1491548104seemaneputhur

தமிழ்த்தேசிய கருத்தியல் குறித்து இணைய வெளிகளில் ,கருத்துத்தளங்களில் பரவலாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தேர்தல் அரசியல் பாதையில் பயணிக்கும் தமிழ்த்தேசியர்கள் குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

எந்த அதிகாரத்தினால் தமிழ்த்தேசிய இனம் வீழ்ச்சியுற்றதோ அந்த அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்கிற முழக்கத்தை முன் வைத்து நகரும் தமிழின இளைஞர்களை முதலமைச்சர் ஆக கனவு காண்கிறார்கள், முதலமைச்சுத் தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வசவுகள் பொழிகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற முனையும் தமிழ்த்தேசியர்களை வலது சாரி தமிழ்த்தேசியவாதிகள் என்று வசைபாடும் பெரியவர்கள்… முதலமைச்சு திராவிடம், வலது சாரி திராவிடம் போன்றதான விமர்சனங்களை தப்பித்தவறி கூட முன் மொழிவதில்லை என்பது வெளிப்படை.
மக்கள் ஆதரவை திரட்டி, மற்ற திராவிடக் கட்சிகள் போல எங்களுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, தமிழ்த்தேசிய கருத்தியல் வெகு சன மக்களை கவர்கிற கருத்தியல் என நிருபிக்க போராடும் இளையோர்களை குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை நோக்கி தாறுமாறாக விமர்சன அம்புகள் எய்யப்படுவதன் உள்நோக்கத்தை நாம் ஆராய வேண்டும்.

அப்படி இவர்கள் வெறுக்கும் வகையில் நாங்கள் என்ன செய்து விட்டோம்….?

கருத்தரங்குகளில், அரங்கங்களுக்குள் நடக்கும் மாநாடுகளில் (?) ,வயதானவர்களில் ஜிப்பா பைகளில், நரைத்த முடிகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கருத்தியலை பல லட்சக்கணக்கான வெகு மக்களுக்கான கருத்தியலாக வெகுசனமயமாக்கியதும், பிழைப்புவாத போலி திராவிட அரசியல் கருத்தியலுக்கு மாற்றாக முன் நிறுத்தியதையும் தவிர நாங்கள் செய்த குற்றம் என்ன..?

யாருக்கு ஆதரவாக எங்கள் மீது வசவு அம்புகளை இவர்கள் எய்கிறார்கள்..?

தமிழ்த்தேசியவாதிகள் வெகுசன அரசியல் பாதைக்கோ, அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் பாதைக்கோ வந்து விடக்கூடாது என்பதில் திராவிட அரசியல் வாதிகளை விட கவனமாக இருப்பது ‘ கருத்தரங்க’ தமிழ்த்தேசியர்கள் தான்.

.. அற்பமான (?) இந்த தேர்தல் வெற்றியை கூட பெற முடியாத, மக்கள் ஆதரவு இல்லாத ,சொல்லப்போனால் வெகு சன மக்கள் நிராகரிக்கிற தேர்தல் புறக்கணிப்பு தமிழ்த்தேசியம் எப்போதும் திராவிட அரசியலுக்கு ஆதரவாகவே இருப்பது ஏன்…?

இந்திய கட்டமைப்பாகவே இருந்து விட்டு போகட்டும். தமிழர்கள் ஆண்டு விட்டுதான் போகட்டுமே.. தெலுங்கர்,கன்னடர் தமிழ்நாட்டை ஆளலாம்..தமிழன் ஆளக்கூடாதா… இது தமிழனை தவிர்த்த மற்றவர்களுக்கான உரிமையா..? குறைந்த பட்சம் இந்தியக்கட்டமைப்புக்குள்ளாகவே ஆள வக்கற்ற, அதிகாரமற்ற தமிழன்…எப்படி தனக்கென ஒரு நாடு அடைவான்…? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது..?

