண்ணன் சீமானின் படை வலிமையாய்
தம்பி கல்யாண் விளங்குவான்.  அவன் உள்ள
உறுதியாய்..இல்லப் பெருமையாய்
செளமியா விளங்குவார்..
நாம் தமிழர் என்கிற இனமானத்திற்கான
இந்த பெரும் குடும்பத்தின் பெருமையை காப்பார்.
என்னால் வெகுவாக நேசிக்கப்படுகின்ற
இருவரின் இணையேற்பு நிகழ்விற்கு வர
முடியாமல் போனது எனக்கு வெகுவாக
வலிக்கிறது..
எம்மினம் போல
நான் விழுந்திருக்கிறேன்.
மீண்டும் உத்வேகத்தோடு
எழுவதற்காக..
எழுவேன்..
அண்ணன் சீமானின் உயரும் கரங்களில்
சுடர் விடும் ஒளியாக நாங்கள் இருப்போம்..
அவரின் இனமானம் காக்கும் இந்த மகத்தான
கனவுப் பணியில் களமாடும் ஆயுதங்களாக நாங்களே
 திகழ்வோம்..
இல்லறம் ஏற்கும் என் அன்பு தம்பிக்கும்,
எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கும்
செளமியா அவர்களுக்கும்
எனது புரட்சிக் கர வாழ்த்துக்கள்..
தோளோடு தோள் சேர்த்து …வாழ்வோடு
தமிழ்த் தோய்ந்த பெருமை கொள்க..
நாம் தமிழர்.
அன்பின் மகிழ்வில்..
மணி செந்தில்..
மாநில இளைஞர் பாசறை செயலாளர்.
 நாம் தமிழர் கட்சி

மதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்

யாரும் அடிமையற்ற சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். இது கூட சாத்தியமாகி விடும் போலிருக்கிறது. ஆனால் யாரும் குடிக்காத சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்று யாராவது இன்று நினைத்தால் அவர்களை நினைத்து சிரிப்பதையோ, அழவதையோ  விட பேசாமல் அவர்களை இந்த மதுபானக்கடைக்குள் அனுப்பலாம்.

முதலில் இந்த படத்தை பாராட்டுவதா அல்லது ஏசுவதா என்ற நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த படத்தினை ஏற்றுதான் தீர வேண்டியிருக்கிறது என்கிற இச்சமூகத்தின் அவலம் இப்படத்தின் இயக்குனருக்கு சாதகமாக அமைந்திருக்கிறது .வழக்கமான சினிமாத்தனங்களில் இருந்து அப்பாற்பட்டு சிந்திப்பது பாராட்டத்தக்கது என்றாலும்  இப்படியுள்ள சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற நினைப்பு நம்மை உறுத்தாமல் இல்லை.  ஒரு திரைப்படத்திற்கு அடிப்படை தேவைகளான ஒரு கதை, அதற்கான திரைக்கதை, கதாநாயகன்,கதாநாயகி ,நகைச்சுவை பகுதி, சண்டைக்காட்சிகள் , என எல்லாவித காரணிகளையும் அடித்து நொறுக்கி விட்டு தனிப்பட்ட திரைமொழியை உருவாக்கி இருப்பது வழமையான திரைப்படக் கலையின் சமன்பாடுகளை  கலைத்துப் போடுகிறது.

உலகம் முழுக்க திரைக்கலை நினைத்துப் பார்க்க முடியாத உச்சங்களை தொட்டு வரும் இந்த நவீனயுகத்தில் மதுபானக்கடை நம் திரைமொழி வரலாற்றில் ஒரு மைல் கல்லா என சிந்திக்கும் போது ஆம் என தயக்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் கொள்கிற இத்தயக்கம் தான் இயக்குனரின் வெற்றி. ஒரு கதை, ஒரு நாயகன்,ஒரு நாயகி என பெரும்பாலும் நேர்க்கோட்டில் பயணிக்கும் தமிழ்த் திரைக்கலைக்கு கண்டிப்பாக மதுபானக்கடை அதிர்ச்சி வைத்தியம் தான். தனக்கென பண்பாடுகளை இறுக்கமாக கட்டமைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திரைப்படமொழிக்கு வில்லன் போன்ற கெட்டவன் தான் குடிக்க வேண்டும் .கதாநாயகன் மது அருந்துவதாக காட்சிகள் அமைத்தால் கூட அது ஒரு காதல் தோல்வியாகவோ,விரக்தி மனநிலையானதாகவோ காட்டப்பட்டு அது நியாய வகைகளில் சேர்க்கப்படும்.

ஏனெனில் மது குடிப்பு என்பது ஒழுங்கீனத்தின் வடிவமாக ,கட்டறு நிலையின் தோற்றமாக இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள்  தங்கள் படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெறுவது  தாங்கள் புனைய விரும்பும் தோற்றத்திற்கு அது இழுக்கானது என நினைத்தார்கள். தமிழ்ச் சமூகத்தில் மது அருந்தும்  இருந்திருக்கிறதா என்றால்   கள் அருந்தும் முறை இருந்து வந்திருக்கிறது .கள் குடிப்பதும்,மது அருந்துவதும் வெவ்வேறான தன்மை உடையவை. உலக பெருநிறுவனங்களின் ஊடுருவல் உள்ளூர் டாஸ்மார்க் கடை வரை ஊடுருவி விட்ட இந்நாளில்  உள்ளூர் பனையிலிருந்து தயாரிக்கப்படும் கள் என்பது தேசிய பானம். பொருளாதார நலன்கள் மிளிரும் மது சார்ந்த அரசியலில் தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும், அதன் எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி என்றால் அது உண்மையானதே.  சாராய நிறுவனமான மிடாஸ் –ல் முதல்வர்  ஜெயலலிதாவின் தோழி திருமதி சசிகலாவின் பங்கு பற்றி திமுக மேடைகளில்  உரத்து பேசப்பட்டது தற்போது மெளனமாகிப் போனதும் இவ்வாறே. திமுக ஆட்சிக்காலத்திலும் மிடாஸ் –ல் இருந்து அதிக சரக்கு கொள்முதல் செய்யப்பட்டது  இதன்படியே. சாதாரண திமுக, அதிமுக தொண்டர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அது தலைவர்களின் தனி அரசியல்.
  உடல் நலனுக்கு பெரும் தீங்குகள் விளைவிக்கதாக கள் அருந்தும்  முறை தமிழ்ச்சமூகத்தில் ஒரு கொண்டாட்டத்தின் வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் கள் கலயங்கள் சுமந்து திரிவோர் பற்றி ஏராளம் குறிப்புகள் காணப்படுகின்றன. (  சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே,பெரியகட் பெறினே ,யாம்பாடத் தான்  மகிழ்ந்துண்ணு மன்னே –புறநானூறு ).ஒளவையும் அதியமானும் கள் குடித்து மகிழ்ந்ததாக இன்குலாப்பின் ஒளவை நாடகம் பேசியது .கள்ளுண்ணாமை என்ற திருக்குறள் அதிகாரமும் தமிழர்ச் சமூகத்தில் கள்ளுக்கு இருந்த அதிகாரத்தை உரத்துப் பேசும் மிக முக்கிய ஆவணமாகும்.

மது,கள் ஆகியவற்றிக்கு முக்கிய வேறுபாடுகள் உண்டு. தயாரிப்பு நிலையிலிருந்து சந்தைப்படுத்துதல் வரையிலான பயணத்தில் மதுதான் உற்பத்தியாளர்களின் விருப்பமாக இருக்கிறது . மது வணிகப் பொருள். கள் தமிழர்களது உணவுப் பொருள். உடல் நலனிற்கு பெரிதும் தீங்கினை விளைவிக்க கூடிய மதுவினை அரசு தெருவிற்கு தெரு கடையாக திறந்து விற்பதும், உடல் நலனிற்கு பெரிதும் கேடுகள் விளைவிக்காத, அதிகம் செலவுகள் ஆகாத கள்ளை அரசு தடை செய்து வைத்திருப்பதும் முற்றிலும் முரணான ஒன்று.

