பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: அரசியல் Page 13 of 15

நெஞ்சினை பதற வைக்கும் போர்க் குற்ற காட்சிகள் – சிங்கள ராணுவ வீரரின் நேரடி சாட்சியம் -மீண்டும் சேனல் 4 வெளியிட்டது


இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4′ தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதையடுத்து போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்து வருகிறது.

இந் நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்களை `சேனல் 4′ மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப் லிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.

இதையடுத்து விடுதலைப்பு லிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தகவலை அப்போது இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போரின் இறுதி நாட்களில் நடந்த கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4′ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது.

தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி கற்பழித்தனர்.

அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.

ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை பார்த்தேன்.

இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.


தகவல் : தட்ஸ் தமிழ்.

கலங்கிய விழிகளுடன்
நிற்கிறேன்.
நிகழ்காலத்தில் என் நினைவு பிறழாமல் இருப்பதற்காக
கூசுகிறேன்.
மானுடனாய் இருந்திருந்தால் உண்மையில் மாண்டிருப்பேன்.
தமிழனாய் பிறந்திருப்பதால் தலைக் குனிந்தவாறே உடலை சுமக்கிறேன்.

– மணி.செந்தில்

இராஜீவ் கொலை – நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ-கீற்று நந்தன்


இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி’. மற்றொன்று, களம் வெளியீடான ‘விடுதலைக்கு விலங்கு (இந்தியாவின் முன்னாள் பிர‌தமர் இராசீவ் காந்தி கொலை வழக்கு வெளிவராத உண்மைகளும், துயர‌ங்களும்)’. இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துக்களுடனும், செய்திகளுடனும் வெளிவந்துள்ளன. முந்தைய புத்தகம், சி.பி.ஐ. ‘தயாரித்து’ வைத்த‌ புலனாய்வுக் குறிப்புகளின் அடிப்படையிலும், பிந்தைய புத்தகம் கொலை வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் இராபர்ட் பயஸின் சுயசரிதைக் குறிப்புகளின் பின்னணியிலும் இராஜீவ் காந்தி கொலை வழக்கை அணுகுகின்றது. சவுக்கு வெளியீடு, சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவினை லேசாக‌ கன்னத்தில் தட்டிவிட்டு, ‘வெல்டன் பாய்ஸ்’ என்று உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. இரண்டாவது புத்தகம், சிபிஐ புலனாய்வுக் குழுவின் அராஜகமான, மனிதத் தன்மையற்ற விசாரணை முறைகளின் மீது காரி உமிழ்கிறது.

ஒன்று, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உண்மைக் குற்றவாளிகள் என அவர்கள் மீது, வழமையான போலீஸ் ஜோடனைக் கதைகளை மிகவும் சுவாரசியமாக (எந்த வெட்கமும் இன்றி) விவரித்துச் செல்கிறது. மற்றொன்று, ஈழத்தில் பிறந்ததையன்றி ஒரு குற்றமும் செய்யாத – அந்த ஒரு காரணத்திற்காகவே ஒரு ஈழத் தமிழரும், அவரது சொந்தங்களும் அனுபவிக்கும் கடுந்துயரங்களை மிகுந்த வலியுடன் பதிவு செய்கிறது. முதல் புத்தகத்திற்கு சிபிஐ முன்னாள் இயக்குனர் விஜய்கரன் முன்னுரை எழுதியிருக்கிறார். களம் வெளியீட்டிற்கு பத்திரிக்கையாளர் அய்யநாதன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், மனித உரிமையாளர் பால் நியூமென் ஆகியோர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள்.

சவுக்கு வெளியீடு, இந்தியாவை வல்லரசாக்க வந்த மகத்தான தலைவனாக இராஜீவ் காந்தியை பெருமிதத்துடன் புகழ்கிறது. களம் வெளியீடு, இந்திய அமைதிப் படையை அனுப்பி, ஈழத்தில் இராஜீவ் காந்தி நடத்திய கொலைவெறியாட்டத்தைப் பதிவு செய்கிறது. ‘சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை’ என்பதை முதல் புத்தகமும், ‘நமக்கு எல்லாம் உயிரின் வாதை’ என்பதை இரண்டாவது புத்தகமும் பேசுகின்றன. ராஜீவ் சர்மா எழுதிய புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும், நமக்கு அடக்கமாட்டாத எரிச்சலும், எழுதியவனின் குரல்வளையை முறிக்கத் தூண்டும் கோபமும் ஏற்படுகிறது. இராபர்ட் பயஸின் தரப்பு நியாயத்தைப் பேசும் புத்தகத்தைப் புரட்டும்போது, அடக்க முடியாத கண்ணீரும், இத்தனை ஆண்டுகளாக அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்களே என்ற துயரமும் நெஞ்சை அழுத்திக் கொள்கிறது; உண்மையை வெளிக்கொண்டு வந்த வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர், மணி.செந்தில் இருவரது கைகளையும் நன்றியுடன் பற்றிக்கொள்ளத் தோன்றுகிறது.

முதலில் சவுக்கு புத்தகத்திலிருந்து இராபர்ட் பயஸ் பற்றிய சிபிஐ குறிப்புகள்…

“…நளினி மற்றும் முருகன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மேலும் இரு முக்கியமான எல்டிடிஈ போராளிகள் எஸ்.ஐ.டி.யின் தேடுதல் வலையில் வீழ்ந்தனர். அந்த இருவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதுடைய ராபர்ட் பயஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஜி.பேரறிவாளன் என்ற அறிவு. இலங்கைத் தமிழரான பயஸ் சிவராசன், தனு மற்றும் சுபாவிற்கு தங்குவதற்கான இருப்பிடத்தை தயார் செய்தார். அறிவு, பாக்கியநாதன் மற்றும் பத்மாவுடன் தங்கியிருந்தார்.

சென்னை போரூரில் இருந்த பலசரக்குக் கடை, கொலை நடந்த காலம் வரை இந்தக் கொலைக்குழுவிற்கு, யாழ்ப்பாணம், இத்தாலி, டென்மார்க் மற்றும் கனடாவிலிருந்து வந்த செய்திகளை பரிமாறிக்கொள்ளும் இடமாக பயன்படுத்தப்பட்டது. கொலை நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு பயஸிற்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உள்ளூரிலிருந்து வந்த அந்த அழைப்பின்போது பயஸ் மிக மெதுவாகவே பேசினார் என அந்த பலசரக்குக் கடை முதலாளி எஸ்.ஐ.டி.யிடம் தெரிவித்தார். கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்புவரை பயஸ் வீட்டிற்கு வெளியே ஒரு ஆம்னி வேன் நின்றதை பலநாட்கள் பொதுமக்கள் பார்த்துள்ளனர். அந்த வாகனம் நபர்களை, குறிப்பாக பெண்களை அழைத்துச் சென்றதற்காக பயன்படுத்தப்பட்டது.

அந்தக் கொலைக் குழுவிலிருந்த மற்றொரு நபரான ஜெயக்குமார் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத் தமிழரான ஜெயக்குமார் சென்னையில் சிவராசன் மற்றும் சுபா தங்குவதற்கு வசதி செய்து தந்தார். ஜெயக்குமார் ராபர்ட் பயஸின் உறவினர் எனப் பின் தெரியவந்தது…”

இப்போது களம் வெளியீடான ‘விடுதலைக்கு விலங்கு’ புத்தகத்திலிருந்து (களம் வெளியீடு 8, மருத்துமனை சாலை, செந்தில் நகர், சின்னபோரூர், சென்னை – 600 116. விலை ரூ.100) சில பகுதிகள்…

“…காட்டுமிராண்டித்தனமாக என் வீட்டின் உள்ளே நுழைந்த இந்திய இராணுவ வீர‌ர்களின் கர‌ங்களில் பிறந்து பதின்மூன்றே நாட்களான எனது மகன் சிக்கிக் கொண்டான். அன்று மலர்ந்த இளம் ரோஜா ஒன்று, மதம் பிடித்த யானையின் காலடியில் சிக்கிக் கொண்டதைப் போல பந்தாடப்பட்ட எனது பாலகனை இந்திய இராணுவ வீர‌ன் ஒருவன் தூக்கி எறிந்தான். அழுது வீறிட்டபடியே விழுந்த எனது பச்சிளம் பாலகனுக்கு தலையில் பலத்த காயம். தடுக்கப் பாய்ந்த எனது மனைவியையும் எட்டி உதைவிட்டு கீழே தள்ளியது இந்திய இராணுவம். காயம்பட்ட என் பச்சிளம் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவமனை நோக்கி ஓடினோம். ஆனால் சின்னஞ்சிறு மலர‌ல்லவா, சீக்கிர‌மே உயிரை‌ விட்டுவிட்டது. கொடிய மிருகங்கள் உலவும் காட்டில் எளிய உயிர்களுக்கு இடமில்லை. குண்டு மழை பொழியும் நிலத்தில் சின்னஞ்சிறு அபலை உயிர்களுக்கு மதிப்பில்லை.

உயிர்வாழும் ஆசைதான் எத்தனை விசித்திர‌மானது!.. இந்த வேட்கைதான் காயங்கள் மீது காலம் பூசும் மருந்துக்கு மயிலிறகாக உதவுகிறது. நாங்களும் அப்படித்தான்; உயிர்வாழும் வேட்கை தந்த ஆசை. தடுக்கி விழுந்தால், தாங்கிப் பிடிப்பார்கள் என்று உறவுகள் மீது வைத்த நம்பிக்கை. இந்த இர‌ண்டும் தான் எம்மை தாயகத் தமிழகத்தை நோக்கி விர‌ட்டியது…”

“…குழந்தையை இந்திய இராணுவத்திடம் பறிகொடுத்த ஈழத் தகப்பன் ஒருவன் தான், இராசீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று யாரே‌னும் நம்புவீர்கள் என்றால், என்னைப் போன்று பல்லாயிர‌க்கணக்கான தகப்பன்கள் அச்சமயத்தில் இந்திய இராணுவத்திடம் தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்தார்கள். அவர்களையும் ஏன் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கவில்லை? பழிவாங்குவதற்கும் ஒரு பலம் வேண்டும். அனைத்தையும் இழந்து நிராதர‌வாக வந்து நிற்கும் அலைக்கழிக்கப்பட்ட ஓர் எளியவனிடம் பழிவாங்கும் உணர்வு என்ன?… வேறு எந்த உணர்வும் இருக்காது…”

“..10/06/1991. இந்த நாளை என்னால் உயிர் உள்ளவரை‌ மறக்க இயலாது. நான் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டு, சென்னைப் போரூரில் வாடகைக்கு எடுத்துக் குடியிருந்த வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்கு அருகில் இருந்த மளிகை கடைக்கார‌ர் பாண்டியன் என்பவர், என் வீட்டிற்கு காவல்துறையினர் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். இந்த இடத்தில் நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள். இங்கு நான் உண்மையான குற்றவாளியாக இருந்திருந்தால் நான் அக்கணமே தப்பித்து ஓடியிருக்க முடியும். ஆனால் எதையுமே எதிர்பார்க்காமல், எதிர்வரும் கேடுகளை அறியாமல் என் வீட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் இர‌வு ஒன்பதரை‌ மணிக்கு என்னையும் எனது மனைவியையும், எனக்கு இர‌ண்டாவதாகப் பிறந்த 3 மாத குழந்தையையும், எனது உடன் பிறந்த சகோதரியையும் சிபிஐ ஆய்வாளர் இர‌மேஷ், இக்பால் மற்றும் இரு காவலர்கள் விசாரித்துவிட்டு, அனுப்பிவிடுவதாக சிபிஐ அலுவலகம் அமைந்திருந்த மல்லிகைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்பொழுது கூட என் மனதில் பெரிதாக அச்சமில்லை. ஒரு அகதியாய் தஞ்சம் புகுந்தவனின் வாழ்க்கை நிலையற்றது மட்டுமல்ல, இதுபோன்ற காவல் கெடுபிடிகளுக்கு உட்பட்டது என்பதனை நான் நன்கு அறிந்திருந்தேன்…”

“…அந்த அறையில் இருந்த அலுவலர்கள் என்னைச் சூழ்ந்து நின்றனர். அதில் ஒரு அதிகாரி சிவராசன், காந்தன் இருவரை‌யும் தெரியுமா எனக் கேட்டார். எனக்குத் தெரியாது எனக் கூறிய நொடியில், கடுமையான வேகத்தில் என் முகத்தில் ஓர் அறை விழுந்தது. முதல் அடியிலேயே பொறி கலங்கிப் போனேன். பிறகு அங்கு இருந்த அனைவரும் சேர்ந்து கொண்டு அடிக்கத் துவங்கினர். அடி தாங்காமல் கீழே விழுந்த என் மீது ஷு காலால் உதைத்தனர். நான் வலி தாங்காமல் கத்தும் போது நான் கத்திய சத்தம் பக்கத்திலிருந்த என் மனைவிக்கும், என சகோதரிக்கும் கேட்டிருக்க வேண்டும். நான் கத்தும் போதெல்லாம் அவர்களும் கத்திக் கொண்டிருந்தார்கள்..”

