பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 1 of 13

முறிவின் சட்டகம்.

💔

முறிவு
பிரிவின்
பிரிதொரு
பொருள் அல்ல..

அது மற்றொன்றின்
தொடக்கமும் அல்ல.
கசியும்
கண்ணீர் துளியால்
வரையப்பட்ட
தொடர்ப் புள்ளி.

💔

முறிந்தவர்கள்
பிரிந்தவர்கள்
அல்லர்.
சேர்ந்திருக்க
முடியாதவர்கள்.

ஒவ்வொரு முறிவிற்கு
பின்னாலும்,
காரணங்களை தாண்டி
ஒரு நம்பிக்கையின்
கொலை,
ஒரு எளிய
நேர்மையின் வதை
எப்படியோ
நிகழ்ந்து விடுகிறது.

💔

முறிவு என்பது
பறக்கும் இறக்கையில்
சிறகடித்த சிறகின்
உதிர்வல்ல.
கலைந்த கூடொன்றின்
கலையாத நினைவு.

முறிவின் காயம்
சுமக்கிற
அந்தக் கண்களை
பாருங்கள்.
வறண்ட அந்த கண்கள்
இனி தன் வாழ்நாளெல்லாம்
வலி போர்த்தி அலையும்.

💔

முறிவு என்பது
தனிமையின் ராகம் அல்ல.
ஒரு சேர்ந்திசைப் பாடலில்
இணைய முடியாமல்
தனித்துப் பிரியும்
ஒரு புல்லாங்குழலின்
ஏக்கம்.

முறிவை
முன்மொழிபவர்கள்
எதிரே நிற்பவரின்
முகத்தை தொலைக்க நினைக்கிறார்கள்.
ஆனால்
காலத்தின் விதி
கொடூரமானது.
தன்முகம் பார்க்க
கண்ணாடி
பார்க்கும்போதெல்லாம்
எதை திரும்ப விரும்பாத வனாந்திரத்தில்
தொலைக்க
எண்ணினார்களோ,
அதே முகம்
அவர்கள் நிழலாய்
பின் தொடர்ந்து
முன் மலரும்.

💔

முறிவு என்பது
ஒரு பாவனை.
வாழ்வென்ற
நடனத்தில்
நமக்கு நாமே
பூட்டிக் கொள்ளும்
செயற்கைத் தோரணை.

முறிவு ஒரு பொதி சுமக்கும்
பாலைவனத்து தனிமை
ஒட்டகம் அல்ல.
அது
காயம்பட்ட குட்டியை
எப்போதும் இறக்கி விடாமல்
தன்
வயிற்றுப் பையிலேயே
வைத்து
சுமக்கும் கங்காரு‌.

💔

உண்மையில்
முறிவு என்கிற
ஒன்றே முடிவிலியாய்
உள்ளுக்குள்
உன்மத்தமாய்
தொடரப் போகின்ற
மாமழையின் சிறு தூறல்.

முறிவின் விசித்திரம்
யாதெனில்..
உடைந்த
கண்ணாடிகள்
ஒட்டுவதில்லை தான்.
ஆனால்
எப்படியும் ஒட்டிவிடும்
என்கிற
நம்பிக்கையில் தான்
பெரும்பாலான கண்ணாடிகள் உடைகின்றன .

💔

எல்லாவற்றையும்
ஒரு முறிவு எளிதாகப்
பிரித்து விடுகின்றது.
கண்ணீரின் தடம்
மறைத்து கன்னங்களில்
ஒப்பனைகள்
கூட்டப்படுகின்றன.

மதுவோ,
இசையோ,
ஒரு புத்தகமோ,
உடல் அலுக்கும் வரை
உடற்பயிற்சியோ,
அல்லது
நீண்ட தூர பயணமோ,
இதில் எதிலோ இழந்து
எதுவுமே இழக்கவில்லை
என காட்ட முயல்கிறார்கள்.

குழந்தைகளின்
நினைவுகளில் கூட
யாரோ ஒருவர்
மரணித்து
விடுகிறார்கள்.

கூடுதலாக
தோட்டத்தில்
இருந்த ரோஜா
தொட்டிகளில்
எப்போதும் பூ பூக்காத
ரோஜா செடியை
வலி மிகுந்தோர்
எடுத்துச் செல்கிறார்கள்.

ஆனால் பார்த்தவுடன்
கால்களுக்கு அடியில்
குழையும்
நாய்க்குட்டியின்
தவிப்பு மிகுந்த
வாலாட்டத்தை தான்
யாராலும்
தடுக்க முடியவில்லை.

💔

மணி செந்தில்.

திருமதி கனிமொழி அவர்களுக்கு…

மதிப்பிற்குரிய மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு..

தாங்கள் புதுக்கோட்டை காவல் துறை கண்காணிப்பாளர் வந்திதா அவர்களுக்கு ஆதரவாக இட்ட பதிவினை X தளத்தில் பார்க்க நேர்ந்தது.‌ தவறான பதிவு யார் இட்டாலும் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். அதை யாரும் எதிர்க்கவில்லை.

அதே சமயத்தில் திருமதி வந்திதா அவர்களுக்கு எதிரான பதிவுகளை பார்த்து கண்டிக்கத் தோன்றிய உங்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும், எங்களது கட்சியின் பெண் நிர்வாகிகள் பற்றியும், எங்களது குடும்பத்தினர் பற்றியும் தாங்கள் சார்ந்து இருக்கிற திமுகவின் இணையதள ஆபாச அடியாட்களால் தினந்தோறும் நடத்தப்படுகிற ஆபாச வசவுகள் குறித்து ஒரு சகப் பெண்ணாக, சமூக அக்கறை கொண்ட நபராக, நீங்கள் ஏன் எதுவும் பேச மறுக்கிறீர்கள்..??

குற்றம் சாட்டப்பட்டவரை நீங்கள் கைது செய்யுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டவரை கண்ணை கட்டி வைத்து ஆபாச வசவுகள் பேசி, “உன்னை நான் கைது செய்து அழைத்து வந்து விட்டேன், உன் மனைவியோடு படுக்க உன் அண்ணன் போவானா.. “என்று நா கூசும் வார்த்தைகளில் கேட்டு காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொடூரமாக காயப்படுத்திய காவல்துறை மீது சமூக அக்கறை கொண்ட பெண்ணாக உங்களது அறச்சீற்றம் பாயாதா…?

