💔
முறிவு
பிரிவின்
பிரிதொரு
பொருள் அல்ல..
அது மற்றொன்றின்
தொடக்கமும் அல்ல.
கசியும்
கண்ணீர் துளியால்
வரையப்பட்ட
தொடர்ப் புள்ளி.
💔
முறிந்தவர்கள்
பிரிந்தவர்கள்
அல்லர்.
சேர்ந்திருக்க
முடியாதவர்கள்.
ஒவ்வொரு முறிவிற்கு
பின்னாலும்,
காரணங்களை தாண்டி
ஒரு நம்பிக்கையின்
கொலை,
ஒரு எளிய
நேர்மையின் வதை
எப்படியோ
நிகழ்ந்து விடுகிறது.
💔
முறிவு என்பது
பறக்கும் இறக்கையில்
சிறகடித்த சிறகின்
உதிர்வல்ல.
கலைந்த கூடொன்றின்
கலையாத நினைவு.
முறிவின் காயம்
சுமக்கிற
அந்தக் கண்களை
பாருங்கள்.
வறண்ட அந்த கண்கள்
இனி தன் வாழ்நாளெல்லாம்
வலி போர்த்தி அலையும்.
💔
முறிவு என்பது
தனிமையின் ராகம் அல்ல.
ஒரு சேர்ந்திசைப் பாடலில்
இணைய முடியாமல்
தனித்துப் பிரியும்
ஒரு புல்லாங்குழலின்
ஏக்கம்.
முறிவை
முன்மொழிபவர்கள்
எதிரே நிற்பவரின்
முகத்தை தொலைக்க நினைக்கிறார்கள்.
ஆனால்
காலத்தின் விதி
கொடூரமானது.
தன்முகம் பார்க்க
கண்ணாடி
பார்க்கும்போதெல்லாம்
எதை திரும்ப விரும்பாத வனாந்திரத்தில்
தொலைக்க
எண்ணினார்களோ,
அதே முகம்
அவர்கள் நிழலாய்
பின் தொடர்ந்து
முன் மலரும்.
💔
முறிவு என்பது
ஒரு பாவனை.
வாழ்வென்ற
நடனத்தில்
நமக்கு நாமே
பூட்டிக் கொள்ளும்
செயற்கைத் தோரணை.
முறிவு ஒரு பொதி சுமக்கும்
பாலைவனத்து தனிமை
ஒட்டகம் அல்ல.
அது
காயம்பட்ட குட்டியை
எப்போதும் இறக்கி விடாமல்
தன்
வயிற்றுப் பையிலேயே
வைத்து
சுமக்கும் கங்காரு.
💔
உண்மையில்
முறிவு என்கிற
ஒன்றே முடிவிலியாய்
உள்ளுக்குள்
உன்மத்தமாய்
தொடரப் போகின்ற
மாமழையின் சிறு தூறல்.
முறிவின் விசித்திரம்
யாதெனில்..
உடைந்த
கண்ணாடிகள்
ஒட்டுவதில்லை தான்.
ஆனால்
எப்படியும் ஒட்டிவிடும்
என்கிற
நம்பிக்கையில் தான்
பெரும்பாலான கண்ணாடிகள் உடைகின்றன .
💔
எல்லாவற்றையும்
ஒரு முறிவு எளிதாகப்
பிரித்து விடுகின்றது.
கண்ணீரின் தடம்
மறைத்து கன்னங்களில்
ஒப்பனைகள்
கூட்டப்படுகின்றன.
மதுவோ,
இசையோ,
ஒரு புத்தகமோ,
உடல் அலுக்கும் வரை
உடற்பயிற்சியோ,
அல்லது
நீண்ட தூர பயணமோ,
இதில் எதிலோ இழந்து
எதுவுமே இழக்கவில்லை
என காட்ட முயல்கிறார்கள்.
குழந்தைகளின்
நினைவுகளில் கூட
யாரோ ஒருவர்
மரணித்து
விடுகிறார்கள்.
கூடுதலாக
தோட்டத்தில்
இருந்த ரோஜா
தொட்டிகளில்
எப்போதும் பூ பூக்காத
ரோஜா செடியை
வலி மிகுந்தோர்
எடுத்துச் செல்கிறார்கள்.
ஆனால் பார்த்தவுடன்
கால்களுக்கு அடியில்
குழையும்
நாய்க்குட்டியின்
தவிப்பு மிகுந்த
வாலாட்டத்தை தான்
யாராலும்
தடுக்க முடியவில்லை.
💔
மணி செந்தில்.