பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூலை 2010

மண்ட்டோ படைப்புகள் – உண்மையின் கோர முகம்.

“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது”

-சாதத் ஹசன் மண்ட்டோ.

மண்ட்டோ என்ற இப் பெயரினை நான் முதன் முதலாக கேள்விப்பட்ட இடம் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. எழுத்தாளரும், என் நண்பருமான அம்மாசத்திரம் சரவணன் திருமண நிகழ்வின் போதுதான் இப்பெயரினை நான் முதலில் கேட்டேன் . திருமணத்தின் முதல் நாளின் மாலையில் சரவணன் தனது சிறுகதை தொகுப்பினை வெளியிடும் நிகழ்வினை வைத்திருந்தார். சரவணன் தமிழ்நாட்டின் நவீன எழுத்தாளர்களின் நெருங்கிய நண்பராக இருப்பவர். அதனால் அவரின் திருமண நிகழ்விற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான நவீன எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள் . அந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள எஸ் .ராமகிருஷ்ணன், அ.மார்கஸ், கோணங்கி, பொதியவெற்பன் போன்ற பல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். மாலையில் நடந்த அந்த சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் அ.மார்க்ஸ் இனி தமிழக எழுத்தாளர்கள் மண்ட்டோவினை பின்பற்ற வேண்டும் எனவும்,புதுமைப்பித்தனையே பிடித்து தொழுது கொண்டிருக்க கூடாது, திருமணம் போன்ற நிறுவனங்கள் தகர்க்கப்பட வேண்டும் எனவும், அப்பா, அம்மா, மனைவி போன்ற குடும்ப உறவுகளில் எவ்வித புனிதமும் இல்லை எனவும் வயதான பெற்றோரை கவனிக்க வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கான விருப்பம் எனவும் பேசினார்.திருமணத்திற்கு வந்திருந்த பெண்கள் இதையெல்லாம் கேட்டு நெளிந்துக் கொண்டிருந்தனர். புதுமைப்பித்தனின் வெறியரான பொதிய வெற்பனுக்கு இது தாங்கவில்லை. துள்ளி துடிக்க எழுந்து பதில் சொல்ல முயன்றார். ஆனால் அ.மாவிற்கு முன்பே பேசியிருந்த பொதியினால் மீண்டும் ஒரு முறை பேச வாய்ப்பில்லை. அடுத்ததாக பேச வந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன்.

எஸ்.ராமகிருஷ்ணன் ஆகச்சிறந்த பேச்சாளரில்லை. ஆனால் நாம் அறிந்திராத தகவல்களையும்,சுவாரசியங்களையும் கலந்து அடித்து பிரித்து மேய்வதில் வல்லவர். ஒரு அவையை எப்படி தன்னகப்படுத்துவது என்ற வித்தை புரிந்தவர் எஸ்.ரா. அதனால் மிக எளிதாக குடும்ப உறவுகளின் மேன்மையை பற்றி பேசி பெண்களிடம் கைத் தட்டல் அள்ளிக் கொண்டு போனார் எஸ்.ரா.பிறகு மண்ட்டோவினையும்..புதுமைப்பித்தனையும் ஒப்பிட்டு அவர் பேசினார். புதுமைப்பித்தனின் வாழ்வியலும், சமூகச் சூழலும் நமக்கு நெருக்கமானவை என்றும் மண்ட்டோ போல எதனையும் சிதைக்க நம் பண்பாட்டு விழுமியங்களில் இடமில்லை எனவும், நம் உறவுகளில் நிலவும் சகிப்பும், பகிர்வுமே நம்மை நிம்மதியாக வாழ வைக்கிறது எனவும் பேசி அந்த அரங்கினில் புதுமைப்பித்தனை உச்சியில் வைத்து பொதியவெற்பனை துள்ளிக் குதிக்க வைத்தார் எஸ்.ரா.