ஒரே ஒரு நாள் உங்களது திமுக ஆபாச இணையதள அடியாட்கள் எங்கள் பதிவுகளில் வந்து பேசும் ஆபாச கூச்சல்களை சற்றே படித்துப் பாருங்கள். மனநோயாளியால் கூட உளர முடியாத வக்கிர கூச்சல்களை படிக்க முடியாமல் உங்களது விழி தாழ்ந்து போகும். இது பற்றி சமூக அக்கறைக் கொண்ட பெண்ணாக நீங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன..?

எங்கள் மீது ஆபாச வசவுகள் ஏசிப் பேசும் திமுக ஆதரவு இணையதள ஆபாச அடியாட்கள் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மனுக்கள் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் உங்களது ஆளுங்கட்சி என்பதால் எங்களது மனுக்கள் நடவடிக்கை எடுக்காமல் நிராகரிக்கப்படுகின்றன. ஒரு சமூக அக்கறை கொண்ட பெண்ணாக இதுகுறித்து உங்களது கருத்து என்ன..??

வெற்றிகொண்டான், நன்னிலம் நடராசன், தீப்பொறி ஆறுமுகம், எனத் தொடங்கி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வரை நீண்டு இருக்கின்ற பெண்களைக் குறித்து பொதுக்கூட்ட மேடைகளில் ஆபாசமாக பேசுகிற திமுகவின் பேச்சாளர்களை எப்போது ஒரு சகப் பெண்ணாகவும், சமூக அக்கறை கொண்ட பெண்ணாகவும் தடுத்து நிறுத்த போகிறீர்கள்..??

பெண்கள் எந்தத் துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அவர்கள் சார்ந்த ஆணை செய்யும் வண்ணம் அந்தப் பெண்களை ஆபாசமாக இழிவு படுத்துவது தவறு என்று பதிவிடும் நீங்கள் , திமுகவிற்கு எதிராக அரசியல் நிலைப்பாடு கொண்ட எங்களை எதிர்ப்பதற்காக , எவ்வித அரசியல் பங்கேற்பும் இல்லாத எங்கள் குடும்பத்து பெண்களை, எங்கள் குழந்தைகளை ஆபாசமாக பேசுகின்ற உங்கள் திமுகவின் இணையதள ஆபாச வசவு அடியாட்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்..??

நீங்கள் உங்களை சமூக அக்கறை உள்ள ஒரு பெண்ணாக வெளிப்படுத்தி கொண்டமைக்கு மகிழ்ச்சி. ஒரு சமூக அக்கறை உள்ள ஒரு பெண்ணுக்கு இலக்கணமாக இருக்க வேண்டிய உண்மையான மனசாட்சி, நேர்மையான அற உணர்வு ஆகியவை உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், நீங்கள் நேர்மையான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கும் பட்சத்தில், உங்களது திமுக இணையதள ஆபாச அடியாட்கள் நடத்தும் படிக்கவே முடியாத வசவு பதிவுகளை உரிய ஆதாரங்களோடு, தேதி வாரியாக உங்களிடத்தில் நாங்கள் அளிக்க தயாராக இருக்கிறோம். இது சம்பந்தமான வெளிப்படையான மிகுந்த ஆரோக்கியமான உணர்வோடு மக்கள் முன்னே ஒரு பொது விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தவறு என்று எங்கள் பக்கத்தில் இருந்தால் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் எங்களிடையே வலியுறுத்துவது போல, நாங்கள் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். நீங்கள் தயாராக இருக்கிறீர்களா..?? உங்களது இணையதள ஆபாச அடியாள் கூட்டத்தை நீங்கள் திருத்துவீர்களா..?? ஆதாரங்களை அனுப்பலாமா…??

பொது விவாதத்திற்கு உங்களோடு விவாதிக்க, சமூக அக்கறை கொண்ட சக பெண்களாக, எங்களது சகோதரிகளை அனுப்பி வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மற்றபடி உங்களது அறச்சீற்றம், ஒட்டுமொத்த சமூக அக்கறைக்கானது அல்ல, சக எளிய பெண்களுக்கானது அல்ல, அது அதிகாரம் கொண்ட, உயர்ந்த கல்வி, மிகுப் பொருளாதாரம் கொண்ட, உங்களது ஆதரவு நிலைப்பாடு கொண்ட பெண்களுக்கானது மட்டும்தான் என்றால்..

அது அறச்சீற்றமோ, சமூக அக்கறையோ அல்ல என்பதும், பொய்மை அரசியலுக்கான வெற்று வார்த்தைகள்.

நன்றி.

வழக்கறிஞர் மணி செந்தில்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

@KanimozhiDMK

திரள்நிதி என்பது தவறா..??

ஜனநாயக நடைமுறையில் மக்களின் பங்கேற்பு என்பது முக்கிய அம்சம். மக்களிடமிருந்து நன்கொடை பெறுவது என்பதும், திரள் நிதி கேட்டுப் பெறுவது என்பதும் ஜனநாயக விழுமியங்களில் மிக முக்கியமானது. இடதுசாரி அமைப்புகளில்” லெவி” என்று சொல்லப்படக்கூடிய கட்சி உறுப்பினர் சந்தா கட்டாயமான ஒன்று. அதே போல் மக்களிடம் திரள்நிதி வசூலிப்பது என்பது இடதுசாரிகள் மட்டுமல்ல, திராவிட கட்சிகளின் தொடக்க வரலாற்றிலும் நிகழ்ந்த மிக முக்கியமான அரசியல் நடவடிக்கை. திராவிடக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு ஊழல் மற்றும் தன்னல அரசியலால் கோடான கோடி சம்பாதித்து விட்ட பிறகு , ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் வாரி வழங்க தயாராக இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்ட பிறகு மக்களிடம் திரள்நிதி வசூலிப்பதை நிறுத்தின. உலக அரசியல் கட்சிகளின் வரலாற்றினை , போராட்ட புரட்சிகர இயக்கங்களின் வரலாற்றினை படிக்கும் போது மக்களிடமிருந்தே நிதி பெறப்பட்ட “ஜனநாயக பங்கேற்பு” செய்திகளை அறியலாம்.

