பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஏப்ரல் 2015

நாம் தமிழர் வெல்லும்.

CSC_0074

 ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது சொற்களால் விவரிக்கத்தக்க கனவு மயக்கம் அல்ல.  மாறாக காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, பிளவுப்படுத்தப்பட்டு, வீழ்த்தப்பட்டு கிடக்கிற பூர்வ குடியொன்றின் புத்தெழுச்சி.  வரலாற்றின் புகழ் வீதிகளில் வலம் வந்த தமிழர் என்கிற தேசிய இனம் அடிமை சிறுமை தேசிய இனமாக குறுகிப் போன துயரக் கதைகளில் தான் அடங்கியிருக்கிறது நம் எழுதலுக்கான வெளிச்சப்புள்ளி .

வெற்றிகள் தரும் பெருமிதக் கொண்டாட்டங்களில் இடித்துக் கொள்ளும் மதுக்கோப்பைகளின் ததும்பலாகவே இதுவரை தமிழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது . கங்கையை வென்றவன், கடாரம் கொண்டவன் எப்படி கடைக்கோடிக்கு கடத்தப்பட்டான் என்ற உண்மை மட்டும் ஊரார் அறியார் வண்ணம் ஊழி இருட்டிற்குள் உறைந்துக் கிடக்கிறது.

பஃருளியாற்றில் படகோட்டி,பன்மலை அடுக்கங்களில் திரிந்து,குமரிக் கண்டத்தில் இரு சங்கம் கண்டோம் என பழம் பெருமைகளில் இறுமி இறுமியே தான் அடிமைஇருட்டில் அமிழ்ந்துக் கிடக்கிறோம் என்ற அறிதலை தொலைத்து விட்டான் தமிழன். வடக்கே இருந்து வந்த ஆரியம் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்திய வழிபாட்டு,பண்பாட்டு தாக்கங்களில் சிக்குண்ட தமிழன் தனது பண்பாட்டு,வழிபாட்டு விழுமியங்களை இழந்தான்.

வெள்ளையன் என்ற சுரண்ட வந்த கொள்ளையன் தனது துப்பாக்கி முனையில் இந்தியா என்கிற இல்லாத தேசத்தை உருவாக்கினான் . தனது பிழைப்பிற்காக பார்ப்பனன் தனது பூனூலால் இந்த கனவு தேசத்தை இறுக்கிக் கட்டினான். உருவானது இந்தியா.பலர் உழைக்கவும்,சிலர் பிழைக்கவும் என்கிற மானுட விரோத நாடாய் மலர்ந்து இருக்கிறது.

இதில் தமிழனின் நிலைமை இன்னும் கேவலம். வந்தவர்களை எல்லாம் வாழ வைத்து, ஆள வைத்து,தனது நிலம், ஆட்சியதிகாரம், வளங்கள்,கலை,பண்பாடு,வாழ்வியல் என அனைத்தையும் வந்தவன் காலடியில் வழங்கி விட்டு சொந்த மண்ணிலேயே அகதியாய் திரிகிறான்.

சாதி தன்னை பிளவுப்படுத்த வந்த அநீதி என்பதை உணராமல் சாதியாய் பிரிந்து கிடக்கின்றான் தமிழன். மதம் தன்னை அழிக்க வந்த வதம் என்பதை உணராமல்…இனமாய் இல்லாமல் பிணமாய் போனான் தமிழன். பிழைக்க வந்த பார்ப்பானிடம் தனது பண்பாட்டு,வழிபாட்டு விழுமியங்களை இழந்தான். காலங்காலமாய் தன்னை செழிக்க வைத்த காவிரித்தாயை கன்னடனிடம் இழந்தான்.முல்லை பெரியாற்றை மலையாளியிடம் துறந்தான். பாலாற்றினை தெலுங்கனிடம் இழந்தான். ஒட்டு மொத்த தமிழ்நாட்டினை மேற்கண்ட அனைவரிடமும் இழந்தான். வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டு ,ஆள வைத்து விட்டு இலவசங்களுக்காக மடியேந்தி நியாயவிலைக்கடைகளுக்கு முன் நின்று கொண்டிருக்கிறான். ஏற்கனவே சுரண்டப்பட்ட தமிழனுக்கு இனி எப்போதும் உணர்வெழுச்சியோ,அறிவோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே குடியேறிய திராவிடம் தெருவிற்கு தெரு மது பானக்கடைகளை திறந்து வைத்து..தமிழனை மல்லாக்க சாய்த்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டியை திணித்து தமிழச்சிகளை மானாட ,மயிலாட காண வைத்து..நாடகங்களே வாழ்க்கை என வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தான் நிகழ்ந்தது ஈழத்தின் பேரழிவு. தமிழரின் மற்றொரு தாய்நிலத்தில் மண் விடுதலைக்காக களங்கண்ட மாவீரர்களின் தியாகம் இங்கே இன மானம் உடைய இளைஞர்களை எழுப்பியது. மண் என்பது சாதாரண விஷயம் அல்ல. தாய் மண்ணின் மீது கொண்ட பற்றே பூர்வக்குடிகளின் இருப்பினை தக்கவைக்கிறது. இந்த காடு,மலை, ஏரி,அலை கடல்,பசும் வயல் என செழித்திருக்கும் தாய்நிலத்தை அன்னியனிடம் இழக்க முடியாமல் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்தினர் புலிகள் .

தனது சொந்த சகோதரன் அங்கே இன விடுதலைக்காக இன்னுயிரை தந்துக் கொண்டிருக்கும் காலத்தில் தான் இங்கே இவனுக்கு இந்தியன் என்கிற பெருமிதமும்,திராவிடன் என்கிற அரசியல் கற்பிதமும்… முகமூடி அணிந்த சாத்தானாய் இந்தியமும்,திராவிடமும் நாடகங்கள் நடத்த…நாடகக் காட்சிகளில் கண்களை விற்ற தாயகத்தமிழன் குருடனாகிப் போனான். ஈழப்பெருநிலத்து மண்ணில்..தன் தங்கையின் அரை நிர்வாண உடலைக்காட்டி, அவள் மார்புக்காம்பின் மேல் தனது கால் கட்டை விரலை அழுத்தி…அவள் பிறப்புறுப்பில் துப்பாக்கியை நுழைத்து ..வல்லாதிக்க சிரிப்பினை தமிழ்த்தேசிய இனம் மீது காறி உழிந்தான் சிங்களன்.

தன் வீட்டுப் பெண்டீர் சாலைகளில் கிடத்தப்பட்டு வல்லுறவு செய்த காட்சியை கண்ட தமிழின இளையோர் இமைகளில் ஈரம் படர்ந்தது. விழியோரம் சிவப்பு சேர்ந்தது. மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட ஈகிகள் தன்னுயிரையே தந்து..ஈழமும்-தமிழகமும் வெவ்வேறல்ல.. அவை தமிழரின் தாயக நிலங்கள் என அறிவித்த போதுதான் உலகம் அதிர்ந்தது . ஆனால் அதிர்ந்த உலகமும், வெளிப்படையாகவே சிங்களனுக்கு உதவிய இந்தியமும், திருட்டுத்தனமாக காட்டிக் கொடுத்த திராவிடமும் தமிழனை ஒன்றுக்கும் ஆகாதவென கருதி அமைதி காத்தன. எம் தாய்நிலம் அழிந்தது. மானம் காத்த மறவோர் மண்ணோடு மண்ணாய் மடிந்தனர்.

