
நமது காலத்திற்கும் மட்டும்மல்ல.., எதிர் காலத்திற்கும் உரிய சிறந்த மனிதர்
சேகுவேரா மட்டுமே……என் இதயத்தின் அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம்
சேகுவேரா….குறை காண இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப் போராளி சேகுவேரா
மட்டுமே நம் குழந்தைக்களுக்கான எதிர் கால உதாரணம்….
-தோழர்.பிடல் காஸ்ட்ரோ..
சேகுவேரா-என்ற மந்திரச் சொல் 90களின் துவக்கத்தில் என் செவிகளில்
விழ துவங்கியது……முதலில் அவர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு அவரின் சுருட்டு பிடிக்கும் படம் மட்டுமே கிடைத்தது…
அந்த ஒரு படமே நான் சே-வை நோக்கி நான் நெருங்கி வர போதுமானதாக இருந்தது…..அவர் எல்லா சர்வாதிகாரங்களுக்கும் சவாலான சாகசக்காரராக எனக்கு தோற்றமளித்தார்…..அதுவும் அந்த புகைப்படத்தில் அவர் காட்டும் அலட்சியம் உள்ளடக்கிய கம்பீரம் உலகப் புகழ் வாய்ந்தது.
ஒரு தனி மனிதன் மீது பார்த்தவுடன் பற்று வர அவரது முகப் பொலிவும்,தோற்றக் கவர்ச்சியுமே போதுமான அம்சங்கள் என்ற வகையில்
எடுத்த வுடன் சேகுவேரா எனக்கு பிடித்த ஆளுமை ஆனார்….
பிறகு திருச்சி சட்டக்கல்லூரியில் நான் பயின்ற போது அங்கு ஒரு கருத்தரங்கிற்கு
வந்த ஒரு வெளிநாட்டவர் அணிந்திருந்த சட்டையில் சேகுவேரா படம் பார்த்தேன்…
அதுக் குறித்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு புரட்சியாளர்
என்ற தகவலையும்,கியூபா நாட்டில் எழுந்த புரட்சியின் கதாநாயகன் என்றும் தகவல்களை தெரிந்துக் கொண்டேன்.
பிறகு சேகுவேராவைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் காட்டினேன்.பிறகு
விடியல் பதிப்ப்பகம் வெளியிட்டு உள்ள சேகுவேரா-வாழ்வும்,மரணமும் என்ற
நூலை வாங்கினேன்…….அது எனக்கு திருமணம் நிச்சயமான பொழுது….
என் மாமா நான் ஆசைப்படுவதை எண்ணி அந்த புத்தகத்தை வாங்கிகொடுத்தார்…. ஒரு மூன்று மாதக் காலம் நான் அந்த புத்தகமும்,கையுமாகவே அலைந்தேன்..என் திருமண நாளன்று கூட கிடைத்த சிறு
ஒய்வில் கூட படித்துக்கொண்டிருந்தேன். முதலிரவு முடிந்து பின்னிரவில் எனக்கு ஏற்பட்ட விழிப்பில் மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன்….
எனக்கு புதுமனைவி மீது இருந்த காதலை விட சேகுவேரா என்ற அந்த மாபெரும் புரட்சிக்காரனின் மீது இருந்த பற்று மிக அதிகமாக இருந்தது…….
சேகுவேரா பிடிப்பட்ட பொழுதுகளை படித்த போது விம்மி வெடித்து அழுதேன்….
அவர் சுட்டுக் கொல்லப் பட்டதை படித்துவிட்டு எனக்கு ஏற்பட்ட கடுமையான துயர் என்னை கடுமையான காய்ச்சலில் வீழ்த்தியது……
அப்படிப் பட்ட ஒரு புரட்சிக்கரமான ,அழகு மிளிர்ந்த , இளம் ஆளுமை ஏகாதிபத்திய கூலிப் படைகளால் சுட்டுக் கொள்ளப் பட்டது இன்னும் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக உள்ளது.
அவர் எதற்காக மரணத்தை நோக்கி நடந்தார்..? எந்தத் தேவை அவரை அவசர அவசரமாக சாவுக்குழிக்குள் தள்ளியது? …..
விடை தேடிப் பார்த்தால் நாம் யாருமே உணர்ச்சி வயப்படாமல் இருக்கமுடியாது…..
உலகம் முழுக்க உள்ள எளிய மக்கள் அனைத்து தளைகளில் இருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றும் ,அதற்கு உலகளாவிய புரட்சி நிகழ வேண்டும் என அவர் விரும்பினார்.
அதன் காரணமாகவே ….
கியூபா நாட்டில் தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,
தனக்கு இருந்த புகழ்,செல்வாக்கு,குடும்பஉறவுகள்,செல்வம் ,அனைத்தையும் விட்டு விட்டு இரவோடு இரவாக பொலிவியா சென்றார்……அவர் புரட்சிக்காரனாக ஆனதில் சூழ்நிலைக்கு எந்த பங்கும் இல்லை. மாறாக சக மனிதர்களின் மீது அவர் வைத்த அளவற்ற பற்றே காரணமாக திகழ்ந்தது.
(தொடரும்……)