“…என்மீது விழுந்த அடிகளும் உதைகளும் ஏற்படுத்திய வலிகளை விட, இவர்கள் ஏன் இப்படி அடிக்கிறார்கள் என்ற வினா ஏற்படுத்திய உறுத்தலே எனக்குக் கடுமையான வலியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் அடிக்கும் அடியின் வலி மெதுவாகக் குறையத் துவங்கியது. அப்போது தான் எனக்குப் புரிந்தது நான் மயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று. விழித்துப் பார்த்த போது, நான் அந்த சிமெண்ட் தளம் போடப்பட்ட தரை‌யில் சுருண்டு கிடந்தேன். நான் கிடந்த அந்த சிமெண்ட் தரை‌ முழுவதும் எனது வியர்வைத் தடம்.

எனக்கு அந்த நொடியில் கடுமையான தாகம் எடுத்தது. அங்கே அருகில் நின்று கொண்டிருந்த காவலரிடம் குடிக்கச் சிறிது தண்ணீர்க் கேட்டேன். ஆனால் காவலர் எனக்குத் தண்ணீர் தர‌ மறுத்துவிட்டார். கடுமையான தாகம் ஏற்படுத்தும் துயர‌ம் மிகக் கொடுமையானது. ஒரு குவளை குடிநீருக்காக என் உயிரை‌யும் நான் மாய்த்துக்கொள்ளத் தயாரானது போன்ற மனநிலை. கடுமையான தாகமும் மிகுதியான உடல் வலியும் தந்தக் களைப்பினால், நான் அப்படியே கண்ணயர‌த் துவங்கினேன். அப்போது சுளீர் என்று முகத்தில் ஒரு வலி. அயர்ந்த எனது முகத்தின் மீது அருகில் நின்று கொண்டிருந்த காவலர் குளிர்ந்த நீரை‌த் தெளித்தார். ஏற்கெனவே கலங்கி இருந்த எனது விழிகளில் இருந்து பெருகிய கண்ணீரோடு தண்ணீரும் கலந்து உலர்ந்த எனது உதடுகளின் மீது பட்டது.

நான் எனது முகத்தில் வழிந்த தண்ணீரை‌ நக்கிக் குடித்து என் தாகம் தணிக்க முயன்றேன். அப்போதுதான் ஆய்வாளர் சுந்தர்ராஜன் என்பவர் அந்த அறைக்குள் வந்தார். வந்த வேகத்தில் வேகமாக ஓர் அடி, என் முகத்தில் அடித்தார். என் பல்லில் பலமாக அடிபட்டு இர‌த்தம் கொட்டியது. அந்த நொடியில் இருந்து பாதிக்கப்பட்ட பல்லைச் சிறைக்கு வந்த பிறகுதான் நானே பிடுங்கி எறிந்தேன்.

அந்த இர‌வின் ஒவ்வொரு நொடியும் எனக்கு நினைவிருக்கிறது. மிக நீண்ட வலி மிகுந்த கொடுமையான இர‌வுகள் என் வாழ்வில் வர‌ப்போகின்றன என எனக்கு அப்போதுத் தெரியாது. அந்த இர‌வில் தூங்கவிடாமல் செய்வதற்கு எனக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய வேலை என்னவெனில், என்னைத் தூங்கவிடாமல் துன்புறுத்துவதும், மீறித் தூங்கினால் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்புவதும் தான். விசார‌ணை முறைகளில் தூங்கவிடாமல் துன்புறுத்தும் விசார‌ணை முறை, மனிதனை மிகவும் வதைக்கும் கொடுமையான ஒன்றாகும். களைத்த உடல் கண்ணயரும்போது அதைத் தடுத்தால் அந்த உடல் மேலும் பலவீனமாகி தாங்கமுடியாத உளவியல் சிக்கலுக்கு ஆட்படும். இப்படி உளவியல் சிக்கலுக்கு ஆட்படும் ஒருவனிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அனுபவங்கள் தந்த பாடங்களைத்தான் காவல்துறையினர் நாளது தேதிவரை‌ கடைபிடித்து வருகின்றனர். இறுதியாக விடியற்காலை என்னை தூங்கவிடாமல் துன்புறுத்திய காவலரே‌ கண்ணயர்ந்துவிட்டார். பாவம் அவரும் மனிதன் தானே. நானும் அப்படியே கண்ணயர்ந்தேன். வெளியே கொடூர‌மான இர‌வு துளித்துளியாய் விடிந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த பொழுது எனது அறையில் எனக்கு அறிமுகமில்லாத சுபா சுந்தர‌ம், ஓ.சுந்தர‌ம் மற்றும் சிலர் இருந்தார்கள். யார் யாரோ வந்தார்கள். சிவராசன் தெரியுமா, காந்தன் தெரியுமா எனக் கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தெரியாது என நான் சொன்ன அடுத்த நொடியில், அவர்கள் அடிக்கத் துவங்கிவிடுவார்கள். அன்று பகல் முழுக்க என்னை அடித்துக்கொண்டே இருந்தார்கள். என்னை விசாரித்த விசார‌ணை அதிகாரிகளுக்கு நேர‌ம், காலம் கிடையாது. இர‌வு பகல் என்றெல்லாம் அவர்கள் பார‌பட்சம் காட்டுவதில்லை. எப்போதெல்லாம் அவர்களுக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் என்னைக் கேள்விகேட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே‌ மாதிரி அடித்தால் வலி பழகிப் போய்விடும் என்பதற்காக, அவர்களுக்குத் தெரிந்த வித்தியாசமான நடைமுறைகளை எல்லாம் கடைபிடித்தார்கள்…”

“…என்னைக் கைது செய்து மூன்றாம் நாள் மதியம் என்று நினைக்கிறேன், சிவராசன் எங்கே எனக் கேட்டு என்னை அடித்துக் கொண்டிருந்த விசார‌ணை அதிகாரிகளுக்குத் திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. என் இர‌ண்டு கால்களையும், சேர்த்து கட்டத் துவங்கிய அவர்களின் எண்ணம் குறித்து நான் புரிந்துக் கொண்டேன். நான் ஒத்துழைக்க மறுத்தேன். இருந்தும் அவர்கள் என்னை விடவில்லை. என்னைக் கட்டாயப்படுத்தி தலைகீழாக என்னைத் தொங்கவிட்டார்கள். பலமற்ற கயிறு போலும், கயிறு அறுந்து நான் கீழே விழுந்தேன். எனக்கு முதுகில் பலமாக அடிபட்டது. நூறு ஊசிகளை எடுத்து நடு முதுகில் குத்தியதைப் போன்று மிகக் கொடுமையான வலி. வலியின் மிகுதி எனக்கு மயக்கத்தைத் தந்தது. மயங்கினேன். கடுமையான உடல்வலியும், கொடுமையான குடிநீர்த் தாகமும் ஒன்றுக்கொன்று உடன்பிறந்தவைப் போல் என்னை உலுக்கி எடுத்துவிட்டன.

மயங்குவதும், மயக்கம் தெளிய காவலர்கள் முகத்தில் தண்ணீர்த் தெளிப்பதும், அந்தத் தண்ணீரில் நான் நாக்கை நனைத்துக் கொள்ளுவதுமாக நேர‌ங்கள் கழிந்தன. எதன் பொருட்டும் காவலர்கள் அடிப்பதை நிறுத்தவே இல்லை. நேர‌ம் அதிகரிக்க என் முதுகு வலியின் தீவிர‌ம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. நான் வலி தாங்க முடியாமல் கத்திக் கதறிக் கொண்டே இருந்தேன்…”

“…சிபிஐ யின் விசார‌ணை முறை என்பது மிகத் தனித்துவமானது. பல்வேறு குழுக்கள், பல்வேறு விசார‌ணை முறைகள், குறிப்பாக டி.ஐ.ஜி. ராஜூ தலைமையில் இருந்த டி.எஸ்.பி.சிவாஜி, ஆய்வாளர் இர‌மேஷ், ஆய்வாளர் மாதவன், ஆய்வாளர் இக்பால் மற்றும் சிலர் இருந்த அந்தக் குழுவினரை‌ என்னால் எப்போதும் மறக்க இயலாது. ஏனெனில், விதவிதமாக அடிப்பதற்கும், வகைவகையாக துன்புறுத்துவதற்கும் பெயர் போன குழு அது. இர‌ண்டு கை விர‌ல்களுக்கு இடையே பேனாவை அழுத்திப் பிடித்துக் கொண்டு பேனாவைத் திருப்புவது. இர‌ண்டு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு நாற்காலியில் உட்காருவதைப் போன்று நிற்கச் சொல்லி, சிறிது நேர‌ம் நின்றதும் தசை பிடித்து வலிக்கும்போது, பின்புறம் லத்தியால் அடிப்பது போன்ற பலவிதமான சித்திர‌வதைகள்…”

“…உண்மையைக் கேட்பதற்கு உலகிற்குச் செவிகள் இல்லை. அதே உலகிற்கு பொய்களைப் பர‌ப்ப ஆயிர‌ம் உதடுகள் உண்டு என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணர‌த் துவங்கி இருந்தேன். எங்களை அழைத்து வருவது தெரிந்து நிறைய பத்திரிகைக்கார‌ர்களும், புகைப்படக்கார‌ர்களும் அங்கே குழுமியிருந்தார்கள். உண்மை எதுவென அறிவதற்கும், புரிந்துகொள்வதற்கும் யாருக்குமே அங்கு விருப்பமில்லை. மாறாக, மறைந்த இராசீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகள் யாöர‌ன கண்டுபிடிக்கப்படாமல் இருந்த வெற்றிடத்தை எதைக்கொண்டேனும், எவரை‌க் கொண்டேனும் நிர‌ப்பிவிட வேண்டும். இல்லையேல், மாபெரும் வல்லாதிக்க நாடாக, வளரும் நாடுகளின் தலைவனாக விளங்கும் இந்தியாவின் புலனாய்வுத் துறைக்கு அது மிகப்பெரிய களங்கமாக விளங்கும் என்பதற்காகவே இந்த அவசர‌மும், மூர்க்கமும் நிறைந்த தவறான முடிவு…”

“…ஈழத்திலிருந்து அகதிகளாக என்னுடன் வந்த ஜெயக்குமார், அவர‌து மனைவி சாந்தி, அவர்களது மகன் பார்த்திபன் ஆகியோரை‌, நான் கைது செய்யப்பட்டு இரு நாட்களுக்குப் பின்னர் கைது செய்திருந்தார்கள். என் கண் எதிரே‌ பல முறை ஜெயக்குமார் குடும்பத்தினரை‌ச் சித்ர‌வதை செய்யும் போது நான் மிகவும் துயருற்றுக் கண்ணீர் சிந்தினேன். ஜெயக்குமார் மனைவியும் , என் சகோதரி முறையிலான சாந்தி உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் விடுதலை அடைந்தது எனக்குத் தனிப்பட்ட முறையில் பெருத்த ஆறுதலை அளித்தது.