அப்போதுதான் வீதிக்கு வீதி …கைப்பிசைந்து..கண் கலங்கி ..இனி என்ன செய்வது என தெரியாமல்…தாய்நிலம் இழந்த தவிப்பில்..சொந்த தமையன் அழிந்த தகிப்பில் இருந்த தமிழின இளைஞர்கள் இனி..இருப்பதை காக்க செருக்களம் காண்பதை தவிர வேறு வழியில்லை என உணர்ந்தோம். எந்த அரசியல் ஆயுதங்களால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டமோ..அந்த அரசியல் ஆயுதத்தையே எமது கரங்களில் சுமந்தோம்.

நாங்கள் எளியவர்கள். மாட மாளிகையில் குடியிருக்கும் செல்வந்தர் வீட்டு செல்வங்கள் அல்ல. கூட கோபுரங்களில் குடியிருக்கும் கொற்றவனின் மைந்தர்கள் அல்ல.  தெருப்புழுதியையே ஆடையாக அணிந்த நிராதரவானவர்கள். கருஞ்சட்டை அணிந்து வியர்வை வழிய வழிய..தொண்டைக்குரல் கிழிய..கிழிய முழக்கம் இடுவதை வழக்கமானவர்கள். இனம் அழிந்த வலியில்..மனம் முழுக்க ஆழ் குற்ற உணர்வு கொண்டு ..கண்ணீரை கோபமாக தேக்கி,,,அதையே தங்களது அரசியல் மூலதனமாக கொண்டவர்கள்.

நிகழ்காலம் என்பதை கொன்றாலொழிய வருங்காலம் என்ற ஒன்று கிடையாது என்பதனால் தான் …எங்களையே அழிக்கிற இந்த அரசியல் பெரும்பாதையில்..உற்றார்,உறவினர்,நாள்,நேரம், பொருளாதாரம் என அனைத்தையும் இழந்து இல்லாத எதிர்காலத்தை இனியாவது சமைக்க அணியமாகி நிற்பவர்கள்

இப்படி வாழ்வு,தொழில்,நிகழ்காலம் என அனைத்தையும் இழந்து ஓட என்ன தான் காரணம் என்றால்…

எங்களுக்கு தெரிந்த ஒருவன் இவ்வாறாக இருக்கிறான். 20 வருடங்களுக்கு முன்பாக அந்த இளைஞன் ஓராயிரம் கனவுகளோடு ..மிளகாய் மூட்டை விற்று ..தன்னை சென்னைக்கு அனுப்புகிற தன் தந்தையை ஏக்கமாக பார்த்தாவாறே பேருந்து ஏறினான்.

திரை வழியே கரை சேரலாம் என கருதியவன் கரங்களில் மார்க்ஸீம்,சே குவேராவும்,பெரியாரும், அம்பேத்காரும் அகப்பட்டார்கள். புரட்சி என்பது மாலை நேரத்து கேளிக்கை விருந்தல்ல என்கிற மாவோவின் வரிகளில் வசமிழந்த அவனால் பிறகு மீளவே முடியவில்லை. பிழைக்க வந்த இடத்தில்.. வசப்பட்ட வாசிப்பும் ,அகப்பட்ட அனுபவமும்,புலப்பட்ட புரிதலும் அந்த கிராமத்து இளைஞனை தவிப்புக்குள்ளாக்கின்றன… வெள்ளந்தியாய்..விளைந்ததை தின்று,கண்டதை கண்டு கதையாய் விவரிக்கும் திறமையை கொண்டிருந்த அந்த இளைஞன் இதுகாறும் தான் வாழ்ந்த வாழ்க்கையை,வாழ இருக்கிற எதிர்கால தமிழினத்திற்காக தந்து விடுவது என முடிவெடுத்தான்.  தனக்காக வந்தவன்..தான் பிறந்த இனத்திற்காக யோசித்தான். தனக்கு முன்னால் பிறந்த இன்னொருவன்…தன்னையே இழந்து தாய்நிலத்திற்காக போராடிக் கொண்டிருந்ததை பார்த்தான். தமிழனுக்கென தரணியில் ஒரு நாடு வேண்டும் என்கிற அவசியத்தில் ,அவசரத்தில்..உயிரை உதடுக்கு முன்னால் தொங்க போட்டு நாடு அடைய காட்டில் கிடந்தவனை தன் அண்ணனென உணர்ந்தான். அவனையும் சந்தித்தான். பிறகு திரிந்தான். கொடிகள் வேறுப்பட்டாலும் தமிழ்குடி வீழக்கூடாது என பல அமைப்பு மேடைகளில் ஏறி கத்தினான் ..இன அழிவை இரத்தமும், சதையுமாய் விவரித்து கதறினான். வனம் அழிந்த சினத்தில் கிடந்த புலியாய் உறுமினான். இரண்டகம் செய்த இந்தியத்தை நட்டநடு வீதிகளுக்கு இழுத்து வந்து அறுத்துப்போட்டான். திருட்டு திராவிடத்தின் தோலுரித்து …இருப்பது நம்மை காப்பாற்ற வந்த தேவன் அல்ல..அழிக்கும் சாத்தான் என சத்தமாக அறிவித்தான். இது போதாதா எதிரிகளுக்கு… சிறை படுத்தினர். சிறையை தான் துலங்கும் அறிவு பட்டறையாக மாற்றினான். எதிர் கொண்டவர்கள் இல்லாமல் போனார்கள்.

எம்மினத்தை அழித்த காங்கிரசை நான் அழிப்பேன் என நெஞ்சுயர்த்தினான்.நடப்பது தேர்தல் அல்ல..சோனியாவின் மகனுக்கும்,பிரபாகரனின் தம்பிக்கும் நடக்கிற யுத்தம் என்று அறிவித்து களம் கண்டான். காங்கிரசு கல்லறைக்கு போனது..

இப்படியாக வளர்ந்தான். முட்பாதைகளில் பயணித்தான்..அனேகர் சொற்களில் வதைப்பட்டான்.

எந்த வானுலக தேவர்களுக்கும் காத்திராமல் தனது சொந்த விடுதலையைத் தானே தீர்மானிப்பதற்காக.. தானே ஒரு கட்சியை கட்டி., கட்டமைத்துக்கொண்டு இதோ அவன் விடுதலையை பிரகடனம் செய்ய வருகிறான் . அவனது சொற்களிலே எதையும் முடிக்கும் நம்பிக்கை நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறது. அவனது விழிகளிலே இலட்சியங்களும், கனவுகளும் மின்னித்துடிக்கின்றன. வரலாற்றின் நீண்ட வீதிகளில்..இதுநாள் வரை அவனுக்காகவே காத்திருந்தவர்கள் போல.. நெருப்பு சுமக்கும் அவன் தமிழுரை கேட்டு.. தமிழரின் ஆன்மா சிலிர்த்தன.

யாருக்கும் அவன் காத்திருப்பதில்லை. தன்னை சுற்றி தொங்க விட்டிருக்கும் தன் அண்ணன் படம் பார்க்கிறான். ஒரு நிமிடம் கண்களை மூடுகிறான். கலங்கிய விழிகளோடு சினமேறி ரணத்தோடு பிடித்து இழுக்கிறான்..இருட்சிறைக்குள் வீழ்த்து கிடக்கிற இனத்தின் விடுதலையை…

அவமானச்சொற்களை காற்றில் கரையும் கற்பூரங்களாய் கருதி…அவதூறுகளை வெகுமானங்களாக கருதி புன்னகைத்து கொண்டே புறப்பட்டு விடுகிறான்.