விழா முடிந்து எஸ்.ராவுடன் நான் காரில் வருகையில் மண்ட்டோ அந்தளவு நமக்கு அந்நியப்பட்டவரா என்று கேட்டேன். அதற்கு மண்ட்டோவினை படியுங்கள் . அதனை வெறுப்பதும், நேசிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் மண்ட்டோவினை படிக்காமல் இருக்காதீர்கள் என்றார்.

அந்த நாளில் தான் மண்ட்டோ என்னுள் நுழைந்தார். நான் ஒரு முறை திருமணத்திற்காக கோவைக்கு சென்ற போது சென்னையில் இருந்து வரும் என் நண்பன் ஒட்டக்கூத்தனை மண்ட்டோ படைப்புகள் நூலினை வாங்கி வரச்சொல்லியிருந்தேன். நான் வருவதற்கு முதல் நாள் வந்திருந்த அவனிடம் மண்ட்டோ படைப்புகள் இருந்ததை எழுத்தாளர் பாமரன் பார்த்து விட்டார். அந்த புத்தகமும் எனக்கு கிடைக்காமல் போயிற்று. கடைசியாக சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் மண்ட்டோ படைப்புகள் எனது வசமானது.

மண்ட்டோ என்ற சாதத் ஹசன் மண்ட்டோ 1912 –ல் லூதியானாவில் இருக்கும் சம்ப்ராலாவில் பிறந்தார். இந்திய –பாகிஸ்தான் பிரிவினையில் மண்ட்டோ பாகிஸ்தானை தேர்ந்தெடுத்தார். தனது 43 ஆம் வயதில் 1955-ல் லாகூரில் காலமானார். மண்ட்டோவின் படைப்புகள் பெரும்பாலும் பிரிவினைத் துயரங்களை பேசுகின்றன. மேலும் விளிம்பு நிலை மக்கள்,விலை மாதர்கள் தான் அவரது கதைகளின் கதை மாந்தர்கள். ஓவ்வொரு படைப்பும் அதிர்ச்சிகளின் வெடிப்பில் முடிந்தது. எளிய வாசகர்கள் மண்ட்டோவினை அணுக அஞ்சுவதும் இதனால் தான். தான் வாழும் காலத்தில் தன் படைப்புகளால் அனைத்து விதமான எதிர்ப்புகளையும் மண்ட்டோ சந்தித்தார். அவரது எழுத்துக்கள் ஆபாசமானவை என்றும், அதிர்ச்சி மதிப்பீடுகளை தருவதற்காகவே புனைவினை மேற்கொள்கிறார் எனவும் விமர்சிக்கப் பட்டன. ஆனால் மண்ட்டோவினை நாம் அவ்வாறெல்லாம் மிக எளிமையாக ஒதுக்கித் தள்ளி கடந்து விட முடியாது. அவரது எழுத்துக்கள் மிகவும் ஆபாசம் என்றால்..அவர் மிக எளிமையாக சொல்கிறார்…ஆம் . உண்மைதான் மிக ஆபாசமானது என்று. இதுதான் மண்ட்டோ.

சிக்கனமான சொற்களின் ஊடாகவே ஒரு படைப்பிற்கான அனைத்து வழிகளையும் திறந்து வைத்தவர் மண்ட்டோ.மண்ட்டோவின் எழுத்துக்கள் உண்மைக்கு அருகில் நிற்பவை அல்ல. மாறாக உண்மையாகவே நிற்பவை. இதுதான் பிற்போக்குவாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பிரச்சனையாக இருந்தது. மண்ட்டோ தனது எழுத்துக்களால் பல விதமான சர்ச்சைகளை எதிர் கொண்டார். சமூகத்தின் உயரிய சின்னமான மதத்தினை அவர் தன் எழுத்துக்கள் ஊடாக மிகவும் எள்ளலான முறையில் கேள்விக்கு உட்படுத்தியது மதவாதிகளை எரிச்சல் ஊட்டியது.

ஓய்வு நேரம் எனப் பெயரிடப்பட்ட அவரது சொற்றோவியம் ஒன்று.