மதுவிலக்கு என்பது அரசின் நிறைவேறாத  பல இலட்சியங்களில் ஒன்று.அரசிற்கு பெரிதாக வருமானம் தரக்கூடிய மதுவை மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மது விலக்கினை அமல் செய்யக் கூடிய அவ்வளவு நாகரீகமான உலகில் நாம் வாழவில்லை என உறுதியாக நம்புவோம்.தந்தை பெரியார் மதுவிலக்கினை மிகக் கடுமையாக எதிர்த்து இருக்கிறார் என்பது ஆச்சர்யகரமான தகவல். கடும் உழைப்பு  தரும் அசதியை போக்க மனிதன் மது அருந்துகிறான். கடும் உழைப்பினை மட்டும் மனிதன் மேல் திணித்து மதுவினை விலக்க நினைப்பது என்ன நியாயம் என தந்தை பெரியார் கேட்கிறார். இது குறித்து லும்பினி இணையத்தளத்தில் சுகுணா திவாகர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

சரி நாமும் மதுபானக் கடைக்கு திரும்புவோம். பெட்டிசன் மணியாக அசத்தியிருக்கும் கவிஞர் என்.டி.ராஜ்குமார் நடிப்பிற்கும்-இயல்பிற்கும் உள்ள மெல்லியக் கோட்டை அழிக்க முயல்கிறார். பாருக்குள் வரும் இராமன் –அனுமார் பெட்டிசன் மணியை பார்த்து பயப்படுவது கலகலப்பு ஊட்டுகிறது. இந்துத்துவாவின் புனித பிம்பங்களை சாதாரண மனித நிலையில் நிறுத்தி குலைத்துயிருப்பது ,சாதிப் பெருமை பேசுபவருக்கு எதிராக புயலென எழும் நகர சுத்தி தொழிலாளர்களின் கோபம் என காட்சிக்கு காட்சி பிம்பங்களை சிதைத்துப் போடுவதில் இயக்குனருக்கு வெற்றியே.இப்படத்தின் இயக்குனர் உலக சினிமா விரும்பியாம்.அரசாங்கத்தினையே கேள்வி கேட்கும் சாதாரண ’குடி’மகன்கள்.சிரிக்கிறோம்.பிறகு ஏண்டா சிரித்தோம் என நினைக்கிறோம்.
பல பாத்திரங்கள் மூலம் மதுபானக் கடையொன்றின் குணாதிசயத்தை  நிறுவி இருக்கிறார்  இயக்குனர் கமலக்கண்ணன். இதனால் சொல்ல வருவதென்ன என்று யோசித்தால் மதுபான கடை திரண்டிருக்கும் இச்சமூகத்தில் தான் நாமும் வாழ்கிறோம் நம்மை சிந்தனை வயப்படுத்துவது என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு சினிமா என்றால் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன என இயக்குனர் சிந்தித்திருப்பார் என எண்ண வேண்டியிருக்கிறது. இயக்குனர் தனது விகடன் பேட்டியில் சொல்கிறார் . இது ‘அண்டர்ஸ்டூட்’ படம் என்று.

சரிதான்.

பழக்கம் இருக்கிறதோ..இல்லையோ..
ஒரு முறை போய் வாருங்கள்.

மதுபானக்கடைக்கு..

-மணி செந்தில்

பெரியாரின் ‘பச்சைத் தமிழரும்’-தொடரும் தமிழ்த்தேசிய முழக்கங்களும்..

