8f34a6a2d9e9878404f13400d0c4d05a
அன்றைய நாட்கள் நிலாக்கால பொழுதுகளால் நிரம்பி வழிந்த கனவு நாட்கள். பதின் வயதிற்கே உரிய அச்சமின்மையும், பூக்களின் இதழ்களைக் கூட திறந்து பார்க்கும் ஆர்வமும், ஏதோ சொல்ல முடியாத நாணமும் ஆடைகளாய் உள்ளத்தில் போர்த்தியிருக்க.. உடலில் அணிந்திருக்கும் சட்டையை ஒழுங்காக அணியத்தெரியாத அல்லது அணிய கூடாது என்ற வைராக்கியத்துடன் ( ?) திரிந்த நாட்கள்.
 
எங்கள் ஊர் மன்னார்குடி. பெரிய ஊராகவும், சிறிய ஊராகவும் அறிமுகப்படுத்த முடியாத நடுத்தரமான அழகான ஊர். இன்றைய தினம் அது வேறு பெயர் வாங்கி இருக்கிறது என்பது வேறு விஷயம். அகலமான தெருக்கள். பெரிய வற்றாத தெப்பக்குளம். கூட்டம் இல்லாத பெரிய கோவில் . மக்கள் தொகை சற்றுக் குறைவான நடமாட்டம் என எங்கள் ஊரைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள எனக்கெல்லாம் ஒரு லட்சம் காரணங்கள் உண்டு. இந்த லட்சக் காரணங்களுக்கு மேல் லட்சத்து ஒரு காரணமும் எங்களிடம் இருந்தது.
 
பதின் வயதுகளில் நண்பர்கள் புடை சூழ சைக்கிளில் ஊரைச் சுற்றி சுற்றி தார் சாலையை தேய்க்கும் பணியை நாங்கள் முழு நேரப் பணியாக செய்துக் கொண்டிருந்தோம். நான் ,சிராஜ்தீன்,சிவராஜ், ஜோஸ்வா,கணபதி,மாரிமுத்து, சாம் சதீஸ்,சாலமன், என்று எங்களுடைய குழாமிற்கு மிகவும் பிடித்த நாட்களில் மிகவும் பிடித்த நாள் கார்த்திகை.
 
மண்ணை நனைய வைத்து செழிக்க வைக்கும் குளிரான மாதத்தில்.. ஒவ்வொரு இல்லமும் புத்தெழில் கொள்ளும் நாள் தான் கார்த்திகை திருநாள். மினுக்கும் சுடர்களோடு தீபமேற்ற சற்றே வேகமான நடையுடனும், நாணமும்,பூரிப்பும் பூசிக் கொள்ளும் முகத்தோடு,பட்டு பாவாடை சலசலக்க, வெள்ளிக் கொலுசொலிகளுடன் ,முணுமுணுப்பு அளவினை தாண்டாத மென்சிரிப்பு உரையாடல்களுடன்.. வலம் வருகிற தேவதைகளால் வீதிகள் திருவிழாக் கோலம் கொள்ளுகிற நாள்.
 
இளையராஜாவின் படைப்பூக்க நாட்களின் உச்சமும், ஏ.ஆர்.ரகுமானின் புதிய இசை பிறப்பும் ஒருங்கே இணைந்து எங்களது நாட்களை கனாக்காலமாக ஆக்கி வைத்து இருந்தன.
 
கனவு மினுக்கும் விழிகளோடு ஊரைச்சுற்றி வரும் எங்களுக்கு ஒவ்வொரு தெருவிலும் நண்பர்களும் உண்டு. எதிரிகளும் உண்டு. எதிரிகள் கொஞ்சக் காலத்தில் நண்பர்களாக, நண்பர்கள் எதிரிகள் ஆக எது நட்பு, எது பகை என எதுவும் வகை தொகை புரியாத வசந்த காலம் அது. அக்காலத்தில் தான் ..
 
அந்த கார்த்திகை நாளில்.. ஊரை சுற்றி விட்டு சற்றே தாமதமாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.
சைக்கிளை நிறுத்தி விட்டு எங்கள் வீட்டு வாசலுக்கு வந்த போது ஒரே ஒரு தீபம் அணையாமல் எரிந்த வண்ணம் இருந்தது.அதன் அருகே ஒரு தேவதை ஒன்று சதா எண்ணை ஊற்றிக் கொண்டே இருந்ததை கவனித்தவாறே..சற்றே புன்னகையுடன் சற்று நகர்ந்து வீட்டினுள் நுழைய முயற்சித்தேன்.
 
ஏய்..நில்லு..
 
என்ன..
 
எங்க சுத்திட்டு வர்ற…
 
இல்ல..பிரண்ட்ஸோட…
 
ஏன் உன்னைப் போலவே உன் பிரண்ட்ஸ்க்கும் வீடு இல்லையா…இப்படி சுத்திட்டு வரீற்ங்க
 
இதையெல்லாம் கேட்க நீ யார் என்ற கேள்வி தொண்டை வரைக்கும் வந்து அணைந்துப் போனது.கேட்டு விடலாம் தான். ஆனால் அதற்கும் நான் தான் பதில் சொல்லவேண்டும் என்பதுதான் அவளை நோக்கிய கேள்விகளுக்கெல்லாம் அவள் எனக்களித்த பதில்.
 
அந்த கேள்விக்களை எல்லாம் எதிர்க்கொள்ளலில் ஒரு பரவசம் இருக்கத்தான் செய்தது. அது ஒரு மாதிரியான கட்டளைக் குரல்.நான் சொல்வதைத்தான் நீ செய்ய வேண்டும் என்பது போன்றதான.. குரல்..
 
வீட்டினுள் இருந்து என் அம்மா வெளியே வந்தார்கள். ஏண்டா.. நாளும் கிழமையுமா வீட்ல தங்குறது இல்லையா…எங்கேடா போன..
 
இல்ல பிரண்ட்ஸோட..
 
ஏன் உன்னைப் போலவே உன் பிரண்ட்ஸ்க்கும் வீடு இல்லையா…இப்படி சுத்திட்டு வரீற்ங்க
 
ஒரே கேள்வி. இருவரிடமிருந்து.
 
சட்டென புன்னகையுடன் திரும்பிப் பார்த்தேன். அவள் போய் இருந்தாள்.
 
பின்னொரு நாளில் தான் நினைத்துக் கொண்டேன். நேசிக்கும் பெண்களில் எல்லாம் அம்மாவை தேடுவதைதான் காதல் என அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ….
 
 
-மணி செந்தில்