அது ஒரு பாடல் காட்சி.  கதாநாயகனும்,கதாநாயகியும் ஊட்டியின் மெல்லிய குளிரை அனுபவித்தவாறே ஏரிக்கரையில் பேசிய படி நடந்து செல்வார்கள். பின்ணணியில் இளையராஜாவின் மெல்லிய செவ்வியல் இசை கசிந்துக் கொண்டிருக்கும். மலரே மலரே ..உல்லாசம் என தொடங்கும் அப்பாடல் (http://www.youtube.com/watch?v=BG8n2RRvDxU ) இடம் பெற்ற திரைப்படம் ரஜினிகாந்த்,மாதவி நடித்த மறைந்த மாமேதை பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான உன் கண்ணில் நீர் வழிந்தால் .
 
          அவர் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள திரையிசைப்பாடல்கள் இளையராஜாவின் நுண்ணிய நெய்தலால் ஆழ்மனதிற்குள் பாயும் வல்லமை உடையவை. செவிகளால் கேட்கும் போதே பரவசத்தையும்,சோகத்தையும், காதலையும், கண்ணீரையும் தர வல்ல அப்பாடல்களை தனது ஒளித்தூரிகையினால் ஆகச்சிறந்த நிகழ் ஒவியங்களாக செதுக்குவதில் பாலுமகேந்திரா வல்லவர் .
 
பொதுவாக அவர் படங்களில் உரையாடல்கள் குறைவாக இருக்கும் . அவரின் திரைப்படப் பாடல் காட்சிகளிலோ கதாநாயகனும்,நாயகியும் உரையாடிக் கொண்டே இயற்கை சூழ் பகுதிகளில் நடந்து சென்று கொண்டு இருப்பார்கள். டாடா சுமோக்களில் அடியாட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வீச்சரிவாக்களோடு நான் அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என கத்திச்செல்லும் கதாநாயகர்களை அவர் பாடங்களில் நீங்கள் பார்க்க இயலாது.  அவரது பட கதாநாயகன்  சாதாரணன். சராசரி மனிதனுக்குள்ள அனைத்து பலவீனங்களும் அவனுக்கும் உண்டு. அவரது படத்தின் நாயகிகள் அன்றாடம் நாம் சாலையிலோ, வேலை பார்க்கும் இடங்களிலோ, வீடுகளிலோ சந்திக்கும் பெண்கள். இப்படி தனது படத்திற்கான திரைமொழியை இயல்பு மீறாமல் பாதுகாத்து கொள்வதில் பாலுமகேந்திரா ஒரு மேதை.
 
அவரது ஒளி மொழி தனித்துவமானது.  இயற்கையாக நாம் எதிர்க்கொள்ளும் ஒளியின் அளவீடுகளை உணர்ந்து அதைத்தான் தன் திரைப்படங்களுக்கான ஒளி அளவாக அவர் பயன்படுத்தினார். அதனால் தான் அவர் திரைப்படங்களில்  பெய்யும் மழை , ஒளிரும் வெயில் ,அலை பாயும் கடல்,பசுமை வழியும் கானகம், பழங்காலத்து சிதிலமான கோவில், கருமை சுமக்கும் கற்சிற்பங்கள் , ஏகாந்த ஏரி என அனைத்தும் அவர் படங்களில் பேசின.
அவர் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆன  ” நெல்லு” என்கிற மலையாளப்படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது. அப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பாலுமகேந்திரா பெற்றார். அவர் தன்னை ஒளிப்பதிவாளராகத்தான் எப்போதுமே கருதிக்  கொண்டார். காட்சியமைப்பிலும், ஒளி அளவிலும் அவர் செலுத்திய கவனம் அலாதியானது. எடுத்துக்காட்டாக நீங்கள் கேட்டவை படத்தில் ”கனவு காணும் வாழ்க்கை யாவும் “                           ( http://www.youtube.com/watch?v=yEiF1a8b-Lo ) என்ற பாடலில்  வாழ்க்கை நிலையாமை குறித்த அடுக்கடுக்கான  உதிரிக் காட்சிகளை அவர் அடுக்கி இருக்கும் விதம் அப்பாடலை ஆகச்சிறந்த பாடலாக்கியது. தண்டவாளத்தில் காது வைத்து கேட்கும் கமலையும் , ஸ்ரீதேவியையும் ரயில் கடந்து சென்றதை நாம் கண்டோம். நம்மால் இது வரை கடக்க முடியாமல் நிற்கிறோம்.
 