எதற்கெடுத்தாலும் பெரியார் என்கிற பாதுகாப்பு கேடயத்தை முன் நிறுத்தும் இவர்கள் பல முறை தனக்கு முதல்வர் வாய்ப்பு தனக்கு வந்தும் கூட..பெரியார் ”பச்சைத்தமிழன்” காமராசருக்கு தானே வாக்கு கேட்டார்… என்கிற உண்மையை மறைக்க துடிப்பது ஏன்..?

தேர்தலில் நிற்பது தவறென்றால்..வாக்கு கேட்பது சரியா…? ( தங்களுக்கு “வேண்டியவர்களுக்கு” மட்டும் வாக்கு கேட்பது தமிழ்த்தேசிய எல்லைக்கு அப்பால் என்றெல்லாம் மனசாட்சி கேட்டால் நாம் பொறுப்பல்ல..)

சரி.தேர்தலில் நிற்கவேண்டாம்.

கருணாநிதி,ஜெயலலிதாவே ஆண்டு விட்டு போகட்டும், அதற்கு பிற ஆள அவர்களது வாரிசுகள் இருக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்போம். தேர்தல் அரசியலில் நிற்காமல் மக்களை திரட்ட, மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலை நோக்கி ஈர்க்க , தமிழர்களை திரட்டி தமிழ்த்தேசம் சமைக்க… என்ன என்ன முயற்சிகள்.. எத்தனை ஆண்டு காலத்தில்…? விளக்குவார்களா இவர்கள்…???

தமிழர்கள் என்று சொன்னால் பிறப்பு அடிப்படையிலான குருதி தூய்மை..சரி. திராவிடர்களை நீங்கள் எதை கொண்டு வரையறை செய்தீர்கள் – ஏழை பணக்காரன் பார்த்தா..நல்லவன் கெட்டவன் பார்த்தா…? எதை கொண்டு திராவிடர்களை பிரிக்கிறீர்கள்.வரையறை செய்கிறீர்கள்…?

மக்களை வெல்லாமல், வெகு மக்களை திரட்டாமல்..மானுட எல்லைகளுக்கு (?) அப்பால் ஒரு தத்துவத்தை கட்டமைத்து, வாத பிரதிவாதங்கள் செய்வதன் மூலமாக மட்டுமே ஒரு தேசம் உருவாகி விட முடியுமா…அதற்கான மானுட உளவியல் விழைவை, தேவையை இம்மண்ணில் இதுவரை யாராவது ஏற்படுத்தி இருக்கிறார்களா…?

seeman_2417919f

எப்போதும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது மக்கள் ஆதரவை சார்ந்தது. மக்களை வெல்லாமல் எதையும் நாம் அடைய முடியாது. எப்போதும் பலவீனப்பட்ட சிறு சிறு குழுக்களின் தத்துவமாக தமிழ்த்தேசிய கருத்தியல் இருந்த காலக்கட்டம் முடிந்து விட்டது. இன்றைய தமிழின இளையோர் தமிழ்த்தேசிய கருத்தியலை வெகுசன ஆதரவு கருத்தியலாக விதைப்பதில் வென்று காட்டி இருக்கிறார்கள்.

கடந்த 2009 க்கு பிறகான தமிழின வரலாற்றிலும், தமிழின இளையோர் சிந்தனையோட்டத்திலும் ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை புறம் தள்ளி , அவர்களை வலது சாரி, உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள், குருதித்தூய்மை பார்ப்பவர்கள் என்றெல்லாம் ஏசி முறியடிக்க விரும்புவது திராவிட பித்தலாட்ட அரசியலுக்கு அப்பட்டமாக துணை செய்யதானே..?