தாயக விடுதலைக்காக ஈழ மண்ணில் பெருக்கெடுத்த மண்ணின் மைந்தர்களின் செங்குருதிதான் தமிழர்களின் மற்றொரு தாய்நிலமான தமிழகத்திலும் தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைக் குரலை கூர்மைப்படுத்தி,செழுமைப்படுத்தி,வலுவேற்றியது. தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கும் மண்ணின் மைந்தர்களின் குரல் வரலாற்றில்  எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்து ஒலிக்கத்துவங்கி இருப்பதன் அரசியல் மிகவும் நுணுக்கமானது. தமிழர் என்ற உணர்வின் அரசியல் வெளியாக இதுவரை கருதப்பட்டு வந்த திராவிடம் முரண் செயல்பாடுகளால் தனது இறுதி காலத்தில் நிற்கிறது. அவரவர் அளவிற்கு திராவிடர் –தமிழர் என சிந்திக்க வைத்ததில் இம்மண்ணின் மைந்தர்களுக்காக புறப்பட்டு இருக்கின்ற புதிய அரசியலுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
எப்படிப்பட்ட மகத்தான தத்துவமும் ,கருத்தும்  உரிய தலைமைகளால் உறுதியாக்கப்படாவிட்டால் உருக்குலைந்து போகும் என்ற சரித்திர உண்மைக்கு சமீபத்திய சரியான எடுத்துக்காட்டு திராவிடம் .
திராவிடம் என்பது மொழியா என்றால் இல்லை.
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என நீளும் ஒரு மொழிக் குடும்பத்தின் பொதுப்பெயராகத்தான் நான் சூட்டினேன் என்கிறார் கால்டுவெல். நான் இனத்தால் திராவிடன்,மொழியால் தமிழன் என கதறும் திமுக தலைவர் கருணாநிதி கருத்துப்படி அது இனத்தினை குறிக்கும் சொல்லா என்றால் ஒரு இனத்திற்கான வரையறைகளான ஒரே மொழி, குறிப்பிட்ட நிலம், பொதுவான பொருளாதார வாழ்வு,பொது பண்பாட்டில் வெளிபடும் தாம் ஓரினம் என்ற உளவியல் என்பவைகளான எவையும் திராவிடத்திற்கு பொருந்தவில்லை. பிறகு திராவிடம் ஒரு நிலமா என ஆயும் போது வடவேங்கடம் தென்குமரியோடு தமிழன் எல்லை முடிந்து விட்டது எனில் திராவிட நிலம்  என்பது என்ன..? .மராத்தியும்,குசராத்தும் கூட ஒரு காலத்தில் திராவிட நிலங்களாக கருதப்பட்டிருக்கிறது .1948 ஆம் ஆண்டில் திருவாரூர் மாநாட்டில் உரையாற்றிய தந்தை பெரியார் இனி திராவிடம் என்ற சொல் மண் சார்ந்ததாக இருக்க இயலாது என அறிவித்தார்.   பிறகு நிலமும்,இனமும்,ஒரு மொழியும் இல்லாத திராவிடம் கடந்த 60 ஆண்டுகளாக ஒரு பெரு நிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. இன்னமும் ஆள துடிக்கிறது எனில் இந்த மண்ணின் பூர்வீக குடிகளான  தமிழர் என்கிற தேசிய இனத்தின் உரிமைக்குரல் எப்படி தவறாகும் .?
 இன்றைய திராவிட கருத்தியல்களுக்கு மூல அமைப்பாக தோன்றிய நீதிகட்சியின் தோற்றம் 1916 –ல் நடந்தது. பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக துவங்கிய அதன் துவக்கம் ‘திராவிடம்’ என்ற பெயரில் துவங்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 1916 துவங்கி அதன் இறுதியான காலம் 1936 வரையிலான 17 ஆண்டுக் காலத்தில் தமிழர் எவரும் அக்கட்சியில் தலைவர் ஆனதில்லை.  அது மட்டுமில்லாமல் பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக கருதப்பட்ட நீதிக்கட்சியின் ஆதரவோடு என்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் என்ற பார்ப்பனர் கூட அமைச்சராக முடிந்தது.
 ஆனால் அக்கட்சியில் இருந்த இரட்டைமலை சீனிவாசன்,திரு.வி.ஐ.முனுசாமி பிள்ளை,திரு.தர்மலிங்கம் பிள்ளை , திரு என்.சிவராஜ் போன்ற  படித்த பட்டதாரி தமிழர்கள் அமைச்சராக கூட ஆகமுடியவில்லை. தமிழனாக, தாழ்த்தப்பட்டவனாக பிறந்ததுதான்  இவர்களின் மாபெரும் தகுதி குறைவு.  1923 முதல் 1933 வரை சென்னை சட்டமன்றத்திற்கு சென்னை தொகுதிக்கு உரிய 4 பொது இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 3 பேர் தமிழர் அல்லதோர். 1 தமிழர். மேலும் நீதிக்கட்சி ஆண்ட 16 ஆண்டு காலத்தில்  சென்னை மாநகராட்சிக்கு தெலுங்கரே கமிசனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1916-ல் நீதிக்கட்சி பிறந்த போது  தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் துவங்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஜஸ்டீஸ் எனவும், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா எனவும் துவங்கப்பட்ட அந்த நாளிதழ் தமிழில் மட்டும் ‘திராவிடன் ‘ என்ற பெயரில் வெளிவந்தது மிகவும் கவனிக்கத்தக்கது.
திராவிடம் பார்ப்பனர்களுக்கு எதிரான ஒரு குறியீட்டு சொல். தமிழன் என்றால் பார்ப்பான் புகுந்து விடுவான்.திராவிடன் என்றால் பார்ப்பனுக்கு இடமில்லை என்பதான திராவிட சிந்தனை மரபு எங்கிருந்து துவங்கியது என நாம் ஆராயும் போது  தென்னிந்தியாவில் பிறந்த திருஞான சம்பந்தரை ’திராவிட சிசு’ என  அழைப்பு ஆதிசங்கரனின் விளிப்பு    நமக்கு தெளிவாக அறிவுறுத்துவது என்னவென்றால்  20 ஆம் நூற்றாண்டின் அரசியல் மற்றும் சமூகத்தேவைகளே பார்ப்பனரல்லாதோரை ஒரு குடையின் கீழ் திரட்டும் அரசியல் தந்திரோபயமான (political tactics)  சொல் ‘திராவிடம்’ என்பதுதான் .
எதையும் இவரிடம் இருந்துதான் துவங்க வேண்டி இருக்கிறது. இதையும் இவரிடமிருந்துதான் துவங்கி இருக்கிறோம். தமிழ்த் தேசிய உணர்விற்கு எதிராக பெரியார் நிறுத்தும் அரசியல் கண்டிப்பாக முரண் தன்மை உடையது என்ற புரிதலில் தான் நாம் பெரியாரை அணுகுகிறோம்.
தமிழ் நாட்டினை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற உரத்தக்குரலை முதன் முதலில் அரசியல் தளத்தில் எழுப்பிய தந்தை பெரியாரை தமிழ்த்தேசிய உணர்வின் மூலவராக நாம் அறிகிறோம். தமிழ்நாடு தமிழருக்கே  என்ற குரலை தனது அரசியல் வாழ்க்கையின் துவக்க காலத்திலும், இறுதி காலத்திலும் தீர்க்கமாக முழங்கிவிட்டு போன அவரது தெளிவு  இன்று மாற்றார்கள் இந்த மண்ணை ஆள வேண்டும் என்ற துடிப்பை உள்ளுக்குள் உருவேற்றிக் கொண்டு உதட்டில் திராவிடம் முழங்கும் அறிஞர்களிடம் உண்டா என்பதை நாம் சற்று விரிவாக பார்ப்போம்.
‘1924 முதல் 1954 வரை ஒரு தமிழன் கூட முதன் மந்திரியாக வரமுடியவில்லை. முதன் முதலாகத் தமிழைத் தாய்மொழியாக கொண்ட தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்திருக்கிறார்”. (காமராசர் முதல்வரான போது தந்தை பெரியார் விடுதலையில் 3-12-19)
காமராசரை தந்தை பெரியார் ஆதரித்தது வரலாற்றின் ஏடுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது. காமராசரை தந்தை பெரியார் ஆதரித்து பேசிய பெரும்பாலான கூட்டங்களில் அவரை ‘பச்சைத் தமிழர்’ என அழைத்ததன் அரசியலை இப்போது உள்ள ’திராவிட பற்றாளர்கள்’ ஏற்பார்களா ? –இதில் பச்சை என்கிற சொல்லில் தான் தந்தை பெரியாரின் ஆன்ம விருப்பம் புதைந்து கிடக்கிறது. மிகவும் தூய இரத்த கலப்பில்லாத மண்ணின் மரபணு மைந்தனாக (purest)  காமராசரை தந்தை பெரியார் உருவகிக்கிறார். வெறும் தமிழர் என்று சொன்னால் போதாது.அதிலும் கறார் தன்மை கொண்டு,இன்னமும் வடிகட்டிய வார்த்தையான ‘பச்சை தமிழராக’காமராசரை தந்தை பெரியார் அடையாளம் காட்டியது எதற்காக.? தமிழ்நாட்டினை திராவிடன் என்ற பெயரால் தெலுங்கனும்,கன்னடனும்,மலையாளியும், ஆள்வதற்காகவா..?- ஒரு தலைவனை முன்னிருத்தும் போது தந்தை பெரியாருக்கு இருந்த புரிதல்,அக்கறை ஏன் இந்த திராவிடவியாளர்களுக்கு இல்லை ?
தமிழன் என்று பேசினால் தந்தைபெரியாரை எதிராக நிறுத்துவதென்பது அவரது சிந்தனைகளுக்கு திராவிட பற்றாளர்கள் செய்கிற துரோகம்.
 ஒரு திராவிட இயக்கத்திற்கு கன்னடத்து ஆரிய தலைமை வாய்த்தது பற்றியோ,பெரியாரின் பள்ளியில் பயின்று சாய்பாபாவின் பெருந்தொண்டராக மாறிப் போன மஞ்சள் துண்டு போர்த்தி ,குடும்ப உறுப்பினர்களின் சோதிட ஆலோசனைகளின் பேரில் செயல்படும்  கருணாநிதி தலைமை தாங்குவது பற்றியோ, ஒரு தனியார் நிறுவனமாக  திக வை மாற்றிய கார்ப்பரேட் முதலாளி வீரமணி பற்றியோ , ஈசானி மூலையில் புறாக்களை பறக்க விட்டு,திருப்பதி கோவிலில் திராவிட கட்சி துவக்கப் பத்திரிக்கையை வைத்து துதித்த விஜயகாந்த் பற்றி திராவிட பற்றாளர்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை பெரியார் விசுவாசம் போற்றும் இம் மண்ணின் மைந்தர்கள் மேல் தான் இவர்களுக்கு இத்தனை காழ்ப்புணர்வு.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ,முல்லை பெரியாற்றிலும், காவேரி நதி நீரிலும்,பாலாற்றிலும், பிற ’திராவிட’ சகோதரர்களால் பாதிக்கப்பட்ட பிறகு,இந்த இத்துப் போன திராவிடத்தினை  மற்ற திராவிட இனங்கள் என இவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தெலுங்கர்களோ,மலையாளிகளோ,கன்னடர்களோ  ஒரு முடியளவு கூட மதிக்காத நிலை இருக்கும் போது தமிழனை மட்டும் திராவிடனாய் இருக்கச்சொல்லுவதன் அரசியல் இந்த மண்ணில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் பெற்றிருக்கின்ற, தொடர்ந்து பெற்று வருகின்ற சமூக,கலை,அரசியல்,பண்பாட்டு செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் தொலைந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக என்பது அப்பட்டமாக தெரிகிறது .
தமிழன் என்றால் பார்ப்பனர்கள் இடம்பெற்று விடுவார்கள் என்கிற அச்சம் தேவையற்றது மற்றுமல்ல, நம்மை நம் அடையாளத்தின் மூலம் அங்கீகாரம் பெறுவதை தடுக்கின்ற திராவிடத்தின் சூழ்ச்சி என நாம் தெளிவாக வேண்டும். இன்று எந்த தமிழ்த்தேசிய அமைப்பிலும் பார்ப்பனர்கள் இடம் பெறுவது இல்லை. .இது வரை இடம் பெற்றுதும் இல்லை. ஆனால் திராவிடக் கட்சிகளில் இன்று இடம் பெற்றுள்ள பார்ப்பனர்களின் பட்டியலை நாம் வெளியிட்டால் இப்பக்கங்கள் போதாது தமிழ் ,தமிழர் என்று பேசினால் இந்து ராம்,துக்ளக் சோ, மாலன்,சுப்பிரமணிய சாமி போன்ற அக்கிரகாரத்து அசல் மனிதர்களுக்கு இன்றும் வேப்பங்காயாகத்தான் கசக்கிறது என்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆரியப்படையை வென்ற நெடுஞ்செழியன் தமிழ் மண்ணில் உண்டு. ஆரிய படை வேண்டாம், ஆரியத்தின் சடையை தொட்ட திராவிட மன்னன் என்று எங்கேயும் குறிப்புகள் உண்டா.? 