ஒளிப்பதிவாளராக பல மலையாள படங்களில் தடம் பதித்த பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது. ஏற்கனவே உதிரிப்பூக்களில் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருடன் கைக் கோர்த்த இருந்த  மகேந்திரன்  “முள்ளும் மலரும்” படத்தில் பாலு மகேந்திராவை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். அப்படத்தில் அடிப் பெண்ணே..பொன்னுஞ்சல் ஆடும் இளமை என்கிற பாட்டில் பாலுமகேந்திரா நிகழ்த்தி இருக்கும் வித்தை அதி உன்னதமானது. அப்படித்தான் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற புகழ்ப் பெற்ற பாட்டிலும் சிறு சிறு காட்சியையும் தனது திறமையால் பாலு செல்லூலாய்டு ஒவியமாக்கி இருப்பார். அதில் வரும் உச்சக் காட்சியில் தான் உயிருக்குயிராக நேசித்த தங்கை உட்பட அனைவரும் கடந்துப் போகையில் தன்னந்தனியனாய் நிற்கும்  காளி கதாபாத்திரத்தின் உணர்வினை மிகநுட்பமாக பாலுமகேந்திரா பதிவு செய்து அப்படத்தை மற்றொரு தளத்திற்கு கடத்தி சென்றிருப்பார்(http://www.youtube.com/watch?v=jU629VRND6c ) .  பதின்பருவத்து உணர்ச்சிகளை மையமாக வைத்து 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார் (http://www.youtube.com/watch?v=EXuqUC-soQs ). இப்படத்திற்கு சலீல் செளத்ரி இசையமைத்தார்.  இப்படத்தினை தவிர பாலுமகேந்திராவின் அனைத்துப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை . இளையராஜாவின் இசையமைத்த 50 ஆவது படம் என்ற பெயரோடு வெளிவந்த படம் பாலுமகேந்திராவின் மூடுபனி.  இளையராஜாவும் ,பாலுமகேந்திராவும் கூட்டணி சேர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்தனர். இன்றளவும் தமிழின் ஆகச்சிறந்த படங்கள் பட்டியலில் அவரின் மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், தலைமுறைகள் போன்ற படங்களுக்கு உறுதியான இடமுண்டு . நகைச்சுவைப்படங்களாக  அவர் எடுத்த ரெட்டைவால்குருவி, சதி லீலாவதி,ராமன் அப்துல்லா போன்ற படங்களும்  திரில்லர்  வகைப்படங்களாக அவர் இயக்கிய மூடுபனி, ஜீலி கணபதி போன்ற படங்களும், தன்னையே அவர் விமர்சித்து ஏசிக் கொண்ட நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களும் அவர் வணிக ரீதியலான திரைப்படங்களையும்  அவர் எடுப்பதில் வல்லவர் என்கிற முயற்சிகளாக நாம் கருதலாம். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் கூட மனதில் எப்போது தேங்கி நிற்கும் கலை அம்சங்களுக்கு அவர் குறை வைப்பதில்லை. 
 
மூன்றாம் பிறை திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு தேசிய விருதை பெற்று தந்தது. சத்மா என்கிற பெயரில் அப்படத்தினை அவர் இந்தியிலும் எடுத்தார்.  வண்ண வண்ண பூக்களில்  காடுகளுக்கு நடுவில் பயணம் செய்யும் ரசனை மிக்க  இளைஞனை அவரால் மிக எளிமையாக திரைமொழி சட்டகங்களுக்குள் அடக்கி விட முடிந்தது. அவரது நாயகிகள் கதாநாயகனின் சட்டையை மட்டும் அணிந்து நடந்தது எங்கும் ஆபாசமாக பார்க்கப்படவில்லை. காதலுக்கும், காமத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை பாலுமகேந்திரா அலட்சியப் படுத்தினார். வீட்டில் வேலை செய்யும் பெண்ணும், அந்த வீட்டு இளைஞனும் யாருமற்ற வீட்டில் தனியாக ..இரசனையாக வாழ்ந்ததையும் (அது ஒரு கனாக்காலம் ), காட்டிற்குள் தனித்து ஒரு இளம் பெண்ணுடன் அருவியில் குளித்து,கதைகள் பேசி ஒன்றாக தூங்கியதையும் அவர் எவ்வித அதிர்ச்சி மதிப்பீடுகளையும் வலிந்து கூட்டாமல் ,அலட்டாமல் அழகாக எடுத்தார். ஒரு சராசரி இளைஞனின் கனவில் ஒரு இளம் பெண் வருவதுதான் இயல்பானது. அதை தான் நான் காட்டுகிறேன். இளைஞனின் கனவில்  சாமியார் வந்து ஆன்மீக பாடம் புகட்டுவது மாதிரி  எடுத்தால் தான் அது திணிப்பு என்று துணிவாக ஒரு பேட்டியில் சொன்னார்.
 