என்னால் என்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாத மிகத் துயர‌மான சூழலில் நான் என்னோடு வந்த உறவினர் குடும்பமான ஜெயக்குமார் குடும்பம் படும் பாடுகளைக் கண்டு கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது…”

“…தாங்கள் சொல்வதை உண்மையென என்னை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற மூர்க்கத்தில் டிஐஜி.சிறிக்குமாரும், அவருடைய ஆட்களும் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைக்கு இழுத்துப் போனார்கள். இருட்டாக இருந்த அந்த அறையில் கூர்மையான பனிக்கட்டி மீது என்னை நிற்க வைத்து விட்டு குளிர்சாதனத்தின் குளிரூட்டும் சக்தியை அதிகப்படுத்தினார்கள். நான் அந்த பனிக்கட்டி மீது நிற்கும் போது உடலெல்லாம் எனக்கு கடும் வலி. உயிரே‌ என்னை விட்டு பிரிவது போன்ற அவஸ்தை. நேர‌ம் கழியக்கழிய என் உடல் குளிரால் விறைக்கத் துவங்கிவிட்டது. குளிரால் விறைத்துப் போன என்னை அடித்துக் கொடுமை செய்தார்கள். அவர்கள் சொல்லும் பொய்யை ஒப்புக்கொண்டால் வழக்கு முடிந்தவுடன் அந்த வீடு எனக்கே கிடைத்து விடும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார்கள். நான் உறுதியாக மறுக்கவே, என்னை அடித்துக் கொண்டே இருந்தார்கள். அந்த இர‌வும் என்னை தூங்க விடவில்லை…”

“…அந்த காலக்கட்டத்தில் சிக்கிய யாராவது ஒருவரை‌ இழுத்து வந்து அங்கு அடித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை அவர்களுக்கு அடிக்க ஆள் கிடைக்காவிட்டால் அதிகாரிகள் மாதவனும், ரமேசும் என்னை அழைத்துக் கொண்டு போய் ஏதாவது கேட்டு அடிப்பார்கள்…”

“…இந்திய நாட்டின் முன்னாள் பிர‌தமர் ஒருவரின் கொலை வழக்கு மிகவும் ஒருதலை சார்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என அறிய யாருக்குமே விருப்பமில்லை. இந்தக் கொலை வழக்குகளை விசாரித்த புலனாய்வுத் துறையினர், தாங்கள் புனைந்த ஒரு கதைக்கு கதாப்பாத்திர‌ங்கள் தேடினர். அந்தக் கதாப்பாத்திர‌ங்களாக சிக்கிக் கொண்டவர்கள்தாம் நாங்கள். உண்மையில் எனக்கு அமர‌ர் இராசீவ் காந்தியின் மீது பரிதாபம் தான் மிஞ்சுகிறது. ஒரு வல்லாதிக்க நாட்டின் முன்னாள் பிர‌தமர் கொலையின் உண்மைகளை அறிய யாருக்குமே விருப்பமில்லை, என்பதுதான் எத்தனைத் துயர‌மான விடயம்…”

“…தடா சட்டத்தின் கீழ் நான் அளித்ததாகக் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்பது காவல்துறையினர் என்னை சித்திர‌வதைகள் செய்து, பலாத்கார‌மாகப் பல வெற்றுத் தாள்களில் கையெழுத்துப் பெற்றது. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் தாங்களாகவே தயாரித்தனர்’ என்று என் போலிசு காவல் முடிந்து நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்ட போது நீதிமன்றத்தில் மனுகொடுத்தேன். நீதிபதி, வழக்கு விசார‌ணையின் போது விசாரிப்பதாகக் கூறினார். ஆனால் வழக்கு விசார‌ணை நடைபெற்ற தடா நீதிமன்றத்தில் இந்த மனு விசார‌ணைக்கு வர‌வே இல்லை…”

“…இராசீவ் காந்தி கொலை என்பது பலவிதமான இர‌கசியங்களைக் கொண்ட ஒரு குற்ற நடவடிக்கையாகும். ஒரு நாட்டின் முன்னாள் பிர‌தமரின் கொலையில் தொடர்புடைய, சந்தேகிக்க வேண்டிய பலவித கார‌ணிகளை இந்திய புலனாய்வுத்துறை வேண்டுமென்றே நிராகரித்தது. தாங்கள் முடிவு செய்திருக்கும் இந்த வழக்கின் பாதையில் இருந்து சற்றே விலகி உண்மையைக் கண்டெடுத்துவிடக் கூடாது என்பதில் இந்தியப் புலனாய்வுத்துறை மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக அடையாளம் காட்டப்பட்ட பலரும் என்னைப் போலவே சிக்கிக் கொண்டவர்கள்தாம்…”

இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருப்பது புத்தகத்திலிருந்து ஆங்காங்கே சில பகுதிகள் மட்டும்தான். முழு புத்தகமும் மனித உரிமைகளைப் புறந்தள்ளிய, உண்மைகள் குறித்து சிறிதும் அக்கறையில்லாத சிபிஐ-ன் விசாரணை முறைகளையும், அதிலிருந்த ஓட்டைகளையும் பேசுகிறது.

வழக்கறிஞர் தடா சந்திரசேகரரிடம் இராபர்ட் பயஸ் அளித்த வாழ்க்கை மற்றும் வழக்குக் குறிப்புகளை, வழக்கறிஞர் மணி.செந்தில் மிகச் சிறப்பானதொரு புத்தகமாக ஆக்கியுள்ளார்.

விசாரணை என்ற பெயரில் இராபர்ட் பயஸ் அனுபவித்த சித்திரவதைகளை அதன் வலியை வாசகர்களுக்குக் கடத்துவதில் மணி செந்திலின் மொழியாளுமை பெரிதும் துணை நின்றிருக்கிறது.

இராஜீவ் சர்மா எழுதிய புத்தகம் பலத்த எதிர்பார்ப்புடனும், பெரும் ஆராவரத்துடனும் வெளியாகி விட்டது. உண்மை எப்போதும் ஆர்ப்பரிப்பதில்லை; அடங்கியே இருக்கிறது. மணி செந்தில் எழுதிய புத்தகமும் அதுபோலத்தான்.

மக்களிடம் நாம் எதை கொண்டு செல்லப் போகிறோம்?

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15190&Itemid=263)

நன்றி.- கீற்று.காம் (

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்

“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

-மணி.செந்தில்

இனி..விளைவதில் தான் இருக்கிறது.. விதைப்பது .


இறுதியாக உலகத்தின் மெளனம் கலைக்கப்பட்டிருக்கிறது.


ஐ.நா. குழுவினரின் அறிக்கைக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரானப் போர் எனவெல்லாம் அமைதிப் புறாக்களாக கூவியவர்கள் இன்று மெளனம் காக்கிறார்கள். அடுக்கடுக்காய் குவிந்த போர்க்குற்றப் புகைப்படங்களும்,காணொளிகளையும் கண்டு காணாமல் இருந்த உலகத்தின் உதடுகள் எல்லாம் இப்போதுதான் இலேசாக முணுமுணுக்க துவங்கியுள்ளது . இதோடு மட்டுமல்ல இன்னும் காண சகிக்காத காட்சிகள் பல இருக்கின்றன என சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இங்கே தேர்தல் முடிந்து அலை ஓய்ந்த கடலாய் தமிழகம் இருக்கிறது. 7 கோடி தமிழர்கள் வாழும் தாயக தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன்பாக என்ன பேசுவது என்ற நிலையில் மருங்கிக் கொண்டு தவிக்கிறார்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயர் இணைக்கப்பட்டதற்காக தேர்தலுக்கு பின் முதன் முதலாக 27-04-2011 அன்று கூடிய தி.மு.க வின் உயர்நிலை செயல் திட்டக்குழு போகிற போக்கில் ஐ.நா குழு வரைந்த அறிக்கையின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டும் காணாத அளவிற்கு ஒரு தீர்மானத்தினை வரைந்திருக்கிறது. இவர்களின் இலட்சக்கணக்கான தீர்மானங்களின் கதி என்ன, அதன் மதிப்பு என்ன, அதை இவர்களே பின்பற்றும் லட்சணம் என்ன என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.


இத்தனை அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நம்மையெல்லாம் புருவத்தினை தூக்க வைத்திருக்கிறது அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கை. தேர்தலுக்கு முன் பிரச்சார சமயத்தில் இந்த அறிக்கை வந்திருந்தால் ஓட்டுக்காக பேசியதாக நினைத்துக் கொள்ளலாம் . ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இந்த அறிக்கை வெளியாகி இருப்பதுதான் நமது ஆர்வத்தினை தூண்டுகிறது. பார்ப்போம். மாற்றம் என்பதுதான் மாறாத தத்துவம் என்பதில் நம்பிக்கை கொள்வோம். வழக்கம் போல நமது நம்பிக்கைகள் கொடநாட்டின் குறட்டையில் முடியாமல் இருந்தால் சரி.


எதைப் பேசினாலும் 1956-க்கு பறந்து போய் பழங்கதைகள் பேசும் திமுக தலைவர் கருணாநிதி ஜெயலலிதாவின் கடுமையாக அறிக்கைக்கு பதில் சொல்லத் தெரியாமல் ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகள் விட்டு குழம்பியும்..குழப்பியும் போனார். 40 எம்.பிக்களை ராஜினாமா செய்ய சொன்னோம், போர் நின்று விட்டதாக பொய் சொன்னோம், மழை நின்றது..தூவானம் நிற்கவில்லை என்றெல்லாம் இரக்கமில்லாமல் ஒரு பொருட் இருமொழி பேசினோம் என்பதெல்லாம் திமுக தலைவருக்கு நன்றாகத் நினைவிருக்கும்.டாஸ்மார்க்கில் குடித்து விட்டு, கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட மக்கள் இவற்றையெல்லாம் மறந்திருப்பார்கள் என நினைத்திருப்பார் போலும் .


சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தான் வெற்றிப் பெற்றால் ஈழம் மலர உறுதுணையாக நிற்பேன் என ஜெயலலிதா பேசியதை நாடகம்..நடிப்பு.. என்றெல்லாம் துடிதுடித்த கலைஞர் ஆதரவுப் பெற்ற ஆன்றோர் பெருமக்களால் , ஒரு நடிப்பிற்காகவேனும் ஈழத்தமிழர்களுக்காக ஈழம் அடைய பாடுபடுவேன் என திமுக தலைவரை பேச வைக்க, அவரது கட்டை விரலை கூட அசைக்க வைக்க முடியவில்லையே..? .. சரித்திரம் படைத்த அந்த’ சாகும் வரை உண்ணாவிரத்தினை’ பற்றி இச்சமயத்தில் யாராவது நினைக்கக்கூடும். சிம் கார்டு இல்லாத அலைபேசியில் காரைக்குடி அண்ணாச்சியுடன் பேசியதாக கூறி போர் நின்று விட்டது என அறிவித்து விட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்று விட்ட சாதனையை யாராவது நினைக்கக் கூடும். “20 ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருந்த போரை ஒற்றை நொடியில் நிறுத்திய புறநானுற்றின் புத்துலகு விளக்கமே” என்றெல்லாம் திமுக தலைமையே தனக்குத் தானே சுவரொட்டி அடித்து சுவரை நாறடித்த கதையை யாராவது யோசிக்க கூடும். இவற்றையெல்லாம் நாடகம் ..நடிப்பு என்றெல்லாம் நாம் குறுக்கி விட முடியாது. இவை எல்லாம் அதற்கு மேலான ‘பெர்ப்பாமென்சுகள்’. தமிழ் ஈழம் என்ற நாடு இப்பூமிபந்தில் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஒரு நாடாக இருந்த போது ஆதரிக்க மனமில்லாமல் சகோதர யுத்தம். என்றெல்லாம் சாக்கு சொல்லி புறக்கணித்த திமுக தலைவருக்கு இப்போது மட்டும் தனி ஈழம் தீர்வாக தோன்ற காரணம் இதை வைத்து 2 ஜி க்கு மாற்றாக காங்கிரசை மிரட்டலாம் என்றுதான் .