இனி அவன் காலம்..

காலமும் அவன் தான்..

எப்போதும் இனி பிறக்கிற வைகறை சொல்லும்..

நாம் தமிழர் வெல்லும்.

நவீன இந்துத்துவாவின் பாசிச முகம் –

Namo

ஒரு ஆக்டோபஸ் தனது கரங்களை பல் திசைகளில் விரித்து எப்படி இரையை கவ்வ முயலுமோ, அது போல இந்துத்துவா என்கிற பேராபத்து ,பல்வேறு தேசிய இனங்கள் ,அவற்றின் பல்வகை பண்பாடுகள் ஆகியவற்றில் ஊறிக் கிடக்கிற இப்பெருநிலத்தினை ஆக்கிரமிக்க முயலுவதை நாம் சமீப காலமாக உணரத் தொடங்கி இருக்கிறோம்.  ஆதித்தமிழ் நிலத்தில் இந்துத்துவத்தின் தலையெடுப்பு அறவே இல்லை என்பதைதான் சமீப ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆதித்தமிழர் பண்பாட்டில் பல்வேறு வகையிலான மெய்யியல் நம்பிக்கைகள் நிலவி வந்திருக்கின்றன.

 சைவம்,புத்தம்,வைணவம்,சமணம்,ஆசீவகம்  என பல்வகையிலான மெய்யியல் நம்பிக்கைகள் தங்களுக்கே உரிய தனித்துவங்களோடு திகழ்ந்திருக்கின்றன. வைணவம்-சைவம், சமணம்-சைவம், பெளத்தம்-சமணம், என பல்வேறு வகையிலான மத நம்பிக்கைகளுக்கு இடையிலான விவாதங்களையும், பூசல்களையும் நாம் வரலாற்றின் பாதையில் நெடுக காணுகிறோம்.  ஆனால் இவைகளை ஒர்மைப்படுத்தி தங்களது வாழ்வியல்,அரசியல் பிழைப்புகளுக்காக பார்ப்பனர்கள் இந்துத்துவம் என்கிற புள்ளியில் இணைத்ததுதான் இப்பெருநிலத்தில் நடந்த மாபெரும் அரசியல் நடவடிக்கையாக நாம் கருதலாம்.

இந்து,இந்தியா போன்ற சொல்லாடல்கள் ஆங்கிலேயரால் உருவகம் செய்யப்பட்ட சொற்களாக இப்பெருநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. 1904ல் பார்ப்பனீய நாளிதழான இந்து, ஆரிய தேசிய இனம் என இந்திய சமூகத்தினை வரையறுக்க தொடங்கியதாகவும், 1930 களில் சென்னையில் தொடங்கப்பட்ட Hindu Literary Society என்ற கல்விச் சங்கம் கிருஸ்துவர்களும்,முஸ்லீம்களும் அல்லாத இதர உள்நாட்டவரை குறிக்கும் சொல்லாக ’இந்து’ என்கிற சொல்லை பயன்படுத்தியதாகவும் பேரா.தொ.பரமசிவன் கூறுகிறார்.[1] இவ்வாறாக பல்வேறு மதநம்பிக்கைகள் உடைய, தங்களுக்குள் மெய்யியல் நடவடிக்கைகளில் முரண்களை உடைய வெவ்வேறு குழு மக்களை தங்களுக்கு கீழாக அடிமைப்படுத்திக் கொள்ள இந்து என்கிற சொல்லை திட்டமிட்டு ஒர்மை சொல்லாக பார்ப்பனீயம் பயன்படுத்தி வந்ததை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது .மேலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட பத்திரிக்கையான இந்து நாளிதழை தொடங்கியதும்,அக்காலத்திய பல இந்து என்ற பெயர் வரும்படியான பல பத்திரிக்கைகளை தொடங்கியதும் பார்ப்பனர்களே என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஹிட்லர் தனது உரத்தக் குரலில் முழங்கிய ஆரிய பெருமிதம் இங்கே பார்ப்பனீயமாக மாறி இந்துத்துவம் என்கிற அரசியலாக மாறி இருக்கிறது . மேலை ஆரியர்கள் ஜெர்மானியர்கள் என்றால் கீழை ஆரியர்களாக இந்துத்துவ பெருமிதம் பேசுகிற பார்ப்பனர்கள் திகழ்கிறார்கள். எனவே தான் நாசிசம்,பாசிசம் போன்ற புள்ளிகளில் இயல்பாகவே இந்துத்துவா தன்னை மிக எளிதில் பொருத்திக் கொள்கிறது . இப்படி ஆரியர்களின் தத்துவமான இந்துத்துவாவை நிறுவ துடிக்கும் தலையாய  ஆரியஅமைப்பாக ஆர்.எஸ்.எஸ் திகழ்கிறது. சமூக பண்பாட்டு தளங்களில் ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங் தள்,இந்து முன்னணி  போன்ற  பல இந்துத்துவா அமைப்புகளும், அரசியல்-அதிகார தளங்களில் பாஜக,சிவசேனா போன்ற அமைப்புகளும் கைக்கோர்த்து திட்டமிட்டு செயல்படுவதை நாம் கண்கூடாக கவனித்து வருகிறோம்.

சமீப காலமாக அதிகரித்து உள்ள விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் ஊர்வலங்களுக்கு பின்புலமாக இருப்பதும் இப்படிப்பட்ட இந்துத்துவ அரசியல் என்பதை உணர முடிகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வட மாநிலங்களில் பிளேக் நோய் பரவிய போது அப்போது பெருகி இருந்த எலிகளை ஒழிக்க ஆங்கிலேயர் நடவடிக்கை  எடுத்தப் போது,அதற்கு எதிரான கலகமாக பிள்ளையார் ஊர்வலத்தை திலகர் நடத்தினார்.  இந்த பிள்ளையார் ஊர்வலம் தான் இன்று முஸ்லீம்களை குறி வைத்து இந்துத்துவ ஒர்மையை நிறுவ முற்படும் அரசியல் நடவடிக்கையாக மாறி இருக்கிறது. மேற்கண்ட பால கங்காதர திலகரும் ஆரிய சமாஜ்  என்ற இந்துத்துவ இயக்கத்தினை சார்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.

இந்துத்துவாவின் மாபெரும் அரசியல் நடவடிக்கைதான் இந்தியா என்கிற பெருந்தேசமாகவும் மாறி இருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் , வேறு பட்ட பருவ காலங்கள் உடைய நிலச்சூழல் ,பல்வேறு மொழிகள், பல்வகையிலான பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவைகளை தனது பிழைப்பிற்காக இந்துத்துவா இந்தியாவாக இணைத்து வைத்திருக்கிறது.

தன்னை ஒரு இந்துவாக காட்டிக் கொண்டாலும் பல்வகை பண்பாடுகளுக்கும், பல்வகை மத நம்பிக்கை உணர்ச்சிகளுக்கும் மதிப்பளித்த காந்தியடிகளை ஆர்.எஸ்.எஸ் கொன்றது கூட அவர் இஸ்லாமியர்களிடத்திலும் சரிசமமான நியாயம் பாராட்டியதுதான் என்பது வெளிப்படை.  இன்று தேசத்தந்தையாக உருவகப்படுத்தப்பட்டுள்ள காந்தியடிகளை கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆளுங்கட்சி தரப்பிலாலேயே எழுப்பபடுவதன் அரசியல் காந்தியடிகள் போதித்த பல்வகை மதங்களுக்கு இடையிலான இணக்க உணர்வு,சகிப்புத்தன்மை போன்ற நல்லிணக்க உணர்வுகளுக்கு எதிரான இந்துத்துவ உளவியலை அடிப்படையாக கொண்டது .