நாம் தமிழர் தொடக்க காலத்தில் இருந்து தனது அரசியல் நடவடிக்கைகளில் மக்களின் பங்கேற்பினை உறுதி செய்து கொண்டே வந்திருக்கிறது. இது மிகவும் இயல்பான ஒன்று.

ஆனால் இதையெல்லாம் ஒரு காவல்துறை அதிகாரி குறிப்பிட்டு எழுதி குறை கூற வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது என உண்மையிலேயே புரியவில்லை. இப்படி மக்களிடம் திரள்நிதி பெறுவது என்பது பிச்சை எடுப்பது என்றெல்லாம் வரம்பு மீறி பேசுவது ஒரு அரசு சம்பளத்தை வாங்குகிற ஒரு காவல்துறை அதிகாரிக்கான தகுதி ஆகாது. மக்களிடம் அரசியல் நடவடிக்கைகளுக்காக நிதி பெறுவது என்பது ஒரு அரசியல் நடவடிக்கை. அதை இழிவாக பார்க்க என்ன இருக்கிறது..?

இந்தப் பிரச்சனையின் தொடக்கத்தில் இருந்து ஒன்றை நான் வலியுறுத்தி சொல்லி வருகிறேன். அதிகாரிகளுக்கென்று ஒரு வரம்பு இருக்கிறது. அதை அவர்கள் மீறும்போது அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்படும் முரண்கள்/ சண்டைகள் நிரந்தரமானதோ, தீர்க்கமானதோ அல்ல. நாளை ஒரு பொது விழாவில் சந்திக்கும் போது கைக்குலுக்கி விட்டு நட்பு பாராட்டி விட்டுப் போய் விடுவார்கள்.
ஆனால் அதிகாரிகளின் நிலை அவ்வாறு அல்ல. கட்சிகளை சார்ந்து அரசாங்கங்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அரசு அதன் அதிகாரிகள் நிலையானவர்கள். அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள்.அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் போல ஒரு கட்சிக்கு எதிர் நிலைப்பாடு எடுத்து எல்லாவற்றிற்கும் எதிர்வினை செய்து கொண்டு இருப்பது அரசு ஊழியர் செயல்பாட்டு விதிகளின்படியும், அரசு மரபுகள் படியும் மிகப் பிழையானவை.

குற்றம் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுத்து பரிகாரம் தேடிக்கொள்வதே சிறந்தது. அதை விடுத்து பதிவு போடுவதும், சிறிய இளைஞர்களை அழைத்து வந்து மிரட்டுவது போல பதிவு போடுவதும், அந்தப் பதிவினை பரப்பி உசுப்பேற்றும் ஒன்றுக்கும் ஆகாத உபிக்களின் வார்த்தைகளைக் கேட்டு பரவசம் அடைவதும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு இருக்கக் கூடாத மோசமான நிலைமை.

இந்தப் பிரச்சனை தொடங்கும் போது கைதுகள் நடைபெற்ற பிறகு, தொடக்கத்திலேயே மிகத் தெளிவாக நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை தனது அமைப்பு உறவுகளுக்காக வழிகாட்டு நெறிமுறை அடங்கிய ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அது ஒரு நேர்மறை நடவடிக்கை. தவறாக பதிவிடும் நபர்களை கட்டுப்படுத்த ஒரு கட்சி அமைப்பு எடுக்கின்ற செயல்பாடு. அதைப் புரிந்து கொண்டு விவாதத்தை நிறுத்தி இருந்தால் மோசமான சூழல் ஏற்பட்டிருக்காது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்கள், வழக்கினை சந்தித்தவர்கள் அதை சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொள்வார்கள். அதில் விவாதித்துக் கொள்ளவோ, வீர வசனம் பேசவோ, எள்ளி நகையாடவோ ஒன்றுமே இல்லை. வரம்பு மீறி மீண்டும் மீண்டும் செயல்படுவது என்பது இன்னும் மோசமான சூழலை ஏற்படுத்திக் கொண்டே தான் போகும். தவறு செய்தவர்களை கைது செய்யுங்கள். சட்டப்படி எதிர்கொள்ளுங்கள்.

அதைவிடுத்து மீண்டும், மீண்டும் பதிவு போட்டு விவாதமாக்கும் போக்கு , தினம்தோறும் அண்ணன் சீமான் அவர்களுக்கு பதில் சொல்லி, அல்லது அண்ணன் சீமான் அவர்களை பதில் சொல்ல நிர்பந்தங்களை ஏற்படுத்தி, பிரச்சனையை அப்படியே தொடர்ந்து வெப்பத்தில் வைக்கும் நிலை , என இவை எதுவுமே ஒரு காவல்துறை அதிகாரிக்கு தேவையற்ற நிலைமை.

அண்ணன் சீமான் சொன்னது போல “அவரவர் வேலையை அவரவர் பார்த்தால்” அனைத்தும் இங்கு நலம்.

நலமே நடக்கட்டும்.

🌑

அண்ணன் சீமானின் வரலாற்றுப் பேருரை..

25- 8 -2024 ஞாயிற்றுக்கிழமை மாலை செந்துறை பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி நடத்திய “சாதிவாரி கணக்கெடுப்பும், சமூக நீதியும்” என்ற தலைப்பிலான கூட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் பேசிய பேச்சு என்பது மிக மிக முக்கியமானது.

முதலில் சாதி என்கின்ற மனநோய் சமூகத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது..? சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன.. சாதி மறுப்பு பேசும் தமிழ் தேசியர்கள் எதனால் சாதி வாரி கணக்கெடுப்பு கோருகிறார்கள் என்பதற்கான விளக்கம்.. சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழக அரசின் துரோகங்கள்.. மண்டல் கமிஷன் பரிந்துரை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஐயா வே ஆனைமுத்து அவர்கள் செய்த முயற்சிகள்.. படையாட்சிகளும் பறையர்களும் சாதி கடந்து தமிழர்களாக இணைய வேண்டிய தேவை.. அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும்.. சாதிய உணர்ச்சி எவ்வாறு சாகடிக்கப்பட வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் நிகழும் வஞ்சகங்கள், என பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய அண்ணன் சீமான் அவர்களது உரை ஆதாரங்களுடன் நிகழ்த்தப்பட்ட ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஆய்வுக்கு நிகரான கட்டமைக்கப்பட்ட வரலாற்று பேருரை.