நம் தலைவர்கள் வைத்திருக்கும் ‘சிங்களப் பற்று’ மிகவும் புகழ் வாய்ந்தது. ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் இவர்களின் இருதய துடிப்பே இருக்கிறது என்பது போல இருக்கின்றன இவர்களது நடவடிக்கைகள். தமிழரும், சிங்களரும் சம நீதி பெற்று வாழ்வதுதான் தனது விருப்பம் என அறிவித்துள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை கண்டு சிங்களர்களுக்கே புல்லரிப்பு ஏற்பட்டிருக்கும். அங்கே சாகக்கிடக்கும் தமிழனுக்கு சம நீதி என்ன ..எதுவும் கிடைக்காது என்பது இவர் அறியாததா..? . இப்போது இவர் தான் இப்படி என்றால் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித்தலைவி வெளியிட்ட அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் என்றுதான் வருகிறதே ஒழிய தப்பித் தவறி ஈழம், ஈழத்தமிழர்கள் என்ற வார்த்தைகளே காணோம். நம்மினத்தினை ஒட்டு மொத்தமாக சிங்கள பேரினவாதம் அழித்துப் போட்ட பின்னரும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இவர்கள் காட்டுகிற ஆர்வம் சிங்களர்களை மிஞ்சியது ஆகும்.


நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலின் போது காங்கிரசினை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் இருந்தது. ஆனால் காட்டிய வழிகள் திசைக்கொன்றாய் திரும்பி நின்றதுதான் முரணாக இருந்தது. காங்கிரசினை தோற்கடிக்க வேண்டும். சரி. அதற்கு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் முடிவெடுத்தார்கள். காங்கிரசு எதிர்ப்பாளர்கள் காங்கிரசினை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்தால் அது காங்கிரசுக்கு ஆதரவாக முடியுமே என்ற கேள்விக்கு பதிலில்லை. இன்னும் சிலர் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும், ஆனால் காங்கிரசை எதிர்த்து நிற்கிற பிரதான கட்சிக்கு ஓட்டளிக்க கூடாது.டெபாசிட்டே பறி போகின்ற சுயேட்டைக்கு ஓட்டளித்து ஓட்டுக்களை பிரித்து காங்கிரசினை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என வித்தியாசமான முடிவெடுத்தார்கள். இன்னும் சிலர் இந்திய தேசியம் நமக்கு எதிரானது. அதனால் இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் இத் தேர்தலினை நாம் புறக்கணிக்க வேண்டும். மாநில அரசதிகாரத்தால் எதுவும் இயலாது, இந்தியாவினை விட்டு தமிழ்நாடு பிரிந்து வந்த பிறகுதான் ஈழம் சாத்தியம் என்றெல்லாம் மிக கச்சிதமாக யோசித்து தேர்தலை புறக்கணித்தார்கள். இதில் என்ன சோகம் என்றால்…மக்கள் யாரையும் மதிக்காமல் வழக்கத்திற்கு மாறாக 80% சதவீதத்திற்கு மேலாக வருகை தந்து வாக்களித்து விட்டு சென்றிருக்கிறார்கள்.


மக்களை வெல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. மக்களிடம் மாற்றம் நிகழ்ந்தாலொழிய மண்ணில் மாற்றம் நிகழப் போவதில்லை. சிறிய இலக்குகளை அடைந்து அது வாயிலாகவே பெரிய இலக்குகளை அடைவதென்பதுதான் இதற்காக வழி. காங்கிரசு தோற்க வேண்டும் என்றால் எதிர்த்து நிற்கிற பிரதான எதிர்க்கட்சி வெற்றிப் பெற்றாக வேண்டும். இது தான் இருந்த ஒரே வழி. பல எதிரிகளை ஒரே நேரத்தில் வீழ்த்தியெறிவதற்கான அரசியல் பலமும், மக்கள் திரளும் இன்னமும் தமிழ் அமைப்புகளுக்கு கைக்கூடாத நிலையில் காங்கிரசினை எந்த விதத்தில் வீழ்த்தலாம் என சிந்திருக்கவேண்டும்.


அதைத்தான் தன்னால் இயன்றளவு நாம் தமிழர் அமைப்பினர் செய்தார்கள். காங்கிரசினை வீழ்த்த நேரடியாக களம் கண்ட அமைப்பினர் இந்த தேர்தலில் இவர்கள் தான். வேலூர், பாபநாசம் சென்னை, இராமநாதபுரம் போன்ற பல தொகுதிகளில் நாம் தமிழர் அமைப்பினர் மீது காங்கிரசார் நேரடியாக தாக்குதல் நடத்தியதும், வீரமிக்க இளைஞர் கூட்டம் எதிர்த்து நின்று போரிட்டதும் நடந்தது . செந்தமிழன் சீமான் அவர்களின் உணர்ச்சிக்கரமான உரைகள் காங்கிரசு போட்டியிட்ட இடங்களில் வெடிகுண்டுகளாய் விழுந்தன. கடைசிநேரத்தில் சீமானை எதிர்த்து காங்கிரசு சார்பாக களமிறக்கப்பட்ட எஸ்.வி.சேகர் “காங்கிரசைப் பற்றி தெரியுமா..?, இந்திய சுதந்திரத்திற்காக சீமானா குரல் கொடுத்தார்..?” என்றெல்லாம் பேசி விட்டு காங்கிரசை விட்டு தங்கபாலு நீக்கியவுடன்” சீமானாவது ஒவ்வொரு தேர்தலில் மட்டும்தான் காங்கிரசை அழிக்க பாடுபடுவார். ஆனால் தங்கபாலு எப்போதும் காங்கிரசை அழிக்க பாடுபட்டு வருகிறார் ,எனவே , ஆயிரம் சீமான்களுக்கு சமமானவர் தங்கபாலு” என்று காமெடி செய்து கலைந்துப்போனார்.


ஒரு வழியாக தேர்தல் முடிவடைந்து முடிவடைந்து முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கின்றன. மக்கள் திரண்டு வந்து தன்னெழுச்சியாக பொங்கி வந்து வாக்களித்தது ஏதோ அருவ அலை அடித்திருக்கிறது என்பதற்கு அறிகுறியாக இருக்கிறது. முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் தமிழர்கள் ஒன்று படும் காலம் வந்து விட்டது. சாதி,மதம்,அமைப்பு கடந்து இணைய வேண்டிய இடம் வந்து விட்டது. இல்லையேல் இனம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும் . அதுதான் இத்தனை துயரங்களுக்கு பின்னர் நாம் கற்கிற பாடம்.


விளைந்தது எல்லாம்

நாம் ஏற்கனவே விதைத்தது.

இன்று விதைப்பது எல்லாம்

நாளை விளைவது – சீனப் பெருமொழி

63 நாயன்மார்களும் …. 3 சீட்டு சூதாட்டமும்.

காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி. இவ்வாறாக நீளுகின்ற இந்த பட்டியலை தான் காங்கிரசாக கருணாநிதி காட்டுகிறார். நவீன நாயன்மார்களும்..அறிவாலய வியாபாரிகளும் ஆடிய 3 சீட்டு சூதாட்டத்தில் தோற்றது என்னவோ கரை வேட்டி கட்டி..முரசொலியில் முழ்கி..கருப்பு சிவப்பில் வாழ்க்கையை தொலைக்கும் வக்கற்ற அப்பாவி தொண்டன் தான்.

.

சோகமும், வேகமும் , நகைச்சுவையுமாய் கலந்து கட்டி அடித்த இக்காட்சிகள் ஒரு வெகுஜன திரைப்பட காட்சிகள் அல்ல . உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் கள காட்சிகள் இவை. இளகிய மனம் படைத்தோர் இக்காட்சிகளை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் அது மிகையல்ல. திரெளபதி துரியோதனனைப் பார்த்து செய்த கிண்டல் தான் 18 நாள் போர்க்களமாக விரிந்தது என்கிறது இதிகாசம். அது போல “இவ்வளவு சீட்டு கேக்குறீங்களே – நிக்க உங்ககிட்ட ஆள் இருக்கா ?” என ஒருவர் அடித்த கிண்டல் தான் 63 ஆக நாம் ஆட வேண்டிய களமாக மாறி நிற்கிறது. அமைச்சர் துரைமுருகன் அடித்த அந்த கிண்டலில் வெகுண்டெழுந்து சென்ற கதர் பட்டாளம் கடைசியில் திரைமொழியில் சொல்வதென்றால் ப்ளாக்மெயில் செய்து 63 இடங்களை திமுகவிடமிருந்து பறித்தது. திமுக விடம் காங்கிரசு ப்ளாக்மெயில் செய்வதற்கு காரணம்…..இருக்கவே இருக்கிறது… இமாலய ஊழல் ஸ்பெக்ட்ரம். இதற்கு நடுவே அண்ணா அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு….கனிமொழி,தயாளு அம்மாளிடம் விசாரணை என்றெல்லாம் பரபரப்பு காட்சிகள் வேறு…இதன் நடுவில் இடைவேளைக்கு முந்தைய ஒரு காட்சியில் …ஒரு பாட்டில் கோடீஸ்வரனாக்கும் விக்கிரமன் படத்து பாடல் போல மானமிகு. ஆசிரியர் வீரமணி சுயமரியாதை பேசி புல்லரிப்பை ஏற்படுத்தினார். நடுநடுவே நகைக்கடை அதிபர் போல வந்து நிற்கும் குங்குமப்பொட்டு தங்கபாலு சற்றும் அசராமல் “ மிக சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.நாளையும் பேச்சுவார்த்தை தொடரும்” என்பதை சொல்லி வைத்த பாடத்தை தப்பாமல் பேசும் கிளிப்பிள்ளையாய் நிருபர்களிடம் சொல்லி நகைச்சுவையை ஏற்படுத்தினார். சகோதரப் பாசத்தினால் முதல்நாள் லாலி பாடிய திருமாவும், ராமதாசும் மறுநாள் அப்படியே திருப்பி அடித்து மக்களை திகைக்க வைத்தார்கள். நாக்கினால் இவ்வளவு வேகமாய் புரள முடியுமா என்பதற்கு நாசூக்கான ஆதாரங்கள் இவர்கள் . தமிழ்த் தேசிய சகதியாய் திமுகவின் சல்லடையில் தேங்கிக் கிடக்கும் பேராசிரியர் சுப.வீக்கு தற்போது பிடித்த வசனம்..வடிவேலின் அது நேத்திக்கு…இது இன்னிக்கு. காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து திமுக வெளியேற போகிறது என உயர்நிலை (?) செயல் திட்டக்குழுவின் தீர்மானத்தினை கேட்டு ( ஆவ்வ்…எவ்வளவு பாத்தாச்சி…) உணர்ச்சிவசப்பட்டு சோனியா ஒழிக…கலைஞர் வாழ்க என அப்பாவி திமுக தொண்டன் அலறி…அலறி தொண்டை புண்ணாகிப் போனதுதான் மிச்சமாய் நின்ற எச்சம்.

.

தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கொள்கை பேச வக்கற்று ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டு திகார் சிறையில் களி தின்கிறார் . அவர்தான் குற்றவாளி என காங்கிரசு கட்சியின் மத்திய அரசு சொல்கிறது. முதல்வரின் மகளும்..மனைவியும் எப்போதும் விசாரணை வளையத்திற்குள். இதையெல்லாம் மீறி…கருணாநிதி காங்கிரசு மீது வைத்திருக்கும் அளவற்ற காதலுக்கு காரணம் பதவியின் மீதும்..பணத்தின் மீதும் வைத்துள்ள வெறிதானே ஒழிய வேறென்ன..?

மக்களுக்கான பணி என்ற நிலைமாறி மக்களின் தீராத பிணியாக மாறி நிற்கிறது தமிழ்நாட்டு அரசியல். அழுக்கேறி குடலைப் பிடுங்கும் நாற்றமெடுக்கும் சாக்கடையில் நெளியும் புழுக்களாய் அரசியல் வியாதிகள் இவைகள் நெளிய …இவைகளை சற்றும் கூச்சம் இல்லாமல் பார்க்க பழக்கப் பட்டு விட்டான் தமிழன் . இந்த முறை இந்த கேடு கெட்ட ஆட்டங்கள் சற்றே அதிகம் . ஈழத் தமிழினத்தின் ரத்த கறை படிந்த காங்கிரசின் கரங்களோடு கை குலுக்க திமுக நடந்த நடை…அலைந்த அலைச்சல் இவை எல்லாம் யாரிவர்கள்.. என்பதனை நமக்கு அழுத்தம் திருத்தமாக அடையாளம் காட்டின. பதவியை பாதுகாக்கவும், ஊரை கொள்ளையடித்து சேர்த்து வைத்த ஊழல் காசினை பதுக்கவும் இவர்கள் காட்டிய அக்கறையை சற்றே அழிவின் விளிம்பில் நின்ற ஈழத் தமிழினத்தின் மீதும் காட்டியிருந்தால் கல்லறைகளாவது குறைந்திருக்குமே…

.

இன்றளவும் நம்மால் சீரணிக்கவே முடியாத அழிவுக் காட்சிகள் நம் கண்ணிலே தேங்கிக் கிடக்கின்றன. யாராலும் ஈடு கட்ட இயலாத ஒரு அறிவார்ந்த தமிழினத் தலைமுறை அழிக்கப்பட்டிருக்கிறது .. இனி நாம் கட்ட ஒரு தலைமுறை வேண்டுமே என்ற தவிப்பில் நம்மை தகிக்க வைக்கும் உலகத் தமிழினத்தின் ஒற்றை நாடு உருக் குலைந்து கிடக்கின்றது. இன்றளவும் கோணிப் பைக்குள் அடுத்த வேளை சோற்றிக்காக நாறிக் கிடக்கிறான் நம் இனத்து சகோதரன். பிணந்தின்னி கழுகு கூட உண்ண மறுக்கும் அருவருப்பு பிணமாய் நம் அக்காவையும் ,தங்கையும் சிதைத்துப் போட்டு வைத்திருக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு உற்ற துணையாய்…ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து..ஆட்களை அனுப்பி வைத்து அழித்து முடித்து வைத்திருப்பது யார் என்று உலகத்திற்கே தெரியும்.

.

பதவிகள்…பணங்கள்…என தங்க காசுகள் மினுமினுத்து புரளும் ஓசையில் இனத்தினை காட்டிக் கொடுத்தார்கள் நவீன யூதாசுகள். தன் மவுனமே தன் இனத்தினைக் கொன்றது என்ற குற்ற உணர்வில் சிலுவை சுமக்கிறது தமிழினம்.. நினைவெங்கும் அப்பிக் கிடந்து வன்மம் வளர்க்கச் சொல்கிறது சொந்த சகோதரனின் குருதி. எதன் பொருட்டும் மன்னிக்கவே முடியாத..மறக்கவே இயலாத காயங்களை நம்முள் ஏற்படுத்தியவர்கள் புனிதர்களாய் மாறி ஓட்டுப் பிச்சை கேட்டு வீதியில் வருகிறார்கள். கையோடு…கைகளாய் இணைந்து வரும் அந்த இணக்கத்தின் இடைவெளியில் பாருங்கள் .. சொட்டிக் கொண்டே இருக்கிறது …சரியாக மூடப்படாத இரவு நேரத்து குடிநீர் குழாய் போல நம் ஈழத்தின் ரத்தம்.

.

நம் விரலில் இடப்படுகின்ற அடையாளம் வெறும் மையல்ல. நாம் பொத்தி பொத்தி நம்முள் வளர்த்து வரும் நம் இனத்தின் வன்மம் அது. நம் தமிழினத்தின் ஒற்றைக் கனவான தமிழீழத்தினை தகர்த்த காங்கிரசினை ஆவேசம் கொண்ட தமிழினம் இந்த மண்ணை விட்டு அகற்றட்டும்.வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது சற்றே எத்தனிப்போம். ஒரு நொடி கண் மூடுவோம். பல்லாயிரக்கணக்கான நம் சகோதரர்களின் பிணங்கள். சகிக்க முடியாத நம் சகோதரிகளின் ஓலங்கள்… எதுவும் அறியாத நம் அப்பாவி குழந்தைகளின் சிதைந்த உடல்கள்..அத்தனையும் நினைவிற்கு வரட்டும். பிறகு அழுத்துவோம். ஒரே அழுத்து. அந்த ஒற்றை அழுத்தலில் பல்கி பெருகி வெடிக்கட்டும் ஒரு இனத்தின் கோபம்.

உதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில்

இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடிய மாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் வந்து விழுந்துக் கொண்டே இருக்கின்றன ஈழப்போரின் கொலைக் குற்ற காட்சிகள். ஈவு இரக்கம் அற்ற மனித மாண்பிற்கு அப்பாற்பட்ட காட்சிகளை கண்ட எவரும் கண்கள் நிறைந்து தலை குனிவர். படக் காட்சிகள் பலவற்றை வைத்துள்ள இங்கிலாந்தின் சேனல் 4 மானுட சமூகத்தின் நாகரீக வரையறைகளுக்கு உட்பட்ட காட்சிகளைத்தான் தங்களால் வெளியிட முடிந்தது என்றும் வெளியிட முடியாத அளவிற்கு காண சகிக்காத கொடுங்கோலங்களை கொண்ட படக்காட்சிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்றும் கூறி அதிரச் செய்து இருக்கிறது. ரத்தமும், கொடூரமும் வழியும் அந்த படக்காட்சிகள் விலங்குகளாய் மனிதன் திரிந்த கற்காலத்தில் படம் பிடிக்கப்பட்டவை அல்ல. உலகத்தீரே.. நாகரீகமும்..அறிவியல் முன்னேற்றமும் சொல்லில் விவரிக்க முடியாத அளவில் உயர்ந்து..தனி மனித விழுமியங்களுக்காகவும், சமாதானத்திற்காகவும் உலக சமூகம் உருவாக்கப்பட்டு வருகிறது என பறை அடித்து பாசாங்கு காட்டுகின்ற தற்காலத்தில் தான்.. என்று உணருங்கள்.

நிர்வாண உடல்களை பேரினவாதத்தின் அலகுகள் கொத்தி சிதைத்திருப்பதைதான் இந்தியா உள்ளீட்ட வல்லாதிக்கங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என விளக்கமளித்தன. விரிந்துக் கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு..மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு… தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக, இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு ..சிறு முனகலோடு சிதைகிற சகோதரன். வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய்.. உதிர முகத்துடன் உரு கலைக்கப்பட்டு ..வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி.. இறுகிக் கிடக்கும் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்க துணியாமல் கண் கலங்கி நிற்கையில்.. வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் சிங்களனின் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..

பேரினவாத வன்முறையினால் நம் சொந்த சகோதரியின் சிதிலமடைந்த பெண் குறியை நம் விழிகளில் உதிரம் மல்க பார்க்க நேர்ந்த அவலத்தினை நாம் எங்கே கொண்டு தொலைப்பது..? நம் சொந்த சகோதரியின் நிர்வாணத்தினை கண்ட பிறகும் கூட எவ்வித சலனமுமில்லாமல் மற்ற பணிகளை பார்க்கத் துணியும் எம் விழிகளை எங்கே கொண்டு புதைப்பது..? நம் கண் முன்னால் நம் சகோதரியை ஆடை அவிழ்ந்து காட்டுகிறான் எதிரி. முகத்தில் உதிரம் வழிய இறந்துக் கிடக்கிறாள் இசைப்பிரியா.. இசைப்பிரியா மட்டுமா அங்கு இறந்து கிடக்கிறாள்..? அல்லவே தோழர்களே.. தொன்மம் மிகுந்த ..இமயத்தில் புலிக்கொடி நட்டு உலகத்தினை ஆண்ட இனத்தின் நம் தாய்தான் அங்கு அம்மணமாக வீழ்ந்து கிடக்கிறாள்.. உடைந்த அவளின் தலையில் இருந்து காலம் காலமாய் நமக்கு மரபாய்..பண்பாடாய்..விழுமியமாய் புகட்டப்பட்ட தாய்ப்பாலின் மிச்சம் உதிரமாக அல்லவா அந்த ஈர நிலத்தில் பாய்கிறது..? அங்கே தான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் உள்ளாடையோடு கிடக்கிறான். அங்கேதான் அம்மணமாய் பின்புறம் காட்டி கைகள் கட்டப்பட்ட மன்னன் ராசராசன் கிடக்கிறான். மானத்திற்காக மண்டியிடாத இரும்பொறை மண்டை உடைந்து மல்லாக்க கிடக்கிறான்.

உலக சமூகம் வரையறுத்து வைத்துள்ள அனைத்து நாகரீக சமன்பாடுகளையும் சிங்கள பேரினவாதம் மாற்றி அமைத்து போட்டிருக்கிறது . உலகத்தினை அழிக்கக் கூடிய ரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறி எவ்விதமான புற, அக ஆதாரங்களையும் கணக்கில் கொள்ளாமல் ஈராக்கின் மீது படையெடுத்து அதன் அதிபரான சதாமை அவசர அவசரமாக தூக்கில் இட்ட அமெரிக்க வல்லாதிக்கம் உள்ளீட்ட உலக நாடுகள் புகைப்படங்களாக, படப்பதிவுகளாக என மலைமலையாய் குவிந்துக் கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்ற காட்சிகளை கண்டு கண் மூடி மவுனத்திருப்பதன் நோக்கம் வெறும் பொருளாதார காரணிகள் மட்டும்தான். சகல வளங்களோடு விரிந்துக் கிடக்கும் தமிழரின் தாயகமான ஈழப் பெரு நிலம் வல்லாதிக்கங்களைப் பொறுத்த வரையில் நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான பண்டம் ஒன்றுதான்.