1933 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய தந்தை பெரியாரின் முழக்கம் அப்போது ஆரிய பத்திரிக்கையான ஆனந்த விகடனுக்கு கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. ‘எலி வலை எலிகளுக்கே’ என எகத்தாளம் பேசவும் வைத்தது, ஆரியத்தின் தீவிர எதிரி தமிழ்த் தேசியமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய திராவிடம் எக்காலத்திலும் இல்லை.
திராவிடத்தின் இன்றைய இலக்கு தமிழ் மண்ணில் தமிழனைத் தவிர மற்றவர்களுக்கான அரசியல் இடத்தினை உறுதி செய்வது . இம் மண்ணின் மைந்தர்கள்  மண்ணை ஆள விரும்பும் இயல்பான விருப்புறுதியை குலைப்பது.
நான் பிறப்பால்,மொழியால்,இனத்தால்,பண்பாட்டால் தமிழன். நான் ஏன் திராவிடன் என அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டால் யாரிடமும் பதிலல்லை.  பார்ப்பனரல்லாதோருக்கான ஆரிய எதிர்ப்பு அரசியல் குறியீட்டுச் சொல்தான் திராவிடம் என்றால் இன்றைய திராவிடம் என்ற கருத்தியலின் அரசியல் வடிவங்கள் அதற்கு முற்றிலும் முரணானவை. நான் மொழியால் தமிழன்,இனத்தால் திராவிடன்,நாட்டால் இந்தியன் என குழப்பும் கருணாநிதி  1947க்கு முன் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்.? கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதுவதற்கு முன்னால் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்..? .
இந்தியம்,திராவிடம் என்ற இரண்டுமே தமிழ்த்தேசிய கருத்தியல்களுக்கு எதிரானவை. தமிழரின் தனித்த அடையாளங்களை, இறையாண்மையை மறுப்பவை. மேலும் இவைகள் தான் ஆரியத்தினை பாதுக்காக்கும் கவசங்களாய் இன்று செயல்படுபவை.ஈழத்தின் அரசியலில் சிங்களனின் ஆதிக்கத்தினை எதிர்க்கும் திராவிட பற்றாளர்கள் இங்கே ..இந்த மண்ணில்  தமிழனின் அரசியலில் தெலுங்கனின், கன்னடனின் ஆதிக்கத்தினை ஏன் இங்கே எதிர்க்க மறுக்கிறார்கள் ?
திராவிடம் எனும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல்.இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. திராவிடம் என்பது கற்பனை –(பாவலரேறு பெருஞ்சித்திரனார். –வேண்டும் விடுதலை –பக்கம் எண் 294,295 )
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூட தனது இறுதிக்காலத்தில் தமிழ்த்தேசியராகத்தான் வாழ்ந்தார் என்பதும்,திராவிட நாடு என வருகின்ற இடத்தில் செந்தமிழ்நாடு என திருத்தினார் என்பதும் வரலாறு. எம் இனத்தின் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்  இந்த இனத்தினை தமிழ்த்தேசிய இனம் என்றுதான் வரையறுத்தாரே தவிர திராவிட இனம் என திருகி குழப்பவில்லை.
தமிழர்களில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரை ஆதி திராவிடர்கள் என அழைத்த திராவிட பற்றாளர்கள் ஆதி திராவிடர் என ஆந்திராவில் யாரையாவது அடையாளம் காட்ட இயலுமா ? தமிழ்நாட்டில்  தாழ்த்தப்பட்ட தமிழர்களின் நிலை கருதி 1890- துவங்கப்பட்ட பறையர் மகாஜன சபை 1910 ஆண்டு கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் தாக்கத்தினால் ‘ஆதி திராவிடர் மகாஜன சபை’ என பெயர் மாற்றம் அடைந்தது. இந்த சபை 1918 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களை பறையர்-பஞ்சமர் என குறிக்கக் கூடாது, ஆதி திராவிடர் என குறிக்க வேண்டும் என மனு அளித்தது. ஆனால் தெலுங்கர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. தங்களை ஆதி ஆந்திரர் என அறிவிக்கவேண்டும் என போராடிய தெலுங்கர்கள் வென்றார்கள். தாழ்த்தப்பட்ட கன்னடர்களும் தங்களை ஆதி திராவிடர் என அழைக்கக்கூடாது என்றும் தங்களை ஆதி கன்னடர் என்றுதான் பதிய வேண்டும் எனவும் போராடி வென்றார்கள். 1922 –ல் சென்னை சட்டமன்றத்தில் நீதிக் கட்சி கொண்டுவந்த தீர்மானத்தின் படி தமிழன் ஆதி கன்னடன் ஆதி கன்னடன் ஆனான். தெலுங்கன் ஆதி தெலுங்கன் ஆனான். ஆனால் தமிழனை மட்டும் ஆதி திராவிடன் ஆக்கி ‘திராவிட’ தொடர்பினை அறுந்து விடாமல் பாதுகாத்தது நீதிக்கட்சியில் ஆதிக்கம் பெற்ற தெலுங்கர்களின் திட்டமிட்ட சூழ்ச்சியே ஆகும்.  ஆந்திராவினைச் சேர்ந்த திரைப்பட நடிகர் என்.டி.ராமராவ் அந்த மண்ணுக்கான அரசியலை முன் வைத்து தெலுங்கு தேசம் துவங்கினார். ஆனால் நம் நாட்டு நடிகர் விசயகாந்த் திராவிடத்தில் தேசியத்தினை ஊற்றி முற்போக்கில் முழ்கினார். ஏனெனில் திராவிடம் என்று சொன்னால் தான் தமிழர் அல்லாத மாற்றார்கள் தமிழ் மண்ணில் அரசியல் பிழைக்க தகவாக இருக்க முடியும்.
தந்தை பெரியார் திராவிடம் என்ற கருத்தியலை சமூகத்தளத்தில் பயன்படுத்தியதன் நோக்கம் மிக வெளிப்படையானது. தீவிர பார்ப்பன எதிர்ப்பினை சமூக மாற்றத்திற்காக தன் கையில் எடுத்த தந்தை பெரியார் சமூகக் கொடுமைகளுக்கு ஆதாரமாக இந்து மதமும், அது பாதுகாக்குகிற பார்ப்பன மேலாண்மையும் இருப்பதை கண்டார். எனவே தான் இந்து மத எதிர்ப்பு,மற்றும் அது சார்ந்த கடவுள் மறுப்பு, அது வளர்த்து வந்த சமூக பண்பாட்டு காரணிகளை வேறோடு வீழ்த்துதல் ஆகியவற்றை தனது அரசியலாக அவர் கொண்டார். இந்து மத பண்பாட்டினை தாங்கிப் பிடிக்கும் மிகப்பெரிய ஆயுதங்களாக தமிழ்மொழியும், அதன் இலக்கியங்களும் இருப்பதை உணர்ந்தார். தமிழன் என்று சொன்னால் ஆரியன் வந்து புகுந்து விடுவான் என்கிற கவலையும் அவருக்கு இருந்தது. மேலும் அக்காலத்தின் பெரியார் சிந்தனை வெளிக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தினை முன் வைத்த மறைமலை அடிகளார்,ம.பொ.சி,திரு.வி.க போன்றோர் சமய ஆதரவாளர்களாக திகழ்ந்தது பெரியாரின் கவலையை அதிகரித்தது.ஆனால் பெரியாரின் கொள்கைகள் சமூகத்தளத்தில் வலுவாக வேரூன்றிய பின்னர் எழுந்த பாவாணர்,  பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதிதாசன்  போன்றோர் பெரியாரை உள்வாங்கி, அதை மேலும் செழுமைப்படுத்தி காலத்திற்கு ஏற்றாற் போல் தமிழ்த்தேசிய கருத்தியலை படைக்க முயன்றனர். பெரியாரின் அக விருப்பமான தமிழ்த்தேசிய கருத்தியலை தத்துவார்த்தமாக நிறுவியதில் அய்யா பழ.நெடுமாறன்,அய்யா.பெ.மணியரசன்,தோழர்.தியாகு,பேரா.சுப.வீ போன்றோர்க்கு அதிகம் பங்கு உண்டு. சித்தர் மரபில் துவங்கி ,தந்தை பெரியாரின் சிந்தனை மரபின் தொடர்ச்சியாக செழுமையடைந்து, ஈழம் கற்றுத்தந்த பாடங்களை உள்வாங்கி இன்று தமிழ்த்தேசிய கருத்தியல் தனக்கென அரசியல் வெளியையும் தகவமைக்க துவங்கியுள்ளது. தமிழ் மொழி கல்வி குறித்து ஆழமாக சிந்தித்த தந்தை பெரியாரை ஆங்கிலம் படிக்கச்சொல்லி தமிழை தவிர்க்கச்சொன்னார் பெரியார் என முழங்கும் திராவிட பற்றாளர்கள்
”ஆங்கிலம் வளர்ந்த மொழி-விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் வளர்ச்சி யடையாத பழங்கால மொழி என்பதும் எனது மதிப்பீடு .இதை நான் சொன்னதற்கான மிக முக்கியமான நோக்கம் தமிழ்மொழி ஆங்கிலம் அளவிற்கு விஞ்ஞான மொழியாக,பகுத்தறிவு மொழியாக ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்ழொழி மீது எனக்கு  தனி வெறுப்பில்லை. நான் பேசுவதும் ,எழுதுவதும் தமிழில் தான்”. (1-12-1970 விடுதலை தலையங்கம்) என்று தமிழ்மொழி மீது பெரியார் கொண்டிருக்கிற பற்றினை, மொழி வளரவேண்டும் என்கிற பரிதவிப்பினை உணர்வார்களா..?. அவருக்கு தமிழ் மொழி மீது இருந்த காத்திரம் அதன் சமயம் சார்ந்த தன்மை பொறுத்ததே தவிர கண்டிப்பாக  அதன் இனம் சார்ந்த  தன்மை பொறுத்தது இல்லை.
 தந்தை பெரியார் தனது இறுதி காலம் வரை முழங்கிய முழக்கம் தமிழ்நாடு தமிழருக்கே. அவரது இறுதி பிறந்த நாள் அறிக்கையிலும் (1973 செப்டம்பர் ) தனது உறுதியான ,இறுதியான விருப்பத்தினை உரக்கச் சொல்லி விட்டுத்தான் போனார். தந்தை பெரியார் நின்ற காலமும் ,களமும் இன்று வெகுவாக மாறி இருக்கின்றன.  வெகு சன அரசியல் விழிப்புணர்வு கூடியிருக்கிறது. ஈழத்தின் அழிவு உணர்வினையும்,விழிப்பினையும்,பாடங்களையும் போதித்து இருக்கிறது. எனவே ,  என்ன சொன்னாலும் அப்படியே ஏற்காதே என்றும் சிந்தித்து செயல்படு என்றும் அறைகூவிய தந்தை பெரியாரின் கருத்துக்களை மண்ணுக்கேற்ற மார்க்சியம் போல சூழலின் பாற்பட்டு, தற்காலத்திற்கேற்றாற் போல் தகவமைக்க வேண்டிய மாபெரும் கடமை அறிவுலகத்திற்கு உண்டு. தமிழ்த் தேசிய கருத்தியலை சமூக நீதி புரிதலின் வழி நின்று பெரியார் சிந்தனை மரபின் தொடர்ச்சியாய் வளர்த்து வார்த்தெடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை.
தந்தை பெரியார் பிறப்பால் கன்னடர். அதை மறைக்காமல்,மறக்காமல் வெளிப்படுத்திய உண்மையாளர். தமிழ்மண்ணில் தனக்கென எழுந்த அரசியல் ஆதரவை தன் பதவிக்காக பயன்படுத்தாமல்  ஒரு தமிழனை முன் நிறுத்திய தகைமையாளர். அர்ஜெண்டினா நாட்டில்பிறந்தாலும் கியூப விடுதலைக்கு பாடுபட்ட சே குவேரா போன்ற, உலகப்பந்தின் ஏதோ மூலையில் பிறந்தாலும் உலக மாந்தனின் பசி பற்றி சிந்தித்த மாமனிதர் மார்க்சைப் போல ஆளுமை மிக்க புரட்சியாளர். அவரை புறக்கணித்து தமிழ்த் தேசமோ,தமிழ்த் தேசியமோ இல்லை. மாறாக அவர் வகுத்த பாதையில் தான்  தமிழர்கள் இன்றளவும் தனக்கான தேசியக் கருத்தியலோடு நடக்கிறார்கள்.
ஆம் எம் தந்தை பெரியார்.
 கண்டிப்பாக கன்னடனுக்கோ,தெலுங்கனுக்கோ,மலையாளிகளுக்கோ அல்ல.  
 தொடர்புடைய நூல்கள்:
1.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் –கால்டுவெல்
2. திராவிடம் தமிழ்த்தேசியம்-பெ.மணியரசன்-பன்மை வெளி வெளியிடு
3. பெரியார் ஈவேரா சிந்தனைகள் –வே. ஆனைமுத்து.-பெரியார்-நாகம்மை கல்வி அறக்கட்டளை
4.தமிழகத்தில் பிற மொழியினர் –ம.பொ.சிவஞானம்- புலம் வெளியீடு
5.பெரியார்-தமிழ்-தமிழர்-தமிழ்நாடு –தொல்தமிழன்.-கரந்தை வெளியிடு
6. மார்க்சியம்,பெரியாரியம்,தேசியம்- எஸ்.வி.ராஜதுரை –விடியல் பதிப்பகம்
7. பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம் -சுப.வீரபாண்டியன் -தமிழ் முழக்கம் வெளியீடு
8.பெரியாரும் பெருந்தலைவரும்- கோபண்ணா- நவ இந்தியா பதிப்பகம்
 -மணி.செந்தில்