குறிப்பாக இசைஞானி இளையராஜாவை பற்றி, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பற்றி, இந்திய குடியரசுத் தலைவர் திரோபதி முர்மு பற்றி, அவர்கள் சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்ட கொடுமை பற்றி எரியும் நெருப்பின் மொழியோடு அவர் நிகழ்த்திய பேருரை உலகத் தரமானது.

இத்தனைக்கும் அந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை அப்படியே கட்டிப்போட்ட சுவாரசியமான மொழி நடையில் , சித்தர் பாடல்கள், அவ்வையார் பாடல்கள், பாரதியார் கவிதைகள், திருக்குறள் என பல இலக்கிய மேற் காட்டல்களோடு அமைந்த மிகச்சிறந்த உரை.

நிறைய செய்திகள். நிறைய தரவுகள். பேச்சாற்றலின் பேரழகும், உணர்ச்சி கொந்தளிப்பின் தாண்டவமும் நிறைந்த அந்த உரை நூலாக்கப்பட வேண்டிய முக்கியமான ஆவணம்.

சமகாலத்தில் அண்ணன் சீமான் போல் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு, அது தொடர்பாக ஆய்வு செய்து தரவுகளோடு, வெகுஜன அரசியல் மேடையில் மக்களை கலைய விடாமல் நிறைய செய்திகளோடு மிகுந்த சுவாரசியமாக பேசும் ஆளுமைகள் யாரும் இல்லை.

அதற்கு அவர் எப்படி தயாராகிறார் என்பது தான் நாமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. இரவு பகல் பார்க்காமல் நிறைய படிக்கிறார். படித்ததை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்கிறார். நிகழ்கால செய்திகளோடு, இலக்கிய தொன்மை வரலாற்று தகவல்களோடு இணைப்பது குறித்து தெளிவான அடுக்குகளை மனதிற்குள் தயாரிக்கிறார்.

ஒரு கூட்டத்திற்கு தயாராவது என்பது, “ஒரு மாபெரும் வீரன் ஒரு போர்க்களத்திற்கு தயாராவது போல..” நேர்த்தியாக தயாராகி அவர் நிகழ்த்துகின்ற சொற்பொழிவு வேறு எந்த அரசியல் மேடையிலும் எந்தப் பேச்சாளராலும் நிகழ்த்தவே முடியாத அதி உச்ச ஆற்றலின் வடிவம்.

எனக்கு அருகில் அமர்ந்திருந்த என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் கிடம் கூட நான் சொன்னேன். “சாதிக்கு எதிராக அவர் பேசும் சொற்கள் அவர் ஆன்மாவிலிருந்து ஒலிப்பது. அது அடிமைப்படுத்தப்பட்ட ஒரு இனத்தின் ஆவேசம். அதனால்தான் அவரது பேச்சு அவ்வளவு நேர்மையாக, சீர்மை தன்மையோடு, கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் ஒரு தேர்ந்த இசைக் கலைஞன் நிகழ்த்துகிற இசை வடிவம் போல மேஜிக்கலாக இருக்கிறது…” என்றேன்.

பேச்சு கேட்டு வீட்டிற்கு வந்த பிறகு மீண்டும் ஒருமுறை அவரது பேச்சை கேட்டு பார்த்து சிலிர்த்துப் போனேன். நேரில் நான் கேட்டபோது எந்த அனுபவத்தை நான் அடைந்தேனோ, அதே அனுபவம் வீட்டில் நான் கேட்ட போதும் எனக்குள் நிகழ்ந்தது. அதுதான் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய உலக தரம் வாய்ந்த ஒரு சொற்பொழிவுக்கான இலக்கணம்.

ஓய்வு பெற்ற தமிழ்த்துறை பேராசிரியர் என் தந்தை முனைவர் ச.மணி அண்ணன் சீமான் அவர்களது இந்த பேச்சைக் கேட்டுவிட்டு ” இது போன்ற பேச்சை எல்லாம் நான் அண்ணா காலத்திற்குப் பிறகு இப்போது தான் கேட்கிறேன்” என்றார்.

நானெல்லாம் அண்ணா பேச்சை கேட்டதில்லை.

அண்ணன் பேச்சு கேட்கிறேன்.

நீங்களும் அந்த வரலாற்று பேருரையை கேட்க ‌‌…

❤️

fair criticism vs Defamation

இன்று நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர்கள் வழக்கறிஞர்கள் அண்ணன் சங்கர், அண்ணன் ஸ்ரீதர், மற்றும் வழக்கறிஞர் பாசறை உறவுகள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

குறிப்பாக அண்ணன் வழக்கறிஞர் ஸ்ரீதர் அவர்கள் Fair Criticism மற்றும் Defamation என்கிற இரண்டு இருக்குமான வேறுபாட்டை தெளிவான வழக்கறிஞர் மொழியில் எடுத்து வைத்தது மிகச் சிறப்பாக இருந்தது.

எப்போதும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை தாண்டி சுய விருப்பு வெறுப்புகளுக்காக செயல்பட்டு, ட்விட்டரில் பொது மனிதன் போல (like a Common Man) பதிவு போடுவது, கைது செய்யும் நபர்களை இரவு முழுக்க வைத்து அடிப்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடும்போது, உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எங்களது வழக்கறிஞர்கள் தெளிவாக பத்திரிகையாளர்கள் முன்பாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொது மனிதர்களோ, அரசியல்வாதிகளோ அல்லர். அவர்கள் உரிய சட்டத்தின் படி நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டியவர்கள். அரசு என்பது எப்போதும் நிலையானது. அரசாங்கம் என்பது மாறிக் கொள்வது. அரசாங்கத்தை வழிநடத்தும் அரசியல்வாதிகள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறி விடுவார்கள். ஆனால் நிர்வாக பொறுப்பில் இருக்கின்ற அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும் வரை நிர்வாகப் பொறுப்பில் தான் இருப்பார்கள். எனவே நிர்வாக பொறுப்பில் இருக்கின்ற அரசு அதிகாரிகளுக்கு இன்னமும் பொறுப்பும், கடமையும் அதிகம். ஆனால் இந்த மரபுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு அரசு அதிகாரிகள் கட்சி அரசியல்வாதிகள் போல செயல்பட தொடங்குவதில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

