மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

தாலாட்டுதே வானம் !

நேற்றிலிருந்து மனம் ஏனோ மிகுந்த அழுத்தமாக இருந்தது. யாரிடமும் சரியாக பேசக்கூட முடியவில்லை. இனம் புரியாத கவலை ஒன்று சூழ்ந்து இதயத்தை உடைத்துக் கொண்டே இருந்தது. ஏதேதோ நினைவுகள் உள்ளுக்குள் சுரந்து கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தன. சரி தூங்கி விடலாம் என, மாத்திரைகள் எடுத்துக் கொண்ட போதும் நேற்று இரவு முழுமையாக தூக்கமே இல்லை. விடியற்காலையில் விழிப்பு வந்து தவிப்புடன் படுத்திருந்தேன். ஏதோ இன்று தான் எனக்கு உலகின் கடைசி நாள் என்பது போல.. தூங்காத முதல் நாள் இரவு , விழிகளின் மேலே வலியாய் ஏறி அமர்ந்திருந்தது. சாப்பிட்டவை எல்லாம் கசப்பாய் உணர்த்த, பசியும் செத்துப்போனது.

அம்மா பக்கத்திலேயே இருக்க வேண்டும் போல இருந்தது. எந்த வேலையும் சரியாக செய்ய முடியாத நிலை. இது போன்ற தருணங்களில் தான் புத்தகங்களில் முழ்கிப் போவேன். அதுவும் இந்த முறை பலன் அளிக்கவில்லை. பேசாமல் யாராவது மன நோய் மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாமா என்று நினைத்தபோது, ஞாயிற்றுக்கிழமை வேறு. ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்தில் எதுவுமே கிடைக்காது. ஊரே அந்த ஒரு நாளில் மாயமாக மறைந்து விடும். செத்துப்போன ஊர் திங்கட்கிழமை காலைதான் விழிக்கும்.

இதன் நடுவே இழந்து போனவை எல்லாம் நினைவுக்கு வந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வாழ்வில் செய்த தவறுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நினைவுக்கு வந்து அழுத்தும் போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்போதுதான் காரணமே தெரியாமல் இன்று மதியம் என் கணினியின் பழைய கோப்புகளை அலசிக்கொண்டிருந்தேன். அதில் எனக்குப் பிடித்த சில அபூர்வமான இளையராஜா பாடல்களை எப்போதும் சேகரித்து வைத்திருந்தேன். சரி கேட்போம் என, கேட்கத் தொடங்கினேன்.‌

“புத்தம் புது காலை”.. யில் தொடங்கியது என் பயணம். “ஆயிரம் மலர்களே” என மலர்ந்த போது உள்ளுக்குள் கட்டியிருந்த கயிறுகள் ஒவ்வொன்றாய் அறுபடத் தொடங்கின. ” கொடியிலே மல்லிகைப்பூ” படரும்போது வியர்த்துக் கொண்டிருந்த காதோரத்தில் யாரோ குளிர்க்காற்றாய் ஊதிக் கொண்டிருந்தார்கள். “மாலையில் யாரோ மனதோடு” பேசியபோது என் அழுத்தங்கள் ஒவ்வொன்றும் மெலிதாய் ஆவியாகிக் கொண்டிருந்தது. “தாலாட்டும் பூங்காற்று” வீசியபோது அடைபட்ட எல்லா அணைகளும் உடைந்து கண்கள் கண்ணீர் கொட்டித் தீர்த்தன. “காத்திருந்து காத்திருந்து” என உடைந்து அழுதேன்.

அது நள்ளிரவின் மழை போல, சோகத்தின் ” மேகம் கொட்டட்டும் ” எனக் கொட்டித் தீர்த்தது. ” ஏதோ மோகம்.. ஏதோ தாகம்” என்பது போல ஏதோ ஒரு வலி. “விழியிலே மணி விழியிலே” கொஞ்சம் கொஞ்சமாக குளிர் பரவத் தொடங்கியது. “கீரவாணி… இரவிலே.. கனவிலே..” இசைக்கத் தொடங்கியது.

அடுத்தடுத்த பாடல்களில் நான் பரவசமாகி “ஏதேதோ எண்ணம்” நினைத்து மெளனமாகி ” இது மெளன நேரம்” என எனக்குள் நீந்தி “நீலக் குயிலே..சோலைக் குயிலே..‌” என மலர்ந்துக் கொண்டிருந்த அந்த வேளையில்தான் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இசை தெய்வம் இளையராஜாவை பற்றி இயக்குனர் மிஷ்கின் பேசிய சிறியத் துண்டினை பார்த்தேன்.

“தினந்தோறும் சாமியை பார்த்தால் கூட நமக்கு அலுப்புத் தட்டிவிடும். ஆனால் உலகத்தில் அலுப்புத்தட்டாத ஒரே ஒரு விஷயம் எதுவெனில்.. அது இளையராஜா தான்..” என்று அவர் தழுதழுத்த குரலில் சொன்னபோது …

நான் கண்கலங்கியவாறு என் கணினி திரைக்கு முன்னால் தலையை அசைத்துக் கொண்டேன்.

அந்த மனிதன் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நரகமான உலகை அந்தத் தனி மனிதன் தான் இறைவனாக காத்து நின்று வாழ முடிகிற அளவுக்கு ..மாற்றி இருக்கிறான். மூச்சடைத்த இருள்வெளியில் கிடைத்த ஆக்சிஜன் பலூன் போல.

மதியத்தில் இருந்து நள்ளிரவு வரை அந்த கடலில் நீந்தி கொண்டே இருக்கிறேன்.

இப்போது “தாலாட்டுதே வானம்.”

♥️

ஊரெல்லாம் ஒரே வானம். -1

என்னுடைய பள்ளிப் பருவத்து நண்பர்களில் ஒருவனான சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்னை தொடர்பு கொண்ட போது அவனது குரல் உடைந்து இருந்தது. “என்னடா என்ன பிரச்சனை..?” என்று கேட்டபோது “அப்பா வந்திருக்கிறார்டா. ” என உடைந்து சொன்னான். எனக்கு ஒரே ஆச்சரியம். சிறுவயதிலேயே அவனது அப்பா அவனையும் அவனது அம்மாவையும் கைவிட்டு விட்டு துறவறம் மேற்கொண்டு காசிக்கு போய் விட்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனது அம்மா தான் அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் பணிபுரிந்து வருகிறான். அவனது அம்மா சில வருடங்களுக்கு முன்பாக மரணம் அடைந்திருந்த போது அஞ்சலி செலுத்த நானும் சென்றிருந்தேன். அந்த சாவுக்கு கூட அவனது அப்பா வரவில்லை. தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொன்னான். பிறகு சென்னைக்கு குடிமாறி சென்று விட்ட அவனை காணாமல் போன அவனது அப்பா எப்படி தேடி கண்டுபிடித்தார் என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். சேகர் அவனது பெரிய அப்பாவோடு தொடர்பில் இருந்தான். சொந்த ஊரில் இருக்கும் தன் அண்ணனை கண்டுபிடித்த சேகரின் அப்பா, சேகரின் முகவரி வாங்கிக்கொண்டு சென்னைக்கு வந்து விட்டார். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் வாழ்க்கையில் இல்லாத ஒருவர் திடீரென வயதான தோற்றத்தில் தன் முன்னால் நான் தான் உன்னுடைய அப்பா என்று சொல்லிக் கொண்டு அமர்ந்திருக்கும் விசித்திரம் ஏன் தன் வாழ்வில் நடக்கிறது என அவன் என்னிடம் கேட்டபோது என்னிடத்தில் பதில் இல்லை. “சரி..இப்போ என்ன பிரச்சனை ?” என நான் கேட்டதற்கு சேகர் “டேய் !அவர் என்னோடு நிரந்தரமாக தங்குவதற்காக வந்திருக்கிறார். அதற்கான வசதிகளோ இவரை கவனித்துக் கொள்வதற்கான நேரமும் எனக்கு இல்லை. எனவே உனக்குத் தெரிந்த ஏதாவது முதியோர் இல்லம் இருந்தால் சொல் . சேர்த்துவிடலாம்..” என பேசிக் கொண்டிருந்தான்.” சரி. அவர் அங்கே இருக்கட்டும். சென்னையில் இருக்கும் எனக்கு தெரிந்தவரிடம் சொல்லி ஏதாவது முதியோர் இல்லம் பார்க்க சொல்கிறேன்..” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தேன்.