“ ஏய்..

அவன் இன்னும் சாகவில்லை..

அவனிடம் இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது”

“என்னால் முடியவில்லை.

எனக்கு அசதியாக இருக்கிறது”

இந்த சொற்றோவியத்தினை ஆழ்ந்து வாசித்துப் பாருங்கள். இந்தியா –பாகிஸ்தான் பிரிவினைக் காலத்திய ரத்த வாடையினை உணர்வீர்கள்.

துணிச்சலான செயல் எனப் பெயரிடப்பட்ட மற்றுமொரு சொற்றோவியம் ஒன்று.

“ அந்த சுற்று வட்டாரத்தில் எல்லாமே தீ வைக்கப்பட்டு எரிந்துப் போனது. –ஒரே ஒரு கடை தப்பித்தது.

அந்த கடையின் அறிவிப்புப் பலகையில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது .

“கட்டிடங்கள் கட்டுவதற்கான எல்லாப் பொருட்களும் இங்கு விற்கப்படும்”

பிரிவினைக் கால கலகப் பூமியை அப்படியே நகலெடுத்து உண்மையாக யாரால் இப்படி எழுத முடியும் என்று யோசித்துப் பார்த்தால் மண்ட்டோ மட்டுமே தேறுகிறார்.

நினைவோடைப் பகுதியில் முகமது அலி ஜின்னாவினைப் பற்றி மண்ட்டோ எழுதியுள்ள பத்தி மிகவும் தனித்துவமானது. ஒரு படைப்பாளன் ஒரு ஆளுமையை அருகிலிருந்து உள்வாங்கி, அதை அப்படியே தன் படைப்பில் உருவாக்கி வாசகர் முன் உயிரூட்டி காட்டுவது என்பது எளிதான ஒன்றல்ல. ஆனால் மண்ட்டோவின் எழுத்துக்கள் மிக எளிதாக அதை சாதித்தன. மேலும் நர்கீஸ் பற்றியும் , நூர்ஜகான் பற்றியும், அசோக்குமார் பற்றியும் மிக நெருக்கமான விவரணைகள் நமக்கு மண்ட்டோவின் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன.

மண்ட்டோவின் எழுத்துக்கள் அடங்காமல் ஒடும் காட்டாறாய் ஒடுகிறது. நாமும் அவற்றினை கடக்க மிகவும் சிரமப் படுகிறோம். நம் பண்பாட்டு வெளிச்சத்தில் இருள் அள்ளி பூச முயலும் மண்ட்டோவின் எழுத்துக்கள் சற்று காத்திரமானவையே. ஆனால் உண்மைக்கு மிக அருகிலானவை என்ற முறைமையில்..ஒரு தேர்ந்த வாசகன் மண்ட்டோவின் ரசிகனாகிறான்.

மண்ட்டோவின் படைப்புகள் ஒரு தொகுதியாக தமிழில் கிடைக்கிறது. 20 க்கும் மேலான கதைகளும், அருமையான சொற்றோவியங்களும், ஆளுமைகள் குறித்த நினைவோடைகளும் , அவரது கடிதங்களும் என தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழில் மொழிப் பெயர்த்திருக்கும் ராமாநுஜம் அவர்களுக்கு நன்றிகள்.

( மண்ட்டோ படைப்புகள் : தமிழில் – ராமாநுஜம் – வெளியீடு – புலம்- பக்கங்கள் 615 விலை: ரூ.375/-)

சீமானின் கைது – தமிழ்த் தேசிய விடியலுக்கான புள்ளி.