நேசிக்கும் பெண்ணோடு தனித்திருக்கும் ஒரு இளைஞன் என்ன செய்வானோ அதைத்தான் பாலுமகேந்திராவின் நாயகர்கள் செய்தார்கள் . தனது வாழ்க்கையை தனது திரைப்படங்களில் பிரதிபலித்துக் கொள்வதை அவர் விரும்பி செய்தார். ரெட்டைவால் குருவி,மறுபடியும் போன்ற படங்களில் அவர் தன்னை உள்நோக்கி பார்த்துக் கொண்டார். ஒளங்கள்,ஊமக்குயில்,யாத்ரா போன்ற மலையாளப்படங்களையும் ,கன்னடத்தில் கோகிலா, தெலுங்கில் நிரிக்‌ஷினா போன்ற  படங்களையும் அவர் இயக்கி தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக அவர் திகழ்ந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஈழத்தமிழரான அவர் தமிழ் சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
 
அவரின் அழகியல் சார்ந்த திரைமொழியை  தொடர இன்றைய தேதியில் யாரும் இயக்குனர்கள் இல்லை. ஆனால் அவரது மாணவர்களான பாலா, வெற்றிமாறன், சீனு இராமசாமி போன்றோர்கள் தங்களின் உயரிய படைப்புகளால் பாலுமகேந்திரா என்கிற மகத்தான கலைஞனை நினைவூட்டுவார்கள். அவரும் இறுதிக் காலங்களில் திரைப்பட வகுப்புகளை நடத்தி தனக்கு பிறகும் தன்னியக்கம் நடக்க உழைத்தார்.  அவரது நிகரற்ற படங்களான வீடு,சந்தியாராகம் போன்ற படங்களின் பிலிம் சுருள்கள் பாதுகாக்கப்படாமல் வீணாகிப் போனதில் மிகுந்த சங்கடம் கொண்டார். திரைப்பட ஆவண காப்பகம் ஒன்றை அமைக்க கோரினார் . ஆனால் கோரிக்கைகள் இன்றும் காற்றில் தான் இருக்கின்றன.
அவரே ஒரு பேட்டியில் சொன்னதுதான்..
 
நானோ,மகேந்திரனோ,இளையராஜாவோ ஒரு நாளும் மறைய மாட்டோம். எங்களது படைப்புகள் அசையும். பேசும்.பாடும்.உங்களை கண்கலங்க வைக்கும்.  அதுவரை நாங்களும் இருப்போம்.
 
அவரின் நீங்கள் கேட்டவை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. ஓ..வசந்தராஜா.. தேன் சுமந்த ரோஜா.. என்ற பாடல் . அப்பாடலை எங்கள் கங்கைக் கொண்ட சோழபுரத்தில் எடுத்து இருப்பார் . அக்கோவில் அழகானது தான். ஆனால் இத்தனை அழகா..என வியக்க வைத்தவர் பாலுமகேந்திரா..
 
அவர் கண்களால் சுவாசித்தார். எழுதினார்.இயக்கினார்.
 
அவருக்கு பிறகும் அவரது படைப்புகளில் அவரது கண்களை நாம் காண்கிறோம்.
 
தமிழனாக பிறந்து …மாபெரும் மேதையாக வாழ்ந்து…என்றும் முடியாமல் வாழ்கிற பாலுமகேந்திராவிற்கு  அன்பு முத்தங்கள்….
-மணி செந்தில்