எனக்கு இருந்த வேலையில் அதை மறந்தே போனேன். சில நாட்கள் கழித்து சேகர் அழைத்தான். அவன் அப்பாவோடு காசியில் இருப்பதாக சொன்னான். சில நாள் பயணமாக காசி வந்திருக்கும் அவர்கள் பனி லிங்கம் தரிசிப்பதற்காக இமயமலை செல்ல இருப்பதாகவும் கூறினான். அவன் திட்டமிட்டது போல அவன் அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடியாமல்.. அவனுடைய அப்பா அழைக்க காசிக்கு அவன் போயிருப்பதாக சொன்னான். சில வருடங்கள் கழித்து அவனை சந்தித்தபோது உலகப் பயணம் ஒன்றுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாகவும், அப்பா காசியில் தற்போது இருப்பதாகவும் அடிக்கடி சென்று பார்ப்பதாகவும் அவன் கூறிய போது நான் முன்னர் சந்தித்த சேகர் இவன் இல்லை என புரிந்து கொண்டேன். அவன் அப்பா அவனுக்கு பயணத்தைப் பழக்கப்படுத்தி விட்டார். பயணத்தின் சுவை அறிந்த அவன் இப்போது ஊர் சுற்ற கிளம்பி இருக்கிறான். அவனை சந்தித்த அந்த இரவில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அப்பாவை தான் தவறாக புரிந்து கொண்டு விட்டதாகவும் , அவர் சிறகு உள்ள மனிதன் எனவும், அவரால் பறக்காமல் இருக்க முடியாது எனவும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். நான் சற்று கோபமாகி “அப்படி என்றால் உன் அம்மா பட்ட கஷ்டங்கள் எல்லாம்.. ” “என் அம்மாவிற்கு சிறகு இல்லை. சிறகை வெட்டும் கத்தரியாக நானும் அவளது சூழல்களும் இருந்தோம். கூட்டிலேயே வாழ்ந்து விட்டாள். நீயும் பயணப்படு. நீண்ட நாட்களாக தனக்கு இருந்த மன அழுத்தம் தற்போது இல்லை எனவும், ஏதாவது நோய் இருந்தால் ஊர் சுற்ற கிளம்பு .. புதிய மனிதர்களின் முகங்களை பார். புதிய இடங்களை பார். உலகம் எவ்வளவு பெரிது என உனக்குத் தெரியவரும். பிறகு அனைத்தும் சரியாகிவிடும் ..” என என்னிடம் சொல்லிவிட்டு போன போது என்னால் அவன் சொன்ன விளக்கத்தோடு ஒத்துப் போக முடியவில்லை. நான் சற்றே கடுப்பாகி..அவன் காலில் ஏதேனும் சிறகுகள் இருக்கிறதா என பார்த்தேன் .

……

இந்த மாத காலச்சுவடு இதழில் பிரேசில் நாட்டு இயக்குனர் வால்டர் செலஸ் பற்றி “கடந்த காலத்தின் அட்டூழியம் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு” என்ற தலைப்பில் ரதன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை வால்டர் இயக்கிய ஐ அம் ஸ்டில் ஹியர் என்கிற 2024 ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படத்தைப் பற்றியது. அதே கட்டுரையில் வால்டரின் புகழ்பெற்ற திரைப்படங்களான சென்ட்ரல் ஸ்டேஷன் மற்றும் மோட்டார் சைக்கிள் டைரிஸ் ஆகியவற்றைப் பற்றி குறித்தும் ரதன் எழுதியிருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே முக்கியமானவை.

சேகுவேராவின் இளம் வயது பயணங்களை முன்வைத்து அவர் இயக்கிய மோட்டார் சைக்கிள் டைரிஸ் (2004) எப்போது பார்த்தாலும் மனதை மிகவும் கவரக்கூடியது. சேகுவேரா அவரது வாழ்வில் அசலாக அவர் எந்தெந்த இடங்களுக்கு பயணம் மேற்கொண்டாரோ அதே இடங்களுக்கு சென்று படப்பிடிப்பை வால்டர் மேற்கொண்டு இருக்கிறார். எப்போதாவது தோன்றுகின்ற தன்னலமற்ற ஒரு புரட்சியாளன் எப்படி உருவானான் என்பதற்கு அந்த திரைப்படம் மாபெரும் சாட்சியாக விளங்குகிறது. என்றெல்லாம் எனக்கு மனச்சோர்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நான் ஒரு முறை “மோட்டர் சைக்கிளில் டைரிஸ்” பார்த்து விடுவேன். படம் முடிந்த பிறகு நான் தேடி வந்த புன்னகை என் முகத்தில் மலர்ந்திருக்கும். மோட்டார் சைக்கிள் டைரிஸ் 1952 ஆம் ஆண்டு சேகுவாராவும் அவரது நண்பர் கிரானடோவும் லத்தீன் அமெரிக்க நாடுகளை சுற்றிப் பார்க்க கிளம்பிய ஒரு பயணத்தைப் பற்றிய திரைப்படம். இந்தப் பயணம் நடக்கும் போது சேகுவேரா ஒரு கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்காத ஒரு மருத்துவ மாணவன். அவரது நண்பர் கிரானடோ 30 வயதை தொடப்போகும் நடுத்தர வயதுக்காரர். அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இருந்து தொடங்கும் அவர்களது பயணம் ஏறக்குறைய 14 ஆயிரம் கிலோ மீட்டர்களை தாண்டி வெனிசிலாவில் முடிவதற்கான திட்டத்தோடு கிளம்பும் அவர்கள் நடுவில் பல்வேறு இடர்பாடுகளை தாண்டி பல மனிதர்களை சந்தித்து சேகுவேரா என்ற இளைஞன் எப்படி சமூக விழிப்புணர்வு அடைந்தான் என்பதை நுட்பமான காட்சிகளில் விவரிக்கின்ற இந்த திரைப்படம் மிக அற்புதமான ஒன்று.

அதேபோல் சென்ட்ரல் ஸ்டேஷன். 1998 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வாழ்வில் சகல விதமான ஏமாற்றங்களையும் சந்தித்து சோர்வடைந்து இருக்கிற வேலையில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு முதிய பெண்ணிற்கும், ஒரு சிறுவனுக்கும் நிலவுகிற உறவைப் பற்றியது. தாயோடு தன் தந்தையை பார்க்க ரயில்வே ஸ்டேஷன் வருகிற சிறுவன் ஒரு விபத்தில் தாயை இழக்க அந்த சிறுவனோடு அவனது தந்தையை தேடி அந்த முதிய பெண்மணி மேற்கொள்கிற பயணமே சென்ட்ரல் ஸ்டேஷன்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே பயணத்தை அடிப்படையாகக் கொண்டவை. பயணத்தின் போது ஏற்படுகிற அனுபவங்களை திரைப்படங்களாக எடுக்கும் போக்கினை உருவாக்கிய இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது பார்த்தாலும் நம் மனதுக்குள் ஓராயிரம் திறப்புகளை திறக்கக் கூடியவை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த திரைப்படங்களை மீண்டும் பார்த்த போது இப்போதுதான் புதிதாக பார்ப்பது போல தோற்றமளித்தது அந்தப் படங்கள் கொண்டிருக்கிற, எல்லா காலத்திற்கும் பொருந்துகிற செவ்வியல் தன்மை.

..

தன் அப்பாவின் மீது வெறுப்பை தன் வாழ்நாள் முழுக்க சுமந்து இருந்த சேகர் அப்பாவை போலவே பயணத்தை ஒரு பானமாக மாற்றி தனக்குள் பருகிப் பருகி ஒரு பயணக் குருவியாக மாறி இருக்கிறான். கொந்தளித்துக் கொண்டிருந்த அவனது ஆன்மா இறுதியாக பயணங்கள் மூலமாக அமைதியாக மாறி இருக்கிறது. பயணம் அவனுக்குள் கனிவை கருணையை சமாதானத்தை மன்னிப்பை இன்னும் பலவற்றையும் தந்திருக்கிறது. இவற்றை தானே நாம் எதிர்ப்படும் எல்லாவற்றிலும் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்..??

♥️

மஞ்சள் வெயில் தாலாட்டு.

♥️

அந்தத் தொடர் வண்டியின் ஜன்னல் கண்ணாடியின் வழியே மஞ்சள் ஒளி கண்ணைக் கூச அயர்ந்துத் தூங்கிக் கொண்டிருந்த நான், கண்விழித்த போது சென்னை புறநகரில் தொடர்வண்டி நுழைந்திருந்ததை அறிந்துக் கொண்டேன்.

பயணம் தொடங்கும் போது அமர்ந்திருந்த வயதான தம்பதியர் எங்கோ இறங்கிச் சென்றிருந்தனர். எனக்கு முன்னால் மஞ்சள் சுடிதார் அணிந்திருந்த ஒரு இளம் பெண். அவள் அருகே கையில் குழந்தையோடு, மஞ்சள் கயிறு தாலியோடு பச்சை நிற புடவையில் ஒரு பெண். குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அந்த மஞ்சள் சுடிதார் இளம்பெண் கண்டிப்பாக ஏதோ தனியார் நிறுவனத்தில் தான் வேலை பார்ப்பவளாக இருக்க வேண்டும். சட்டென்று ஒரு கூச்சத்தின் மங்கிய நிழல் என்னை சூழ்ந்தது. ஒரு இளம் பெண் முன்னால் அயர்ந்து தூங்குவது அவ்வளவு நேர்த்தியான காட்சி அல்ல. ஆனால் அவள் என்னை கவனித்தது போல் எல்லாம் தெரியவில்லை. தொடர் வண்டியின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு தூரத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருந்த மஞ்சள் வெயிலைப் பார்த்துக் கொண்டு, காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு ஏதோ பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நானும் என் கவனத்தை திசைத்திருப்ப முயற்சித்தேன். இது போன்ற தனிமைப் பயணங்களில் எதிரே அமர்ந்திருக்கும் இளம் பெண்களின் கவனத்தை கவருமாறு நடந்து கொள்வது அவ்வளவு நாகரீகம் அல்ல என்பது எனக்கும் தெரியும். பக்கவாட்டு இருக்கையில் ஜிப்பா அணிந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்தவரோடு ஏதோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு வந்தார். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நானும் கேட்டுக்கொண்டே இருந்தபோது.. அந்த ஜிப்பாக்காரர் ஒரு பாடகர் என்பதும், ஏதோ கச்சேரிக்கு போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், கச்சேரி சரியாக அமையவில்லை என்ற சலிப்போடு இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. கூட்டம் கூட்ட முடியாதவர்கள் எதற்கு கச்சேரி நடத்துகிறார்கள் என்று பாடகர் ஆவேசமாக கேட்க, அருகில் இருந்தவர் அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் இப்படி ஏதோ ஒரு சலிப்பு ஈரம் கண்ட உள்ளாடை போல உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. சிலருக்கு வேலையை குறித்த சலிப்பு, சிலருக்கு வாழ்க்கைத் துணையை குறித்த சலிப்பு, சிலருக்கு உடல் நலன் குறித்த சலிப்பு என வேறுபட்டாலும் சலிப்பின் திசைவழி என்னவோ ஒன்றுதான்.