இந்த இனத்திற்காக உண்மையாய் களத்தில் நிற்கிற போராளி சீமான் ஆட்சியாளர்களால் தேடப்படும் குற்றவாளியாக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். ஆட்சியாளர்களாகிய இவர்கள் குற்றவாளிகளை தேடும் அழகினையும். அவர்களினை பிடிக்கும் பாங்கினையும் நாம் சற்றே ஆராய்வோம். இந்திய நீதிமன்றங்களால் கொலை ,கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா இந்திய தலைநகருக்கே வந்து ராஜ உபச்சாரத்தோடு விருந்துண்டு போகிறான். கடமை உணர்வு மிக்க, கண்ணியம் மிக்க தமிழினத்தில் பிறந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் டக்ளஸிடம் பணிவு காட்டுகிறார். மத்திய அரசு ஒரு கொலைக்குற்றவாளிக்கு விருந்து உபச்சாரம் செய்து கூத்தடிக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய கருணாநிதியின் காவல்துறை வழக்கம் போல டெல்லி காவல் துறைக்கு கடிதம் எழுதுகிறது. யார் இதை கேட்பது..? இன்று சீமானை பிடிக்க 6 தனிப்படைகள் வைத்து பாய்ந்து பாய்ந்து செயல்படும் தமிழக காவல்துறையின் வீரம் அன்று எங்கே போனது..? .உலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அறிவித்த ராசபக்சே உல்லாச பயணம் போக இந்தியாவிற்கு வருகிறான். ஆனால் அவனுக்கு சிவப்பு கம்பள சிங்கார வழக்கு. போபால் விஷவாயு வழக்கில் முதன்மை குற்றவாளியான ஆண்டர்சனை அரசே விமானம் ஏத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறது. விமானத்தில் பாதுகாப்பாக ஆண்டர்சன் ஏறுகிறானா என்று பார்க்க அன்றைய மத்திய மந்திரி புன்னகை புகழ் நரசிம்மராவ் வேறு காவல் காத்த கதையும் இந்த நாட்டில் தான் நடந்திருக்கிறது. இந்தியாவிற்கு வந்த‌ ட‌க்ளஸ் தேவான‌ந்தாவை கைது செய்ய‌க் கோரி, உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு இன்ன‌மும் வாய்தாவிற்கு வாய்தா என ந‌க‌ர்ந்து நிலுவையில் இருக்கிறது.ஆனால் த‌ன‌து சொந்த‌ மீன‌வ‌ ச‌கோத‌ர‌னின் கொலையினை சீமான் தட்டி கேட்கக் கூடாது.

ஏனென்றால் சிங்களனைத் த‌ட்டிக் கேட்ப‌து என்ப‌து இந்திய‌ இறையாண்மைக்கு எதிரான‌ செயலாக‌ மாற்ற‌ப்ப‌ட்டுவிட்ட‌து. குற்ற‌வாளி ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவைப் பிடிக்க‌ க‌டித‌ம் எழுதிய‌ த‌மிழ‌க‌ காவல் துறை, இன்று தன் சொந்த சகோதரனின் கொலையில் வெகுண்டு பேசிய சீமானைக் கைது செய்ய வாகனங்களை மறிக்கிறது. அலைபேசிகளை அலசுகிறது. போர்க்குற்றம் செய்த சிங்கள அதிபனை காக்க துடிக்கும் ஆர்வத்தினை நம் மீனவன் உயிரின் மீது மத்திய மாநில அரசுகள் காட்டினார்களா..? இல்லையே..

பேச்சுரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியலைப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கத்தினையும் ,அதன் தலைமையையும் ஆதரித்து பேசுவது குற்றமாகாது எனவும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இந்த நிலையில் தன் சொந்த காழ்புணர்ச்சியினாலும்..காங்கிரஸ் மீதான தன் விசுவாசத்தினை விவரிக்கும் ஆர்வத்தினாலும் மாநில அரசு சீமானை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது போன்ற அடக்குமுறைகளால் ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமை தாகத்தினை முறியடித்து விடலாம் என்ற ஆட்சியாளர்களின் தவறான கணக்கு பிழையில் முடியப் போவதை எதிர்காலம் காட்டும்.