ஒரு காவல்துறை அதிகாரி சமூக வலைதளங்களில் தன்னை திட்டுகிறார்கள் என்ற அடிப்படையில் ஒரு புகார் கொடுத்தவுடன் 24 மணி நேரத்திற்குள்ளாக உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 2 இரண்டு பேரை உடனே கைது செய்து, இரண்டு பேரையும் காட்டுமிராண்டித்தனமாக அடித்து, அண்ணன் சீமான் உள்ளிட்ட பலர் மீது அடிப்படையற்ற வழக்கு பதிவு செய்து இருக்கின்ற காவல்துறை வேறு எதற்காவது இவ்வாறு செய்திருக்கிறதா என்கிற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

கடந்த மாதம் சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசால் கைது செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட இரண்டு அலைபேசியில் இருந்து எப்படி தனிப்பட்ட உரையாடல்கள் திமுக ஆதரவு இணையதள ஆட்களிடம் சட்டத்திற்கு புறம்பாக கசிய விடப்பட்டன என்பது பற்றி தமிழக காவல்துறை பதில் சொல்ல மறுக்கிறது. இதுகுறித்து நாங்கள் மாண்பமை மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். ஆனால் அதற்கு இதுவரை தமிழக காவல்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை.

சமூக வலைதளங்களில் திட்டுகிறார்கள் என வழக்கு போட ஆரம்பித்தால், ஒரு திமுக இணையதள ஆதரவாளர் கூட வழக்கு இல்லாமல் தப்பிக்க முடியாது. ஆனால் அவர்கள் மீது நாங்கள் வழக்கு கொடுத்தால் வழக்குப் பதிய மாட்டார்கள்.எங்களது கட்சியைப் பற்றி, எங்கள் கட்சியின் தலைமை அமைப்பாளர் அண்ணன் சீமானை பற்றி, எங்களது குடும்பத்தினரை பற்றி மிகவும் தரக்குறைவான ஆபாச வார்த்தைகளில், பொய்யான செய்திகளை அவதூறு பரப்ப வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தில் பரப்பி வருகிற திமுக ஆதரவு யூ டியூபர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் மீது தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்களைப் பற்றிய அவதூறுகள் குறித்த பல நூறு புகார் மனுக்கள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழக சைபர் கிரைம் பிரிவிடம் நாங்கள் அளித்தும் இதுவரை ஒரு நடவடிக்கை கூட, ஒரு விசாரணைக்கு ஒரு அழைப்பானை அனுப்பப்பட்டதாக கூட தகவல் கிடையாது.

காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினரை கொலை மிரட்டல் செய்து ஆபாசமாக எழுதுவது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல, அதை நாம் எந்த விதத்திலும் நியாயப்படுத்தவில்லை. அதற்கு உரிய சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.அதே சமயத்தில் எங்கள் குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாக பேசும் இணையதள திமுகவினர் மீது நாங்கள் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தமிழக காவல்துறை விளக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும்.

சட்டத்தின் அடிப்படையிலும், எங்கள் தலைவர் எங்கள் ஆன்மாவில் பதித்திருக்கிற அறத்தின் அடிப்படையிலும் எங்கள் மீது ஏவப்படும் எல்லாவித எதிர்ப்புகளையும் சந்திப்போம்.

சிறப்பாக செயல்பட்ட வழக்கறிஞர் பாசறை உறவுகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

🌑
வழக்கறிஞர் மணி செந்தில்.
நாம் தமிழர் கட்சி.

வெறுப்பலையும் காடு..

வெறுப்பலையும்
காடு.

🌑

உன்னை
வெறுப்பதிலும்
எனக்கு ஒரு வசதி
இருக்கிறது.

நான் என்னை
வெறுத்துக் கொள்கிறேன்.

வாழ்வின் கசப்பை
ஒரு மலையோரத்து
கடைத்தேநீரைப் போல
சுவைத்துக் குடிக்கிறேன்.

பார்வைகளில்
இழையோடும் வன்மத்தை
ஒரு மாய எதார்த்தவாத
ஓவியம் போல் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

சிறிய கைகுலுக்கலில்
ஆரத்தழுவலில்
தென்படும் சிறிய
ஒவ்வாமையை
இசைத்துளி போல
உணர்ந்துக் கொள்கிறேன்.

பாய்ந்து வரும் எதிர்ப்பின்
விஷ முனைகளில்
சகிப்பின் தேன் இருக்கிறதா
என்று சங்கடமாய் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இரவுகளை
உன்னை வெறுப்பதற்காக
நீட்டித்துக் கொள்கிறேன்.
தனிமையின் சாறு அள்ளி
வெறித்த என் விழிகளில்
ஊற்றிக் கொள்கிறேன்.

எங்கோ அலைதலின்
உச்சத்தில் நீரற்ற சுனை
ஒன்றை காணக் கண்டேன்.
யாருமற்ற பகலில்
நேசிப்பின் செதில்களோடு
அங்கே நீந்திப்பார்த்தேன்.

யாராவது
கருணையற்று
வீசும்
கொச்சை வசவுகளில்
ஒளிந்திருக்கும்
சுட்டெரிக்கும் வெயில்
துண்டுகளை என்
ஆன்மாவினுள் போர்த்தி
வைக்கிறேன்.

உன்னை
வெறுப்பதும்
நேசிப்பதும்
எனக்கு
சம தூரம் தான்.

இரண்டிலுமே
தொலைந்து
விடுகிறேன்.

தொலைவதில்தான்
நான்
கண்டெடுக்கப்படுகிறேன்.

உன்னை
வெறுப்பதிலும்
ஒரு வசதி இருக்கத்தான்
செய்கிறது.

❤️

இப்போதையதேவை.

🌑

உடைந்த
என் மனம்
பெருமழைக்
காலத்தில்
பசுங்கொடியேறிய
கோவில் சுவற்றோரம்
நடுநடுங்கி நிற்கும்
நனைந்த ஒரு நாய்க்குட்டி.

அதன் பரிதாபக்
கண்களுக்கு
பின்னால் இருக்கும்
சிராய்ப்புகள்
குறித்து ஆராயாதே.