நமது மண்ணில் பிழைக்க வந்திருக்கிற வேற்று இனத்து உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பரசியல் குறித்தெல்லாம் சிந்திக்கிற இவர்கள்…இங்கிருந்து உலகம் முழுக்க பிழைக்கப் போன எம்மின மக்கள் குறித்து கரிசனம் கொண்டிருக்கிறார்களா… ? பெருமுதலாளிகளாக இம்மண்ணை சுரண்டி வாழும் நிறுவனங்களான ஜோஸ் ஆலுக்காஸ். ஜோய் ஆலுக்காஸ், முத்தூட் பைனான்ஸ், பல திரைப்பட நிறுவனங்கள்,குளிர்பான நிறுவனங்கள், உள்ளீட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விமர்சனம் சார்ந்த எங்களது வெறுப்பரசியல் இம்மண்ணில் பிழைக்க வந்துள்ள பிற இனத்து உழைக்கும் மக்கள் மீது என்றாவது பாய்ந்திருக்கிறதா…??

அதற்கான ஆதாரங்களை பெரியவர்கள் வெளியிடுவார்களா..?

தமிழ்நாட்டை வந்தேறிகளின் வேட்டைகாடாக விடமாட்டோம் என்கிற இம்மண்ணின் பூர்வீகக்குடிகளின் அடிவயிற்றுக் குரல்… ஏன் உங்களுக்கு சுருதி பேதமாக ஒலிக்கிறது…??

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அலைபோல எழுகின்றன.

ஏனென்றால் காலங்காலமாக காற்றில் கரைந்துப் போன கற்பூரமாய் இருந்த அக்குரல் இப்போது திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு எதிரான இடி முழக்கமாய் முழங்க தொடங்கிவிட்டது.. செத்துக் கொண்டிருக்கிற திராவிட பிழைப்புவாத அரசியலுக்கு தத்துவார்த்தமாக வலிமை சேர்க்கவே இப்படிப்பட்ட கூப்பாடுகள் என்பதை நாங்கள் அறிவோம்.

நாங்கள் உறுதியான குரலில் ,எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கிற எம்மின விடுதலை மீது பற்றுறுதி கொண்டு அறிவிக்கிறோம் . யாரும் வரலாம். வாழலாம். இம்மண்ணில். வந்தவர்களை வாழ வைப்போம்.. அது எம்மினத்தின் பண்பாட்டுப் பெருமை. ஆனால் எம் சொந்தவர்களை மட்டுமே ஆள வைப்போம். அது தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை.
நாங்கள் முன் வைக்கிற முழக்கங்கள் உறுதியாக பிற இனத்தார் மீதான வெறுப்பரசியல் இல்லை. அவை எங்கள் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை.

பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களையும், இந்திய பெருநிலத்தில் தோன்றிய மகத்தான பெருமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களையும் நாங்கள் பெருமதிப்புடன் அணுகுவதில் ஒரு போதும் பிழை செய்வதில்லை. இருண்ட உலகிற்கு வெளிச்சம் காட்ட பிறந்த அந்த தீப்பந்தங்களின் ஆதி மூலம் குறித்து நாங்கள் ஆராய்வதில்லை. அவர்கள் மட்டுமல்ல மாமேதை மார்க்ஸ் தொடங்கி தத்துவங்கள் மூலம், நெறிகள் மூலம், வாழ்வியல் மூலம் வழிகாட்டிய மாபெரும் மனிதர்களை நாங்கள் ஒருபோதும் மதிக்காமல் கடந்ததில்லை. மாறாக அவர்கள் உலகம் தழுவிய அடிமைப்பட்டு கிடக்கிற இன மக்களுக்கான வழிகாட்டிகள் என்பதை நாங்கள் நெஞ்சார உணர்ந்துள்ளோம்.

அதே சமயத்தில் எம்மினத்தில் பிறந்த பேரறிஞர் அயோத்திதாசர் பண்டிதர் அவர்களையும், எம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களையும், பேராசான் ஜீவா அவர்களையும், இன்னும் பிற தமிழ்த்தேசிய கருத்தியல் தளம் சார்ந்து இயங்கிய எங்கள் பாட்டன்களையும் நாங்கள் எங்கள் குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவர்களை எங்கள் முன்னோடிகளாக, எங்கள் தலைவர்களாக போற்றுகிறோம்.