இவற்றை எல்லாம் பிரபாகரனை தன் ஆன்ம பலமாக கொண்டிருக்கும் சீமான் முறியடிப்பார். வீழ்ந்த இனம் இது போன்ற கைதுகளால் எழுவதற்கான…எழ வேண்டிய எத்தனிப்பிற்கான அவசியத்திற்கு தள்ளப்படுகிறது. காலம் நம்மை எந்த புள்ளியில் நகர்த்துகிறது என்பதை நாம் உணர துவங்குவோம். நம் இன தேசிய இனத்தின் ஒர்மைப்புள்ளியின் துவக்கமாக இதை நாம் கருதுவோம்.

வணக்கங்கள்.

அன்புள்ள தமிழ் மணம் உறவுகளுக்கு ..

வணக்கங்கள்.. தமிழ் மணம் நட்சத்திர வார எழுத்தாளனாக என்னைப் போன்ற எளியோனை தேர்வு செய்ததற்கு என் நன்றிகள்.. நான் இந்த வாரத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். என் பதிவுகளில் ஏதேனும் குறைகளோ, விமர்சனங்களோ தங்களுக்கு இருப்பின் தாராளமாய் எழுதுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். சமூகத்தினை சாரா எழுத்துக்களில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மொழியின் துயராய்… தோல்வியுற்ற ஒரு இனத்தின் வலியாய் நான் எழுதுகிறேன். நாம் துயருற்ற கணங்களை நமக்குள்ளே நிறுத்துவோம் . அவை அளிக்கும் நமக்கான ஆற்றல் மிகுந்த வன்மத்தினை.

என் இனம் வீழ்ந்த துயரமே என்னை எழுத வைக்கிறது. தோல்வியின் வன்மமே என்னை இயங்க வைக்கிறது. எம் இனத்திற்கான விடுதலைக் கனவே என் எழுத்திற்கான அடிப்படை.

எழுதுவோம்..இயங்குவோம்..இறங்குவோம்.

நேசங்களுடன்

மணி.செந்தில்

சொற்களின் தூரிகை..


முதிர்வின் நட்பு நடமாடும் குளத்தருகே

பாசிகளோடு சிந்திக் கிடந்த

பசுமையான சில சொற்களை பார்த்ததாக

அப்பா சொன்னார்.


தத்தி தவழ்ந்து வந்து கட்டி அணைத்து கன்னம்

பதித்த மழலை ஒன்று மஞ்சள் சொல்லொன்றை

மகிழ்வுடன் பரிசளித்துப் போனது.


கடந்துப் போன காலமொன்றை இழுத்து வந்த

நினைவு ஒன்று , பெருமூச்சோடு செம்பருத்தி பூவில் இருந்து

உதிரும் சிவந்த சொல் ஒன்றை கையளித்துப் போனது.


இடையறா முயக்கத்தின் வெளிச்சத்தில்

காம கடும் புனல் தருணமொன்று ..கிறங்கிய சொல் ஒன்றில்

நிலவின் துளி ஒன்றை நிறுத்தி வைத்துப் போனது.

பொழிந்த மழையின் கசிவாய் நகரும் காற்றின் சிறகொன்று

யாருக்கும் தெரியாமல் சிலிர்ப்பின் சொல்லுக்கடியில்

ஊதா நிறமொன்றை ஒளித்து வைத்துப் போனது.


இழுத்து உருவேற்றி கட்டிய வில்லொன்றின் குறியாய்

இலக்கின் இதயம் நோக்கி பாயும் சொல்லொன்றை எய்து

விட்டுப் போன மனைவியின் நிழலில் தணல் ஒன்றின் நிறம் கண்டேன்..


பின்னிரவு சாலையில் வெளிச்சப் பெருக்காய் கசியும் விளக்கொன்றின்

தனிமைத் துயரின் மிச்சத்தில் வெளிறிய பழுப்பின் வாசம் அறிந்தேன்..

முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் உறவொன்றின் துயரப் பெருக்கில்

விடியாத இரவொன்றின் நிறம் எடுத்தேன்..