இந்துத்துவம் தற்காலத்தின் நவீனத்தன்மைகளை உள்வாங்கி நவீன இந்துத்துவாவாக மாறி விட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் இந்துக்களின் நாயகனாக அடையாளம் காட்டப்பட்ட அத்வானி ஓரங்கப்பட்டு, இன்று மோடியை நவீன இந்துத்துவா முன் நிறுத்துகிறது.  பாபர் மசூதியை இடித்த அத்வானியை விட 2002 –ல் குஜராத் கலவரங்களில்  2000 முஸ்லீம்களை கொன்ற இந்துத்துவா அமைப்புகளின் பிம்பமான நரேந்திர மோடியே நவீன இந்துத்துவாவின் வடிவமாக முன்நிறுத்தப்படுகிறார்.

 பண்டைய இந்துத்துவா சமூக அடுக்குகளில் மனுதர்மத்தின் படி வருணாசிரம ஏற்றத்தாழ்வுகளை  நிறுவ முயன்று வென்றது என்றால், நவீன இந்துத்துவா வாக்கரசியல் மூலம் பெற்ற அளப்பரிய அதிகாரங்கள் மூலம் சமூகத்தளம்,அறிவுத்தளம் என அனைத்து தளங்களிலும் தனது ஆதிக்கத்தினை உறுதிப்படுத்துகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை தனது வரலாற்றில் சுவைத்த பாஜக தனது வெற்றியை இந்துத்துவாவின் வெற்றியாகவே பதிய செய்ய விரும்பியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத்ரத்னா வழங்க முடிவெடுத்தது,பாஜக ஆட்சியேற்ற உடனேயே இந்தியாவை இந்துக்களின் தேசமாக அறிவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அறைகூவல் விடுத்தது, உயர் கல்வியியல் அமைப்பான இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் ( ICHR ) தலைவராக இந்துத்துவா சார்பாளரான சுதர்சனராவை நியமித்தது,பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கோருவது, சமஸ்கிருதம்,இந்தி திணிப்பு நடவடிக்கைகள் போன்றவை பதவியேற்ற மோடி அரசு நவீன இந்துத்துவாவின் முகமாகவே தன்னை காட்டிக் கொள்ள விரும்பியதை அப்பட்டமாக உறுதி செய்தன.

வருணாசிரம,மனு தர்ம அடுக்குகளை காப்பாற்றுவதும், அதற்கு எதிராக,அல்லது இந்துத்துவா நிறுவ விரும்பும் பண்பாட்டில் சலனம் ஏற்படுத்தினால், அது எதுவாக இருந்தாலும் இந்துத்துவத்தின் பாசிச தன்மை மோதி அழிக்கும்.

 அதற்கு சமீபத்திய உதாரணம் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் சார்ந்த இந்து அமைப்புகளின் எதிர்ப்பு.

பெருமாள் முருகனின் இதர படைப்புகளை போல ஒரு படைப்பாக மாதொரு பாகன் என்னை கவரவில்லை என்றாலும் கூட.. என்றோ ஒரு காலத்தில் நிலவியதாக எழுதப்பட்டிருக்கிற மரபு/புனைவு சார்ந்த தரவுகள் குறித்து எவ்வித அடிப்படை இல்லாமல் (தரவுகள்/தகவல்கள்/ஆதாரங்கள் பிரதியில் இல்லை) அணுகிய அரசியல்/ படைப்பாளர் செலுத்திய கனத்த மவுனம், சரணடைதல் போன்றவை மேற்கண்ட பிரதியில் காணப்படும் நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குரியதாக்கி விடுகிறது என்றாலும்.. மாதொரு பாகன் தொடர்பாக நிகழ்கிற அரசியல் பதட்டம் கொள்ளவே வைக்கிறது.

ஒரு அறிவாய்ந்த விவாதமாய், சமூக ஆய்வாய் விரிந்து, பல புள்ளிகளில் படர்ந்து.. கண்டடைய வேண்டிய முடிவுகளை..இந்து மதமும், சாதியும் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பது நாம் எத்தகைய மோசமான உலகில் வாழ்கிறோம் என்பதற்கு அடையாளங்களாக திகழ்கின்றன. உண்மையில் பல அறிவாய்ந்த விவாதங்களின் முடிவில் இப்பிரதி படைப்பாளனால் கைவிடப்பட்டிருந்தால்/ திரும்ப பெற்றிருக்கப்பட்டால்..அதிலாவது அர்த்தம் இருந்திருக்கும்.

புராண,இதிகாசங்களில் தேங்கிக் கிடக்கிற புனைவின் கோடிக்கணக்கான மீறல்களை கண்டு கொள்ளாமல்…கடக்க வைக்கிற சாதி, இந்துத்துவ அரசியல்… மாதொரு பாகனை கொளுத்திப் போடுகிறதென்றால்.. படைப்பிற்கு வெளியே படைப்பாளியை இழுத்து அரட்டி,மிரட்டுகிறது என்றால்..நவீன இந்துத்துவாவின் பாசிச முகத்தினை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடியும்.

இப்பாசிச தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தான்எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்து விட்டான் என அவரே அறிவித்து.. இனி, தன்னை வெறும் பெ.முருகன் என அறிவித்து விட்டு தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளுவதாகவும் அறிவித்து விட்டார் .  தனக்கு எதிராக, தான் நிறுவி இருக்கிற சாதீய அடுக்குகளுக்கு எதிராக சுட்டு விரல் அசைந்தால் முறித்துப் போடுகிற கோபம் கொள்வது நவீன இந்துத்துவாவின் அடிப்படைத்தன்மை. இதுதான் பாசிசத்தின் குணம்.

              எப்போதும் இந்துத்துவம் தேசிய இனங்களின் நலனிற்கு எதிராகவே பணிபுரியும் . ஏனெனில் தன்னை ஒரு தேசிய இனமாக இந்துத்துவம் நிறுவ முயலுவதோடு மட்டுமில்லாமல் தேசிய இனங்களின் உரிமைகளை சிதைத்து ,அந்த தேசிய இனத்தையே முழுங்க காத்திருக்கும் முதலையாகவே இந்துத்துவா விளங்குகிறது. மண்ணின் பூர்வகுடி மக்களின் தனித்துவங்களை அழிப்பதில் தான் தன் வெற்றி இருக்கிறது என்பதை நவீன இந்துத்துவம் மிகச்சரியாகவே கணித்து வைத்துள்ளது. அதனால் தான் ஈழ விடுதலை, மீத்தேன் எதிர்ப்பு,கச்சத்தீவு மீட்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, போன்ற தமிழக பூர்வக்குடிகளின்  போராட்டத்தினை இந்துத்துவாவின் அரசியல் வடிவமான மத்திய பாஜக அரசும் நசுக்கவே முயலுகிறது. அதுமட்டுமில்லாமல் சுற்று சூழலியலுக்கு எதிராக வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் பொருளாதார-கனிம சுரண்டலுக்கு எதிராக வட கிழக்கு மாநிலக் காடுகளில் அணிவகுத்து நிற்கிற பூர்வீக குடி மக்களின் போராட்டங்களையும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்த கரை மக்களின் போராட்டத்தினையும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான வெளிநாட்டின் சூழ்ச்சி என துரோகப்பட்டம் கட்டுவதில் இந்துத்துவ பாஜக அரசு முனைப்பாக உள்ளது.

