Month: ஏப்ரல் 2012
ஒரு மனிதனை அவனது சகல விதமான நிறை குறைகளோடு திரையில் தரிசிக்கும் அனுபவம் தான்
பச்சை என்கிற காத்து. ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் என்பவன் விண்ணில் முளைத்து மண்ணில் கிளம்பிய அதிசயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சமூக வெளியில் நாம் சாலையில் கடக்கும் போது இயல்பாக சந்திக்க நேரிடும் ஒரு மனிதன் தான் இந்த ‘பச்சை என்கிற காத்து ‘. சற்றே தெனாவட்டோட்டு சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு சாலையில் திரியும் கதாநாயகன் இப்படத்திலும் தன்னை உதாசீனப்படுத்தும் கதாநாயகியை காதலிக்கிறார்.
அரசியல்,ரவுடீசம், அன்பு,வம்பு என சகல விதமான சராசரிக்கும் அப்பாற்பட்ட குண நலன்களோடு திரியும் கதாநாயகனை ஏற்பதில் துளிர்க்கும் காதலையும் மீறி கதாநாயகிக்கு தயக்கம் இருக்கிறது. அதை மறுப்பாக கருதி முரட்டுத்தனமாக கதாநாயகன் கையாள ரத்தம் வழியும் கிளைமாக்ஸ்.
படம் கதையின் நாயகனின் மரணத்தில் இருந்து துவங்கிறது. கதாநாயகனுக்கு நெருக்கமான மூவர் மற்றும் கதாநாயகியின் தங்கை ஆகியோரின் எண்ண ஓட்டத்தில் கதை முளைத்து வளர்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கை அனைவரின் பார்வையிலும் ஒரே மாதிரியாக அமையாது என்பதை நண்பர் கீரா தனது திரைமொழியில் விவரிக்கிறார் . வசனங்கள் சில இடங்களில் மனதை கவர்ந்தும், சில இடங்களில் மனதை நெருடியும் இருப்பது சரிதான். ஆனால் சென்சார் கத்திரிக்கு உள்ளானதில் பழுது பட்டதாக மாறி இருப்பது வசனங்களின் ஆழத்தினை குறைக்கிறது. இறுதி பாட்டில் வரும் புலி வேசம், இராசபக்சே தோற்றம் என இயக்குனர் கீராவின் உணர்வு புரிகிறது.
அழுத்தம் இருக்க வேண்டிய பல காட்சிகள் மனதை பாதிக்காமல் நகர்வது படத்திற்கு பலவீனமே.தனது நண்பர்கள் மற்றும் தங்கைக்கு மட்டும் நல்லவனாக இருக்கும் கதாநாயகனை ஒரு வில்லன் அளவிற்கு நமது விழிகள் பார்த்து பழகி விட்டதால் அவனது மரணம் நியாயமாக நமக்குள் ஏற்படுத்தி இருக்கவேண்டிய பாதிப்பினை ஏற்படுத்தாமல் போனது உண்மை.தேசிய விருது நடிகர் அப்புக்குட்டியை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.
மற்றபடி புதியவர்கள். பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட திரைவடிவம். புதுமையாக படைப்பினை அணுக வேண்டும் என்ற எண்ணம். தோழர் கீராவின் அசாத்திய தன்னம்பிக்கை. எம் அன்பிற்கினிய தோழர்கள் பலர் உழைத்திருக்கிறார்கள்.
தோழர்கள் வெல்லட்டும் .வாழ்த்துக்கள்.