நிறம் சேர்த்த தூரிகையில் வரைய தொடங்கினேன்..

இந்த யுகத்திற்கான இறுதி ஒவியமொன்றை..

முடித்து பார்த்து அதிர்ந்தேன்.

வெள்ளைத் தாளின் வெறுமை கண்டு.

சீமான் – உயர்த்தும் கரத்தில் ஒளிரும் சூரியன்..

அண்ணன் சீமான் மீது மீண்டும் வழக்கொன்றினை பதிவு செய்து விட்டு தனிப்படைகள் பல வைத்துக் கொண்டு தேடுகின்றனர் காவல் துறையினர். தமிழ் இனத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கின்ற சீமானின் ஆவேசம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாய் அமைகின்றன இத்தகைய அச்சுறுத்தல்கள். தாக்கப்பட்டு ..நிர்வாணப்படுத்தப்பட்டு..மனித மாண்பிற்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட தன் எளிய மீனவ சகோதரனின் மரணத்திற்காக ஆற்றாமை வலியோடு கத்தித் தீர்த்த சீமானின் சினம் கொண்ட அறம் ஊழலும்..துரோகமும் புரையோடிப் போன மூன்றாம் தர ஆட்சியாளர்களுக்கு சவாலாய் இருக்கிறது. என் சகோதரனை கொல்லாதே.. அவனை நீ அடித்தால் நான் உன்னை அடிப்பன் என்ற அறச் சீற்றம் சிங்கள பேரினவாதத்தின் மீது இந்தியாவின் மலர்ந்து விட்ட கள்ளக் காதலுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. ஒரு மனிதனின் உணர்வு கொப்பளிக்கும் பேச்சு அதிகார உச்சங்களுக்கு அச்சுறுத்தலாய் விளைந்து அசைக்க முடியாக அதிகாரத்தின் மாட மாளிகை..கூட கோபுரங்களை கவிழ்க்கும் பெரும் புயலாய் மாறுவது வரலாற்றில் புதிதல்ல. வரலாறு எத்தனையோ ஆகச் சிறந்த பேச்சாளர்களை கண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் மாபெரும் பேச்சாளர்களையே தன் மூலதனமாக கொண்டு வளர்ந்தன. கரகரத்த குரலால் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தமிழ்நாட்டில் பாடை கட்டினார் அறிஞர் அண்ணா . முதலாம் உலகப் போரின் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெர்மனியை தன் உணர்வு மிக்க பேச்சால் உருவேற்றி உருவாக்கியவர் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின் போது சரிந்து கிடந்த இங்கிலாந்தினை சுருட்டு ஊதும் உதடுகளால் உரையாற்றி உசுப்பேற்றி உயிரூட்டியவர் சர்ச்சில். இந்திய விடுதலையில் அனலாய் தகித்த சுபாஷ் சந்திர போஸின் சொற்கள் இன்னமும் உலவுகின்றன இலட்சியங்களாய் உலகில்.

சொற்களின் வலிமை மிகப் பெரியது. சொற்களே தேசங்களை உருவாக்குகின்றன. தோல்வியாலும்.. அடிமைத்தனத்தினாலும் சினம் கொண்ட மனநிலை சீறி பாய்ந்து உதிர்க்கும் சொற்கள் காற்றில் மிதந்து..கால்கள் முளைத்து..சோம்பிக் கிடக்கும் விழிகளில் வெளிச்சத்தினை பாய்ச்சும் வல்லமை உடையன. சீமானின் சினமும் இத்தகையதுதான்.

ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமைப் போரில் தவிர்க்க இயலா இருள் ஒன்று சூழுகையில் வெளிச்ச தெறிப்பாய் வெளியே வந்தார் சீமான். முற்போக்கு மேடைகளில் பெரியாரியலையும், பொதுவுடைமையும் ,தமிழினச் சிறப்பினையும் ..பாடல்களோடும், நகைச்சுவையோடும் விவரித்த சீமான் தேசியத்தலைவர் பிரபாகரனின் சந்திப்பிற்கு பிறகு ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க சொல்லாயுதமாய் மாறிப் போனார்.