இச்சூழலில் தனித்த தேசிய இனமான தமிழர் தேசிய இனம் தனது எழுச்சிக்கும்,வளர்ச்சிக்கும்,மீட்சிக்கும் அப்பட்டமான எதிரியாக இருக்கிற நவீன இந்துத்துவாவின் பாசிச முகத்தினை அடையாளம் கண்டு, அதன் நடவடிக்கைகளில் கவனம் கொண்டு.. தனது மண்ணையும்,மக்களையும் காப்பாற்ற போராட வேண்டியது அதன் மிக  முக்கிய கடமையாக இருக்கிறது.

ஓடாத மானும்,போராடாத இனமும் வரலாற்றில் வாழ்ந்ததாகவே சரித்திரம் இல்லை என்கிறார் நம் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள்.  எனவே நாம் போராடி வாழ போகிறோமா, இல்லையேல் சகித்து போராடாமல் அமைதி காத்து வீழப் போகிறோமா என்பதை நாம் உறுதி செய்து கொள்வோம்.

எங்கள் தேசம் இதழ் மார்ச் 15-2015

இசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை

getimageசம கால திரைப்படங்களில் வணிகப் படங்கள்-கலையம்சம் பொருந்திய படங்கள் என்ற இடைவெளியை தேடும் யாரும் மிகப் பெரிய ஆச்சர்யங்களுக்கு உள்ளாகாமல் இருக்க இயலாது. ஏனெனில் அந்த இடைவெளி மிக நுட்பமானவைகளாக சம கால திரைப்படங்கள் மாற்றி இருக்கின்றன. திரைப்படத்திற்கு கதை எழுதுவதே ஒரு திரைப்படமாக மாறி விட்ட சூழலில் பார்வையாளனின் ரசனைகளும் சட்டகங்களுக்குள் பொருத்த இயலா கணக்குகளோடு மாறி வருகின்றன.  இந்த படம் ஓடும்-ஓடாது என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாத சூழலில்  அச்சறுத்தும் பேயும்,பிசாசும் நகைச்சுவை கதா பாத்திரங்களாக, கதாநாயகியாக மாறி விட்ட ஒரு காலக் கட்டத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் இசை வெளிவந்துள்ளது.

கதாபாத்திரங்களுக்கிடையிலான உளவியல் சிக்கல்களை திரைமொழியாக வடிப்பதில் எஸ்.ஜே.சூர்யா திறமையானவர். அவரது முந்தைய படங்களான வாலி,குஷி,நியூ,அ..ஆ என அனைத்துப்படங்களும் கதாபாத்திரங்கள் எதிர்க்கொள்ளும் உளவியல் முரண்களைப் பற்றிதான் பேசுகின்றன. அவ்வகையில் இசையும்  ஒரே துறையில் திறமைப் படைத்த இரு பெரும் தனி மனிதர்களுக்கு இடையிலான போட்டி,பொறாமை,வஞ்சகம், சூழ்ச்சி போன்ற  உளவியல் முரண்களைப் பற்றி பேசுகின்றன.

எஸ்.ஜே.சூர்யாவின் திரைமொழி சற்றே வித்தியாசமானவை. அதிகமான Close-up காட்சிகள், நீண்ட நேர உரையாடல்கள், கவர்ச்சி ததும்பும் காட்சியமைப்புகள் என தனித்தே தெரியும் அவரது திரைமொழி வடிவத்திற்கு இசை திரைப்படமும் விதிவிலக்கானதுஅல்ல. இரு பெரும் இசையமைப்பாளர்களுக்கு இடையிலான முரண்களை பேசும் திரைப்படம் ஆதலால் சமகாலத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் பார்வையாளருக்கு நினைவிற்கு வந்துதான் ஆகிறார்கள்.\

30 ஆண்டுகளாக அசைக்கவே முடியாத இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த வெற்றிச்செல்வன் தனது செருக்கால் ஒரு இயக்குனரை அவமானப்படுத்த , அந்த இயக்குனர் வெற்றிச்செல்வனின் உதவியாளராக இருக்கிற ஏ.கே.சூர்யாவை அறிமுகப்படுத்தி மாபெரும் வெற்றியை அடைகிறார். சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகளால்  வெற்றிச்செல்வன் தனது பிழைப்பு,வருமானம்,பேர்,புகழ் என அனைத்தையும் இழக்கிறார். மீண்டும் வெற்றியை அடையத்துடிக்கும் வெற்றிச்செல்வன் பல வித சூழ்ச்சிகளால் சூர்யாவை வெல்ல முயல்கிறார். தன்னைச்சுற்றி  பின்னப்படுகிற சூழ்ச்சி வலைகளில் இருந்து அந்த இளம் இசையமைப்பாளர் மீண்டாரா ,இல்லையா என்பதுதான் கதை.

இத்திரைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா முதன் முதலாக இசையமைத்துள்ளார். முதல் திரைப்படம் என்பதால் பூங்கொத்து மட்டுமே. அடுத்தடுத்த முயற்சிகளில் சூர்யா தன்னை மேம்படுத்திக் கொள்வார் என நாம் வாழ்த்துவோம். இளம் இசையமைப்பாளர் ஏ.கே.சூர்யாவாக எஸ்.ஜே.சூர்யா கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரிசையாக வருகிற சிக்கல்களால் உளவியல் முரண்களுக்கு உள்ளாகி தடுமாறுவதை நன்றாகவே செய்திருக்கிறார். அதிலும் கழிவறைக்குள் உட்கார்ந்து வாய் பொத்தி அழும் காட்சியில் …எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் முன்னேறி இருக்கிறார் என்பதை உணர்த்துகிறார் .  களைப்படைந்த கண்களோடு தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள முடியாத குழப்பமான சூழலில்…சோர்வான மனிதனாக உலா வரும் சூர்யாவிற்கு அக்கதாபாத்திரம் சரியாக பொருந்துகிறது.

இக்கதையினை தனது பண்பட்ட நடிப்பால் தூக்கி நிறுத்தி இருப்பவர்  மூத்த இசையமைப்பாளர்,இசைவேந்தன் வெற்றிச்செல்வனாக  நடித்துள்ள  உங்கள்-எங்கள்-நமது சத்யராஜ். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல்கள் திரையரங்குகளை நிறைக்கின்றன.  அதுவும் தோற்றுப் போன மனிதனாக, வேலையற்று ..தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் மனிதனாக சத்யராஜ் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். தனது பணியாளராக வரும் கஞ்சா கருப்புவினை அவர் கையாளும் காட்சிகள் …சத்யராஜ் என்கிற மாபெரும் கலைஞனை அடையாளம் காட்டுகின்றன. ஓரக்கண்ணால் பார்ப்பது,குத்தலும், நையாண்டியாக பேசுவது, தனது வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வது என தோன்றும் காட்சிகளில் எல்லாம் தன்னை மாபெரும் கலைஞனாக நிருபித்துக் கொண்டே இருக்கிறார் சத்யராஜ். அவர்தான் கதையின் முதுகெலும்பாக இருந்து…ஒட்டுமொத்த திரைப்படத்தையுமே சுமக்கிறார் .

