பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: துளிகள்

துளி-3

உண்மையில் எளிமை என்பது என்ன.. அது ஒரு பண்பாடா.. அது ஒரு ஒழுங்கா.. அதுவரை கடைபிடித்து வந்த பழக்கவழக்கங்களின் நீட்சியா.. அது ஒரு அடையாள அரசியலா.. என்றெல்லாம் யோசிக்கும் போது எளிமை பற்றி பல்வேறு கதவுகள் நம் முன்னே திறக்கின்றன.
 
எளிமை பற்றி பல்வேறு சமய மரபுகள் விரிவாக ஆராய்கின்றன. புத்தமும், சமணமும் எளிமையை அடிப்படையாக கொண்டவை. இந்திய தத்துவ மரபில் எளிமைக்கென்று ஒரு தனித்த இடம் இருக்கிறது. ஏறக்குறைய ஜப்பானின் ஜென் மரபு கூட எளிமையை அடிப்படையாக கொண்டதுதான்.
 
ஆனால் எளிமை பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எளிமை என்பது ஒருவித ஆடம்பரம் என்ற விமர்சனம் உண்டு. எளிமை என்றாலே நம் கண்முன்னால் வருவது காந்தியின் தோற்றம்தான். ஆனால் அந்த காந்தியின் எளிமையை பராமரிப்பதற்கு காங்கிரஸ் கட்சி அக்காலத்தில் பல லட்ச ரூபாய் செலவு செய்தது என்ற விமர்சனங்கள் உண்டு. ஏனெனில் அந்த எளிமை குறியீடுதான் அக்காலத்து காங்கிரசின் அரசியல் மூலதனம்.
 
என் தந்தையின் தாய் என் ஆத்தா ராஜாம்பாள் 84 வயது வரை உயிருடன் இருந்து மறைந்து போனார். தன் மகன்கள் நன்கு சம்பாதிக்கும் காலத்திலேயே தான் இளமையில் உணர்ந்த அனுபவித்த , வறுமை நிலையை தன் இறுதிக்காலம் வரை மிக கவனமாக அவர் பாதுகாத்து வந்தார். செருப்பு அணிய மாட்டார். விலை உயர்ந்த புடவை வாங்கிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுப்பார். நூல் புடவைகளே அவரது அடையாளம்.காரில் ஏற அவ்வளவு தயங்குவார். நடமாட்டம் இருக்கும் வரை எங்கு சென்றாலும் அவர் வெறுங்காலோடு நடந்தே தான் போவார். அவரைப் பொறுத்தவரை எளிமை என்பது அவரது அன்றாட வாழ்வியல் முறைமை . அவரைப் போலவே என் மாமா வழக்கறிஞர் சீனு ஜெயராமன் அவர்களின் தந்தையார் மறைந்த சீனுவாசன் அவர்கள் தன் மகன் புகழ் பெற்ற வழக்கறிஞராகி , சம்பாதித்து காரில் செல்லும் போதும் தான் நடத்தி வந்த டீக் கடையை விடாமல் நடத்தி வந்ததும், வரும் வாடிக்கையாளர்களுக்கு டீ தயாரித்து ஆற்றிக் கொடுப்பதையும் நான் கண்டிருக்கிறேன். தன் மகன் புகழ்பெற்ற ஒரு அரசியல் தலைவராக , திரைப்பட இயக்குனராக இருந்த போதும் இன்னமும் வயல்வெளியில் வேலை பார்த்து வருகிற அண்ணன் சீமானின் பெற்றோர்களை நான் நேரடியாக கண்டு வியந்திருக்கிறேன்.எளிமையாக இருப்பதே தனது அடையாளமாக கொண்ட பெருமக்கள் அவர்கள்.
 
அரசியலில் இடதுசாரிகளின் எளிமை மிகப் புகழ் வாய்ந்தது ‌. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகம் ஒரு நவீன கார்ப்ரேட் அலுவலகத்தை விட மிக ஆடம்பரமாக இருக்கும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
இளம் வயதில் கம்யூனிஸ்ட் ஆக முயல்வதும், சிவப்பின் பின்னால் திரிவதும் என்பது ஒரு லட்சிய வாழ்வின் மகத்தான கனவு. நானும் சில காலம் அவ்வாறு திரிந்திருக்கிறேன். நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது தோழர் ஆர் என் கே என்று அழைக்கப்பட்ட அய்யா நல்லக்கண்ணு அவர்களே எனக்கு அரசியல் ஆதர்சம். அவர் பற்றிய பிம்பங்களை என்னுள் பதிய வைத்து அவரை ஒரு லட்சிய புருஷராக என்னுள் பதித்தவர் எனது ஆசான் தோழர் சிஎம் என்று அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய சி.மகேந்திரன் அவர்கள்.
 