நீ ஆழ் மனதில்
சேகரித்து வைத்திருக்கிற
இரக்கத்தின்
ரொட்டித் துண்டுகளை
அதை நோக்கி வீசாதே.

உலர்ந்த உன்
சொற்களைக் கொண்டு
அதன் துயரத்தை துவட்ட நினைக்காதே.

அதன்
காரணக் காரியங்களை
ஆராய
காரிருள் காயங்களின் மீது
உன் மெய்யறிவு
மின்மினிகளை வீசாதே.

வலி போக்கும்
வாஞ்சை நிறைந்த
உன் பாடல்.
கூடவே
உன் பச்சாதாபம்
தங்கத்துகள்களாய்
மிதக்கும்
கரிசனையின் மது.
துன்பம் வருட
காற்றிலலையும்
உன் தயாளத்தின்
இசைத் துண்டு.
பரவசமூட்டும்
உனதன்பின் சாரல்
அணிந்த ஒரு ரோஜா.

என
எதுவும் வேண்டாம்
அதற்கு.

இப்போதைய
தேவை.

எவ்வித விளக்கமும்
கோராத ஒரு
சிறிய மெளனம்.

பிறகு ..

கதகதப்பாய்
ஒரு பார்வை.

அவ்வளவே.

இந்த அளவில்
கருணை,
இந்த அளவில்
ஆறுதல்,
இந்த இரவுக்கு
போதுமானது.

❤️

சொற்களற்ற கவிதை.

❤️

நீ பேசிய நாட்களை விட
பேசாத நாட்கள் தான்
என்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றன.

❤️

இப்போதெல்லாம்
சொற்கள் தீர்ந்தவர்களாக
நீரற்ற ஒரு புராதன
கிணறு போல
நாம் மாறி இருக்கிறோம்.
நம் ஆழத்திலிருந்து
காதலின் வெளவால்கள்
பிறர் அறியா
அலை வரிசையில்
அலறிக் கொண்டு மேல் எழும்புகின்றன.

❤️

நம் சொற்கள்
அனைத்தும்
நாம் அலைந்த
இடங்களில்
உறங்கிய படுக்கைகளில்
திரிந்த சாலைகளில்
உதிர்ந்த மல்லிகைகளாய்
காய்ந்து கிடக்கின்றன.
அவற்றை யாரோ
கூட்டி அள்ளி
ஒரு ரோஜா செடியின்
கீழ் கொட்டிக்
கொண்டிருக்கிறார்கள்.
இப்போது அந்த செடியின் ரோஜாக்கள் வண்ணத்துப்பூச்சிகளோடு பேசிக்கொள்ள தொடங்கியிருக்கின்றன.

❤️

நிறைய
பேசியிருக்கிறோம்.
எதுவுமே
நினைவில்லை.
பேசாமல்
இருந்த பொழுதுகள்
மட்டும்
அப்படியே நினைவில்
நிற்கின்றன.

❤️

தனியே நின்று
கொண்டிருக்கிறோம்.
நீ பேசாமல் எதிரே நின்று கொண்டிருக்கிறாய்.
இதைவிட
மிகச் சிறந்த உரையாடல்
வேறு என்ன இருக்கிறது.?

❤️

உன்னிடம் பேச
ஏதுமில்லை என்கிறாய்.
மென்மையாய் சிரித்துக் கொள்கிறேன்.
நிறைய பேச இருக்கிறது
என்பதை உன்னைத் தவிர இவ்வளவு அழகாக யாரால் சொல்லிவிட முடியும்..?

❤️

இனி பேச மாட்டேன் என்று
இறுகிய குரலில்
முகம் சிவந்து சொல்கிறாய்.
மெதுவாய் உன் கைகளைப் பற்றுகிறேன்.
இனி ஏன் பேச வேண்டும்..??

❤️

ஒரு சொல்லுக்கும்
அடுத்த சொல்லுக்கும்
இடையே நீ விடுகின்ற
மௌன இடைவெளியில்
ஒரு கவிதையை நட்டு
விடுகிறேன்.
எப்போதும் அந்தியின்
நீலத்தை சுமந்து கொண்டு
ஒரு ஒற்றைப் பூ
அந்த கவிதையில்
பூத்து விடுகிறது.

❤️

சொற்களால் நிரப்பப்படும்
கவிதைகளை
நான் வெறுக்கிறேன்.
உனக்கும் எனக்கும்
இடையே நிகழும்
சொற்களற்ற தருணம்
கவிதை என உணர்கிறேன்.

❤️

இனி நிறைய நேரம்
பேசாமல் இரு.
நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நீயும் நானும்
பேசாமல் இருந்ததை
கவிதைகள் பேசட்டும்.

❤️

Modern Masters-எஸ் ராஜமவுலி-கற்பனா வாதத்தின் அபாயங்கள்.

புகழ்பெற்ற இயக்குனர் ராஜமவுலியை பற்றி “Modern Masters -S.Rajamouli “என்ற பெயரில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஒரு ஆவணப்படம் வந்திருக்கிறது . ஏறக்குறைய 1 1/4 மணி நேரம் ஓடக்கூடிய இந்த இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் திரைப்படங்கள், அவை உருவான விதம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை என பல செய்திகள் கிடைக்கின்றன.

ராஜமவுலியின் திரை உலகம் இந்திய சமூகம் நீண்ட காலமாக நம்பி வருகிற புராண- இதிகாச மரபுகளை சார்ந்தது. கற்பனை வாத, பெருமித இந்து தேசியவாத பின்புலங்களைக் கொண்டது. குறிப்பாக இராமாயணம், மகாபாரதம் என்கின்ற இரு பெரும் இதிகாசங்கள் தான் அவரது பிரம்மாண்ட படங்களுக்கு மூல காரணமாக இருந்திருக்கின்றன. தன்னை நாத்திகர் என வெளிப்படுத்திக் கொள்ளும் அவர் இந்திய சமூகத்தின் சாதிய அடுக்கு முறையின் நுட்பமான மூல வேரான சனாதனத் தர்மத்தை நம்புவது நகை முரண்.