கதாநாயகியாக நடித்திருக்கும் சாவித்திரி(அறிமுகம் ) கவர்ச்சி காட்சிகளில் அதிகம் தென்படுகிறார். செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு காடுகளில் மின்னுகிறது. அந்த அருவியோர அமைப்பு மிலன் கலை ஆக்கத்தில்..அற்புதமாக படமாக்கி உள்ளார்கள்.

சாதாரணமாக வனத்தில் திரியும் ஒரு வண்டின் இசை அறிவுக்கு முன்னால் நாமெல்லாம் ஒண்ணுமே இல்ல சார் என்று சத்யராஜிடம் எஸ்.ஜே.சூர்யா பேசும் காட்சிகளில் வசனகர்த்தா  எஸ்.சூர்யா கைத்தட்டல் பெறுகிறார் .

படத்தின் முடிவாக எஸ்.ஜே சூர்யா ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்வது அவரது துணிச்சலை காட்டுகிறது. ஒட்டு மொத்த படத்தையுமே ஒரு கனவாக நிலைநிறுத்த சூர்யா முயலுவது பார்வையாளர்களை அசதிக்குள்ளாக்குகிறது.

படத்தில் பல குறைகள். இருந்தாலும் ..நீண்ட காலத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் மறு வருகையும், சத்யராஜ் என்கிற மாபெரும் கலைஞனின் நடிப்புத்திறமையும் இசையை ஒரு தவிர்க்க இயலா திரைப்படமாக மாற்றுகின்றன.

இசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை.

லிங்கா..  கலைந்த கனவும்,மாறி வரும் இரசனைகளும்.

                  lingaa-poster உச்ச நட்சத்திரங்கள் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழகத்தில் நாம் தரிசிக்கும் அதே மாறா காட்சிதான்.  மழைக்காலங்களில் மின்னிடுகிற சுடு வெயில் பொழுதொன்றில்.. அத் திரையரங்கின் முன் திரண்டியிருக்கிற ரசிகர் கூட்டம் கத்திக் கொண்டிருக்கிறது. திடீரென்று கையில் பால்பாக்கெட்டுகளோடு நாலைந்து பேர் ’தலைவா’ என கத்திக் கொண்டு ஒடி வருகிறார்கள். “சர சர” வென்று அந்த கட் அவுட் மூங்கில்களில் ஏறி தங்களது தலைவர் முகத்தில் பாக்கெட் பாலை பீய்ச்சி அடிக்கிறார்கள். இதற்கு நடுவே திரையரங்கு வாசலில் இருந்து ஒரு சத்தம். டிக்கெட் கொடுங்கறாங்கடோய்…. அனைத்து கூட்டமும்  குறுகிய அத்திரையரங்கு வாசலை நோக்கி நெறுக்கி தள்ளுகிறார்கள். திரையரங்குள்ளும் அந்த ரசிகர்களின் ஆட்டம் தொடர்கிறது. திரைப்படம் தொடங்கியவுடன் திரையில் மின்னும் SUPER STAR என்னும் எழுத்துக்களை கண்டவுடன் திரையரங்கமே இடிந்து விழும் அளவிற்கு கூச்சல்..பிறகு முதல் பாடலின் போது காரில் இருந்து இறங்கும் தங்கள் தலைவரின் முகமே தெரியாத அளவிற்கு பேப்பரை கிழித்து எறிந்து உச்சத்தை தொடும்  இந்த ரசிகர்கள் ..அடுத்தடுத்த காட்சிகளில் அமைதியாகிறார்கள். திரைப்படத்தின் இடைவெளிகளில் கூடும் இந்த ரசிகர்கள் ”இனிமே தாம்பா படமே” போன்ற வார்த்தைகளில் ஆசுவாசம் கொள்கிறார்கள். மீண்டும் திரைப்படம் ஓடி முடிவடைகிறது. ஏறக்குறைய 3 மணி நேர கனவு கலைந்த துயர்கொண்டு அமைதியும், சோர்வுமாக கலையும் அந்த ரசிகர்களை பார்த்து நமக்குள் எழுகிற கேள்வி..

ரஜினியின் யுகம் முடிவடைந்து விட்டதா…?

 70களின் பிற்பகுதியில் இருந்து தொடங்கிய திரைப்படம் காண்போரின்  ரசிக அலைவரிசை 2010க்கு பிறகு மாறி இருக்கிறதோ என சமீப காலமாக வெற்றியடையும் பல திரைப்படங்கள்   சந்தேகம் கொள்ள வைக்கின்றன. இக்கால திரைப்படங்களுக்கு கதாநாயக,கதாநாயகி பிம்பங்கள் தேவையில்லை. பாடல்கள் கூட வேண்டாம். பின்ணணி இசையை முன்ணனி இசையாக போட்டுக் கொள்ளலாம். பறந்து,எழுந்து, துடித்து, அடிக்கும் பரபர சண்டைக் காட்சிகள் தேவையில்லை. உதடுகள் பிரியும் அளவிற்கு உதிரும் புன்னகையை வர வைத்தால்  அதை காமெடி காட்சியாக கருதி விடலாம். சொல்லப் போனால் கதையே தேவையில்லை என்பதை கதை திரைக்கதை வசனம் இயக்கம் காட்டி விட்டது. பயமுறுத்த வேண்டிய பேய் படங்களும் காமெடிப்படங்களாக சிரிக்கின்றன.

ஏற்கனவே வழமையாக காலங்காலமாக திரைப்படங்கள் மூலம் திரையாசிரியர்கள் நிறுவி இருக்கிற பிம்பங்களினை கலைத்துப் போடுதலை..பிம்பங்களை அழித்தலைத்தான் சமீபத்திய வெற்றி படங்களின் கதையாக விரிகிறது இக்காலம் ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு மிக கடின காலம் தான்.

சத்தம் போட்டு புள்ளி விபர வசனம் பேசி, ஒற்றைக்காலை ஊனி ,  மற்றொரு காலால் வில்லனை உதைத்து,பொதுமக்கள் சூழ விஜயகாந்த் கதாநாயகனாக நடந்து வந்த காலங்களில் கொண்டாடிய ரசிகர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மலையூர் மம்பட்டியான் என வெள்ளி விழா கொண்டாடிய ஒரு திரைப்படம் மீண்டும் ரீ மேக்கான போது வாங்க ஆளில்லை.   ஒரு காலத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் ஆக்‌ஷன் கிங் அவதிக்கு உள்ளாகிறார் . ஒரு காலத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக தொடர்ச்சியாக அளித்த இயக்குனர் விக்கிரமனின் அடுத்த படம் என்ன என்பது  யாருக்கும் தெரியாது .  இயக்குனர் பாரதிராஜாவின் அண்மைப்படம் அன்னக்கொடி வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தடமிழந்தது. மணிரத்தினத்தின் இராவணன் படம் தோற்கிறது. அக்காலக்கட்டத்தின் மாபெரும் நட்சத்திரங்களான பிரபும், சத்தியராஜீம் கிடைக்கிற கதாபாத்திரங்களில்  தங்களை பொருத்திக் கொள்ள போராட வேண்டியிருக்கிறது.