எங்கிருந்தோ வந்த ஒரு கடலை வியாபாரி கடலை விற்றுக் கொண்டே வர, யாரும் அவரிடத்தில் கடலை வாங்கி சாப்பிடாத நிலையில் அவரும் சலிப்போடு காலியாக இருந்த எனது பக்கத்திற்கு அமர்ந்து இறுகிய முகத்தோடு கண்ணை மூடி சாய்ந்திருந்தார்.

காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டு இருந்த அந்த இளம் பெண், முகத்தில் மாலை நேரத்து மஞ்சள் வெயில் சிறு ஒப்பனை போல படர்ந்து இருந்தது. வெயில் சுமக்கும் முகங்களில் பூசப்படும் இயற்கையின் ஒப்பனை போல வேறு என்ன சிறந்தது இருக்கிறது..??

மீண்டும் மீண்டும் அந்த இளம் பெண் மீது கவனம் திரும்புவதை எனக்குள் எண்ணிப் பார்த்து என் மீதே கோபம் எனக்கு கோபம் வந்தது. பெண்ணை வலுக்கட்டாயமாக பார்க்கும் விழிகளும் ஏதோ ஒரு வன்முறையை இழைக்கிறது என நினைத்து மெலிதாகக் குற்ற உணர்வு கொண்டேன்.

அப்போதுதான் பச்சைப் புடவை அணிந்திருந்த பெண்ணின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை அழத் தொடங்கியது. அந்தத் தொடர் வண்டி பெட்டியில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி மனநிலைகளில் லயித்துக் கொண்டிருக்கின்ற அந்த மாலை வேளையில் குழந்தையின் அழுகை எல்லோரும் மனநிலையையும் ஒரே இடத்தில் நிறுத்தியது. அந்தப் பச்சைப் புடவை பெண் குழந்தையை சமாதானப்படுத்த, சூ சூ.. கொட்டினாலும் குழந்தை எதையோ நினைத்து வலிமையாக இன்னும் உச்ச குரலில் அழத் தொடங்கியது. உலகத்தில் எல்லா சூழ்நிலைகளையும் ஒரே திசையில் திருப்ப ஒரு குழந்தையின் அழுகை போதும். இயர் போன் மாட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண் கூட இயர் போனை கழற்றிவிட்டு குழந்தை முதுகில் மெதுவாக வருடிக் கொடுத்தாள். கடலை வியாபாரி தன்னுடைய கூடையில் வைத்திருந்த சில்லறைப் பொட்டலத்தை குலுக்கி காட்டி குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றார். குழந்தை இன்னும் வீறிட்டு அழத் தொடங்கியது. எப்படியாவது அந்த குழந்தை அழுகையை நிறுத்தி விட வேண்டும் என அங்கு இருப்பவர்கள் அனைவரும் நினைக்கத் தொடங்கினோம். எங்கெங்கோ மன சஞ்சாரத்தில் பறந்து கொண்டிருந்த எல்லோர் மனதையும் இழுத்து வைத்து வலுக்கட்டாயமாக ஒரே இடத்தில் ஊசிக் குத்தி தைத்தது அந்தக் குழந்தையின் அழுகை.

அப்போதுதான்.. ஒரு கூட்டமற்ற கச்சேரியில் சிக்கிக் கொண்டு, சலிப்புற்று இருந்த அந்த ஜிப்பாப் பாடகர் தன் வாழ்வின் உன்னத கணத்தில் இயற்கையாய் வந்துச் சேர்ந்த ஒரு சவாலை எதிர்கொள்ளும் பொருட்டு

ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார்.

தாலாட்டு மாறிப்போனதே

என் கண்ணில் தூக்கம் போனதே

பெண் பூவே வந்தாடு

என் தோளில் கண்மூடு

என் சொந்தம் நீ

தாலாட்டு மாறிப்போனதே

என் கண்ணில் தூக்கம் போனதே..”

தொடர்வண்டி தனது இஞ்சின் சத்தத்தை நிறுத்திவிட்டதோ என எண்ணும் அளவிற்கு எல்லோரும் அமைதியாகிவிட்டிருந்தோம். குழந்தை மட்டும் சிணுங்கி கொண்டிருந்தது.

“கண்ணீரில் சந்தோஷம்

நானிங்கு காண்கிறேன்

தாயாக இல்லாமல்

தாலாட்டு பாடினேன்

என் வாழ்வே உன்னோடு

என் தோளில் கண் மூடு.. சுகமாயிரு”

ஆழமான தன் குரலில் இருந்து அபூர்வமான அந்த பாடலை உருக உருக பாடிக்கொண்டிருந்த அந்த ஜிப்பா பாடகர் ” சுகமாயிரு” என்று பாடிய போது உண்மையில் அது ஒரு ஆசீர்வாதம் போல அந்தக் குழந்தையை தூங்க வைத்திருந்தது. பெருமிதத்தின் பொன் நிழல் அந்தப் பாடகரின் முகத்தில் பூத்திருந்தது.அது ஒரு அபூர்வத் தருணம். எதுவும் அறியாத அந்த வெள்ளந்தி குழந்தையின் உறக்கம், அந்த ஜிப்பா பாடகர் இதுவரை வாழ்நாளில் சந்தித்திராத அங்கீகாரம்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த கடலை வியாபாரி கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு தன் கூடையை தூக்கிக் கொண்டு மீண்டும் நடக்கலானார். குழந்தையின் தாய் பனித்த தனது கண்களை தன் சேலையில் துடைத்துக் கொண்டு நன்றியோடு அந்த ஜிப்பாப் பாடகரை பார்த்தார். அதற்குள் அந்தத் தொடர்வண்டி எழும்பூர் நிலையம் வந்து சேர, எனக்கு முன்னால் அமர்ந்திருந்த அந்த இளம் பெண் வேகமாக சென்று அந்த ஜிப்பாப் பாடகரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு கதவை நோக்கி அவள் சென்றாள்.

அந்த ஜிப்பா பாடகருக்கு எதிரே அமர்ந்திருந்த அவரது நண்பர் அவரை இறுகத் தழுவிக் கொண்ட போது.. அந்தத் தொடர்வண்டி பயணம் ஒரு விருதுபெறும் நிகழ்ச்சியாக மாறி இருந்தது.

❤️

மணி செந்தில்.

விரும்புவோர் கேட்பதற்காக..

கருணாவும், ராஜபக்சேவும்.

ஜீன் 3.

ராஜபக்சேவோடு

அவரை ஒப்பிடாதீர்கள்.

அதில் சிறு

ஒவ்வாமை

இருக்கிறது எனக்கு.

ராஜபக்சே

தமிழ் பேசவில்லை.

தமிழ் பேசி

தமிழினத் தலைவர்

என ஒருபோதும்

அவன் சொல்லிக்

கொண்டதில்லை.

தொல்காப்பியத்திற்கு

உரை எழுதுகிறேன்

என்று தொல்லை

செய்ததில்லை.

கண்ணகிக்கு

சிலை எடுக்கிறேன்

என்று சிந்தை

நெருடவில்லை.

பூம்புகாரில்

வசனம் எழுத

அவனுக்கு வாய்ப்பு

இருந்ததில்லை.

குறளோவியம்

படைக்கிறேன் என

கரகரப்பு குரலில்

கவிதை பேசவில்லை.

கடலிலே

தூக்கி போட்டாலும்

கட்டுமரமாக தான்

மிதப்பேன்

அதில் நீங்கள் மிதந்து

கரைசேரலாம்

என்று ஒருபோதும்

அவன் யார் மனதிலும்

நம்பிக்கை நட்டதில்லை.

போரை

நிறுத்துகிறேன்

என்று

காலை உணவிற்கும்

மதிய உணவிற்கும்

இடையே

சாகும்வரை

உண்ணாவிரதம்

இருந்ததில்லை.

முதுகில்

அறுவை சிகிச்சை

என மல்லாக்கப்

படுத்ததில்லை.

அவன்

அவன் இனத்திற்கு

நேர்மையாக நின்றான்.

நம்மைக் கொன்றான்.

அவனுடைய

தோட்டாக்கள்

எப்போதும்

குறி பார்த்து

நம்மை வீழ்த்தியவை.

நம் உயிர்

சிதறடித்தாலும்

அவனது

கொத்துக் குண்டுகள்

நாம் பழகியவை.

அவனோடு

மோதினோம்.

இனிமேலும்

மோதுவோம்.

ஆனால்

அழகுத் தமிழ்

பூசி

அடுக்குமொழி

பேசி

வந்தக் குரலில்

கண்கள் சொருகிய

தருணம் ஒன்றில்..

நடு முதுகில்

“நச்” என்று

நஞ்சு தடவி

குத்தப்பட்ட

இந்த துரோகத்தின்

கத்தியை

உருவுவதற்கு தான்

எம் கைகள்

எட்டாமல் போய்விட்டன.

🌑

*அன்பு நண்பன் Cartoonist Bala அவர்களுக்கு..

இசை பிறந்தநாள்..

❤️

நேற்று மாலை என்னுடைய‌ மகன்களோடு 2020 க்கு பிறகான திரைப்படங்களில் சமீபத்திய மிகச்சிறந்த இசைப் பாடல்கள் எவை எவை என பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பிளே லிஸ்ட்டையும் தயார் செய்தோம். 20 பாடல்களுக்கு மேலாக எனது மகன்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். சில பாடல்களை சேர்த்துக் கொள்ளலாம் என காம்ப்ரமைஸோடு சொன்னார்கள். இந்த சில பாடல்களில் தமிழ் வரிகள் நன்றாக இருக்கும் என்றார்கள். முடிவில் ஒரு ஐந்து வருடங்களில் 25 பாடல்களுக்கு மேலாக சிறந்த பாடல்களின் பட்டியலை மேலாக தயாரிக்க முடியவில்லை.