தங்களின் தாயக விடுதலைக்காக களமாடிய விடுதலைப்புலிகள் இறுதி வரை கடைப்பிடித்த ஒழுங்கமைவும், மனித சமூக நலனிற்கு உட்பட்ட விழுமியங்கள் சார்ந்த மரபு வாயிலான போர் முறையையும்…அதன் எதிர் வினையாக சிங்கள அரசு கடைப்பிடித்த காட்டுமிராண்டித்தனமான கொலைகளையும் உலகம் தன்னிரு கண்கள் கொண்டு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இன்றளவும் மக்களை நேசித்த..மக்களுக்காக போராடிய இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க எந்த நாடும் முன் வராத சூழலில் தான்… அடுக்கடுக்காக சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்றக்காட்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உலக சமூகத்தினால் கைவிடப்பட்ட தனித்த இனமாக தமிழ் தேசிய இனம் மாறிப் போய் இருக்கிறது. உலக சமூக நலனிற்காக உருவாக்கப்பட்ட பொதுவுடைமை சித்தாந்தம் பேசும் நாடுகள் கூட ஈழப் பெரு நிலத்தின் மேல் கவிழ்ந்துள்ள துயரங்களுக்கு ஆதரவு அளிக்க இயல வில்லை. மாறாக உலக மானுட மாண்புகளுக்கு எதிரான சிங்கள பேரினவாத அரசின் கொடுங்கோலங்களுக்கு துணை புரிவதன் அரசியல் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

ஈழப் பெரு நிலத்தின் விடுதலை என்பது இன்று தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையாக முகிழ்ந்து இருக்கிறது என்பதுதான் நடந்து முடிந்த நான்காம் கட்ட ஈழப்போர் உலக தமிழின சிந்தனை மரபில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ்த் தேசியத் இனத்தின் ஒற்றைக் கனவாக ஈழப் பெரு நிலம் மாற்றப்பட்டு விட்டது . ஈழத்தில் நிகழ்ந்திருக்கிற வன் துயரங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது நிகழ்ந்த வன்முறையை சார்ந்தவை அல்ல. மாறாக 12 கோடி மக்களாய் விரிந்திருக்கிற தமிழ்த் தேசிய இன சுதந்திர வேட்கையின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். தன் சொந்த சகோதர, சகோதரிகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடுங்கோன்மைகளுக்கு உலகச் சமூகம் பதில் தந்தாக வேண்டும் என்ற உத்வேகம் தமிழர்களின் ஆழ் மனதில் வன்மமாக உருவேறி வருகிறது என்பதற்கு சாட்சியாக தான் பனிக் கொட்டிய இரவில் இரகசியமாக வந்து இறங்க முயன்ற சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவிற்கு பிரிட்டன் தமிழர்கள் அளித்த கடும் எதிர்ப்பு . மேலும் தாயக தமிழகத்திலும் ஜவுளி கண்காட்சியை துவக்கி வைக்க கோவை வந்த சிங்கள பேரினவாத எம்.பியை ஓட ஓட விரட்டியடித்த பெரியார் தி.க, நாம் தமிழர் உள்ளீட்ட தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு. இனி சிங்களம் கொழும்பினை விட்டு எங்கு தரை இறங்கினாலும் உலகத் தமிழினம் பாய்ந்து எதிர்க்கும் என்பதனை சிங்கள பேரினவாதம் உணர்ந்து நடுங்க துவங்கி இருக்கிறது.

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மாவில் ஆழ்ந்த வடுக்களாக வடிவம் பெற்று வலித்துக் கொண்டிருக்கின்றன. தன் சொந்த சகோதரியின் ஆடையை அவிழ்ந்துக் காட்டி சிரித்து மகிழும் எதிரியின் எக்காளத்தினை தமிழனால் ஒருக்காலும் மறக்க இயலாது. தன் சகோதர சகோதரிகளின் நிர்வாணத்தினை முன் வைத்து தன் மனித தன்மையற்ற செயலால் தொன்ம தமிழின அற மனத்தின் தன்மான உணர்ச்சிக்கு சிங்கள பேரினவாதம் விடுத்துள்ள சவாலை உலக தமிழினச் சமூகம் நேரிடையாக சந்திக்கிறது . நாகரீகங்களை உலகிற்கு போதித்த தமிழனின் வரலாற்று மனதில் ஆற்றவே இயலா கடும் காயத்தினை ஏற்படுத்தியுள்ள ஈழத்தின் இறுதி நாட்களின் ஓலம் வெறிப்பிடித்த விலங்காய் தமிழினத்தினை துரத்திக் கொண்டே இருக்கும். விழிகளில் வழியத் துடிக்கும் நீருடன், காயம் தந்த வன்மத்துடன் ஒரு தேசிய இனமே தன் விடுதலைக்காக இந்த உலகப் பெரு வெளி சமூகத்தில் தன்னை மீண்டும் தகவமைத்துக் கொண்டு போராட துணிகிறது. விடுதலை குறித்த சிதைக்க இயலா நம்பிக்கைகளோடு தமிழின இளைஞர்கள் உலக வீதிகளில் பாட்டனின் புலிக் கொடியோடு அலைகிறார்கள்.

ஆனால் போர்க்குற்றம் குறித்த ஏராளமான ஆதாரங்கள் வெளியான பின்னரும் உலக சமூகத்தின் கனத்த மெளனம் தமிழ் மக்களை வெறுப்பின் வெளியில் தள்ளி இருக்கிறது . அடையாள அரசியலுக்காக வெளியிடப்படும் உலக பிரதிநிதிகளின் கண்டன அறிக்கைகள் தமிழ் மக்களின் மீது நிகழ்ந்துள்ள கடும் துயரங்களுக்கு போதுமானவை அல்ல . தடை செய்யப்பட்ட இரசாயான ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒரு பொய்யினை கூறி அவசர அவசரமாக ஒரு நாட்டின் மீது படையெடுத்து, அந்த நாட்டின் தலைவரை சிறைப்பிடித்து..குறுகிய காலத்திற்குள் தூக்கில் ஏற்ற முடிந்த உலக வல்லாதிக்கத்தினால் அடுக்கடுக்காய் ஆதாரங்களை கண்டு விட்டப்பிறகும் சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவினை தண்டிக்க முடியாமல் தடுமாறுவது எதனால்..?

பெருகி வழியும் தன் உதிரத்தினால் தன் மேலான சுதந்திர தாகத்தினை உலக மானுடத்தின் மனசாட்சியின் முன் நிரூபிக்கிறார்கள் தமிழர்கள் . தம் தொன்மையான தாய்நிலம் பறி போவதை காணச் சகிக்காமல் வெகுண்டெழுந்து போராடிய ஒரு தேசிய இன மக்கள் தங்களின் அளப்பரிய தியாகங்களினால் மூடிக்கிடக்கும் உலகின் கண்களை திறக்க முயல்கிறார்கள் . சமூக நீதி மற்றும் மானுட உரிமையின் மேலும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கதைக்கப்படும் உலகின் அறம் தொக்கி நிற்கும் சமூக வாழ்வின் மேல் தன் உதிர எச்சிலை உமிழ்ந்து காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அவர்களின் வலியுணராமல் ..நீதி மறுக்கப்பட்ட அநீதியான இந்த உலகச்சமூகத்தின் மெளனம் தொடருமானால்… குமுறி உமிழப்பட்ட அவர்களது உதிர எச்சலில் உருக்குலைய நேரிடும் இவ்உலகு.

…அவர்களின் இன்றைய தேவை

வெறும் வார்த்தைகளல்ல.

உயர்த்திய கரங்கள்

அழுத்தமாய் ஒலிக்கும் குரல்கள்

சங்கிலித் தொடராய்

இணைந்த கைகள்

அடக்குமுறையை எதிர்த்து நிற்கும்

அணிவகுப்புகள். “ ( -கோசின்ரா கவிதையிலிருந்து)

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை


வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு’ எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.

படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். ‘வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது’ என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன.

தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.

நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா இன்குலாப் கவிஞர், இந்தியா சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா புவியரசு கவிஞர், இந்தியா பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா கலாப்ரியா கவிஞர், இந்தியா பழமலய் கவிஞர், இந்தியா சேரன் கவிஞர், கனடா மாலதி மைத்ரி கவிஞர், இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா புனித பாண்டியன் இதழாளர், இந்தியா காமராசன் பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ் சுகிர்தராணி கவிஞர், இந்தியா அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா புகழேந்தி ஓவியர், இந்தியா பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன் கவிஞர், இந்தியா கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா பொதியவெற்பன் பதிப்பாளர், இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா அமரந்தா மொழிபெயர்ப்பாளர், இந்தியா க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா தளவாய் சுந்தரம் ஊடகவியலாளர், இந்தியா பாலா கார்டூனிஸ்ட், இந்தியா பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா ஜனநாதன் திரைப்பட இயக்குநர்,இந்தியா அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், இந்தியா எஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா லெனின் ஊடகவியலாளர், இந்தியா மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் சுபாஷ் திரைப்பட இயக்குநர், நோர்வே ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன் மொழிபெயர்ப்பாளர், இந்தியா பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து டி. எஸ். எஸ். மணி பத்திரிக்கையாளர், இந்தியா இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா அருள் எழிலன் பத்திரிக்கையாளர், இந்தியா ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வளர்மதி நாடகாசிரியர், இந்தியா அறிவன் விமர்சகர்,இந்தியா நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா பாமரன் விமர்சகர், இந்தியா அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா ரஃபேல் கோட்பாட்டாளர், கனடா சிவதாசன் இதழாளர், கனடா இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா கவிமதி கவிஞர், துபாய் பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா ஜென்ராம் ஊடகவியலாளர்,இந்தியா அன்பாதவன் கவிஞர், இந்திய அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், கஜேந்திரன் ஊடகவியலாளர், இந்தியா கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா ஓவியா விமர்சகர், இந்தியா தமிழ்நதி கவிஞர், கனடா ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வீ. அரசு ஆய்வாளர், இந்தியா அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா தேடகம் தோழர்கள், தேடகம், கனடா கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து யமுனா ராஜேந்திரன் கோட்பாட்டாளர், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் மு. புஷ்பராஜன், இங்கிலாந்து காலம் செல்வம், கனடா கி. பி. அரவிந்தன், பிரான்ஸ் யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து கண. குறிஞ்சி, இந்தியா அருள் எழிலன், இந்தியா கீற்று நந்தன், இந்தியா.

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்களை இவ்வறிக்கையில் இணைத்துக்கொள்ள நாங்கள் முனையவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