எம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.

அவருக்கு ஏதடா மரணம்..? 

நடு நிசியில் கரையும் கனவல்ல..
அவர்.

 எம் ஒவ்வொரு விடியலிலும் மேலெழும்பும்
 பறவையின் சிறகும் அவர்தான்..

சின்னஞ்சிறிய பறவைக்கான
சுதந்திர வெளி தந்த
 அந்த அதிகாலை வானமும் அவர்தான்..

அவர்தான்..
செங்கல்பட்டிலும்..
 நெய்வேலியிலும்..
இராமேஸ்வரத்திலும்..
நெல்லையிலும்..
இன்னும்..இன்னும்
தெருக்கள் தோறும்..
இங்கு உரத்தக் குரல்களில்
பொங்கும் முழக்கங்களாக…

அவர்தான்..
 இங்கு உயரும் கரங்களில்
 மிளிரும் துடிப்பாக…

 அவர்தான்..
கடற்கரை மணலில்
உறவுகளுக்காக ஒளிரும்
 தீபங்களாக..

அவர்தான்..
மூவர் உயிர்க் காக்க
மூண்டெழுந்த
 ஆவேச நெருப்பாக…

அவர்தான்..
முல்லைப் பெரியாற்று அணையின்
பலமாக பூத்திருக்கும்
 தமிழ் இன ஓர்மையாக..

 அவர்தான்..
கூடங்குளத்து அணு உலையை
அகற்ற சொல்லும் மக்கட் திரளாக..

அவர்தான்..
இங்கு… அனைத்துமாய்..

 சாதி திமிறுக்கு எதிராக..
 மத வெறிக்கு எதிராக…
ஒலிக்கும் குரல்களில்
 அவர்தான்
 ஒளிந்திருக்கிறார்..

 பிழைப்பினை அரசியலாக
வைத்து கிடப்போரின்
பித்தலாட்ட முகமூடி கிழிக்கும்
 எளியவனின் ஆவேசத்தில்
அவர்தான் மலர்ந்திருக்கிறார்..

 முத்துக்குமாராய்..
செங்கொடியாய்..
இன்னும்..இன்னும்…
அவர்தான் பரவுகிறார்..
பரப்புகிறார்..

அவர்தான்
இங்கு அனைத்துமாய்…

பிரளயமாய்…
பிரவாகமாய்…
பிரபாகரனாய்..

 உயிர்ப்பிற்கும்.. துளிர்ப்பிற்கும்..
என்றும் இல்லை மரணம்.