அப்படியே அவர்கள் கைப்பிடித்து எங்களின் 80களின் நினைவு வீதிக்கு அழைத்துச் சென்றேன்.

அந்த வீதியில் ஒரே ஒருவரின் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் வானொலிகளில் இசைத்தட்டுக்களில் கேசட்டுகளில் ஒவ்வொரு வீடுகளில் சாலை ஓரக் கடைகளில் சலூன்களில் மக்கள் உழைத்துக் கொண்டிருக்கும் இடங்களில் சடங்கு கல்யாணம் கருமாதிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்த பிரம்மாண்டத்தின் பெயர் இளையராஜா.

இளையராஜாவுக்கான பிளே லிஸ்ட் என யாராலும் ஒட்டுமொத்தமாக தயாரித்து விட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இளையராஜா. எங்கள் தலைமுறையின் ஒவ்வொருவரின் ஒவ்வொரு உணர்வின் ஒத்திசைவிற்கும் இளையராஜா இசையமைத்திருந்தார். பல்லாயிரக்கணக்கான பாடல்களின் மடியில் கதகதப்பாக நாங்கள் சுருண்டுப் படுத்திருந்தோம். ஒரு பாடல் கேட்டு மயங்கி கிறங்கி தவித்துக் கொண்டிருக்கையில், பக்கத்திலேயே அடுத்த பாடல் குதித்து விடும். அந்தப் பாடலைக் கேட்டு ஆகா ஓகோ என கண்கள் சொருக.. ஏகாந்தித்துக் கொண்டிருக்கிற வேளையில்.. இன்னொரு பாடல் எங்கிருந்தோ வந்துவிடும்.. திகட்ட திகட்ட அமிர்தம் குடித்த நாட்கள் அவை.

இப்போதெல்லாம் வருகிற பாடல்கள் குறித்து பெரும்பாலும் இளையராஜாவின் ரசிகர்களுக்கு எந்த கருத்தும் இல்லை. ஒரு இசையமைப்பாளரின் எப்போதோ அபூர்வமாக வருகிற ஒரே ஒரு பாடலுக்காக நாம் பல பக்கங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இளையராஜாவின் பல்லாயிரக்கணக்கான பாடல்களில் உள்ள சிறந்த அம்சங்களை எழுதுவதற்கு‌ நமக்கு காகிதங்களில், கணினித் திரைகளில், அலைபேசி ஒளிர்வுகளில் பக்கங்கள் இல்லை.

வாழ்வின் ஓட்டத்தில் எப்படியோ கேட்டுவிடும் அந்தப் பெருமகனின் ஒரு இசைத் துளியில்.. உள்ளுக்குள் இருந்து கசிகிற விழியோர கண்ணீரில், ரகசியப் புன்னகையில், சின்ன ஒரு வலியில், இன்னும் ஏகப்பட்ட உணர்வுகளில் அவரின் பாடலுக்கான பாராட்டு உரை எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அவருக்கென எவ்வளவு பாராட்டு விழா நடத்தினாலும் அது போதுமானதாக இல்லை என்கிற குறை பலருக்கும் இருக்கிறது.

இளையராஜா என்ற தனி மனிதன் எங்கள் தலைமுறைக்கு வழங்கிய கடனை, கொடையை, அருளை எதைக் கொண்டு ஈடு செய்து விட முடியும்…??

அவரைப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் அடைகிற சிலிர்ப்பும், தொண்டை அடைக்கும் விம்மலும், உணர்ந்தே இருக்கின்றன.

ஒரு தலைமுறையின் யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாத அவரவர் ரகசிய வாழ்வின் பொன் ஒளி வீசும் பக்கங்களுக்கு. பால்ய காலத்து எழில் பூசி உலவும் புன்னகை நாட்களுக்கு. இளமையின் துடிப்பேறிய காதலின் பூத்தலுக்கு. எங்கே துளிர்க்கிறது எனத் தெரியாமல் அரும்பரும்பாய் மலர்ந்து கிளர்ந்த காமத்தின் வாசனைக்கு, பிரிவின் துயருக்கு, அவமானத்தின் காயத்திற்கு, முகத்தில் அறையப்பட்ட புறக்கணிப்பிற்கு, தனிமையின் சிலுவை ஆணிகளுக்கு , தாய் அன்பிற்கு, பசி இரவுகளுக்கு, வேலையற்ற பகல் பொழுதுகளுக்கு, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. அவை அனைத்திற்கும்..

இசை இளையராஜா.

❤️

இனிய பிறந்தநாளில் இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

நீடு வாழ்க.!

❤️

கடவுளின் சிகரெட்.

❤️

கைவிடப்பட்ட

தனிமை

என் முன்னால்

மழையில் நனைந்த

நாய்க்குட்டி போல

நடுங்கிக்கொண்டு

அமர்ந்து இருந்தது.

மிகுந்த பரிவோடு

மினுக்கும் அதன்

மீச்சிறு கண்களை

பார்த்துக் கொண்டே

இருந்தேன்.

தனிமை

சிணுங்கியது.

அந்த மழை பெய்யும்

நள்ளிரவில்

தூரத்தில் எங்கோ

கேட்ட குழந்தையின்

அழுகை ஓசை

எனக்கு முன்னால்

அமர்ந்திருந்த

தனிமையை

பதட்டப்படுத்தியது.

இரு.. இரு..

நம் இருவரோடு

யாரோ இன்னொருவர்

இருக்கிறார் என்று

மெல்லிய குரலில்

நான் சொன்ன போது

தனிமை ஆசுவாசப்பட்டது.

சில நொடிகள்

அமைதிக்கு பிறகு..

நானும்

என் தனிமையும்..

” இது மௌனமான

நேரம்..”

என்ற பாடலை

எங்களது கிசுகிசுப்புக்

குரலில் பாடத்

தொடங்கினோம்.

ஏதோ புகை எங்களை

சூழவே ..

நான் திரும்பிப்

பார்த்தபோது …

எனக்குப் பின்னால்

இருந்த

ஒரு பார் ஸ்டூலில்

அமர்ந்து கொண்டு

கடவுள் சிகரெட்

பிடித்துக் கொண்டிருந்தார்.

❤️

மன்னிப்பின் நிழல்.

❤️

மனித வாழ்வின் ஓட்டத்தில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ, செய்த பாவங்களை தொண்டைக்குழிக்குள் உறுத்தும் முள்ளாக சுமந்தலையும் விழிகள் தனித்து தெரிபவை. மன்னிப்பை தேடி அலையும் அந்த ஈரமுள்ள ஆன்மாக்களின் கடைசிப் புகலிடம் கடவுள்.

” கடவுள் மிக மன்னிப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கிறான்” என்கிற வரிகள் கடவுளின் மொழியாக புனித நூல் குர்ஆன் கூறுகிறது. கடவுளின் மைந்தனாக தோன்றிய இயேசு பிரானும் ” அவர்கள் என்ன பாவம் செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்கிறார்கள். என் பிதாவே! அவர்களை மன்னித்து விடுங்கள்..” என்று கேட்டார் என புனித பைபிள் கூறுகிறது.

ஏறக்குறைய எல்லா அற நூல்களும் மன்னிப்பின் புனிதத்தை சதா போதித்துக் கொண்டே இருக்கின்றன.

நம் தலைமுறையின் மகத்தான கவிஞன் முத்துக்குமார் தனது கடைசி திரைப்படமான “தரமணி” யில் ஒரு மன்னிப்புப் பாடல் ஒன்றை மனமுருக எழுதியிருப்பார்.

“என்னை மன்னிப்பாயா

யா அல்லா ஓ

நஞ்சினைப்போல

நெஞ்சுக்குள் இருக்கும்

குற்றம் கொல்கிறதே

என் தொண்டைக்குழியில்

உறுத்தும் முள்

ஏதோ சொல்கிறதே

நீ இருக்கும் இடந்தான்

எது அல்லா

அது மன்னிக்கும் மனமே

யா அல்லா..”

மன்னிக்கும் மனதை கடவுளின் இருப்பிடமாக முத்துக்குமார் எழுதியிருப்பார்.

இறுதியாக எல்லா காயங்களையும் பாவங்களையும் தூக்கிக் கொண்டு கடவுளின் முன்னால் சரண் அடைந்திருக்கிற ஒரு ஆன்மாவின் அழுகையாக அந்தப் பாடல் இப்படி நீளும்.

“காயங்களை கட்டிக்கொண்டு

உன்னிடம் வந்துவிட்டேன்

என் பாவம் யாவும் தூயவனே

என்றோ மறந்துவிட்டேன்

லாயில்லாஹாயில்லல்லா

லாயில்லாஹாயில்லல்லா

முகம்மது ரசூலல்லா”

உண்மையில் “மன்னிப்பு என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நிம்மதி” என்கிறார் கவியரசர் கண்ணதாசன். “மன்னித்துவிடு. கொந்தளித்துக் கொண்டிருக்கும் உன் மனது அமைதியாகி விடும்” என்று சொல்லும்

அவரது வரிகள் மிக ஆழமானவை.

மன்னிப்பை மிக அதிகமாக பேசும் புனித பைபிளில் சில வாசகங்கள் நம்மை அதிரச் செய்கின்றன.

” பிரியமானவர்களே..! பழிவாங்குதல் எனக்குரியது.நானே பதிற் ( பதில்) செய்வேன்.”