எளிய மனிதனின் ஆழ் மனதில் கவிழ்கின்ற துயரொன்றின் விளைவாய் பிறக்கின்ற சினமாய் மேடையில் முழங்கினார் சீமான். அனல் தெறிக்கும் அவரது சொற்களில் பிரபாகரன் என்ற பெயர் உச்சக் கட்ட பெருமிதமாய் நிலைநிறுத்தப்பட்டது. ஈழம் என்பது இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கான நாடு மட்டுமல்ல.. உலகில் வாழும் 12 கோடி தமிழர்களுக்கான தேசம் என உரக்க அவர் முழுங்குகையில் தமிழர்களுக்கான நோக்கம் ஒர்மையாக ஒன்றுப்பட்டு ஒளி வீசியது.

மேடையில் முழங்குகையில் சீமானின் உடற்மொழி மிக தனித்துவமானது. கைகளை வீசி, காற்றினை அலசி…உடலினை முறுக்கி ..நெருப்புத் துண்டுகளாய்..அடிவயிற்றில் இருந்து ஆறாத சினமாய் சீறிப்பாயும் சீமானின் வார்த்தைகளில் சிக்கும் எதிரி அம் மேடையில் சின்னாப்பின்னாபடுவதை நாங்கள் மெய்சிலிர்க்க பார்த்திருக்கிறோம். ஈழம் மட்டும் மலர்ந்தால் இங்குள்ள தமிழன் ‘என் அண்ணன் நாட்டில் லஞ்சம் இருக்கா..? இங்கு மட்டும் ஏன் லஞ்சம் வாங்குகிறாய் ..?’ என சீறிக் கொண்டு செருப்பால் அடிப்பான் என சீமான் சிலிர்ப்பாய் விவரிக்கையில் சீமானின் கால்கள் பின் மடங்கி செருப்பினை கழற்ற எத்தனிக்கும் அந்த லாவகம் யாருக்கும் எளிதில் அமையாதது. தான் கண்ட ஈழத்தினை கனவின் தேசமாய் அவர் விவரிக்கையில் குரலில் ஓடும் குழைவும், இன்பமும் உண்மையானவை. என் அண்ணன் பிரபாகரன் என உச்சஸ்தாயில் அவர் குரல் மேல் எழும்பும் தருணங்களில் அவர் விழிகளின் ஓரத்தின் உண்மையான சகோதரனின் பாசம் வழியும். இல்லாத ஒன்றாய் இருக்கின்ற இறையாண்மையின் போலித் தனங்களை அவர் வெளிக் கொணரும் தருணங்களில் எள்ளலும்..துள்ளலும் மிகுந்த கேலிகளில் கூட துயர் ஒட்டிக் கொண்டிருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்.

ஈழத்தில் நம் சகோதரிகளின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறுவுகளை ஆறாத காயத்தோடு்ம்.. தாங்காத வலியோடும் அவர் விவரிக்கையில் குரலில் காயம் பட்ட சிறுத்தையின் சினம் கொண்ட வன்மத்தின் வெப்பத்தினை நான் உணர்ந்திருக்கிறேன்.எத்தனையோ இரவுகளில் ..ஏதேதோ ஊர்களில்.. விடுதியின் மங்கலான வெளிச்சத்தில் தனிமையாய் படுத்து படித்துக் கொண்டிருக்கும் அண்ணன் சீமானை உண்மையில் நான் வேதனையோடு பார்த்திருக்கிறேன். ஏன் இந்த மனிதனுக்கு மட்டும் துயரும்..வலியும் சிறையும் மிகுந்த வாழ்க்கை..? .ஏன் இந்த மனிதன் மட்டும் இப்படிப்பட்ட வலி மிகுந்த கொடும் இருட்பாதையில் முள் செருப்போடு நடந்து செல்கிறான்..? இவனுக்குதான் அருகிலேயே செல்வ செழிப்பான பகட்டு அரண்மனையின் பளபளப்பான ராஜ வீதிகள் இருக்கின்றனவே..? அதை தேர்ந்தெடுக்காமல் வலிய முன் வந்து இந்த மனிதன் ஏன் வலியை தேர்ந்தெடுத்தான் என்ற வினாவில் தான் ஒரு இனத்தின் விடுதலைக்கான தணியாத தாகம் ஒளிந்திருக்கிறது.