பாக்யராசன் என்ற இனத்தின் நம்பிக்கை…

குடி செய்வல் என்னும் ஒருவருக்கு தெய்வம்

மடிதற்று தான் முந்துறும் -குறள்

என் உயிர் நண்பரும் உலக தமிழர் பேரமைப்பின் இணைச் செயலாளருமான பாக்யராசன் சேதுராமலிங்கம் அவர்களை முதன்முதலில் நான் ஆர்குட் உலகில் ஒரு தமிழுணர்வாளராக அடையாளம் கண்டேன். அன்று முதல் அவர் அப்படியே இருக்கிறார். தன் சொந்த இனம் தன் கண்முன்னால் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்ட போது துயருற்ற விழிகளை துடைத்துக் கொண்டு இனி என்ன செய்யலாம் ..எப்படி மீள் எழலாம் என உளமார யோசித்த சிலரில் இவர் மிக முக்கியமானவர். கணினி திரைக்கு முன்னால் அமர்ந்து கொள்கை ,கோட்பாடுகளை முழங்கி விட்டு தனிப்பட்ட தன் வாழ்வில் தடுக்கி விழுந்து கிடப்போர்தான் இந்த இணைய உலகில் அதிகம். ஆனால் பாக்யராசன் கணினி திரையில் தன் எழுத்தாக பதிப்பதை தன் வாழ்க்கையாக களம் அமைத்து போராடி வருபவர். தன் இனத்தின் மேன்மைக்காக சமரசம் இல்லாமல் களமாடும் போராளியாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார் பாக்யா. அமெரிக்காவில் கணினி பணி, கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என கனவு கண்டு விமானம் ஏறி பறக்கும் இவ்வுலகில் இனம் வீழ்ந்த துயரம் பொறுக்காமல் வீறு கொண்டெழுந்து அல்லும் பகலும் தன் இன எழுச்சிக்காக களமாடி வருகிறார் பாக்யா.கடல் கடந்து வாழ்ந்தாலும் இனம் நினைந்து துடிக்கும் கணினித் தமிழர்களில் பாக்யராசன் ஒரு ஆளுமை. இணைய உலகில் எங்கெல்லாம் தமிழினம் கருத்தால் தாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நாம் பாக்யாவினை வீறு கொண்ட ஒரு வீரனாய் நாம் சந்திக்கலாம். துயருற்ற இந்த இனத்தினை எவ்வாறு இடறலாம் என குறுக்குப்புத்தி கொண்டு குதர்க்கம் பேசுவோரை கண்டு வெகுண்டெழுந்து பாய்ந்து வரும் தன் கருத்தால் கதற அடிக்கும் பாக்யராசனின் நண்பனாக, ரசிகனாக , பின்பற்றும் உறவாக வாழ்வதில் உண்மையில் நான் பெருமைப் படுகிறேன். இன்னும் பாக்யாவினைப் பற்றி விரிவாக எழுதலாம். ஆனால் அவருடைய பணி என் எழுத்துக்களை தாண்டிய பரப்பினை உடையது. விவரிக்க இயலா பரப்பினை உடைய பாக்யராசன் தொடர்ந்த தன் பணிகளால் துவண்டு கிடக்கும் தமிழினத்தினை தோள் கொடுத்து நிமிர்ந்த முயன்று வருகிறார். பாக்யராசனின் குடும்பமே இன நலம் காக்க, தன் நலம் மறந்து போராடி வருகிறது. இன்னும் இந்த இனம் இத்துப் போகவில்லை என பசுமையாய் அடையாளம் காட்ட பாக்யராசன் விரீய விருட்சமாய் விரிந்து வருகிறார். என்னைப் பொறுத்தவரை பாக்யா போன்றோர்தான் இந்த இனத்தின் நசுங்காத நம்பிக்கை. சுயநலம் மிகுந்த இந்த வாழ்வில் இனநலம் காக்க வெள்ளை உள்ளத்தோடு களம் காணும் பாக்யராசன் தமிழ் திரை உலகின் தற்போதைய இன துரோக பாதையை தடுத்து நிறுத்த முயன்று வருகிறார். குமுதம் ரிப்போட்டரின் பதிவு இதோ…. ப்.எம்.எஸ். என்கிற வெளிநாட்டு விநியோக உரிமையில் கிடைக்கும் வியாபாரத்தைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் இலங்கை செல்வதால் எழுந்துள்ள பிரச்னையால் உலகத் தமிழ் அமைப்புகளின் தடை,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் (IIFA) விழாவுக்கு தமிழ் அமைப்புகளுக்கும்,தமிழ்த் திரைப்படத்துறையினரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், நடிகைகள் நமீதா,ஜெனிலியா உள்ளிட்டோர் அந்த விழாவைப் புறக்கணித்தனர். இந்நிலையில், நடிகை அசின் சல்மான் கானுடன் ‘ரெடி’ இந்திப் படத்திற்காக கொழும்பு சென்றார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகளை யாரும் தடுக்கக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது.நடிகர் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இலங்கை சென்ற அசின் மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு எதிரான நட வடிக்கையில் இறங்கியுள்ளன.

நார்வே ஈழத்தமிழர் அவையின் ஊடகத்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்.

‘‘திரையுலகினர் தனிப்பட்ட முறையிலோ, தொழில் முறையிலோ மற்றும் வர்த்தக ரீதியாகவோ இலங்கைக்குச் செல்வதை யாரும் தடுக்க முடியாது என்ற நடிகர் சங்கத்தின் தீர்மானத்தால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வேதனை அடைந்துள்ளோம்.இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காகவும் தமிழினப்படுகொலை செய்ததற்காகவும் தண்டனை யைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் உலகெல்லாம் தமிழர்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்த நேரத்தில், இலங்கை அரசுக்கு நற்பெயர் பெற்றுத் தரும் முயற்சியில் யார் இறங்கினாலும் தமிழர்களின் பெரும் கோபத்திற்கு ஆளாவார்கள் என்று பணிவுடன் நினைவூட்டுகிறோம்.

மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு என்ற பெயரில் ஏற்கெனவே இந்திய அரசு உள்பட பல நாட்டு அரசுகளிடம் இலங்கை அரசு பெருமதிப்பிலான பணம் பெற்று வருகிறது. இழந்துவிட்ட நற்பெயரை மீட்பதற்காகவும், சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காகவும் இந்தியத் திரைப்படத்துறையினரை வஞ்சகமாக தன் வலையில் வீழ்த்த இலங்கை திட்டமிட்டு செயல்படுகிறது. இலங்கை அரசின் சதி முயற்சிக்கு தமிழ்த் திரையுலகம் ஒருபோதும் துணை நின்றுவிடக் கூடாது.அதே நேரத்தில்,தமிழர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களைப் புறக்கணிக்க தமிழர்கள் ஒரு போதும் தயங்கமாட்டார்கள் என்பதையும் நினை வூட்டுகிறோம்.

உலகத் தமிழர்களின் முயற்சிக்குத் துணை நிற்காவிட்டாலும் எதிராகச் செயல்பட வேண்டாம் என்று தமிழ்த் திரையுலகினரை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார், தமிழ்ச்செல்வன்.

மலேசியாவின் பினாங்கு அமைப்பின் தலைவர் சதீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசி யாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் உலகத் தமிழர் அமைப்பு ((WTO),அமெரிக்கத் தமிழர் அரசியலவை (USTPAC),வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (FetNa) உள்ளிட்ட தமிழ் அமைப்புகளும் தமிழ்த் திரைத்துறையினருக்கு எதிராக அவசர தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.சில தமிழ் அமைப்புகள் தமிழ்நாட்டிலிருந்து படங்களைத் தவிர்க்க தாங்களே தமிழ்ப்படங்களைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளன.இதுகுறித்த அறிவிப்பை மிக ரகசியமாக வைத்திருக்கும் இவர்கள், படத் தயாரிப்புக்கான ஆரம்ப கட்ட வேலைகளில் இறங்கியுள்ளனர்.

உலகத் தமிழர்அமைப்பு இணைச் செயலாளர் பாக்கியராஜன் சேதுராமலிங்கம் நம்மிடம், ‘‘‘அரபு அல்லாத பழங்குடி கறுப்பின மக்களை படுகொலை செய்த குற்றத்திற்காக சூடான் நாட்டின் அதிபரான ஓமர் அல் பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவித் திருக்கிறது. இந் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் தங்கள் நாட்டுக்கு அல் பஷீர் வந்தால் அவரைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம் என்றும், ஜூலை 12-ம் தேதி நெத்தியடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.அதேபோல் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்தான் ராஜபக்ஷே. அவருக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத்துறையினர் செயல் பட்டால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்’’ என்று கொதித்தார்.

உலகத் தமிழர்களின் புறக்கணிப்பால் தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்மையிலேயே பாதிப்பு வருமா என்று,திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘பெரிய நடிகர்கள், பெரிய பேனர்கள் படங்களின் வெளிநாட்டு (FMS -ஃபாரின்மலேசியா-சிங்கப்பூர்)உரிமத்தையும்நம்பித்தான் நாங்களிருக்கிறோம். ஆரம்பத்தில் மலேசியா,சிங்கப்பூரில் மட்டுமே தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன.இப்போது,உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியுள்ளதால் அங்கெல்லாம் தமிழ்ப்படங்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. கனடா, நார்வே, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒவ்வொரு படத்திலும் 10 முதல் 20 பிரிண்ட்கள் வரை விற்பனை ஆகிறது. ஒரு பிரிண்ட் குறைந்தபட்சம் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை விற்கப்படும். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நட்சத்தி ரங்களின் படங்கள் ரிலீஸுக்கு முன்பே வியாபாரமாகிவிடும்.மற்ற படங்களின் வெற்றியைப் பொறுத்து விலை ஏறும் அல்லது இறங்கும்.எனவே, எப்.எம்.எஸ்.உரிமையை நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம்’’ என்றனர். என் நண்பன் பாக்யராசனின் மின்னஞ்சல் முகவரி [email protected]. அவரை வாழ்த்துங்கள். இனம் மீட்க துடியுங்கள்.

சீமானின் கைது – தமிழ்த் தேசிய விடியலுக்கான புள்ளி.

இந்த இனத்திற்காக உண்மையாய் களத்தில் நிற்கிற போராளி சீமான் ஆட்சியாளர்களால் தேடப்படும் குற்றவாளியாக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். ஆட்சியாளர்களாகிய இவர்கள் குற்றவாளிகளை தேடும் அழகினையும். அவர்களினை பிடிக்கும் பாங்கினையும் நாம் சற்றே ஆராய்வோம். இந்திய நீதிமன்றங்களால் கொலை ,கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா இந்திய தலைநகருக்கே வந்து ராஜ உபச்சாரத்தோடு விருந்துண்டு போகிறான். கடமை உணர்வு மிக்க, கண்ணியம் மிக்க தமிழினத்தில் பிறந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் டக்ளஸிடம் பணிவு காட்டுகிறார். மத்திய அரசு ஒரு கொலைக்குற்றவாளிக்கு விருந்து உபச்சாரம் செய்து கூத்தடிக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய கருணாநிதியின் காவல்துறை வழக்கம் போல டெல்லி காவல் துறைக்கு கடிதம் எழுதுகிறது. யார் இதை கேட்பது..? இன்று சீமானை பிடிக்க 6 தனிப்படைகள் வைத்து பாய்ந்து பாய்ந்து செயல்படும் தமிழக காவல்துறையின் வீரம் அன்று எங்கே போனது..? .உலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அறிவித்த ராசபக்சே உல்லாச பயணம் போக இந்தியாவிற்கு வருகிறான். ஆனால் அவனுக்கு சிவப்பு கம்பள சிங்கார வழக்கு. போபால் விஷவாயு வழக்கில் முதன்மை குற்றவாளியான ஆண்டர்சனை அரசே விமானம் ஏத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறது. விமானத்தில் பாதுகாப்பாக ஆண்டர்சன் ஏறுகிறானா என்று பார்க்க அன்றைய மத்திய மந்திரி புன்னகை புகழ் நரசிம்மராவ் வேறு காவல் காத்த கதையும் இந்த நாட்டில் தான் நடந்திருக்கிறது. இந்தியாவிற்கு வந்த‌ ட‌க்ளஸ் தேவான‌ந்தாவை கைது செய்ய‌க் கோரி, உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு இன்ன‌மும் வாய்தாவிற்கு வாய்தா என ந‌க‌ர்ந்து நிலுவையில் இருக்கிறது.ஆனால் த‌ன‌து சொந்த‌ மீன‌வ‌ ச‌கோத‌ர‌னின் கொலையினை சீமான் தட்டி கேட்கக் கூடாது.

ஏனென்றால் சிங்களனைத் த‌ட்டிக் கேட்ப‌து என்ப‌து இந்திய‌ இறையாண்மைக்கு எதிரான‌ செயலாக‌ மாற்ற‌ப்ப‌ட்டுவிட்ட‌து. குற்ற‌வாளி ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவைப் பிடிக்க‌ க‌டித‌ம் எழுதிய‌ த‌மிழ‌க‌ காவல் துறை, இன்று தன் சொந்த சகோதரனின் கொலையில் வெகுண்டு பேசிய சீமானைக் கைது செய்ய வாகனங்களை மறிக்கிறது. அலைபேசிகளை அலசுகிறது. போர்க்குற்றம் செய்த சிங்கள அதிபனை காக்க துடிக்கும் ஆர்வத்தினை நம் மீனவன் உயிரின் மீது மத்திய மாநில அரசுகள் காட்டினார்களா..? இல்லையே..

பேச்சுரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியலைப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கத்தினையும் ,அதன் தலைமையையும் ஆதரித்து பேசுவது குற்றமாகாது எனவும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இந்த நிலையில் தன் சொந்த காழ்புணர்ச்சியினாலும்..காங்கிரஸ் மீதான தன் விசுவாசத்தினை விவரிக்கும் ஆர்வத்தினாலும் மாநில அரசு சீமானை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது போன்ற அடக்குமுறைகளால் ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமை தாகத்தினை முறியடித்து விடலாம் என்ற ஆட்சியாளர்களின் தவறான கணக்கு பிழையில் முடியப் போவதை எதிர்காலம் காட்டும்.