நாம் தமிழர் கட்சி ஆவணம் – காலத்தின் குரலும், திராவிடத்தின் அலறலும்



காலம் காலமாய் அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு தேசிய இனத்தின் தன்னெழுச்சி என்பது வரலாற்றின் போக்கில் நிகழ்கிற ஒரு சாதாரண நிகழ்வல்ல. தான் அடிமையாய் கிடக்கிறோம், நாம் வாழும் மண்ணைக் கூட ஆள முடியா அறியாமையில் அமிழ்ந்திருக்கிறோம் என்பது கூட தெரியாமல் வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டு தனக்குத் தானே வாய்க்கரிசி போட்டுக்கொண்ட வக்கற்ற  ஒரு இனத்தின் பிள்ளைகள் என்பதை விட தமிழர்களுக்கு வேறெந்த அடையாளமும் இல்லை. ஈழத்தில் நடந்த போரும்,துயரும், ஈந்த தியாகமும், படிப்பினைகளுமே  பன்னெடுங்காலமாய் கருத்தரங்குகளிலும், கதர்ச்சட்டை ஜிப்பாக்க்களிலும் தேங்கிக் கிடந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துரு தமிழர்த் தெருக்களில் மூண்டெழுந்த நெருப்பாக பரவத் துவங்கியதன் காரணமாக அமைந்தன எனலாம். அண்ணன் அப்துல் ரவூப், மாவீரன் முத்துக்குமார் தொடங்கி தங்கை செங்கொடி வரையிலான தியாக மரபு இனத்திற்கோர் இன்னல் விளைந்தால் இன்னுயிரும் இந்த மண்ணிற்கே என்ற இம்மண்ணின் மைந்தர்களின் ஆழ்ந்த உள் மன வேட்கையை உலகத்திற்கு அறிவித்தது.
ஈழம் தந்த வலிகளால் உந்தப்பட்ட தமிழ்நாட்டின் உணர்வு மிக்க இளைஞர்கள் எதனால் நாம் வீழ்ந்தோம் என எண்ணிப்பார்த்ததன் விளைவாக தோன்றியதுதான் நாம் தமிழர் என்கிற அரசியல் பேரியக்கம். அரசியல் அதிகாரம் எதுவுற்ற ,உதிரிச்சமூகமாய் மாறிபோன ஒரு தேசிய இன மக்களின் துயரங்களுக்கு ஒரே விடிவு சிறு சிறு குழுக்களாய் பிரிந்துக் கிடக்காமல் ஒரு மாபெரும் வெகுசன அரசியல் இயக்கமாய் முளைத்து கிளைத்து பரவி ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதுதான் என்பதை நன்கு உணர்ந்த பிறகே நாம் தமிழர் இயக்கம், நாம் தமிழர் கட்சியாக மாறியது. தேர்தலரசியலை புறக்கணிக்கும் அமைப்புகள் கூட தேர்தலரசியலால் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆட்சியாளர்களிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டியிருக்கிறது என்பதான உண்மை நிலையை உணர்ந்த பின்னர்தான் அண்ணல் அம்பேத்காரின் “ எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்கிற பொன்மொழிக்கான அர்த்தம் புரிந்தது.
இம்மண்ணில் பிறந்த, இம்மண்ணின் விழுமியங்களை பண்பாடாக ,வாழ்வியல் நெறியாக கொண்ட ,இம்மண்ணின் மொழியை பேசுகிற இம்மண்ணின் மக்கள் இம்மண்ணிற்கான ஆட்சி அதிகாரப்பாதையில் நகரத்துவங்குவது என்பது தமிழர் அரசியல் வரலாற்றில் மாபெரும் சரித்திர நிகழ்வு. இந்த நகர்வு இதுவரை இம்மண்ணை ஆட்சி செய்துக் கொண்டிருந்த, கொண்டிருக்கிற, எதிர்க்காலத்தில் ஆளத்துடிக்கிற பிற மொழியாளர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தினை கொடுக்கிறது  என்பதுதான்  பாய்ந்து வரும் எதிர்ப்புகளுக்கு பின்னால் பதுங்கி இருக்கிற மாபெரும் உண்மை. அதனால்தான் ஆயிரத்தெட்டு வசவுகளோடு இம்மண்ணின் மக்களின் தார்மீக உரிமையை இவர்களால் இவ்வளவு தரங்கெட்டு விமர்சிக்க முடிகிறது.
கடந்த மே 18 அன்று கோவையில் நடந்த நாம் தமிழர்கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் ஆவணம் இம்மண்ணில் இதுவரை திராவிடம் என்ற பெயரில் பிற மொழியாளர்கள் இம்மண்ணை நயவஞ்சகமாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் போக்கினை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.  இது வரை தமிழன் தனக்கான அரசியல் என எவற்றை கொண்டு இறுமாந்து இருந்தானோ, அவற்றை எல்லாம் ஆய்வு செய்து மறுபரீசிலனை செய்கிறது. தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு வெகு சன அரசியல் அமைப்பின் கொள்கை ஆவணம் எதிர்த்தரப்பினரால் எடுத்த எடுப்பிலேயே பலமான தாக்குதலுக்கு உள்ளாவதை நாங்கள் மகிழ்வாய் கவனிக்கிறோம். மனுவியம் (ஆரியம்)  என்ற பெயரில் பார்ப்பனீயம் இந்த மண்ணில் விளைவித்த சாதி வேறுபாடுகளையும், அந்த ஆரியத்தின் சக ஆற்றலான திராவிடம் சாதிகளை பாதுகாத்து வரும் சாதூர்யத்தினையும் விரிவாக விவரிக்கும் இந்த ஆவணத்தின் மிக முக்கிய பகுதிகளை நாம் பார்க்கலாம்.
உள்ளடக்கமாய் 10 பொருள்களை தன்னகத்தே கொண்டு விரியும் ஆவணத்தின் முதற் பொருளாய் விரிகிறது தோற்றுவாய். தமிழ்-தமிழர்-தொன்மை,பழந்தமிழ்நாடே இந்தியா,தமிழர் ஆளுகை முடிந்த காலம்,மனுநெறியர் வருகையும்,திராவிடமும்,தமிழர் வீழ்ச்சி என்ற பல்வேறு தலைப்புகளில் தமிழர் வரலாற்றினை துல்லியமாக ஆயும் ஆவணம் ”கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கால்நடையாக வந்து குடியேறிய மனுவாளர்கள் (ஆரிய பார்ப்பனர்கள்)நாகரிகச் செழுமை கொழுவிய சிந்துவெளி தமிழகத்தில் கால்வைத்த பின்பு ,தமிழரின் மொழியும், பண்பாடும் திரிவும்-சிதைவும் உறு பல்வேறு மொழிகளும் ,மொழியினங்களும் ஆயின. அவ்வாறு வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத்தமிழர்கள் தம் மொழியை மனுவாளர்களின் சமஸ்கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள் (தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு,மராட்டியம் முதலியன) அதனால் உண்டானவர்கள் திராவிடர்கள்.திராவிடம் என்பது கலப்பு கூட்டு இனத்தினை அடையாளபடுத்துமேயன்றி ,தனிப்பட்ட இனத்தினை குறிக்காது” (ப.எண் 9) என்பதை உரத்தக் குரலில் அறிவிக்கிறது. மேலும் அதே பக்கத்தில் “மனுவியத்தின் (ஆரியத்தின்) அரசியல் வடிவமான இந்தியத் தேசியமும், அதன் சார்பு ஆற்றலான திராவிடமும் மூலத்தமிழுக்கும் அது சார்ந்த தமிழ்த்தேசியத்திற்கும் வரலாற்று பகை ஆகும் “ என தெளிவாக அறிவிக்கிறது.   மேலும் அதே பக்கத்தில் தமிழர் வீழ்ச்சி என்ற பத்தியில்  “பண்டைத் தமிழகத்தில் நிலவிய தன்முனைப்பும், தன் மேலாளுமையும், உட்பகையும்,காட்டிக் கொடுப்பும் கொண்ட பண்பு நிலை தமிழர் ஒற்றுமையை குலைத்து மனு நெறியர் (ஆரியப் பார்ப்பனர் ) வால் நுழைக்க இடந் தந்தது.அம் மனுநெறியர் மதத்தாலும்,சாதியத்தாலும் பிறப்பு நிலையின் வழியாக பிரிக்கவும் ,உயர்வு –தாழ்வு அடிப்படையில் நிலையாக முரண்படச்செய்யவும் முடிந்தது”  என்று  எடுத்தியம்புகிறது. தனித்த தேசிய இனமான தமிழர்கள் எவ்வாறு பிற மொழியினருக்கு அடிமையாக நேர்ந்தது என விரிவாக ஆயும் அப்பத்தியில் அவ்வாறு அடிமையானதன் விளைவுகளும் ஆராயப்பட்டுள்ளன.
பக்கம் 11 –ல் தமிழர் வீழ்ச்சிக்குரிய துல்லியமான பின்புலம் ஆங்கிலேயர் வருகைக்கு முன் – பின் என இரு காலக்கட்டங்களை சார்ந்து பிரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் வருகைக்கு முன்  தமிழர்கள் அதாவது ”சென்னை மாநில மக்கள் மட்டுமே  தங்கள் சொந்த மொழி அல்லாத  தெலுங்கு மராட்டிய மன்னர்களாட்சியில் அடிமைப்பட்டனர். அம்மொழி போற்றும் மனு நெறிக்கும் அடிமைப்பட்டு உழன்றனர் “ என தெரிவிக்கும் ஆவணம் ஆங்கிலேயர் வருகைக்கு பின் இம்மண்ணில் வெகு காலம் அரசியல் ஆதிக்கம் செய்து வரும் தெலுங்கர்கள் இட ஒதுக்கீட்டு கொள்கையின் பயனாய் தமிழர்களை தாண்டி எவ்வாறு ஆதாயம் அடைந்தனர் என்பதை விரிவாக பேசுகிறது.
இது வரை வரலாற்றில் கருப்புத் திரை மூடி வைத்திருந்த பக்கங்களை பார்க்க நேரிடும் எவருக்கும் இது போன்ற தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கலாம். ஆனால் நிலவி வரும் பொய்யுரைகளை உடைத்து மேலெழும்பும் உண்மையின் ஒலி  எப்போதும் அதிர்ச்சிக் கரமானதுதான் நாம் உணரத்தான் வேண்டும்.
கடந்த வந்த பாதையை திரும்பிப் பார்க்காத யாரும் செல்லும் பாதையை துல்லியமாக கணிக்க இயலாது என்கிற வரலாற்று பேருண்மையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இவ் ஆவணத்தில்  தமிழர் கழகம் என்று தோன்ற இருந்த தமிழர்களுக்கான அரசியல் அமைப்பு எவ்வாறு திராவிடர் கழகம் என திரிந்து போனது  எவ்வாறு என விவரிக்கும் பத்திகள் இதுவரை நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை அசைத்து போடுகிறது. நம்பிக்கைகள்  எல்லாம் உண்மைகள் அல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல சொல்லி நீளும் அந்த ஆவணம்  தமிழ்த் தேசிய தலைவர்கள் மூன்று பேரை குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் ஆராய்கிறது. முதலாமவர் ம.பொ.சி. ” திராவிடத்தினை எதிர்த்து போராடிய ம.பொ.சி மனுவியத்தினை எதிர்த்து போராடும் தெளிவற்று போனார்” ( ப.எண்கள் 14-15) என்பதனை ஆவணம் சொல்லத் தயங்கவில்லை. மேலும் இரண்டாம் நபராக ஆவணம் ஆயும் சி.பா.ஆதித்தனார் திராவிட இயக்கம் மேடைகளில் முழங்கியதை நம்பி “திராவிடம் தமிழின நலனுக்கு உண்மையான தொண்டு செய்யும் என்றும், இந்தியத் தேசியத்தை விட்டுக் கொடுப்பிற்கு இடமின்றி தன்னலம் துறந்து போராடும் என தவறாக நம்பி”   (ப.எண் 16 ) நாம் தமிழர் இயக்கத்தை கலைத்து விட்டு திமுகவில் இணைந்தது   குறித்து எவ்வித தயக்கமுமின்றி எடுத்தியம்புகிறது.
