உலக வரலாற்றில் மாபெரும் மனித அழிவு காட்சியாக 1939-45 வருடக் காலங்களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நம் கண் முன்னால் தோன்றுகிறது . மனித குலத்தில் 3 ல் ஒரு பங்கு உயிர்களை பலிவாங்கிய இரண்டாம் உலகப் போர் மனித மனங்களில் நிகழ்த்தி இருக்கிற உளவியல் மாற்றங்கள் மிக முக்கியமானவை. மனித குலத்தின் பாற் நேசமும், சமநீதியும் போதிக்கிற கம்யூனிச கொள்கைகளின் பாற் உலகம் தழுவிய ஈர்ப்பும், எழுச்சியும் இரண்டாம் உலகப் போரின் அழிவிற்கு பிந்தைய காலக்கட்டங்களில் தான் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்வதற்கான போராட்டம் என்பது மனித இனத்தின் தலையாய இயல்பு. உயிரோடு வாழ்ந்திருத்தல் என்கிற ஒரே ஒரு காரணிக்காக மனித இனம் எத்தகைய துன்பங்களையும் ,இழிவுகளையும் தாங்கிக் கொள்கிறது??
அப்படி..உயிர் வாழ்தலின் பொருட்டு மனித இனம் படும் பாடுகளைதான் Schindler’s List (1993) என்ற புகழ்ப்பெற்ற உலகத்திரைப்படம் பேசுகிறது.. இன அழிப்பிற்கு உள்ளான இன்னொரு இனமான தமிழினத்தை சேர்ந்தவர்கள் என்ற முறைமையில் தமிழர்கள் தேடிப்பிடித்து இத்திரைப்படத்தை காண வேண்டிய அவசியம் இருக்கிறது.
இத்திரைப்படத்தின் பல காட்சிகள் ஈழப்பெருநிலத்தின் வன்னி வதை முகாம்களையும் ,முள்ளிவாய்க்கால் போர்க்கள காட்சிகளையும் நினைவூட்டுகின்றன.
புகழ்ப்பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆஸ்திரேலியாவின் எழுத்தாளுமை தாமஸ் கென்னலி 1982 ஆம் வருடத்தில் எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler’s Ark ] என்ற நாவலை தழுவி இயக்கிய Schindler’s List என்கிற இத்திரைப்படம் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரால் இன அழிவிற்கு உள்ளாகிற யூன இனம் படுகிற பாடுகளை அணுஅணுவாய் சித்தரித்து இருக்கிறது. 1939 ஆம் வருடம் போலந்து இரண்டாம் உலகப்போரில் தொல்வியுற்ற தருணத்தில் இருந்து 1945 ஆம் ஆண்டு செக்கஸ்குலோவியா நாட்டினை நாஜிப்படைகளின் வசமிருந்து சோவியத் படைகள் மீட்கும் வரையிலான 6 வருட வாழ்க்கையினை ஜெர்மானிய வதை முகாம்களில் யூத இனம் படுகிற துயர் வழியே காவியமாய் படைக்கிறது. தனது வயதான தாய் தந்தையரை உயிர்கொல்லி முகாமான ஆஸ்ட்விச் வதைமுகாமில் இருந்து மீட்டுத்தரும் ஆஸ்கர் ஷிண்டலரின் அலுவலகத்தை நன்றிப் பெருக்கோடு கண்ணீர் மல்க பார்க்கும் ஒரு இளம் பெண், குழந்தைகள் நாஜிப்படைகளிடம் சிக்கிக் கொள்ளாமல் ஒளிந்துக்கொள்ளும் காட்சிகள், சிவப்பு நிறந்தில் காட்டப்படும் சிறுமி ஒருத்தி தனியே அந்த கொலைக்களத்தில் நடந்து செல்வது போன்ற காட்சி என இத்திரைப்படம் முழுக்க காட்சிகளால் நிரம்பிய உணர்ச்சிக் காவியமாக விளங்குகிறது. தொடக்கத்தின் ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற ஜெர்மானிய நாஜிக்கட்சியை பிரதான கதாபத்திரம் சுயநலமாக, சம்பாதிக்க யூதர்களின் உழைப்பினை சுரண்ட வந்தாலும், அங்கே நடக்கிற கொடுமைகளை ஒரு மலை உச்சியின் மேல் இருந்து மனம் மாறுவது திருப்புமுனை. நிர்கதியான குழந்தைகள், உணர்வும், உடலும் மரத்துப்போன முகங்கள், இறுதியில் அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் இழக்கமுடியாமல் வாழ்வதற்கான போராட்டத்தில் தன்னிலை மறங்கும் மனிதர்கள் என பல்வேறு பட்ட கதாபாத்திரங்கள் நம் ஈழ மண்ணை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள்.
ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற நாஜிக் கட்சி சின்னத்தை பெருமையோடு தனது கோட்டில் அணிந்திருக்கிற ஜெர்மானியர் தொழில் வளர்ச்சி, ஊதியம் தர தேவையற்ற யூத அடிமைகளின் உழைப்பு ஆகியவற்றை முன் வைத்து போர்கோட்சே என்று அழைக்கப்பட்ட யூத முகாமிற்கு வந்து சேர்கிறார். பெரும் செல்வந்தரான அவர் தனது பணபலத்தைமுன் நிறுத்தி அங்கே இருக்கும் அதிகாரிகளிடம் பலவிதமான முறையில் சிகரெட்டுகள்,சாக்லெட்டுகள்,வி
இத்திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவரும் ஒரு யூதரே. இத்திரைப்படத்தை இயக்க அவர் ஏதும் ஊதியம் வாங்கவில்லை என்கிறார்கள். யூதப்படுகொலைகள் குறித்து நிறைய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நிறைய காணொளிக் காட்சிகள் இணைய வெளிகளில் காணக்கிடைக்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் யூத இனத்தை சேர்ந்தவர்களின் பங்கு மிகுதியாக இருக்கிறது. யூத இன அரசியல், அதன் பரவலாக்கம், இஸ்ரேலிய அரசு உருவாக்கம் ஆகியவற்றின் மீது நமக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. இன்றளவும் பாலஸ்தீன பூர்வக்குடிகள் சிந்துகிற உதிரத்தில் இஸ்ரேலின் கைரேகை படிந்துள்ளது. ஆனால் தன்னினம் அடைந்த துயரை ஒரு காயமாக ஆன்மாவில் தேக்கி வைத்து, அக்காயத்தையே மூலதனமாகக் கொண்டு தங்களுக்கான ஒரு நாட்டை உருவாக்கியதில் யூத இனம் வெற்றியடைந்து இருப்பது, இன அழிவிற்கு உள்ளான தமிழ்த்தேசிய இனம் போன்ற இனங்களுக்கு பாடமாக இருக்கிறது.
சக மனிதனை நேசிக்கும் உள்ளம் இறைவனுடையது என்பார்கள். அத்தகைய இறைவனாக Schindler என்ற ஜெர்மானியர் பல யூதர்களின் உயிரை காக்க அனைத்தையும் இழக்க துணிகிறார். திரைப்பட முடிவில் தன்னிடம் இருக்கிற தங்க பொத்தானை காட்டி ..இதனையும் விற்றிருந்தால் இன்னும் 2 யூதர்களை காப்பாற்றி இருப்பேனே என கலங்கித்துடிக்கும் போது…மனித குணத்தில் சக மனிதனை காரணமில்லாமல் நேசிக்கும் மனித நேயமே மகத்தானது என்கிற உண்மையை நாம் நமக்குள் உணர தொடங்குகிறோம். துளித்துளியாய் கசியும் தேன் துளி போல..நமக்குள்ளாக சக மனிதன் மீது,மனித இனத்தின் மீது நேசிப்பை சுரக்க வைப்பதுதான் இந்த உலகத்திரைப்படம் நமக்குள்ளாக நிகழ்த்தும் வித்தை.
உலகம் அழகானதுதான். நாம் தான் உலகத்தை நரகமாக்கி வைத்திருக்கிறோம்.
உயிர் வாழுகிற விலங்கினத்தில் மிகப்பெரிய அபாயகரமான விலங்காக மாறி அனைத்தையும் வேட்டையாடி புசிக்கிற மனிதன்..தனக்குள் இருக்கிற நேச ஊற்றை தோண்டிப்பார்க்க…அவசியம் இத்திரைப்படத்தை காணவேண்டும்.
ஆஸ்கர் ஷிண்டலர் யூத மக்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அன்று ஜெருசலம் அருகே அவர் நட்ட மரமொன்று இன்றளவும் இனம் ,மொழி,சாதி, பிரிவுகள் கடந்த உலகம் தழுவிய மனித நேயத்திற்கு சாட்சியாக விளங்குகிறது.
மனித அவஸ்தைகளை தாண்டி உலகில் வலிமைமிக்க துயர் எதுவும் இல்லை.அத்துயரை தீர்க்க முனையும் ஒரு கனிவு மிக்க இதயத்தை விட இறைவன் எங்கும் இல்லை.