-ரோமர் 12:19

மனிதனுக்கு மன்னிப்பைப் போதிக்கின்ற கடவுள் பழிவாங்குதலை தனக்குரியதாக மாற்றுகிறான். புனிதக் குர்ஆனிலும் ” கடவுள் கண்காணிப்பதிலும், கணக்குத் தீர்ப்பதிலும் விரைவானவன். ” என்ற வரிகள் உண்டு.

“பழிவாங்குதல் ஒரு பரிசுத்த உணர்வு” என்கிறது மகாபாரதம்.

….

என்னுடைய பதின் வயதுகளில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டங்களுக்கு நான் அடிக்கடி சென்றபோது பழக்கமான

மத ஊழியர் சகாயம். எப்போதும் பைபிளின் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு ஜெபமாலைகளின் மணிகளை உருட்டிக் கொண்டே இருக்கும் அவரை பைபிள் இல்லாமல் பார்க்க முடியாது. எல்லோரிடமும் அதிகம் பேசாத, அதே சமயத்தில் ஊழியக் கூட்டத்திற்கான எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கின்ற அவரிடம் வெறுப்புற்றவர் என்று யாருமில்லை.‌ அவருக்கென்று யாரும் கிடையாது என்றும், இளம் வயதில் திருமணம் செய்த மனைவி இரண்டு வாரங்களில் யாரோ ஒருவரோடு ஓடி விட்டதாகவும், இதே ஊரில் அந்தப் பெண்ணும் குடும்பம் சகிதமாக இருப்பதாகவும், இவர் யாரிடமும் பேசாமல் எப்போதும் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பதாகவும் அவரைப் பற்றி என் நண்பன் சாம் என்னிடம் கூறிய போது, பிறகு இவர் யாருக்காக பிரார்த்திக்கிறார் என எனக்கு தோன்றியது.

ஒருமுறை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சற்று முன்னதாகவே சென்று விட்ட நிலையில், அந்த சிறு அரங்கில் கடவுளின் சிலுவைக்கு முன்னால் சகாயம் மண்டியிட்டு ஜெபமாலை உருட்டிக் கொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். ஜன்னலின் வழியே மாலை வெயிற்துளி கீற்றுப் போல உள்ளே பாய , அதன் ஒளியில் நின்று, நிழலின் ஆழத்தில் நின்றுக் கொண்டிருக்கும்‌ கடவுளின் சொரூபத்தை நோக்கி‌ மனமுருக பிரார்த்தித்துக் கொண்டிருந்த அவரின் கண்களில் பிரார்த்தனையின் போதே சாரை சாரையாக கண்ணீர் கசிந்து வழிந்துக் கொண்டிருந்தது.

நான் அமைதியாக காத்திருந்தேன். பிரார்த்தனை முடிந்து திரும்பியவர் என்னை பார்த்தவுடன் சற்றே அதிர்ச்சி அடைந்தார். அவரது தனிப்பட்ட பிரார்த்தனையை நான் பார்த்து விட்டதை கண்டு அவர் சற்று கூச்சப்பட்டார். என்னிடம் ஏதும் சொல்லாமல் விலகிப் போன‌ அவரை அதன் பிறகு தனியே எங்கும் பார்க்க முடியவில்லை. எங்களது பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ் ரெல்டன் ஒருமுறை என்னிடம் தனியே பேசிக் கொண்டிருக்கும்போது சகாயத்தை பற்றி பேச்சு வந்தது.

அவன் யாருக்காக பிரார்த்திக்கிறான் என்று நினைக்கிறாய் என ஜேம்ஸ் சார் கேட்டபோது என்னிடம் எந்த பதிலும் இல்லை. அவன் ஓடிப் போன தன் பொண்டாட்டிக்காக பிராத்தித்து கொண்டிருக்கிறான் என்ற போது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. “மன்னிப்பதன் மூலமாக நிம்மதியை அடைகிறார் போல..” என நான் சொன்ன போது .. இல்லை இல்லை என மறுத்த ஜேம்ஸ் சார் அடுத்தது சொன்னது தான் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

“அந்த மன்னிப்பு அவன் அவளுக்கு கொடுக்கிற தண்டனை..” என்று அவர் சொன்னார். எப்படி என்று புரியாமல் நான் பார்த்தபோது..

” வழக்கமா பாதிக்கப்பட்டவன் சபிப்பான். ஆனா இவனோ யாரால பாதிக்கப்பட்டானோ, அவ நல்லா இருக்கணும்னு பிராத்திக்கிறான். அத, அவன் எழுதி பிரார்த்தனை கூடையில போட்ட பிரார்த்தனை ஓலை மூலமா பாதர் பீட்டருக்கு தெரிஞ்சி, அவர் ஒரு முறை அந்த பொண்ணுகிட்டயே இத பத்தி சொல்ல , அன்னைக்கு இவன் பிரார்த்திக்கிறத, அந்தப் பொண்ணு தூரத்திலிருந்து பாத்துட்டு , கதறி அழுதது இருக்கே.. நினைச்சு பாக்க கூட முடியல” என ஜேம்ஸ் சார் கண்கள் பனிக்க சொன்னது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.

உண்மையில் சகாயம் மன்னித்தது தான் அந்தப் பெண்ணுக்கு வழங்கிய மாபெரும் தண்டனை என நினைக்கும் போது இன்றும் பயமாக இருக்கிறது .

ஜெயமோகன் எழுதிய “அமுதம்” என்ற நெடுங்கதை ஒன்றைப் படித்தேன். காட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட மாபெரும் தோற்றம் கொண்ட பசு ஊர் முழுக்க அனைவருக்கும் பால் சுரந்து பசியாற்றி ஊரை செழிக்க வைக்க, பால் குடித்த அனைவரும் உடல் பூரித்து வளமான உடல் அடைய, அந்த ஊருக்கே பாலூர் என பெயர் வந்ததாக நீளும் அந்தக் கதையில், இறுதியாக அந்தப் பசுவை துர்சக்தியாக கருதி ஊர் மக்கள் அவமானப்படுத்தி அடித்து துரத்தி காட்டில் வைத்து எரித்துக் கொள்ளும் அந்த சமயத்தில் அந்தப் பசு யாரையும் சபிக்காமல், பால் குடித்த அனைவரும் தனது பிள்ளைகள் எனக் கருதி, அனைவரையும் மன்னித்து, நிதானமாக நின்று அந்த மரணத்தை எதிர்கொள்ளும் காவியத் தருணத்தை ஜெயமோகனின் வரிகளில் படிக்கும் நொடிகளில் மகத்தான சிலிர்ப்பை ஊட்டுபவை.

“கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டவனின்

காலில் வந்து விழுகிறது

கோபுரத்தின் நிழல்.”

– மதிக்குமார் தாயுமானவன்.

கடவுளுக்கே குற்ற உணர்வு கொடுத்த மதிக்குமார் தாயுமானவன் எழுதிய இந்த கவிதைக்கு தலைப்பு

” பாவமன்னிப்பு.”

….

உண்மையில் ‌ வாழ்வின் ரகசிய சூத்திரம் என்னவென்றால்.. மன்னிப்பவர்களோ அல்லது பழி வாங்குபவர்களோ.. யாருமே நிம்மதியாக இல்லை என்பதுதான்.

பழிவாங்குதலை ஒரு தட்டிலும் மன்னிப்பதை இன்னொரு தட்டிலும் ஏந்தி மாயத் தராசு ஒன்று முன்னும், பின்னும் அசைந்தாடும் ஆட்டத்தை தான்

வாழ்வென நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

-மணி செந்தில்.

இரு மரணங்கள்.

காலையிலிருந்து இந்த புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஷீகான் உசைனி எங்கள் தலைமுறையின் மகத்தான தற்காப்புக் கலை பயிற்சியாளர்.‌ தற்காப்புக் கலை, கராத்தே, வில்வித்தை போன்றவை மிகவும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களுக்கு மட்டுமே என்கிற நிலையை மாற்றி, பாலின வேறுபாடுகளைத் தகர்த்து அதை வெகுசனப்படுத்திய தற்காப்புக் கலை கலைஞர்களில் உசைனி முக்கியமானவர்.

பத்ரி உள்ளீட்ட சில திரைப்படங்களில் நடித்து, திடீரென சமையற்கலை நிபுணராக தோன்றி வேக வேகமாக சமைத்து, பாத்திரங்களை, கரண்டிகளை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டமாக அவர் ‌ பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 90களில் பிரபலம். சிற்பியாகவும் முத்திரை பதித்தவர்.

என் மகன்கள் இருவரும் அவருடைய பயிற்சி வகுப்பில் இணைந்து இருந்தவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் “தரப்படுத்துதல்” என்கிற வகுப்பில் ஈடுபட கும்பகோணம் வந்திருந்த போது கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளி வளாகத்தில் அவரை என்னுடைய தம்பியும் அவருடைய தலைசிறந்த மாணவர்களில் ஒருவரான கும்பகோணம் நகரத்தின் மகத்தான கராத்தே மாஸ்டர் “தம்பி வினோத்” அவர்கள் என்னை ‘சீமான் தம்பியாக’ அறிமுகப்படுத்திய போது ” எனது சிறந்த நண்பர் சீமான், அவருடைய தமிழ் உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்” எனச் சொல்லி கை குலுக்கினார். அவரது கரங்களை பற்றி கொடுக்கும் போது ‌ இரும்புக்கை மாயாவியின் கரங்களை குலுக்கியது போன்ற ஒரு உணர்வு. அவ்வளவு உறுதி.

திடீரென ஒரு நாள் அவருக்கு அபூர்வமான புற்றுநோய் வந்திருக்கிறது என சொல்லி முகநூலில் வீடியோ போட்ட போது இதையும் அவர் “100 கார்களை கைகளில் ஏற்றுகின்ற சவால்” போல வென்று வந்துவிடுவார் என நான் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தமிழகமே நம்பியது.