நாம் தமிழர் கட்சி மூன்றாம் நபராக ஆயும் நபர்  தமிழர் தேசிய பெருந்தலைவர் .மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் .  பக்கம் எண் 17-ல் துவங்கும் அப்பத்தி தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய திராவிடம் “ நானே ஒரு அடிமை –இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி” என வினவி தந்தை செல்வாவிடம் தந்தை பெரியார் கை விரித்த கதையை வேதனையுடன் பகிர்ந்துள்ளது.  மேலும் அரசியல் திராவிடமான திமுக ,திக போன்ற  அரசியல் திராவிடக் கட்சிகள் நம்மினத்தினை அழித்த காங்கிரசுக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து சிங்களத்தோடு தமிழினத்தை அழித்து முடித்த சம்பவங்கள் வரலாற்று நிகழ்வுகள் . அதில்  திரிபோ,மழுப்பலோ இருந்தால் தான் தவறு. மாறாக உண்மையை ஊருக்கு சொல்வதில் தயக்கமில்லாமல் இருப்பதில்  தவறென்ன இருக்கிறது .?
காமாலை கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்று சொன்னால் திராவிடப் பற்றாளர்களுக்கு அது தந்தை பெரியார் மீதான எதிர்ப்பாக மாறி விடுகிறது . இவர்களால் திராவிடக் கட்சிகள் என்ற பெயரில் திமுகவையும், அதிமுகவையும், ஏன்…தேமுதிக வையும் கூட சகித்துக் கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக ,எதிர்க்கட்சியாக, எதிர் வரும் காலத்தில் ஆளத் துடிக்கும் கட்சிகளாக தமிழர் அல்லாதோரின் அமைப்புகள் தான் இருக்கின்றன என்ற உண்மை நிலை குறித்து  இவர்கள் சிந்திக்கக் கூட விரும்புவதில்லை. ஆனால் தமிழ்நாட்டை தமிழர் ஆள்வோம் என்று சொன்னால் அது பெரியாருக்கு எதிர்ப்பாம். வெங்காயம்.
நாம் தமிழர் கட்சி ஆவணம்  பக்கம் எண் 23-ல்  தமிழர் குமுகம் (சமூகம்) பற்றிய மதிப்பீடு என்ற விரிவான பத்தியில் தமிழ்ச்சமூகம் குறித்து கட்சி எவ்வாறு வரையறை செய்கிறது என்பது குறித்தும் இந்திய அரசு குறித்தும், திராவிடம்  குறித்தும்  விரிவான மதிப்பீட்டு  ஆய்வுரைகள் இடம் பெற்று இருக்கிறது. அவற்றின் கருத்துக்களை நாம் சுருங்கிய வடிவத்தில் காண்போம்.
அதன்படி
1.    தமிழ்ச்சமூகம் ஏகாதிபத்தியம், தாராளமய பொருளியல், அரை நிலவுடைமை,அரை முதலாளியம், பன்னாட்டு பெரு வணிக அதிகாரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சமூகமாய் இருக்கிறது.
2.    இவற்றின் மூலமாக  இந்தி பேசும் மக்களின் பேரின ஒடுக்குமுறைக்கும், வந்தேறி இனங்களான ஆரியர்- திராவிடர் போன்றவற்றின் ஒடுக்கு முறைக்கும் தமிழ்ச் சமூகம் உள்ளாகி இருக்கிறது.
3.    ஆரியத்தால் சமூகம் ,மொழி,பண்பாடு சிதைக்கப்பட்டு , வழிபாட்டு மொழி,வழக்கு மொழி,கல்வி மொழி ,பாராளுமன்ற மொழி போன்ற மொழி உரிமைகள் அற்ற சமூகமாய் தமிழ்ச் சமூகம் விளங்குகிறது.
4.    திராவிடத்தால் தமிழகத்தின்  உள்ளும் ,புறமும் தமிழ்நிலங்களை பறிக் கொடுத்த சமூகம் தமிழ்ச்சமூகம் ஆகும். மேலும் திராவிடத்தால் ஆற்று நீர் உரிமைகள், தமிழ்நாட்டு ஆட்சி உரிமை, போன்றவற்றை இழந்த சமூகம் தமிழ்ச்சமூகம் ஆகும்.மேலும் திராவிடத்தால் தமிழ்ச்சமூகம் தாழ்வு மனப்பான்மை உள்ள சமூகமாக , ஒருமை பண்பு இல்லாத சமூகமாக , அடிமைக் குணம் உடைய சமூகமாக மாறியுள்ளது.
5.    ஆங்கிலேயர் காலம் துவங்கி இன்று வரை ஏற்பட்டிருக்கிற கல்விப் பரவல், அரசியல் சமூக விழிப்புணர்ச்சி, அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன்,வைகுண்டர் முதலிய தலைவர்களின் போராட்டங்களினாலும்  , ஆரியத்தினை எதிர்த்து போராடிய அம்பேத்கார்,பெரியார் ஆகிய தலைவர்களின் போராட்டங்களினாலும் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான சாதீயக் கொடுமைகள் குறைந்துள்ளன. ஆனால் மாநில மக்களின் உரிமை, மகளீர் உரிமை போன்றவற்றை பற்றி கவலைப்படாத, முழுமையற்றதாக இருக்கும், பல வித பற்றாக்குறைகளுக்கு நடுவே அமல்படுத்தப்படும் சாதி வாரி இட ஒதுக்கீடு காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் சாதிகளுக்கு இடையே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முரண்கள் தோன்றுகின்றன. ஆளும் சாதியான மேல் சாதி பறித்த நிலங்களை மீட்கும் பணிகளையும், தமிழர் இனத்தினை ஒன்றிணைத்து சேர்த்து செய்யும் கட்டுமானப்பணிகளையும் இணைத்துக் கொள்ளாத வெறும் சாதி ஒழிப்புக் குரல்கள் பயனற்றவை. 
6.    தமிழ்நாட்டில் தமிழர் மீது ஆதிக்கம் செய்வதில் இம்மண்ணில் வந்து குடியேறிய ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் போட்டி நிலவுகிறது. ஆரிய மொழியான சமஸ்கிருதமும், அதன் பண்பாடுமே இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையானவை என ஆரியம் முன் மொழிகிறது. தமிழனுக்கென தனி பண்பாடுமில்லை,வரலாறுமில்லை –இருப்பதெல்லாம் ஆரியம் சார்ந்தவையே என அதை திராவிடம் வழி மொழிகிறது.
7.    ஆரியத்திற்கும்,திராவிடத்திற்கும் தமிழனை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டு அடிப்படையில் முரணில்லை . ஆரியத்திலிருந்து திராவிடம் காக்கும் எனவும்,திராவிடத்திலிருந்து ஆரியம் காக்கும் எனவும் பலர் நினைக்கின்றனர். இந்திய சூழல்,தமிழகச் சூழலில் இருக்கும் மிகப்பெரிய கோட்பாட்டு முரண் தமிழியத்திற்கும், தமிழியம் அல்லாதவைகளுமானது ஆகும்.
8.    நடப்புக்க்கால திராவிடம் தனது தலைமையை தக்கவைப்பதற்காக  தமிழர்களுக்கு மது ஊட்டி அவர்களுடைய அறிவையும்,விழிப்புணர்வையும் அழிக்கிறது. இலவசங்களை அளித்து தமிழர்களிடையே உழைக்க விரும்பா பண்பையும்,பிறரை சார்ந்திருக்கும் மனநோயையும் உண்டாக்கி வருகிறது .
இந்திய அரசு குறித்து மதிப்பீடு ( ஆவண பக்க எண் 27 )
1.     மாநில அதிகாரங்களை பறிக்கிறது . தாராளமயமான பொருளியல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆட்பட்ட தரகு முதலாளித்துவம், ஆரிய பார்ப்பனத் தன்மை சார்ந்த இந்தி பேரின ஆதிக்கம் நிலவுகிறது.
2.    இந்தி தேசிய இனம் ஆளும் தேசிய இனமாக,மற்ற தேசிய இனங்கள் அடிமை தேசிய இனங்களாகவும் இருக்கிறது.குறிப்பாக தமிழ்த்தேசிய இனத்தினை அழிக்கும் வேலையை இந்தி ஆரிய பார்ப்பனீய அரசு செய்கிறது.
3.    தமிழீழ சிக்கலில் தமிழர்களின் போராட்டத்தையோ,தமிழக அரசின் முயற்சிகளையும் இந்திய அரசு மதிக்காமல் இருக்கிறது. தமிழக மீனவர்களை படிப்படியாக அழித்து வருகிறது.தமிழக நீராதாரங்களை பிற மாநிலங்களுக்கு பறித்துக் கொடுத்து தமிழக விவசாயிகளை அழிக்கிறது. அணுமின்நிலையங்களை திறந்து தமிழர்களை அழிக்கத் திட்டமிடுகிறது.
இவ்வாறாக திராவிடத்தின் மீதும் ஒரு விரிவான ஆய்வினையும் ஆவணம் மேற்கொள்கிறது. தமிழ்ச்சமூகத்தினை அரசியல் பொருளாதார ஆய்வு செய்யும் ஆவணம் ஆரியத்திற்கும்,திராவிடத்திற்கும் உள்ள ஓர்மை பண்பு நலன்களை ஆய்வு செய்கிறது. தமிழ்த் தேசிய இன உருவாக்கம் ஏற்பட விடாமல் பாதுகாக்கும் திராவிடத்தின் கவனம் குறித்தும் ஆவணம் ஆய்வு செய்கிறது. “. தமிழ்நாட்டில் உள்ள திராவிடம்  தமிழர்களை தொடர்ந்து தனது ஆளுகையின் கீழ் ,கடந்த 500 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது.கொஞ்சமும் வெட்கமின்றி ,இந்த மக்களாட்சிக் காலத்திலும் தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க விரும்புகிறது. அதனால் தமிழ்நாட்டை திராவிட நாடாகவே நடைமுறைப்படுத்தி வருகிறது  .தமிழர்களுக்கு இன்னொரு எதிரியும்,மூல எதிரியுமான மனு நெறியர்கள் பற்றி தொடர்ந்து திராவிடம் பூச்சாண்டி காட்டி வருகிறது .அதே வேளை தமிழ்த் தேசிய கருத்தியலை மனதார ஏற்காததோடு ,தமிழ்த்தேசிய இன உருவாக்கம் உருவாகாமல் கவனமாக பார்த்து வருகிறது ”  (ப.எண் 29 ) என ஆவணம் விவரிக்கிறது.