அண்ணன் சீமானின் உயர்ந்த பட்ச விருப்பம் ஈழம்..அதுதான் அவருக்கான உளவியல் தீர்வு.அதுதான் அவர் காயங்களுக்கான மருந்து. அதுதான் அவருக்கு அனைத்தும். ஒரு நாள் நான் அண்ணன் சீமானிடம் கேட்டேன். ஏன் அண்ணா நீங்கள் மட்டும் இப்படி..? ..என்னை சற்று நிமிர்ந்து பார்த்து சற்றே சிரிப்பாய் சொன்னார்.. ‘என்னையே இப்படி பார்க்குற நீ என் அண்ணனை பார்த்தால் அசந்திருப்பாய்’. உண்மையில் அவர் தேசியத்தலைவர் பிரபாகரனை நினைக்காத நொடியில்லை. ஒவ்வொரு பொழுதிலும் அண்ணன் எங்களைப் போன்ற தம்பிகளிடம் பகிர துடிக்கும் செய்தி..தத்துவம்.. அனைத்துமே பிரபாகரன் தான். கொஞ்சம் தாமதமாகத்தான் எனக்கு புரிந்தது. அவர் தன்னையே தன் அண்ணன் போல மாற்றிக் கொள்ள போராடி வருகிறார் என்று. பிரபாகரன் என்பது மிக நீண்ட நெடிய பாதை. அப்பாதையில் சற்றும் தளரால் மூச்சிறைக்க ஒடிக் கொண்டிருக்கிறார் அண்ணன் சீமான்.

ஒரு இனத்தின் தோல்விக்கு பிறகான நம்பிக்கை துவக்கமாய் சீமான் அடையாப்படுத்தப்பட்டிருக்கிறார். எந்த அடையாளங்களை அழிப்பதற்கு ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்களோ … அதே அடையாளமாய் அச்சு அசலாய் கம்பீரமாய் நிற்கிறார் சீமான். இதுதான் ஆட்சியாளர்களுக்கு பிரச்சனை. சீமானின் கனவு மிகப் பெரியது. அதற்கான பாதையும் மிக தொலைவு. ஆனால் எங்களைப் போன்றோரை இழுத்துக் கொண்டு ஓடும் ஒப்பற்ற தலைமை இயந்திரமாய் அவர் போய் கொண்டிருக்கிறார். கடும் கோபத்துடன் கனன்று தெறிக்கும் அவரது வார்த்தைகள் ஆட்சியாளர்களை அச்சப்பட வைத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் சீமான் தனி மனிதனல்ல. அவர் தோல்வியின் துயரும்..வலியும் தந்த வன்மம் மிக்க ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க ஆயுதம்..

சீமான் ஒரு எய்யப்பட்ட அம்பு.

பிரபாகரன் என்ற வில் சீரிய இலக்கோடு சீற வைத்த அம்பு..

இதன் தாக்குதலில்

இலக்கு இல்லாமல் போகும்.

துளைக்கும் வலிமையில் துயர் தீய்ந்து போகும்.

அது வரை எய்யப்பட்ட அம்பினை

தடுத்துப் பார்க்கும் தகரங்களும்,, தடைகளும்,தகர்க்கப்பட்டு

சிறைகள் சிதைக்கப்பட்டு.. துளைக்கப்பட்டு..

தெறிக்கும் தெறிப்பில் ஒளிரும் விடுதலையின் சுடர்.

Page 2 of 2

Powered by WordPress & Theme by Anders Norén