இவற்றை எல்லாம் பிரபாகரனை தன் ஆன்ம பலமாக கொண்டிருக்கும் சீமான் முறியடிப்பார். வீழ்ந்த இனம் இது போன்ற கைதுகளால் எழுவதற்கான…எழ வேண்டிய எத்தனிப்பிற்கான அவசியத்திற்கு தள்ளப்படுகிறது. காலம் நம்மை எந்த புள்ளியில் நகர்த்துகிறது என்பதை நாம் உணர துவங்குவோம். நம் இன தேசிய இனத்தின் ஒர்மைப்புள்ளியின் துவக்கமாக இதை நாம் கருதுவோம்.

சீமான் – உயர்த்தும் கரத்தில் ஒளிரும் சூரியன்..

அண்ணன் சீமான் மீது மீண்டும் வழக்கொன்றினை பதிவு செய்து விட்டு தனிப்படைகள் பல வைத்துக் கொண்டு தேடுகின்றனர் காவல் துறையினர். தமிழ் இனத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கின்ற சீமானின் ஆவேசம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாய் அமைகின்றன இத்தகைய அச்சுறுத்தல்கள். தாக்கப்பட்டு ..நிர்வாணப்படுத்தப்பட்டு..மனித மாண்பிற்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட தன் எளிய மீனவ சகோதரனின் மரணத்திற்காக ஆற்றாமை வலியோடு கத்தித் தீர்த்த சீமானின் சினம் கொண்ட அறம் ஊழலும்..துரோகமும் புரையோடிப் போன மூன்றாம் தர ஆட்சியாளர்களுக்கு சவாலாய் இருக்கிறது. என் சகோதரனை கொல்லாதே.. அவனை நீ அடித்தால் நான் உன்னை அடிப்பன் என்ற அறச் சீற்றம் சிங்கள பேரினவாதத்தின் மீது இந்தியாவின் மலர்ந்து விட்ட கள்ளக் காதலுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. ஒரு மனிதனின் உணர்வு கொப்பளிக்கும் பேச்சு அதிகார உச்சங்களுக்கு அச்சுறுத்தலாய் விளைந்து அசைக்க முடியாக அதிகாரத்தின் மாட மாளிகை..கூட கோபுரங்களை கவிழ்க்கும் பெரும் புயலாய் மாறுவது வரலாற்றில் புதிதல்ல. வரலாறு எத்தனையோ ஆகச் சிறந்த பேச்சாளர்களை கண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் மாபெரும் பேச்சாளர்களையே தன் மூலதனமாக கொண்டு வளர்ந்தன. கரகரத்த குரலால் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தமிழ்நாட்டில் பாடை கட்டினார் அறிஞர் அண்ணா . முதலாம் உலகப் போரின் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெர்மனியை தன் உணர்வு மிக்க பேச்சால் உருவேற்றி உருவாக்கியவர் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின் போது சரிந்து கிடந்த இங்கிலாந்தினை சுருட்டு ஊதும் உதடுகளால் உரையாற்றி உசுப்பேற்றி உயிரூட்டியவர் சர்ச்சில். இந்திய விடுதலையில் அனலாய் தகித்த சுபாஷ் சந்திர போஸின் சொற்கள் இன்னமும் உலவுகின்றன இலட்சியங்களாய் உலகில்.

சொற்களின் வலிமை மிகப் பெரியது. சொற்களே தேசங்களை உருவாக்குகின்றன. தோல்வியாலும்.. அடிமைத்தனத்தினாலும் சினம் கொண்ட மனநிலை சீறி பாய்ந்து உதிர்க்கும் சொற்கள் காற்றில் மிதந்து..கால்கள் முளைத்து..சோம்பிக் கிடக்கும் விழிகளில் வெளிச்சத்தினை பாய்ச்சும் வல்லமை உடையன. சீமானின் சினமும் இத்தகையதுதான்.

ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமைப் போரில் தவிர்க்க இயலா இருள் ஒன்று சூழுகையில் வெளிச்ச தெறிப்பாய் வெளியே வந்தார் சீமான். முற்போக்கு மேடைகளில் பெரியாரியலையும், பொதுவுடைமையும் ,தமிழினச் சிறப்பினையும் ..பாடல்களோடும், நகைச்சுவையோடும் விவரித்த சீமான் தேசியத்தலைவர் பிரபாகரனின் சந்திப்பிற்கு பிறகு ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க சொல்லாயுதமாய் மாறிப் போனார்.

எளிய மனிதனின் ஆழ் மனதில் கவிழ்கின்ற துயரொன்றின் விளைவாய் பிறக்கின்ற சினமாய் மேடையில் முழங்கினார் சீமான். அனல் தெறிக்கும் அவரது சொற்களில் பிரபாகரன் என்ற பெயர் உச்சக் கட்ட பெருமிதமாய் நிலைநிறுத்தப்பட்டது. ஈழம் என்பது இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கான நாடு மட்டுமல்ல.. உலகில் வாழும் 12 கோடி தமிழர்களுக்கான தேசம் என உரக்க அவர் முழுங்குகையில் தமிழர்களுக்கான நோக்கம் ஒர்மையாக ஒன்றுப்பட்டு ஒளி வீசியது.

மேடையில் முழங்குகையில் சீமானின் உடற்மொழி மிக தனித்துவமானது. கைகளை வீசி, காற்றினை அலசி…உடலினை முறுக்கி ..நெருப்புத் துண்டுகளாய்..அடிவயிற்றில் இருந்து ஆறாத சினமாய் சீறிப்பாயும் சீமானின் வார்த்தைகளில் சிக்கும் எதிரி அம் மேடையில் சின்னாப்பின்னாபடுவதை நாங்கள் மெய்சிலிர்க்க பார்த்திருக்கிறோம். ஈழம் மட்டும் மலர்ந்தால் இங்குள்ள தமிழன் ‘என் அண்ணன் நாட்டில் லஞ்சம் இருக்கா..? இங்கு மட்டும் ஏன் லஞ்சம் வாங்குகிறாய் ..?’ என சீறிக் கொண்டு செருப்பால் அடிப்பான் என சீமான் சிலிர்ப்பாய் விவரிக்கையில் சீமானின் கால்கள் பின் மடங்கி செருப்பினை கழற்ற எத்தனிக்கும் அந்த லாவகம் யாருக்கும் எளிதில் அமையாதது. தான் கண்ட ஈழத்தினை கனவின் தேசமாய் அவர் விவரிக்கையில் குரலில் ஓடும் குழைவும், இன்பமும் உண்மையானவை. என் அண்ணன் பிரபாகரன் என உச்சஸ்தாயில் அவர் குரல் மேல் எழும்பும் தருணங்களில் அவர் விழிகளின் ஓரத்தின் உண்மையான சகோதரனின் பாசம் வழியும். இல்லாத ஒன்றாய் இருக்கின்ற இறையாண்மையின் போலித் தனங்களை அவர் வெளிக் கொணரும் தருணங்களில் எள்ளலும்..துள்ளலும் மிகுந்த கேலிகளில் கூட துயர் ஒட்டிக் கொண்டிருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்.

ஈழத்தில் நம் சகோதரிகளின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறுவுகளை ஆறாத காயத்தோடு்ம்.. தாங்காத வலியோடும் அவர் விவரிக்கையில் குரலில் காயம் பட்ட சிறுத்தையின் சினம் கொண்ட வன்மத்தின் வெப்பத்தினை நான் உணர்ந்திருக்கிறேன்.எத்தனையோ இரவுகளில் ..ஏதேதோ ஊர்களில்.. விடுதியின் மங்கலான வெளிச்சத்தில் தனிமையாய் படுத்து படித்துக் கொண்டிருக்கும் அண்ணன் சீமானை உண்மையில் நான் வேதனையோடு பார்த்திருக்கிறேன். ஏன் இந்த மனிதனுக்கு மட்டும் துயரும்..வலியும் சிறையும் மிகுந்த வாழ்க்கை..? .ஏன் இந்த மனிதன் மட்டும் இப்படிப்பட்ட வலி மிகுந்த கொடும் இருட்பாதையில் முள் செருப்போடு நடந்து செல்கிறான்..? இவனுக்குதான் அருகிலேயே செல்வ செழிப்பான பகட்டு அரண்மனையின் பளபளப்பான ராஜ வீதிகள் இருக்கின்றனவே..? அதை தேர்ந்தெடுக்காமல் வலிய முன் வந்து இந்த மனிதன் ஏன் வலியை தேர்ந்தெடுத்தான் என்ற வினாவில் தான் ஒரு இனத்தின் விடுதலைக்கான தணியாத தாகம் ஒளிந்திருக்கிறது.

அண்ணன் சீமானின் உயர்ந்த பட்ச விருப்பம் ஈழம்..அதுதான் அவருக்கான உளவியல் தீர்வு.அதுதான் அவர் காயங்களுக்கான மருந்து. அதுதான் அவருக்கு அனைத்தும். ஒரு நாள் நான் அண்ணன் சீமானிடம் கேட்டேன். ஏன் அண்ணா நீங்கள் மட்டும் இப்படி..? ..என்னை சற்று நிமிர்ந்து பார்த்து சற்றே சிரிப்பாய் சொன்னார்.. ‘என்னையே இப்படி பார்க்குற நீ என் அண்ணனை பார்த்தால் அசந்திருப்பாய்’. உண்மையில் அவர் தேசியத்தலைவர் பிரபாகரனை நினைக்காத நொடியில்லை. ஒவ்வொரு பொழுதிலும் அண்ணன் எங்களைப் போன்ற தம்பிகளிடம் பகிர துடிக்கும் செய்தி..தத்துவம்.. அனைத்துமே பிரபாகரன் தான். கொஞ்சம் தாமதமாகத்தான் எனக்கு புரிந்தது. அவர் தன்னையே தன் அண்ணன் போல மாற்றிக் கொள்ள போராடி வருகிறார் என்று. பிரபாகரன் என்பது மிக நீண்ட நெடிய பாதை. அப்பாதையில் சற்றும் தளரால் மூச்சிறைக்க ஒடிக் கொண்டிருக்கிறார் அண்ணன் சீமான்.

ஒரு இனத்தின் தோல்விக்கு பிறகான நம்பிக்கை துவக்கமாய் சீமான் அடையாப்படுத்தப்பட்டிருக்கிறார். எந்த அடையாளங்களை அழிப்பதற்கு ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்களோ … அதே அடையாளமாய் அச்சு அசலாய் கம்பீரமாய் நிற்கிறார் சீமான். இதுதான் ஆட்சியாளர்களுக்கு பிரச்சனை. சீமானின் கனவு மிகப் பெரியது. அதற்கான பாதையும் மிக தொலைவு. ஆனால் எங்களைப் போன்றோரை இழுத்துக் கொண்டு ஓடும் ஒப்பற்ற தலைமை இயந்திரமாய் அவர் போய் கொண்டிருக்கிறார். கடும் கோபத்துடன் கனன்று தெறிக்கும் அவரது வார்த்தைகள் ஆட்சியாளர்களை அச்சப்பட வைத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் சீமான் தனி மனிதனல்ல. அவர் தோல்வியின் துயரும்..வலியும் தந்த வன்மம் மிக்க ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க ஆயுதம்..

சீமான் ஒரு எய்யப்பட்ட அம்பு.

பிரபாகரன் என்ற வில் சீரிய இலக்கோடு சீற வைத்த அம்பு..

இதன் தாக்குதலில்

இலக்கு இல்லாமல் போகும்.

துளைக்கும் வலிமையில் துயர் தீய்ந்து போகும்.

அது வரை எய்யப்பட்ட அம்பினை

தடுத்துப் பார்க்கும் தகரங்களும்,, தடைகளும்,தகர்க்கப்பட்டு

சிறைகள் சிதைக்கப்பட்டு.. துளைக்கப்பட்டு..

தெறிக்கும் தெறிப்பில் ஒளிரும் விடுதலையின் சுடர்.

Page 13 of 15

Powered by WordPress & Theme by Anders Norén