தவறான விமர்சனங்களை பரப்புவதன் மூலம் தமிழின இளைஞர்களின் அரசியல் பாதையை அழித்து..திராவிட பிழைப்பு வாத அரசியலுக்கு மறு உயிர் கொடுக்கிற முயற்சிகளை எங்களால் உணர முடிகிறது.

.இலட்சக்கணக்கான எம் உறவுகளும், எம்மினத்தின் மாவீரர்களும் பற்ற வைத்த பெருநெருப்பு பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த நெருப்பை உள்ளத்தில் சுமந்து…தங்களை வீழ்த்திய அனைத்தையும் எதிர்க்கிற, வெல்கிற வலிமையை தமிழின இளைஞர்கள் இன்று பெற்றுள்ளனர்.

அவ்வலிமையை கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் பாதையை தமிழர்களே தீர்மானிப்பார்கள்.

எங்களுக்கு முன்னதாக இக்களத்தில் பணி செய்தோர்,பயணம் செய்தோர்,பங்களிப்பு செய்தோர்களின் தியாகத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். எம்மீது கல்லெறிந்து போகிற பெரியவர்களின் பெயர் கூட சொல்லாமல் கண்ணியமாக நகர்ந்து போகிறோம். ஆனால் உங்களது தியாகமும், அறிவும் தமிழ்த்தேசிய இனத்திற்கு பயன்பட வேண்டுமே ஒழிய , கருணாநிதி,ஜெயலலிதா, போன்ற திராவிட அரசியல் பிழைப்புவாதிகளின் அரசியல் எதிர்காலத்தை சவால்களுக்கு உள்ளாக்கி இருக்கிற இந்த இளைய பிள்ளைகளின் மீதான வன்மமாக,எதிர்ப்பாக மாறி விடக்கூடாது என்கிற வேண்டுகோளையும் நாங்கள் இக்கணத்தில் விடுக்கிறோம்.

எப்போதும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வலிமையாக தமிழின இளையோர் கம்பீரமாக நிற்கிறோம். ஆதரவாய் இருக்க விரும்புவோர் அருகில் வாருங்கள். நன்மொழி கூறுங்கள்.

அவதூற்றி எதிரிகளை பலப்படுத்த விரும்புவோர் தாராளமாக எதிரிகளுடனேயே நில்லுங்கள்.

கருணாநிதி,ஜெயலலிதாவை ஆதரிப்பதும், அவர்களையே ஆள வைப்பதுதான் இடது சாரி தமிழ்த்தேசியம் என்றால்…(நன்றி:சுப.வீ) அக்கனவை அழித்து, எம்மண்ணை இம்மண்ணின் பூர்வக்குடிகளே ஆளட்டும் என முழங்கிற நாங்கள் வலதுசாரி தமிழ்த்தேசியர்களே..

சில வருடங்களுக்கு முன் ஈழ அரசியலில் கலையரசன், சோபா சக்தி போன்றோர் எம்மினத்தின் விடுதலைக்காக தன்னுயிர் தந்த மாவீரர்களான, எம்மின தேசிய இராணுவமான விடுதலைப்புலிகளை வலது சாரிகள் என வசை மொழிகள் பொழிந்தது நினைவுக்கு வருகிறது…

அந்த வலதுசாரிகள் தான் இறுதிவரை மண்ணை காக்க போராடி உயிர் ஈந்தார்கள்.

இந்த வலதுசாரிகள் தான் இம்மண்ணை காக்க போராட மக்களுடன் களத்தில் நிற்கிறார்கள்..

காலம் உணர்த்தும். தவறான கணக்கு திருத்தும்.

.யார் வலது சாரி, இடது சாரி என…

..மணி செந்தில்