புராதன இந்திய கலாச்சாரத்தின் நம்பகராக தன்னை வெளிப்படுத்துகிற ராஜமவுலி, அவசியம் அம்பேத்கரை படிக்க வேண்டும் என நான் பரிந்துரைப்பேன். எது இந்திய கலாச்சாரம் என்பதிலும் அது யாரால் முன்வைக்கப்படுகிறது என்பதிலும் மிக நீண்ட அரசியல் வரலாறு இங்கே இருக்கிறது. இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களாக கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இராமாயணம், மகாபாரதம் கூட இந்தப் பெரு நிலத்திற்கு பொதுவானவை அல்ல. ஒவ்வொரு நிலத்திற்கும், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித்தனி நம்பிக்கைகள், மெய்யியல் வரலாறுகள் என இங்கே தனித்துவங்களின் எண்ணிக்கை மிக அதிகமானவை. ஒட்டுமொத்த இந்திய தேசம் என கட்டமைக்கப்படும் பெருமித வாதத்தில் சிறு சிறு இனங்களுக்கான தனித்துவங்கள் அழிக்கப்பட்டு வருவதை நாம் கொந்தளிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் காலம் இது.

அண்ணல் அம்பேத்கர் போல ஒட்டுமொத்த இந்திய பெருநிலத்தினை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, சிந்தித்த ஆற்றல் மிக்க மனிதர் இங்கே வேறு யாரும் இல்லை. அவர் ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்ட இந்திய தேசத்தின் சமயப் பண்பாட்டு மூலக்கூறுகளைப் பற்றி மிக நுட்பமாக ஆய்வு செய்தார். எனவே மிகப் பிரம்மாண்டமாக கதை சொல்லும் ஒருவர் தான் சார்ந்திருக்கும் நிலத்தின் மக்கள் வரலாற்றையும், பண்பாடுகளுக்குப் பின்னால் இருக்கின்ற அரசியலையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் ராஜமவுலியிடம் நிறைய போதாமைகள் இருக்கின்றன. இந்தப் போதாமைகளோடு அவரது கலை அம்சம் வெளிப்படும் போது பிழையான வரலாறுகள் பதிவு செய்யப்படும் அபாயங்கள் தொடர்கின்றன.

குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக காட்டப்பட்ட பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்தின் வடிவமைப்பைப் பற்றி, அதன் அடிமை குணாதிசயம் பற்றியும் , மேல் சாதி ஆதிக்கத்தை எந்த நிபந்தனையும்/ எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் அளவற்ற விசுவாசம் பற்றியும் ஒரு விமர்சன கேள்வி இந்த ஆவணப்படத்தில் முன்வைக்கும் போது, ராஜமவுலியால் அதை நேரடியாக எதிர் கொள்ள முடியவில்லை. அதை மக்களின் பொதுவான உணர்ச்சி எனவும் அதுதான் மக்களை ஈர்க்கின்ற அம்சம் எனவும் சமரசப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
காலங்காலமாக தொடர்கிற எந்த அநீதியையும் கேள்வி கேட்காத கலைஞனின் ஆன்மா நேர்மையான படைப்புகளை எப்படி தரும் என்கிற கேள்விக்கு ராஜமவுலியிடம் பதில் இல்லை.

இந்த ஆவணப்படத்தில் புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ராஜமவுலி திரைப்படங்களைப் பற்றி பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ் கேமரூன் அவதார் வரிசை திரைப்படங்களில் உச்சபட்ச தொழில்நுட்ப சாத்தியங்களோடு தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஆதிக்கங்களுக்கான எதிர்ப்புணர்ச்சி, பூர்வ குடிகளின் எழுச்சி போன்றவை ராஜமவுலி திரைப்படங்களில் இல்லை என்பதும், ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் கூட வெளியான பூர்வ குடிகள் பற்றிய காட்சி அமைப்புகளும் மிக மிக மேலோட்டமானவை மட்டும் அல்ல, வணிக ரீதியிலான திரைப்படங்களுக்கான சமரசங்கள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அரசியல் உரையாடல்களைத் தாண்டி இந்த டாக்குமென்டரி ராஜமவுலி என்கின்ற தனி மனிதனின் வாழ்வியல் ஒழுங்குகளை பற்றி பேசுவது தான் இந்த ஆவணப்படத்தை நம்மை பார்க்க வைக்கிறது. பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு பின்னால் ஒரு தனி மனிதனின் கனவும் ஈடுபாடும் தீவிரமும் உழைப்பும் எந்த வகையில் காரணமாக அமைந்திருக்கின்றன என்பதை அறிய தரும் வகையில் இந்த ஆவணப்படம் முக்கியத்துவம் வாய்ந்தது.

🌑

வரலாற்றின் நிழல்.

நேற்று மன்னார்குடி மருத்துவர் ஐயா பாரதி செல்வன் அவர்கள் அழைத்திருந்தார். வாழ்ந்த வீட்டை இழந்த துயரத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரையினை படித்து விட்டு பல அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது சில முக்கியமான நூல்களைப் பற்றி எங்களது பேச்சு திசை திரும்பியது. “ஓநாய் குல சின்னம்” நூலைப் பற்றி பல கருத்துக்கள் பகிர்ந்து கொண்டவர் அலெக்ஸ் ஹேலியின் “வேர்கள்” பற்றி பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசத் தொடங்கினார். மேற்கண்ட இரண்டு புத்தகங்களையும் நானும் வாசித்து இருந்த காரணத்தினால் புத்தகங்களில் அவரவருக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எஸ் ராமகிருஷ்ணனின் மண்டியிடுங்கள் தந்தையே என்கிற புத்தகத்தைப் பற்றியும் பேசினோம்.சமகால இன விடுதலை அரசியலில் நூல் வாசிப்பின் அவசியத்தை நன்கு உணர்ந்த மாமனிதர் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்கள்.அப்போதுதான் டாக்டர் ராஜேந்திரன் ஐ ஏ எஸ் எழுதிய “1801” மற்றும் “காலாபாணி” புத்தகங்களைப் பற்றி எங்களது உரையாடல் திரும்பியது.