ஒருமுறை எங்கள் தஞ்சை மாவட்ட சிபிஐ கட்டிடப்பணிகளை பார்வையிடுவதற்காக தோழர் ஆர்என்கே அவர்கள் தஞ்சை வருவதாக அறிந்தேன். அவரை நேரில் சந்திக்க வேண்டுமென நான் நீண்ட நாட்களாக ஆவல் கொண்டிருந்தேன். அவர் வருவதற்கு முன்பாக நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக தஞ்சை கிளம்பி சென்றேன். சற்று நேரமாகிவிட்டது. அலுவலக வாசலில் யாரும் இல்லை. நல்ல வேளை.. ஐயா நல்லக்கண்ணு வரவில்லை போலும். வந்துவிட்டிருந்தால் கூட்டம் கூடியிருக்கும் என நினைத்துக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தேன். அலுவலகத்திலும் யாரும் இல்லை. அந்த வளாகத்தில் இருந்த ஒரு கிணற்றில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் ஐயா நல்லகண்ணு அவர்கள் வந்து விட்டார்களா என்று வினவினேன். அவர் என்னை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு குளித்துக் கொண்டிருந்தார். நானும் அங்கே ஒரு நாற்காலியில் அமர்ந்து அருகில் இருக்கிற ஜனசக்தி நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து குளித்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் தலையைத் துவட்டியவாறே சொல்லுங்க தோழர்.. என்றார் ‌. நான் மீண்டும் ஐயா நல்லகண்ணு அவர்கள் எப்போது வருவார்கள் என கேட்டேன். அதற்கு அவர் நான் தான் நல்லகண்ணு ‌‌. சொல்லுங்க தோழர்‌.. என்றார்.
 
ஒரு நொடியில் எனக்கு உலகமே அதிர்ந்தது போல தோன்றியது. தீவிரமான ஒரு அசட்டுத் தனமும் வெட்க உணர்ச்சியும் என்னை ஆட்கொண்டன. ஒருவகையில் அந்த எளிமை என்னை அச்சுறுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
 
பிறகு அவரிடம் உரையாடத் தொடங்கினேன். என் அறிவுஜீவி தனத்தை அவரிடம் காட்ட நான் அது வரை படித்து வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் மொழிபெயர்ப்பு நூல்களை சார்ந்து சில கேள்விகளை அவர் முன் வைத்தேன்‌‌. விஞ்ஞான கம்யூனிசம், மார்க்சிய பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன். அவர் பொறுமையாக எளிய மொழியில் தெளிவான பதில்களை அளித்துக் கொண்டே வந்தார். உண்மையில் அவர் மொழியில் இருந்த எளிமை என் மேதமைத்தனத்தை சுக்குநூறாக நொறுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். நீ எல்லாம் ஒரு அறிவாளியா என்று நம் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது போல அவரது எளிமை அந்த அளவு வலிமையாக இருந்தது..
 
கொஞ்ச நேரத்தில் மௌனமாகிப் போனேன். ஐயா நல்லக்கண்ணு அவர்களும் கட்சித் தோழர்கள் வரவே கூட்டத்திற்கு கிளம்பினார். அப்போது தான் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் செருப்பு அறுந்துவிட்ட விபரமும், தைத்து தைத்து பயன்படுத்தியதால் அது மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சென்று விட்ட விபரமும் என்னை வந்து சேர்ந்தன ‌. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு சம்பாதித்துக் கொண்ட கெட்டப் பெயரை இச்சூழ்நிலையை பயன்படுத்தி சரிசெய்து கொள்ள வேண்டுமென ஆர்வக்கோளாறாக திட்டமிட்டேன். அவரது செருப்பின் அளவை அறிந்து கொண்டு அருகில் இருந்த பேட்டா கடையில் நல்ல தோல் செருப்பாக பார்த்து வாங்கிக்கொண்டு போனேன். அட்டையை பிரித்து பார்த்தவர் தான் இதுபோன்ற செருப்புகளை தான் பயன்படுத்துவதில்லை எனவும் சாதாரண சிலீப்பர் செருப்புகளைத்தான் பயன்படுத்துவதாகவும் கூறி செருப்பினை மாற்றச் சொன்னார். மேலும் கட்சித் தோழர்கள் இது போன்ற ஆடம்பர செலவுகளை செய்யக்கூடாது எனவும் பொதுவாக கடிந்து உரைத்தார். செருப்பை மாற்றி வாங்கி வந்த பிறகு அதற்கான ரசீதை பார்த்து அதற்கான தொகையை மறக்காமல் என்னிடம் வழங்கிவிட்டு என் தோளைத் தட்டி.. கட்சி வகுப்புக்குப் போங்க தோழர் ..என்று சொல்லியவாறே நகர்ந்து போனார்.
 