இக்காலக்கட்டத்தில் தான் ரஜினிகாந்தின் லிங்கா வெளி வருகிறது. பெரும்பாலும் 35 மேல் வயதாகி விட்ட ஒரு தலைமுறை ரசிகர் கூட்டத்தை இத்தனை ஆண்டு காலம் தக்க வைப்பதே ஒரு சாதனைதான்.  அதனால் தான் ஒரு ரஜினி படத்தின் வெளியீட்டிற்கு முன் வழக்கமாக எழும்பும் ரஜினியை அரசியலுக்கு அழைத்தல்கள் இப்பட ஒலிப்பேழை வெளியீட்டின் போதும் நடந்தது. இம்முறை ரஜினியை இயக்குனர்கள் அமீர்,சேரன் ஆகியோர் அரசியலுக்கு அழைத்தனர். இயக்குனர் சேரன் காந்திக்கு பிறகு ரஜினிதான் என போட்டுத்தாக்கினார். ”இன்னும் எத்தனை நாளுக்குய்யா ஒரே ஆளையே அரசியலுக்கு கூப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க” என எரிந்து விழுந்தார் இயக்குனர் பாரதிராஜா. ரஜினிதான் வந்து தமிழ்நாட்டை காப்பாத்த வேண்டும் என்கிற அவசியமில்லை என்று குரல் எழுப்பினார் நாம் தமிழர் சீமான்.

இப்படி ஒவ்வொரு ரஜினி பட வெளியீட்டின் போதும் அரசியல் சார்ந்த சர்ச்சைகள் ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது வழமை. பாட்சா பட வெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சு,முத்து திரைப்படத்தில் அந்த நாடக காட்சி, அருணாசலம்,பாபா திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள், என அனைத்து ரஜினி படங்களும் ரஜினியை அரசியலுக்கு அழைப்பு விடுப்பவனாகவே அமைந்தன. இவையெல்லாம் ஒன்று சேர்த்து பார்க்கும் போதெல்லாம் திட்டமிட்டு தான் இது போன்ற காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா என்கிற சந்தேகம் எளிய பார்வையாளனுக்கு பிறப்பது எளிது.

அவ்வகையில் லிங்கா ஒரு வழக்கமான ரஜினி படமா என்றால் ஆம்/இல்லை என்கிற ஒற்றைப் பதிலை சொல்ல முடியாத குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குனர்.கே.எஸ்.ரவிக்குமார். பெரும் செல்வந்தர் ஒருவர் தனது செல்வத்தை எல்லாம் மக்களுக்கு வாரி வழங்கி விட்டு எதுவுமற்ற ..ஏறக்குறைய ஒரு துறவு மனநிலையில் வாழ்வது போன்ற காட்சிகளை திட்டமிட்டு/திட்டமிடாமல் தொடர்ச்சியாக தன் படங்களில் இடம் பெற செய்கிற ரஜினிகாந்த் லிங்கா பட ஒலிப்பேழை வெளியீட்டின் போது தன் இளைய மகளுக்கு புதிதாக ஏதும் சம்பாதிக்க வேண்டாம். தான் சம்பாதித்தை பாதுகாத்தாலே போதும் என அறிவுரை வழங்கியது காட்சியியல் முரண்.

முல்லை பெரியாற்று அணையை கட்டிய பென்னிக்குயிக் அவர்களின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் இது என லிங்காவை யாரும் பாராட்டி விடக் கூடாது (?) என்பதில் இயக்குனர் மிக கவனம் கொண்டிருக்கிறார். ஏனெனில் அயல் நாட்டில் பிறந்தாலும் ஒரு பகுதி மக்களின் பசியை,வறுமையை, வாழ்வியல் தேவையை உணர்ந்தவர் பெருமகன் பென்னிக்குயிக் .கடலில் கலந்து வீணாகும் தண்ணீர் மக்களின் வயிற்றில் நீராக,சோறாக சேரட்டும் என சிந்தித்த பென்னிக்குயிக் முல்லை பெரியாறு அணையை கட்ட தனது செல்வங்கள் அனைத்தும் இழந்தார் என்பது தியாக வரலாறு. அந்த வரலாற்றின் துளிகளை ரஜினி என்கிற உச்ச நட்சத்திரத்திற்கு ஏற்றாற் போல் மாற்றியமைப்பதில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு கடுமையான குழப்பங்கள் .

ஒரு உச்சநட்சத்திரமாக விளங்குகின்ற ஒருவரின் 60 வயதிற்கு மேற்பட்ட அவரது திரைப்பட முயற்சிகள் எப்படிப்பட்ட விமர்சனங்களை எழுப்பும் என்பதை ரஜினி அறியாதவரல்ல.  ரஜினியை போலவே இந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் தன் வயதிற்குரிய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. ரஜினிகாந்தை விட வயதில் இளையவர்களான அவரது சக நட்சத்திரங்களான விஜயகுமார்,பிரபு,சத்யராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் தந்தையாக, தாத்தாவாக நடிக்கத் தொடங்கி விட்டனர். தெலுங்கில் உச்ச நட்சத்திரமான என் டி ஆர் தீவிர அரசியல் பிரவேசத்திற்கு பிறகு 1984க்கு பிறகு மீண்டும் 1991  –ல் பிரும்மரிஷி விஸ்வாமித்ராவில்  கதாநாயகனாகவே நடிக்க வந்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது . ஆனாலும் தமிழகத்தின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் தனது சக நட்த்திரமான சத்ருகன் சின்ஹா வின் மகள் சோனாக்‌ஷி சின்காவோடு கதாநாயகனாக நடிப்பது என்பது மிகு நம்பிக்கைதான்.

இரு வேடங்கள். ஒருவர் திருடன்.மற்றொருவர் மக்கள் மனங்கவர்ந்த மாமனிதர் என்கிற சிறு முடிச்சியை (Knot) வைத்துக்கொண்டு, பென்னிக்குயிக் கதையை நகல்.. எடுத்து மன்னிக்க ..இப்பொதெல்லாம் இன்ஸ்ப்ரேஷன் தான் , ரஜினிக்கென்று வழமையாக கிளிஷேக்களை கொண்டு திரைமொழி படைத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார். சந்தானம் மற்றும் இளைய நடிகர்களோடு ஒரு மேக்கப் ரஜினியை உலவ வைத்தால் போதும் இளமையான ரஜினியை உருவாக்கி விடலாம் என்று ரவிக்குமார் நினைத்திருக்கிறார் போலும். அம்முயற்சியில் ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளாரா என்பது கேள்விதான். சில குளோசப் காட்சிகள்,நடன அசைவுகள்,வழக்கமான ரஜினிக்கென்று வசப்பட்டிருக்கிற துறுதுறுப்பின்மை போன்ற காட்சிகளில் தான் ரஜினியின் உண்மை வயதை நாம் உணர்கிறோம். ஆனால் இதையெல்லாம் தாண்டி தனது வயதை காட்டிக் கொள்ளாமல், கடுமையான நோய் பாதிப்புகளிலிருந்து மீண்டு தன்னால் இன்னமும் எல்லாம் முடியும் என நடித்திருக்கிற ரஜினியின் தன்னம்பிக்கை ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. அது இத்தனைக் காலம் தன் பின்னால் திரண்டிருக்கிற தனது ரசிகர்கள் மீது அவர் கொண்டிருக்கிற நம்பிக்கை எனவும் கொள்ளலாம்.