ஏனெனில் அவர் அவ்வாறு தான் தன்னைப் பற்றிய தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார். தன்னம்பிக்கையும், எதையும் சாதிக்கும் உறுதியும் கொண்ட அந்த இரும்பு மனிதனுக்கு எதுவும் ஆகாது என்று நாமெல்லாம் நினைத்தது அந்த மனிதன் நமக்குள் தனது அளப்பரிய ஆற்றலால் விதைத்த பொதுப்புத்தி.

ஆனாலும் மரணம் கருணையற்றது தானே.. மரணத்திற்கு எந்த காரணமும் தேவையில்லை. மரணத்திற்கான காரணங்கள் மனிதர்களுக்காக தயாரிக்கப்படுபவை. மரணம் குறித்து சொல்லப்படும் காரணங்கள் மனிதர்களை சமாதானப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டவை. அதை உசைனியும் நிரூபித்து விட்டு சென்றிருக்கிறார்.

அவருக்குப் பின்னால் அவரது மாணவர்கள் ஒவ்வொரு ஊரிலும் அவருடைய கலையை, எளிய மக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவரை என்றென்றும் நினைவு கூர வைப்பார்கள்.

எனது உயிருக்கினிய இரண்டு தம்பிகள் மாஸ்டர் வினோத் அவனுடைய மாணவனும், கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் போராளியுமான விக்கி ஆகிய இருவரும் மாஸ்டர் உசைனி கும்பகோணம் நகரத்திற்கு வழங்கிய கொடைகள்‌. அடுத்தடுத்த இழப்புகளில் சிக்கித் தவிக்கும் என் தம்பி வினோத் இதிலிருந்தும் மீண்டு வர வேண்டும். அவன் மீண்டு வருவான். ஏனெனில் அவன் உசைனி மாணவன்.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் தமிழ் உணர்வும், தற்காப்பு கலை நிபுணத்துவமும் வாய்ந்த தம்பிகளை மாஸ்டர் உருவாக்கி விட்டு சென்றிருக்கிறார்.

அவர் நீடித்து வாழ்வதற்கான எல்லா காரணங்களையும் அவர் மரணத்திற்கு முன்பே செய்துவிட்டு மறைந்திருக்கிறார்.

அவருக்கு என் கண்ணீர் வணக்கம்.

துயர் மரணத்தின் நிழல் பேரிருளாய் சூழ்ந்திருக்கும் இந்த இரவை இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்படி கடப்பாரென்று நினைத்துப் பார்த்தாலே மனம் கனத்துப் போகிறது. மாஸ்டர் ஷிகான் ஹீசைனிக்காக‌ இரங்கல் பதிவு எழுதிவிட்டு மாலையில் மௌனமாக அமர்ந்திருந்த போது இயக்குனரும் நடிகருமான மனோஜ் இறந்த செய்தி வந்து சேர்ந்தது.

அவரது மரணச் செய்தி கேட்டு பலரும் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஊடகங்களில் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். முக்கியமாக நடிகர் தம்பி ராமையா அவர்கள் கொடுத்த பேட்டி என்னவோ மனதை ஏதோ செய்தது. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்.

உண்மையில் மனோஜ் தன் வாழ்நாள் முழுக்க தன் தந்தை அடைந்த கலை உயரத்தில் பாதியாவது தொட்டுவிட வேண்டும் என போராடிக் கொண்டே இருந்தார். மாபெரும் ஆளுமைகளுக்கு மகன்களாகப் பிறப்பதும் ஒருவித சாபம்தான். எதற்கெடுத்தாலும் தன் தந்தையோடு அவர்களை ஒப்பிட்டு அவர்களின் சுயம் அழிக்கும் உலகம் தான் மனோஜ் போன்றவர்களை கொன்றுக் கொண்டே இருக்கிறது.

இன்று மாலை மனோஜ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த “தாஜ்மஹால்” படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மிகச்சிறந்த ஆல்பம் அது. கவிப்பேரரசு வைரமுத்து ஒவ்வொரு வரியையும் தனக்கு வாழ்வளித்த பாரதிராஜாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக எழுதி இருப்பார்.

படம் வெளியானபோது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அபூர்வமான ஒலிக் கோர்வைகளோடு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருந்த பாடல்கள் வேறு படத்தின் மீதான பரபரப்பை கூட்டி இருந்தன. இத்தனைக்கும் மணிரத்னத்தின் கதை திரைக்கதையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் அது.

சுவையான எல்லாவற்றையும் கலந்து, சுவையற்ற ஒன்றை தயாரித்தது போல ‌ ஆகிவிட்டிருந்தது படம். இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு திருப்பாச்சி அருவாளை தீட்டிக்கொண்டு வாடா வாடா என அறிமுகமானார் மனோஜ். ‌ ஆனால் வழக்கமான பாரதிராஜாவின் உயிர்ப்பும் உணர்வும் நிரம்பி வழியும் “பாரதிராஜாவின் கிராமம்” அந்தத் திரைப்படத்தில் இல்லை. செயற்கையான காட்சி அமைப்புகள், உடைகள் என படம் ஏதோ தெலுங்கு கிராமத்தை நகலெடுத்தது போல அமைய, மனோஜ் வெற்றி பெற முடியாமல் முடங்கத் தொடங்கினார்.

ஆனாலும் அவருக்குள் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருந்தது. திரைப்படத்துறையோடு ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்பு கொண்டவாறு இருக்க முயற்சி செய்தார். சில முயற்சிகள் சிறு வெற்றிகள் அடைந்தாலும், பாரதிராஜா என்கின்ற மாபெரும் யானை அடைந்திருந்த உயரம் அந்த சிறு வெற்றிகளுக்கான அங்கீகாரங்களைக் கூட அவரை அடைய விடாமல் தடுத்தது.

அது ஒரு வகை சாபம்தான். ” காந்தி இஸ் மை ஃபாதர்” என்று ஒரு புத்தகம் உண்டு. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் தன் வாழ்வில் தன் தந்தையின் உயரத்தால் அடைந்த துயரின் கதை அது. இறுதியில் ஒரு குடிகாரனாக மாறி, காந்தியை எதிர்ப்பதற்காகவே மதமும் மாறி எல்லாவற்றையும் இழந்து கடைசியில் அனாதை போல அரசு மருத்துவமனையில் இறந்து போனார் தேசப்பிதாவின் அசல் மகன். அது திரைப்படமாக கூட வெளிவந்திருக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர். ஆனாலும் அவருக்கும் இதே போன்ற சிக்கல்தான். தன் தந்தையை விட்டு கொஞ்சம் விலகி நின்ற யுவன் சங்கர் ராஜா அடைந்த வெற்றியை தந்தையின் நிழலில் நின்று கொண்டிருந்த கார்த்திக் ராஜா அடைய முடியவில்லை. இத்தனைக்கும் தன் அண்ணன் கார்த்திக் ராஜா தன்னைவிட மிகச் சிறந்த இசை அறிவு கொண்டவர் என யுவன் சங்கர் ராஜாவால் புகழப்பட்டவர் அவர்.

மனோஜ் தன் தனிப்பட்ட வாழ்வில் அனுதினமும் எதிர்கொண்ட அழுத்தங்கள் அவரை சாகும் வரை நிம்மதியாக இருக்க முடியவில்லை. எப்படியாவது தந்தைக்காக ஒரு வெற்றி அடைந்து விட வேண்டும் என போராடி தவித்த நல்ல மகன் அவர். சிறுநீரக பிரச்சனைகளுக்கு நடுவில் அவர் இயக்கிய “மார்கழித் திங்கள்” மோசமான தோல்வியை சந்தித்தது. நீண்ட நாட்களாக “சிவப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்து விட வேண்டும் என தவித்ததாக அவர் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.

அரண்மனையில் இருந்தவர்தான். ஆனாலும் வீதியில் இறங்கி தனக்கென ஒரு தனிப்பட்ட அடையாளம் வேண்டும் என எல்லா கதவுகளையும் தட்டிப் பார்த்திருக்கிறார்.

ஒரே ஒரு கதவு தான் அவருக்காக திறந்திருந்தது.

அது மரணத்தின் கதவு.

மனோஜ் போய்விட்டார்.

கம்பராமாயணத்தில் தன் மகன் இந்திரசித்தை போரில் இழந்த ராவணன் “எனக்கு நீ செய்ய வேண்டியது எல்லாம் உனக்கு நான் செய்து கொண்டிருக்கிறேனே..” என அழுது புலம்பும் ஒரு துயர் கவிதைப் போல பாரதிராஜாவின் இந்த சோகம் மீதம் இருக்கும் அவரது சிறு வாழ்நாளில் பெரும் முள்ளாய் உறுத்தி உயிர்வாதை செய்துக் கொண்டே இருக்கும்.

அதுவும் அவர் துளித்துளியாய் அடையும் ஒருவகை மரணம் தான்.

… கண்ணீர் வணக்கம்.

தனிமை என்பது யாதெனில்..