அதுவரை நான் கொண்டிருந்த அனைத்து அரசியல் கருத்தாக்கங்களையும் தனது எளிமை வாழ்வின் மூலம் தகர்த்தெறிந்துப் போனார் ஐயா நல்லகண்ணு. எளிமை என்பது நான் மேற் சிந்தித்த எதுவும் இல்லை, அது ஐயா நல்லக்கண்ணு போன்றோரின் இயல்பான வாழ்வியல் என்பதை உணர்ந்துக் கொண்டேன்.
 
நான் திராவிட இயக்க குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவன். பெரியார் பார்த்து பார்த்து செலவு செய்தவர் என்பார்கள். ஆனால் அவர் வழி வந்தவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் இருக்கும் பெரியார் திடல், அண்ணா அறிவாலயம் போன்ற ஆடம்பர அரண்மனைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். சாதாரண திராவிட கட்சிகளின் நகர , ஒன்றிய நிர்வாகிகளே ஆடம்பரமாக வெள்ளையும் சொள்ளையுமாக வலம் வரும்போது அவர்களுக்கு மத்தியில் சாதாரண சிலீப்பர் செருப்பு போட்டு , அலைந்து திரியும் அய்யா நல்லகண்ணு போன்றவர்கள் மானுட வாழ்வின் மகத்தான அதிசயங்களே..
 
இச்சம்பவம் குறித்து நான் ஒரு முறை தோழர் சி மகேந்திரனிடம் வியந்து சொல்லிக் கொண்டிருந்தபோது.. அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு எழுந்து சென்றார். அப்போது அவர் தோளில் மாட்டியிருந்த அவரது ஜோல்னா பை கூட தையல் விட்டு கிழிந்து இருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

துளி-2

 

 

இன்று தம்பி துருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தைப் பற்றி மிக சுவாரஸ்யமான பல தகவல்களை துருவன் சொல்லிக்கொண்டே போனான். உண்மையில் ஆரண்யகாண்டம் எனக்கும் பிடித்த படம் தான். தமிழில் வெளிவந்து இருக்கிற சில அபூர்வமான திரைப்படங்களில் ஆரணிய காண்டம் ஒன்றாக திகழ்கிறது. தமிழின் முதல் Neo noir வகை திரைப்படம். Neo noir வகை என்பது குற்றங்கள் அதன் பின்னணிகள் குறித்த தனித்துவ பார்வையோடு புனையப்படும் வகைமை. சென்சாரில் 52 கட் வாங்கி வெளியான இத்திரைப்படத்தின் காட்சி ஓட்டத்தில் வெட்டப்பட்ட காட்சிகளால் உறுத்தும் jumb கிடையாது. தியாகராஜன் குமாரராஜா என்ற புதுமுக இயக்குனர். தான் எடுத்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக இதுவரை வழமையாக எழுதப்பட்ட தமிழ் சினிமாவின் விதிகளை மாற்றி எழுதினார். சீரான/புதுமையான திரைக்கதை வடிவத்திற்கு ஆரண்ய காண்டம் ஒரு மாபெரும் உதாரணம். ஆரண்யம் என்றால் காடு. அப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் விலங்குகளின் பெயர்களை ஒட்டிய பெயர்கள். ஏறக்குறைய no country for old man என்கின்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கும்.. ஆரண்ய காண்டத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை நாம் காணும் போது உணரலாம். துருவன் குறிப்பிட்டுச் சொன்னது அந்த படத்தின் தொடக்கம் மற்றும் அந்தப் படத்தின் முடிவிலும் வருகின்ற ஒரு வாசகம்.

அது ஒரு உரையாடல்.

ஏறத்தாழ கிமு 400 நடந்ததாக சொல்லப்படும் ஒரு உரையாடல். நாக நந்தனுக்கும் விஷ்ணுகுப்த சாணக்கியனுக்கும் இடையே நடந்த உரையாடல்.

கேள்வி எளிது தான். பதிலும் எளிமையானது தான்.

தர்மம் என்றால் என்ன..??

எது தேவையோ அதுவே தர்மம்.