திருடனாக இருக்கிற லிங்கா தனது தாத்தாவான ராஜா லிங்கேஸ்வரன் மீது அதிருப்தியில் இருக்கிறார். அனுஷ்கா மூலமாக சோலையூர் கிராமத்திற்கு செல்லும் லிங்கா தனது தாத்தா கட்டிய அணை பற்றிய வரலாற்றினை அறிகிறார். அந்த அணைக்காக தனது தாத்தா தனது பதவி,அதிகாரம் ,சொத்து என அனைத்தையும் இழந்து சமையல்காரனாக மாறிப்போன கதையை கேட்டு நெகிழ்கிறார். சம காலத்தில் அணைக்கு உள்ளூர் எம்.பி மூலம் ஏற்படும் அபாயத்தை பைக்கில் சீறி,பலூனில் பறந்து, வெடிக்குண்டை தண்ணீரில் வெடிக்க வைத்து தடுக்கிறார். வழக்கமாக இறுதிக்காட்சியில் வரும் போலீஸ் காரராய் கே.எஸ் ரவிக்குமார் வர,அவரோடு அனுஷ்காவையும் அழைத்துக் கொண்டு  விசாரணைக்காக (?) செல்கிறார். இதுதான் கதை. ரஜினி படத்திற்கே உரிய வேகமான கதையோட்டம் படத்தில் இல்லை. ரஜினியை பறக்க,தாவ வைக்க உதவுகிற கிராபிக்ஸ் காட்சிகளும் அவ்வளவாக எடுபடவில்லை.

படத்தில் நிறைய காலத்தகவல் குழப்பங்கள். இரயிலில் கொள்ளையடிக்கும் வரும் தீவிரவாதியை பார்த்து நீ சுபாஷ் சந்திர போஸ் படையில் சேர் என்பது போல அறிவுறுத்துவது காலக் குழப்பத்தை காட்டுகிறது. 1939 களில் சுபாஷ் சந்திர போஸ் ஆயுத போராட்டத்தினை தொடங்கவில்லை . 1939 ஆகஸ்ட் வரை காங்கிரசின் தலைவராகவே சுபாஷ் சந்திரபோஸ் விளங்கினார். அதே போல 1939 களில் ரஜினி இரயிலில் படித்து வருகிற ஜோசப் காம்பெல் எழுதிய A hero with thousand faces என்ற புத்தகம் 1949ல் தான் பதிக்கப் பட்ட நூலாகும்.

மேலும் ரஜினிகாந்த் ஆங்கிலேய அதிகாரிகளிடம் இந்திய பெருமிதம் பேசும் 1939 காலங்களில் ஏறக்குறைய அனைத்து ஜமீன் தார்களும், குறு நில மன்னர்களும் ஆங்கிலேயர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு ,பிரிட்டிஷ் மகாராணி விசுவாசம் உடையவர்களாக மாற்றப்பட்டிருந்தார்கள் . தன்னிச்சையாக ஒரு அணை கட்டும் அளவிற்கு ஒரு இந்தியரை பிரிட்டிஷ் வல்லாதிக்கம் அனுமதிக்குமா என்பதும், தேசியக் கொடியோடு சாதி,மத பேதமற்று இந்தியராய் ஒரு அணை கட்டுமானப்பணியில் இணைய அனுமதிக்குமா என்பதெல்லாம் ரஜினி படங்களுக்கே உரிய கேட்கக் கூடாத கேள்விகள்.

சந்தானத்தின் ஸ்பாட் (spot ) காமெடியும்,அணை உருவாக்கமும், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலும் நேர்த்தியும் திரைப்படத்தில் முக்கிய அம்சங்கள் .ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோர்ப்பில் இது மற்றொரு படம் அவ்வளவே.

ஒரு உச்ச நட்சத்திரம் தன்னை நிலை நிறுத்த மேற்கொள்ளும் பாடுகளை ஏற்கனவே தமிழ்சினிமா எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்ற நட்சத்திரங்கள் வாயிலாக உணர்ந்திருக்கிறது . மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படத்தோடு எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனதும், படையப்பா திரைப்படத்தில் சிறு வேடத்தில் சிவாஜி கணேசன் வந்து போனதும் திட்டமிட்டு நடந்தவை அல்ல. பிரபு,சிவக்குமார் நடித்த உறுதிமொழி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது அதனை பார்க்கச்சென்ற சிவாஜி கெஸ்டா வந்திருக்கேண்டா என்று கலங்கிய சிவாஜியை நீங்க நடிச்சி முடிச்ச தாண்ணே இப்ப நாங்க நடிச்சிகிட்டு இருக்கோம் என ஆற்றுப்படுத்தியாக நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இது போல் அல்லாது ..கதையின் நாயகனாகவே தொடர விரும்பும் ரஜினி தான் இத்தனை ஆண்டு காலமும் உழைத்து நிறுவி இருக்கிற இளமையும்,துள்ளலும் ,வேகமும் நிரம்பிய தனது நாயக பிம்பத்தை..தனது முயற்சிகளாலேயே சிதைத்து விடும் அபாயம் இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைதான் லிங்கா திரைப்படம்  அவருக்கு உணர்த்தியிருக்கும்.

அவரது சம கால நண்பர் கமல்ஹாசன் சமீப படங்களில் மரங்களை சுற்றி பாட்டு பாடி வருவதை நிறுத்தி விட்டு ஏதோ வித்தியாசமாக செய்துவிட உழைத்துக்கொண்டு இருப்பதும் ரஜினி அறியாதது அல்ல. ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரோஜர் மூர்,மார்கன் ப்ரீமென் போன்றவர்கள் இன்றளவும் உச்சத்தில் தொடர்வதற்கான சாத்தியங்களில் இருக்கிறார்கள். அவர்கள் செய்வது  மேக்கப் மேன் உள்ளீட்ட எவரையும் நம்பாமல்,கிராபிக்ஸ் உள்ளீட்ட  எதையும் நம்பாமல் அவர்களாவே வருவது. தனக்குள் இயல்பாக ஊறி இருக்கிற கலை அம்சத்தை மீட்டெடுத்து தக்கவைப்பதுதான் ஒரு கலைஞனின் வாழ்நாள் பணி. முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல் என தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினி என்கிற கலைஞனின் கலையம்சம் கேள்விக்குபட்டதல்ல.

ஆனால் காலமும்,லிங்கா போன்ற தொடர்ச்சியான முயற்சிகளும் ரஜினி என்கிற கலைஞனின் கலையம்ச உணர்வினை கேள்விக்குட்படுத்தி விடுகிற அபாயம் இருக்கிறது.

அந்த அபாயத்திற்கு பயந்து தான் மகேந்திரன் ,பாரதிராஜா போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் ஒரு கண் அசைவிலேயே கலை நுண் உணர்வினை நிறுவிய ரஜினிகாந்த் இப்படி லிங்காவில்  பலூனில் எல்லாம் பறக்க வேண்டி உள்ளது.

இப்படி சிரமங்களெல்லாம் படாமல் ரஜினிகாந்த் தனது வயது, தனது பிம்பம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு கலைஅம்சம் சுடரும் ஒரு முழுமையான கலைஞனாய் வெளிபட  உதவும் ஒரு படைப்பாளிதான் ரஜினிகாந்தின் இன்றைய தேவை.

-மணி செந்தில்

[email protected]

Page 2 of 2

Powered by WordPress & Theme by Anders Norén