பெரியார்!ஊதிப்பெரிதாக்கப்பட்ட மிகைப்பிம்பம்!(பெரியார் கருத்துக்களின் மீதான மீள் ஆய்வு)

‘வரலாறு கொடியது. அது எப்போதும் புனிதப் பிம்பங்களை உடைத்துக் கொண்டே நகர்கிறது’ என விரைந்தோடும் காலம் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. ஏனெனில், புனிதப் பிம்பங்கள் நிரந்தரமானவை அல்ல; எல்லாக் காலத்திலும் புனிதப் பிம்பங்களின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் புனிதப் பிம்பங்கள் அந்த நிலையிலிருந்து அகற்றப்பட்டு, வேறு நிலையில் நகர்த்தப்படுகின்றன. எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடியது என எந்தத் தத்துவமும் இல்லை. அதற்கு பெரியார் கருத்துக்களும் விதிவிலக்கல்ல எனக் கூறினாலும், நாம் ஆரிய அடிமைகளாகக் காட்டப்படுவோம்; பாஜகவின் கைப்பாவைகளாகக் கட்டமைக்கப்பட்டு விடுவோம் என்கிற அறிவுப்பரப்பில் திராவிட ஆதரவாளர்களால் எப்போதும் விடுக்கப்படுகிற மிரட்டல்கள் தற்போது முறியடிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில், இங்கே காலங்காலமாக பெரியார் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஏதேனும் குரல் எழுந்தால், அந்தக் குரல், ‘ஆரியத்தின் குரல்’, ‘ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குரல்’ எனக் கூக்குரலிட்டு‌ தொண்டை குரல்வளை நெறிக்கப்படுகிற காட்சிகள்தான் இதுவரை நடைபெற்று இருக்கின்றன. ‘பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கையைக்கூட ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதன் நுண்ணரசியல் பெரியாரின் முரண்பட்டக் கருத்துக்கள் எங்கே பொதுபார்வைக்கு வந்துவிடுமோ என்கிற அச்சம்தான் எனும் வாதத்தினைத் தள்ளி வைக்க முடியாது.

இந்திய வரலாற்றில் எண்ணற்ற பெருந்தலைவர்கள் விமர்சனங்களால் மறுவாசிப்புக்கு/ மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காந்தியடிகள் குறித்தும், ஜவஹர்லால் நேரு குறித்தும் இதுபோன்ற விமர்சனங்கள் வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் எவரும் பெரியார் ஆதரவாளர்கள்போல, பதற்றம் அடைவதில்லை. சமீபத்தில்கூட எட்வினா மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்கள் குறித்து வடஇந்தியாவில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்கள் இவ்வளவு பதற்றங்கள் நிறைந்தது அல்ல! சொல்லப்போனால், அது ஜவஹர்லால் மற்றும் எட்வினா எனும் தனி நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சார்ந்தது. ‌அந்த மீறலைக்கூட உரையாடல்களாக, விவாதங்களாகவே வடநாட்டில் வைத்துக் கொண்டார்கள்.

இதுதான் பெரியாருக்கும் நிகழ்கிறது. பெரியார் மீண்டும் மறுவாசிப்புக்கு உள்ளாவது என்பதை அவரது ஆதரவாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவர்கள், ‘கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை’ என்று கூறிய பெரியாரைக் கடவுள் ஆக்கிவிட்டு, ‘சொந்தப்புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்’ என்ற அகங்காரத்தில் உன்மத்த வெறியில், எதிர்கொண்டவர்களைத் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பெரியார் மீது இப்போது எழுந்திருக்கும் விமர்சனங்கள் எப்போதும் இருப்பவைதான். ஆனால், பதற்றத்தின் அளவு எப்போதும் இல்லாதது. புனிதப் பிம்பங்களாக மாற்றப்பட்டவர்களின் அடையாளங்களுக்கு எதிராக எதிர்வினைகள் நிகழ்ந்துகொண்டே இருப்பது என்பதுதான் இயற்கை. இதில் எவரும் பதற்றமடையவோ, வன்முறை வெறிக் கொள்ளவோ எதுவும் இல்லை. பெரியாரைப் பற்றி எந்தவிதமான விமர்சனமும் எழுந்துவிடக்கூடாது என்பதில் இவர்கள் காட்டுகிற தீவிரம் மிகவும் அபத்தமானது.

பெரியாரைக் கடந்துசென்றவர்களைக்கூட அதிதீவிர பெரியார் எதிர்ப்பாளர்களாக மாற்றியதில் பெரியாரைப் பற்றித் திட்டமிட்டுப் புனையப்பட்ட மிகைப்பிம்பமும், பெரியாரை சர்வலோக நிவாரணியாக மாற்றி வழிபட்ட திராவிட ஆதரவாளர்களின் வழிபாட்டு மனநிலையும், காலத்திற்கு ஒவ்வாத முரண்பாட்டு மூட்டையான பெரியாரின் குழப்பவாதங்களை இப்போதும் உட்புகுத்தியதும்தான் முதன்மைக்காரணம் எனலாம்.

பெரியாரைப் பற்றி இப்போது எழுகிற எதிர்க்குரல்கள் யாவும் புதிதானவை அல்ல. இதற்கு முன்னால் பெரியாரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன. சமகாலத்தில் தீவிர தமிழ்த்தேசியத்தளங்களிலிருந்து பெரியாரைப் பற்றிய விமர்சனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டேதான் இருக்கின்றன. பெரியார் மிக நீண்டநெடிய அரசியல் பொதுவாழ்வைக் கொண்டவர். அவரது தத்துவம் என எதையும் நிலைநிறுத்த முடியாத அரசியல் நடவடிக்கைகளை உடையவர். காங்கிரசு கட்சியைவிட்டு வெளியே வந்து, அதனை எதிர்ப்பதற்காக முதல் மொழிப்போரை ஆதரித்த பெரியார், அதே காங்கிரசை ஆதரிப்பதற்காக இரண்டாம் மொழிப்போரை எதிர்த்தார். முதல் குடியரசு இதழ் 02-05- 1925 அன்று தொடங்கும்போது, ‘ஈசன் அருளால்’ எனத் தொடங்கியுள்ள பெரியார், 01-01-1962 ஆம் ஆண்டு எழுதிய, ‘விடுதலை’ கட்டுரையில், ‘10 வயதில் இருந்து தான் நாத்திகன்’ எனக் கூறியுள்ளார். முதல் குடியரசு இதழைத் தொடங்கும் போது அவருக்கு வயது 46. 1925ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த பி.டி. தியாகராயர் இறந்தபோது, “அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்கிறார் பெரியார். ‘ராமசாமி நாயக்கர்’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அவர் தனது சாதிப்பட்டத்தை 1927ஆம் ஆண்டுதான் நீக்கினார். கீழ்வெண்மணி படுகொலையில் பெரியார் சாதியவாதிகளுக்கு ஆதரவாகத்தான் நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரசு கட்சி கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டத்தைப் போல, ஒரு காத்திரமானப் போராட்டத்தை பெரியார் ஏன் தமிழ்நாட்டில் முன்னெடுக்கவில்லை? என்பது கேள்விக்குரியது. தொடக்கத்தில், ‘குடியரசு’ இதழின் முத்திரைக்கு கீழாக, பெரும்பாவலர் பாரதியாரின், ‘எல்லோரும் ஓர் குலம்! எல்லோரும் ஓரினம்! எல்லோரும் இந்திய மக்கள்!’ எனும் வரிகள் இடம் பெற்றிருந்தது. 1930ஆம் ஆண்டுக்குப் பிறகாகத்தான் பாரதியாரை பெரியார் நிராகரித்தார். அண்ணா மனமுவந்து ஏற்றுக்கொண்ட இந்தியாவின் சுதந்திர தினத்தை கருப்புத் தினமாகவும் அறிவித்தவர் பெரியார்.

கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, இந்திய எதிர்ப்பு என்பது எல்லாம் பெரியாருக்குக் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றமென்றால், இதே கருத்து மாற்றம் பட்டறிவு மூலம் எவருக்கேனும் நிகழும்போது ஏன் வலிக்கிறது? என்பதுதான் நமது கேள்வி. பெரியாரின் நிலைப்பாடுகள் காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் தத்துவார்த்தரீதியில் அமையாமல், அந்தந்தச் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல, பெரியார் என்ற தனி மனிதனின் எண்ணத்திற்கும், முடிவுக்கும் ஏற்றாற்போலவே அமைந்தன எனலாம்.

பெரியார் வாழும் காலத்திலேயே அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதன், ம.பொ.சி போன்ற தமிழினத்தின் தலைவர்களால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். இறுதிக்காலத்தில், தன் பாடல்களில் திராவிடத்தை நீக்கிய பாரதிதாசனோடும் முரண்பட்டார் என்றெல்லாம் தகவல்கள் உண்டு.

அறிஞர் குணா எழுதிய, ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற சிறு நூல் என் கைகளுக்கு கிடைத்தக் காலத்தில் நான் தீவிர பெரியார் ஆதரவாளர். பிறகு, அ. மார்க்ஸ் அந்தப் புத்தகத்திற்கான எதிர்வினை கட்டுரைகளை ஒரு நூலாக்கி இருந்தார். அந்த நூலின் பெயர், ‘குணா பாசிசத்தின் வடிவம்’. அதன்பிறகு, தற்போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கிற ரவிக்குமார், 2002ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில், ‘தாய்மண்’ இதழில் எழுதிய பல்வேறு கட்டுரைகள் அப்போது மீண்டும் விவாதப் பொருளாக மாறின. பிறகு, பெரியார் குறித்த விமர்சனங்களோடு எண்ணற்ற புத்தகங்கள் காலந்தோறும் வெளிவந்து கொண்டேதானிருந்தன. அதில் தமிழ்த்தேசியத் தத்துவப் பேராசன் ஐயா பெ.மணியரசன் அவர்கள் எழுதிய, ‘பெரியாருக்குப் பின் பெரியார்’ , ‘திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? , ‘வெண்மணித்தீ வெளிச்சத்தில் காங்கிரசு – கம்யூனிஸ்ட் – திராவிட அரசியல்’, வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ , ’வழக்கறிஞர் குப்பன் எழுதிய, ‘தமிழரின் இனப்பகை ஈவெரா’, சுப்பு எழுதிய, ‘திராவிட மாயை’, சடகோபன் எழுதிய, ‘ஆரிய திராவிட மாயை’, முருகு ராசாங்கம் எழுதிய, ‘பெரியாரின் குடியரசு – முதல் மலர் கிடைத்துவிட்டது’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக, இடைநிலை சாதிகளுக்காகத்தான் போராடினார் பெரியார்; தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அல்ல என்கிற கருத்தோட்டத்தில் ஏராளமான நூல்கள் ஆதித்தமிழர்கள் பார்வை நிலையிலிருந்து எழுதப்பட்டு, பெரியாரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் மறுவாசிப்புக்கும், கடுமையான எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கின்றன. பெரியார் மறைவுக்குப் பின்பு, ‘பெரியாரின் கொள்கைகளைத் குழிதோண்டிப் புதைத்த திராவிடர் கழகம்’ என வே. ஆனைமுத்து எழுதிய நூலும் இருக்கிறது.