தமிழர் நிலத்தில் அன்னியர் ஆதிக்கத்திற்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சிவகங்கைச் சீமையில் மருதிருவர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் போர்தான் முதல் இந்திய சுதந்திரப் போர். தமிழ்நாட்டில் தமிழர் தலைமையில் நடைபெற்ற ஒரே காரணத்திற்காக அதற்கான வரலாற்று அங்கீகாரம் கூட இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் மாபெரும் துயரம். குறிப்பாக மருது பாண்டியர்களை பற்றி தமிழில் பல நூல்கள் வெளி வந்தாலும், இந்த இரட்டை நூல்கள் மிக மிக முக்கியமானவை. கதை சொல்லும் போக்கில் ஒரு நாவல் போல இந்த நூல்கள் அமைந்திருந்தாலும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அமைந்தவை. வீரத்திலும் விடுதலை உணர்ச்சியிலும் ஆற்றலிலும் மருது பாண்டியர்களுக்கு இணையான அரசர்கள் அன்றைய காலகட்டத்தில் யாருமில்லை. குறிப்பாக ஆங்கிலேயரிடம் விலை போகாது தாய் நாட்டு விடுதலைக்காக உழைக்க அழைத்த சின்னமருது வெளியிட்ட விடுதலை பிரகடனம் சூரியன் மறையாத ஆங்கிலேய பேரரசை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியது.கட்டபொம்மன் தூக்கிலிட்டப்பட்ட பிறகு ஊமைத்துரையை காப்பாற்றும் மருது பாண்டியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை 1801 மிக நுட்பமாக விவரிக்கிறது. குறிப்பாக பெரிய மருது உண்மையிலேயே எப்பேர்ப்பட்ட பெரிய மனிதராக வாழ்ந்து இருக்கிறார் என்பதை படிக்கும் போது மனம் நெகிழ்ந்து போய் விடுகிறது. ஆங்கிலம் உருது போன்ற மொழிகளில் சரளமாக பேசக்கூடிய பெரிய மருது தன் தம்பியின் மீது பேரன்பு கொண்ட பெருமகன். நிதானமும் ஆழ்ந்த சிந்தனையும் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்கின்ற கூர்மையான அறிவும் கொண்டு ஆங்கிலேயருடன் தேவையில்லாமல் பகை வேண்டாம் என யோசித்த பெரிய மருது தன் தம்பி சின்ன மருதுவின் தாயக விடுதலை கனவிற்காக தனது எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு போர்க்களத்தில் நின்றவர். சாதி உணர்ச்சியை பின்னுக்குத் தள்ளி தாய் மண்ணை நேசித்த மகத்தானவர்.குறிப்பாக சின்ன மருதுவை கை, கால் சங்கிலி இட்டு ஒரு இரும்புக் கூண்டுக்குள் அடைத்து தூக்கிலிட அழைத்து வரும் காட்சி படிக்கும்போதே மனம் பதறுகிறது. பெரிய மருதுவை அந்த நிலையிலும் பார்த்து வணங்கும் சின்ன மருதுவின் நிலையும் கைது செய்யப்பட்ட சிறு சிறு குழந்தைகளின் நிலைமைகளையும் பார்க்க சகிக்க முடியாமல் தன்னை முதலில் தூக்கில் போட வேண்டும் என ஆங்கிலேயரிடம் பெரிய மருது கேட்க அதையும் ஆங்கிலேயர்கள் நிராகரித்தார்கள். இந்த நூலின் தொடர்ச்சியாக சின்ன மருதுவின் இளைய மகன் சின்னச்சாமி , பெரிய மருதுவின் மருமகன் அரசர் உடையண்ண தேவர் உள்ளிட்ட 73 தமிழர்கள் நாடு கடத்தப்பட்ட கண்ணீர் கதை தான் காலாபாணி.

இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தான் ஐயா பாரதிச் செல்வன் அவர்கள் மக்களுக்காக போராடுகின்ற களங்களில் நாம் சமரசம் இன்றி நிற்பதற்கான உந்துதலை இது போன்ற புத்தகங்களில் இருந்து தான் பெறுகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அன்று இரவே அந்த புத்தகங்களை இணையம் வழி வாங்கப் போவதாகவும் சொன்னார். ஐயா மருத்துவர் பாரதிச் செல்வன் அவர்கள் மன்னை நகரத்தில் புகழ்பெற்ற மருத்துவர். இதய நோய் மருத்துவத்தில் தமிழ்நாடு அறிந்த பேரறிஞர். தன் மருத்துவமனையையே மிகப்பெரிய நூலகமாக , தமிழ்த்தாய் ஆலயமாக நடத்தி வருபவர்.

என் தந்தை மேனாள் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ச.மணி அவர்களும் ஐயா மருத்துவர் பாரதி செல்வன் அவர்களும் மன்னார்குடி பகுதியில் முதன் முதலாக அறிவொளி இயக்கத்தை தொடங்கி பலருக்கும் எழுத்தறிவு ஊட்டியவர்கள். என் தந்தையோடு சமூகப் பணியாற்றியவர் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் என்னோடு அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மன்னார்குடி பகுதியில் அவர் அலையாத இடமில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க தெருத்தெருவாய் அலைந்து, மதிய நேரங்களில் கிடைத்த மரத்தடியில், பள்ளிக்கூட வளாகங்களில் படுத்து ஓய்வெடுத்து விட்டு மீண்டும் தேர்தல் பணிக்காக அலைந்த அவரது தமிழ்த் தேசிய உணர்வு விவரிக்க முடியாத மாபெரும் கடல். கொடியேற்றும்போதெல்லாம் “தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மே*த*கு வாழ்க” என உணர்வெழுச்சியோடு அவர் முழுக்கமிடுவதை பார்க்கும் போது அரசியல் களத்தில் இயல்பாக நம்மைச் சூழும் சலிப்பு, இயலாமை, குறைகள், தான்மை போன்ற சகலவிதமான எதிர்மறை உணர்ச்சிகளும் இல்லாமல் போகும்.

வரலாற்றின் ஏடுகளில் மட்டுமே காணத்தக்க பெரிய மருது போன்ற பெரும் மனிதர்களை எவ்வாறு உணர்ந்தும்,அறிந்தும் கொள்வது என்றால்… அது மருத்துவர் ஐயா பாரதிச்செல்வன் போன்றவர்களை பார்க்கும்போதுதான். அந்த வகையில் அவரும் வரலாற்றின் நிழல்தான்.

Page 1 of 13

Powered by WordPress & Theme by Anders Norén