அது பற்றிய சிந்தனையிலேயே இந்த நாள் முழுக்க கழிந்தது. ஒரு ஒற்றை வரி எவ்வளவு அலைகழிக்கிறது பாருங்கள். அது ஒரு உறுத்தல். கழுத்தோரம் ஏதோ ஊர்ந்துக் கொண்டிருப்பது போல..

உண்மைதானே.. பசித்தவனுக்கு உணவே தர்மம். விழித்தே கிடப்பவனுக்கு உறக்கமே தர்மம். வேலையில்லாமல் அலைபவனுக்கு வேலையே தர்மம். காதலுற்று திரிபவனுக்கு காதலே தர்மம்.

அவனவன் தேவையே அவன் தர்ம எல்லைகளை நிர்ணயிக்கிறது என்பது தான் இதன் பொருள். நாமாக வரைந்து கொண்ட எவ்வித கோடுகளிலும் மனிதனின் தர்மம் அடங்காது. எழுதி வைத்துக் கொண்ட எந்த சட்டகங்களிலும் அது பொருந்தாது. தன் தர்மத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு உயிரினமும் ஏதேனும் மீறலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் தர்மத்தின் குணம் மீறல்.

தமிழில் அறம் என்ற ஒரு சொல் உண்டு. அறம் என்பதற்குப் பொருள் நல்லவை என தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டு இருக்கிற இரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகம் சொல்கிறது. தர்மமும் அறமும் ஒன்றுதானா என்றால் ஏறக்குறைய ஒரே பொருளைத் தான் இரண்டு சொற்களும் பிரதிபலிக்கின்றன.

அப்படியென்றால் நல்லவை என்பதற்கான பொருள் தான் என்ன…பொதுவாக நல்லவை என் தீர்மானிக்கப்பட்டதை எல்லாம் எங்கே பொருத்துவது..??

உண்மையில் .. என் பார்வையில் எதுவெல்லாம் சரியெனப்/நல்லவையாக படுகிறதோ அது அடுத்தவன் பார்வையில் தவறாக/பிழையானதாக தோன்றக்கூடும்.

அப்படியெனில் வகுத்து வைத்த கட்டமைக்கப்பட்ட எல்லா தர்மங்களும் /நியாயங்களும் ஒவ்வொரு வித மாயைதான்.. மாயத் தோற்றங்கள் தான் ‌‌..

அதைத்தான் பாரதி அழகாக சொன்னார்.

கானல் நீரோ ..காட்சிப் பிழை தானோ ..என்று..

சுருங்கச் சொல்லின்..

அவரவர் தேவையே தர்மம்.

துளி-1

யாருடைய பிறப்பிற்காகவும் ,இறப்பிற்காகவும் காத்திருப்பதில்லை உலகம். யாருடைய வருகைக்காகவும், யாருடைய விலகலுக்காகவும் அது நிற்பதில்லை. பூமி சுழன்று கொண்டுதான் இருக்கிறது. எந்த இடமும் வெற்றிடமாக இல்லை‌. காற்று இல்லாத இடங்களில் கூட இன்மை நிறைந்திருக்கிறது.

நீரை ஒத்திருக்கிறது மனிதனின் மனம். எந்த இடங்களிலும் எந்த சூழ்நிலைகளிலும் அது பொருந்திக்
கொள்கிறது அல்லது பொருந்திக்கொள்ள போராடுகிறது. அவனை அவனாக தோற்கடிக்க வில்லையெனில்… எவனும் எவனையும் தோற்கடிக்க முடியாது.

சுருங்கச் சொன்னால் உலகம் நாம் நினைப்பதைக் காட்டிலும் மகத்தானது . பெரியது. பல வாசல்கள் கொண்ட இந்த உலகத்தில்.. தனக்கு முன்னால் எதிர்படும் ஏதோ ஒரு வாசலில் நுழைந்து இன்னொரு வாசல் வழியாக தொலைந்து போய்க் கொண்டே இருக்கிறான் மனிதன்.

காலநதி ஓட்டத்தில் நடந்தவை அனைத்தும் நினைவுகளே…

அதைத் தவிர சிந்திக்கவோ.. கண்கலங்கவோ..கொண்டாடுவோ..குழம்பவோ..எதுவும் இல்லை ‌. நதியின் ஓட்டம் போல பயணம் நகர்ந்து கொண்டே இருக்கட்டும். எங்கும் தேங்காமல் குப்பையாக .. குட்டையாக.. நிற்காமல்..

போய்க் கொண்டே இரு. just move on.

Page 3 of 3

Powered by WordPress & Theme by Anders Norén