‘தமிழ்த்தேசியம் எதிர் திராவிடம்’ என வரும்போது திராவிடத்தின் வாளாகவும், திராவிடத்தின் கேடயமாகவும் பெரியாரே முன்னிறுத்தப்படுகிறார். எனவே, காலங்காலமாக தமிழ்த்தேசியவாதிகளால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் பெரியார். மேலும், மொழி, தேசிய இனம், தேசம், நிலப்பரப்பு எனும் எதிலும் பெரியார் விருப்பம் கொண்டவர் அல்லர். எனவே, தமிழர் இன உரிமைகளுக்கான கருத்தியலின் அரசியல் வடிவமான, ‘தமிழ்த்தேசிய அரசியல்’ என்பது பெரியாரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானதுதான்.‌ ‘தமிழ்த்தேசியம்’ என்கிற இனவிடுதலை அரசியல் பயணத்தில் நிற்பவர்களுக்கு திராவிடம் என்பது மிகப்பெரிய தடையாக எழும்போது, பெரியார் நிலைகள் தாக்கப்படுவது இயல்பானதுதான். மேலும், பெரியாரை தமிழின அறிவுலகத்தின் உச்சமாக வைத்து வழிபடும் அந்த வழிபாட்டு மனநிலைதான் அதிகாரத்தின் வழியாக ‌பொதுப்புத்தியாக மாறி, இன்று பெரும் ஆபத்தாக மாறி நிற்கிறது. தமிழ்த்தேசியர்களால் பெரியார் குறித்த விமர்சனங்களைச் சார்ந்து, திராவிடக் கூடாரங்களில் எழும் பதற்றம் அவர்களது கருத்தியல் வறட்சியைக் காட்டுகிறது. மேலும், பெரியார் புத்தகங்களை முன்வைத்து நிகழும் இந்த உரையாடல்களில் சான்றுகளைத் தேடி, இருதரப்பும் அலைந்து கொண்டிருக்கையில் அதை நாட்டுடைமை ஆக்காமல் தனி உடைமையாக வைத்திருப்பது குறித்து திராவிட ஆதரவாளர்கள் பேச மறுப்பதன் உண்மை பொருள் என்னவெனில், பெரியார் கருத்துக்கள் பல இன்று ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டு அவரது பிம்பத்தை அவரே சிதைக்கிற வகையில் அமைந்திருப்பதுதான். இது பெரியார் மறுவாசிப்புக்கு/ விமர்சனங்களுக்கு உள்ளாகிற‌ காலம்; புனிதப்பிம்பங்களும், போலிக் கருத்துருவாக்கங்களும் உடைகிற காலம்!

பெரியார் எழுதிய எழுத்துக்களை அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள், ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் வரிசை நூல்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். அதேபோல, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களால் ‘பெரியார் களஞ்சியம்’ என்கிற தலைப்பில் தொடங்கப்பட்டு வரிசை நூல்களாக வெளிவந்திருக்கின்றன. பெரியாரின் கருத்துக்கள் இதுவரை நமக்கு நூலாகவும், இணையப் பதிவுகளாகவும், பல்வேறு அறிஞர்கள் தெரிவித்தக் கருத்துக்களின் அடிப்படையிலும் இந்தத் தொடர் முழுக்க மீள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன. பெரியார் குறித்த இந்த விவாதங்கள் தமிழ் அறிவுப்பரப்பில் எவ்வித அதிகாரக் கட்டுப்பாடும் இன்றி, சுதந்திரத்தோடு நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடே இந்தத் தொடர்!

பெரியாரை ஆழமாக வாசித்த பெரியாரியவாதிகள் பெரியார் ஒன்றுக்கொன்று முரணாக வைத்த கருத்துக்களை ஒருதலைப்பட்சமாக அணுகி, பெரியார் மீது உள்ள அளவற்ற வழிபாட்டு மனநிலையாலும், கண்மூடித்தனமானப் பற்றினாலும் எவ்வித விமர்சனப் பார்வையுமின்றி மொத்தமாகக் கடந்திருக்கிறார்கள். அந்த விபத்து எனக்கும் நடந்திருக்கிறது என்பதை மறைப்பதற்கில்லை. அளவற்ற அதே பற்றினால் பெரியார் குறித்து பல கட்டுரைகளை ஏற்கனவே எழுதியிருக்கிற எனக்கும் இது ஒருவித புது அனுபவம்தான். பெரியாரின் கருத்துக்களை ஏன் மறுவாசிப்புக்கு உள்ளாக்க வேண்டும்? என்கிற கேள்வி அபத்தமானது. ஒவ்வொருவர் கருத்தும் வருங்காலத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பதுதான் வரலாறு நமக்கு விடுத்திருக்கிற செய்தியாகும்.

தமிழர்களின் உச்சபட்ச அறநூலாகப் போற்றப்படும் திருக்குறள் குறித்து பெரியார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோது, பி.ஆர்.பரமசிவ முதலியார் ஒரு நீண்ட மறுப்பு எழுதினார். அதற்கு பெரியார் அளித்த பதில்கள், பெரியார் கருத்துக்களுக்கும் பொருந்தும்தானே!

“உண்மையைப் பேசும்போது அதனால் யாருக்கும் பழிப்பு ஏற்படுமானாலும் அது பற்றி கவலை கொள்ளாது அந்தப் பழிப்பிற்குக் காரணமாக உள்ளதை ஒழிக்க முயல வேண்டியதே வீரர்களின் கடமையாகும்.”
( ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 1 – பக்கம் 213)

பார்ப்பன எதிர்ப்பு அரசியலிலிருந்து பெரியாரது அரசியல் உருவாகிறது. பார்ப்பன எதிர்ப்பு அரசியலை ஆரிய எதிர்ப்பு அரசியலாக வரையறுத்த பெரியார் ‌வரலாற்றில் இல்லாத ‘திராவிடர்’ என்கிற இனத்தை முன்னிறுத்தினார். தனது எழுத்துக்களில் பேச்சுக்களில் ஒரு இடத்தில், ‘திராவிடர்’ என்றும், இன்னொரு இடத்தில், ‘தமிழர்’ என்றும் மாற்றி மாற்றி அடையாளப்படுத்தி, தமிழர் நிலத்தில், தமிழர் அறிவுப்பரப்பில் அடையாளக் குழப்பங்களை உண்டாக்கினார். அதற்கு கால்டுவெல்லை துணைக்கு அழைத்துக் கொண்ட பெரியார், தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரை உள்ளடக்கி, ஆரிய எதிர்ப்புச் சொல்லாக, ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதாக புது விளக்கம் அளித்தார்.
“தமிழர் என்றால், அதற்குள் பார்ப்பனர் வந்து விடுவார்கள்” என்று விசித்திர விளக்கம் அளித்த பெரியார், ‘திராவிடர்’ என்ற சொல்லே தென்னிந்திய பார்ப்பனர்களை குறிக்கும் சொல்தான் என்பதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. ‘திராவிடம்’ என்ற சொல் தமிழ்ச்சொல்லும் அல்ல; தமிழ் இலக்கியங்களில், ‘திராவிடம்’ என்ற சொல் எங்கும் காணப்படவில்லை என்பதும், பெரியார் நிறுவ முயன்ற, ‘திராவிடம்’ என்ற கற்பனை இனவாதத்தை தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் புறக்கணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இல்லாத கற்பனைவாதமான திராவிடத்தை ஆரிய எதிர்ப்பு சொல்லாக அறிவித்து, தமிழர்களின் இயல்பான தேசிய இன அடையாளத்தை மறுத்து, திராவிடரென்பதையே ஒரு இனமாக வரையறுக்க முயன்ற பெரியார் தனக்கு இனப்பற்றோ, மொழிப்பற்றோ இல்லை என்றார். ஆனால், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, “கண்ணப்பர் தெலுங்கர்; நான் கன்னடியன்; தோழர் அண்ணாதுரை தமிழர்” என்று கூறியதோடு மட்டுமில்லாமல், “நான் பலிஜா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவன்” (குடியரசு – 22.08.1926) என்றும் சுயஅறிமுகம் செய்கிறார்.

தனக்கு மொழி அபிமானமோ, தேச அபிமானமோ இல்லை எனத் தீர்க்கமாக அறிவித்த பெரியார், தமிழ்மொழியை விமர்சித்த அளவுக்கு தனது தாய் மொழியான கன்னடத்தையோ, இதர திராவிட மொழிகள் என அடையாளம் காட்டிய தெலுங்கையோ, மலையாளத்தையோ விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த மொழியின் மீதும் பற்றில்லை என்ற பெரியார், ஆங்கில மொழி மீது அளவற்ற நாட்டம் கொண்டிருந்தார். பெரியாரின் மொழி, இனம் குறித்தான முரண்பாடான கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் வரும் அத்தியாயங்களில் காண்போம்.

  • தொடரும்

Page 2 of 59

Powered by WordPress & Theme by Anders Norén