ஈழத்தில் நமது உறவுகள் தாயக விடுதலைக்காக களத்திலே நின்ற போது, அதற்கான ஆதரவை நம்மால் வழங்க முடியாமல் போனதற்கு முழு முதற் காரணம் ஆட்சி அதிகாரம் தமிழர் கரங்களில் இல்லாதது தான் ஆகும். தமிழர் அல்லாத பிற மொழியாளர்கள் நம்மை ஆண்டுக் கொண்டிருக்கும் வேளையில் நமது குரல்கள் நம் தொண்டையிலேயே நசுக்கப்பட்ட அவலத்தினை தான் நாம் சந்திக்க நேர்ந்தது.  எந்த ஆட்சி அதிகாரம் இல்லாமல் நாம் வீழ்ந்து போனோமோ, அந்த ஆட்சி அதிகாரத்தினை நோக்கி தமிழ்த் தேசிய இனம் இன்று நகரத்துவங்கி உள்ளது. எம் மண்ணில் யார் வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் எம்மினம் சார்ந்த ஒருவர்தான் ஆளலாம் என்கிற ஒரு தேசிய இனத்தின் ஆன்ம விருப்பத்தினை ஆவணம் வெளிக்காட்டுகிறது.
கட்சியின் உடனடி இலக்காக  ஆவணம் “இந்தியாவில் அந்தந்த மாநிலத்தவரே அந்தந்த மாநிலங்களை ஆளும் நிலையில் ,தமிழ்நாட்டை தமிழர் ஆள முடியாத நிலை தொடர்ந்து நிலவுவதை மாற்றி, தமிழரை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவது “ என வரையறுத்து அறிவிக்கிறது ( ப.எண் 30 ).
அமைப்பின் வழி காட்டி மெய்ம்மம்  என்ற தலைப்பில் தனது வேரினை பார்த்து விரிவு செய்யும் பண்பாய் நாம் தமிழர் கட்சி தனது முன்னோடிகளை தனது ஆவணத்தில் நினைவுக்கூர்ந்து போற்றியுள்ளது.
தமிழர் தம் வாழ்வியல் விழுமியங்களை –தொல்காப்பியர்,வள்ளுவர்,பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் ,கட்சி தனது  மொழி மீட்சி கருத்தியலை மறைமலையடிகளார் ,பாவாணர்,பாவேந்தர் ஆகியோரிடமிருந்தும், விடுதலை கண்ணோட்டத்தினை  நாவலர் சோமசுந்தர பாரதியார்,அண்ணல் தங்கோ,சாலை இளந்திரையனார்,பெருஞ்சித்திரனார்,புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன்,தேசியத்தலைவர்.மேதகு.வே.பிரபாகரன் ஆகியோரிடமிருந்தும்,  வர்க்க பேதமற்ற கண்ணோட்டத்தினை  வள்ளுவம்,மார்க்சியம்,லெனினியம் ஆகியவற்றிலிருந்தும் ,பகுத்தறிவு கொள்கைகளையும் சாதி ஒழிப்பினையும்  வள்ளுவர்,தமிழ்ச்சித்தர்கள்,வள்ளலார்,அத்திவாக்கம் வெங்கடாச்சலம்,தந்தை பெரியார், குத்தூசி குருசாமி, வைகுண்டர்,அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன், சிவகங்கை இராமச்சந்திரன் ,அண்ணல் அம்பேத்கார் ஆகியோரிடமிருந்தும் கட்சி பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. (ப.எண் 31 )  .
கட்சி தனது தமிழ்த்தேசிய வழிகாட்டிகளாக நிலந்தருதிருவிற் பாண்டியன் துவங்கி தேசியத்தலைவர் பிரபாகரன் வரையிலான நீண்ட மரபினை போற்றும். சமுதாய வழிகாட்டிகளாக  வள்ளலார் ,தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கார் ,அயோத்திதாசர்,இரட்டைமலை சீனிவாசன்,  ஒண்டிவீரன்,அய்யன் காளி,இமானுவேல் சேகரன்,சி.பா ஆதித்தனார் ,காயிதே மில்லத், என நெடிய மரபினை கட்சி கருதும்  என விவரிக்கும் ஆவணம் தமிழறிஞர்கள்,போற்றுதலுக்குரிய பெருமக்கள் ஆகியோரையும் பட்டியலிடுகிறது
தமிழர் இன வரலாற்றில் நாம் தமிழரின் பணி காலத்தின் விளை பொருளாய் உருவாகி இருக்கிறது.தனித்த தேசிய இனமொன்றின் உரிமைக் குரலை சிதைக்கும் ,மாற்றும்,வலிமையை குறைக்கும் எதுவும் அந்த தேசிய இனத்திற்கு எதிரானதே என்ற புரிதலில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இம்மண்ணில் திராவிடர்களாக இருக்கும் பிறமொழியாளர்களையும் கட்சி “ உங்களை பிறமொழியாளர்கள் என்று சொல்லி உங்களை பிறராக பார்க்க நாங்கள் விரும்பவில்லை. உங்களின் மூலத் தாய்மொழியாம் தமிழுக்கு திரும்பிட, உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம். நீங்கள்,நாங்களென ஏன் இனி இருக்க வேண்டும் ? வாருங்கள் நாம் தமிழராய் ஒன்றாவோம்!உயர்வோம் ! “ (ப.எண் 50) என அழைக்கிறது.
தன்னை தமிழர் என அறிவித்துக் கொள்ள திராவிடர்களுக்கு என்ன தயக்கம் இருக்கிறதோ அதே தயக்கமும்,முரணும் தமிழர்களும் தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொள்வதில் இருக்கிறது. தமிழர்களை இழிவுப்படுத்திய முதன்மை சக்திகளாக ஆரியம் எனப்படும் பார்ப்பனீயத்தையும், அதனை சார்ந்த திராவிடத்தினையும் ஆவணம் அடையாளம் காட்டுகிறது. திராவிடத்தினை பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழியத்தினை  எக்காலத்திலும் ஆரியம் ஏற்றதில்லை.மாறாக நேர்க்கொண்டு எதிர்த்திருக்கிறது. ஆவணம் முழுக்க மனுவியல் என்கிற தூயத் தமிழ் சொற்றொடர் ஆரியம்,பார்ப்பனீயம் சொல்லாடல்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டிருகிறது. உடனே காமாலை கண்களுக்கு வந்து விட்டது காய்ச்சல். பார்ப்பான் என சொல்ல வில்லையாம். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஆரியத்தினை திட்டினால் கூட இவர்களுக்கு கோபம் வருகிறது.  பல இடங்களில் அடைப்புக் குறிகளுக்குள் ஆரிய பார்ப்பனர் என்பதை  அச்சிட்டும் கூட திராவிடர்களுக்கு ஓயாத புகைச்சல். ஆரியத்தின் சார்பு ஆற்றல் திராவிடம் என்ற உண்மையை உரத்து கூறி விட்ட பிறகு புகையாமல் என்ன செய்யும்? எதையோ நினைத்து உரலை குத்தியது போன்ற இக்கட்டு நிலை திராவிடர்களுக்கு.
கலைச்சொற்கள் விளக்கத்தில் அந்தணன்,பார்ப்பான்,ஆரியன் போன்ற சொற்களில் பார்ப்பானை புகழ்ந்து இருக்கிறது ஆவணம் என்ற கூப்பாடு வேறு. ஐயா..பொருள் என்பது வேறு. பொருள் விளைவிக்கும் செயல் என்பது வேறு. ஒரு சொல்லின் பொருள் அகராதிகளில்,இலக்கியங்களில் என்ன இருக்கிறதோ அதைத்தான் கலைச்சொற்கள் விளக்கத்தில் பயன்படுத்த முடியும்.
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான் (குறள் –நீத்தார் பெருமை)
பொருள் :அற நெறியில் ஆழ்ந்து நன்றொழுகி ,உயிர்களிடத்தில் செம்மையான அன்பும்,ஈரமும் கொண்டவர்களே அந்தணர்கள் என போற்றத்தக்கவர்கள் .
இதனைக் கண்ட திராவிடப் பற்றாளர்கள் உடனே திருவள்ளுவருக்கு பெரியார் எதிரி பட்டம் சூட்டிவிடப் போகிறார்கள். வள்ளுவர் ஜாக்கிரதை.
சமண மதத்தினை சாராதவர்களை அமணர்கள் என அழைப்பது வழக்கம். பிராமணன் என்பதற்கு பெரிய அமணன் என்று பொருள்பட பேரமணன் என அழைப்பது பொருள். உடனே பிராமணர்களை புகழ்கிறார்கள் என்ற கச்சேரி; ஐயா..,திராவிடர்களே! ,உங்கள் இயக்கத்திற்கு தான் ஆரிய தலைமை வாய்த்திருக்கிறது. எங்களுக்கு அல்லவே. அதே கலைச்சொல் பகுதியில் உள்ள மனுவியம் என்பதற்கான பொருளையும் வெளியிட்டு இருந்தால் நேர்மையாக இருந்திருக்கும் .
கட்சியின் உறுதிமொழிகளில் இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன் ,நாட்டின் இறையாண்மை ஒற்றுமை,ஒருமைப்பாடு  ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்த கட்சி உறுதியளிக்கிறது என்ற வரிகள்  திராவிடப் பற்றாளர்கள் ஆவணத்தின் மீது நிகழ்த்தும் விமர்சனமாக இருக்கிறது. இந்த நாட்டில்  பதியப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆவணங்களில்  பெரியார் திக உள்ளீட்ட எந்த கட்சியின் ஆவணம் நாங்கள் இந்திய இறைமையாண்மைக்கு எதிராக இருக்கிறோம் என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது.? துணிவிருந்தால் சொல்லுங்கள் .பிறகு எதிரே நில்லுங்கள். ஆனால் இந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார்  என 5 முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் நினைவிற் கொள்க . இந்திய தேசியத்திற்கு சீமான் பகை சக்தியா,நட்பு சக்தியா என்பதற்கு அவர் பேசும் ஒவ்வொரு கூட்டமும் சாட்சி. மற்றதெல்லாம் உங்கள் மனசாட்சி.
திராவிடத்தின் பெயரினால்  இத்தனை ஆண்டுகள் இந்த மண்ணை ஆண்ட,ஆளும் ஆளத்துடிக்கும் பிறமொழியாளர்களுக்கு எம் மீது கோபம் வருவது இயற்கை . அதே போல வாழ்வதற்கான போராட்ட அம்சமாக எம்மை நாங்கள் தகுதிப்படுத்தி கொள்ளலாக இந்த ஆவணம் வெளிப்படுகிறது. காலத்தின் குரலாய் ஒலிக்கும் இந்த ஆவணத்தினை நீர்த்து போன அலறல்களால் வீழ்த்த முடியாது.  ஒரு தேசிய இனத்தின் விடியலுக்கு கிழக்கு வீதிகளில் எழுதப்பட்ட சிவப்புப்புள்ளியாக நாம் தமிழர் கட்சியின் ஆவணம் மிளிர்கிறது. முதன் முதலாக எம் தேசிய இனத்தின் எழுதலுக்கான எத்தனிப்பு இது.  
”இருட்டின் வீதிகளில்
மின்னிட்டு விழும் முதல் தெறிப்பு
கண்களை கூசத்தான் செய்யும்…
 தொடர்ந்து எழும் எம் கதிர்களின் ஒளியில்
 சாத்தியமாகும் எம் தேசிய இனத்தின் விடுதலை…”
-மணி.செந்தில் 

Page 44 of 57

Powered by WordPress & Theme by Anders Norén