பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்

“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

-மணி.செந்தில்

Previous

இனி..விளைவதில் தான் இருக்கிறது.. விதைப்பது .

Next

இராஜீவ் கொலை – நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ-கீற்று நந்தன்

3 Comments

  1. இலக்கு ஓன்று தான் இனத்தின் விடுதலை..

  2. Thanks for highlighting the real sectors in internet about our king of Tamil leader Seeman..

  3. unmai. Samy

Powered by WordPress & Theme by Anders Norén