jayalalithaa_hero

 

 

‘மக்களால் நான்! மக்களுக்காகவே நான்’ என்று முழங்கிக்கொண்டிருந்த அந்த முழக்கம் இன்று முடங்கியிருக்கிறது. அண்ணா நாமம் வாழ்க,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க என ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் இன்று அடங்கி இருக்கிறது. 75 நாட்களாக மருத்துவமனையில் போராடிப் பார்த்த ஜெயலலிதா இறுதியில் இதய செயலிழப்பால் அடங்கிப் போனார்.

 

சற்றேறக்குறைய 30 வருடங்களுக்கு மேலான ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் உள்ளடக்கிய பெரும்புதிர்.சகலவிதமான கணக்குகளையும் மிஞ்சிப்பார்த்த காலதேவனின் பெருங்கணக்கு.

 

ஒரு சாதாரணத் திரைப்பட நடிகையாக இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ‘வெண்ணிற ஆடை (1965)’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கணத்தில் தனது வாழ்க்கை இவ்வாறு பயணப்படப் போகிறது என்று ஜெயலலிதாவே உணர்ந்திருக்க மாட்டார்.

அம்மா சந்தியாவின் பிடிவாதத்தால் திரைத்துறைக்கு நடிக்க வந்த ஜெயலலிதா..தன் தாயார் மறைவிற்கு பின்னர் நாட்டை ஆள தயாரானது சாதாரண கதை அல்ல. என்னளவில் இது எம்ஜிஆரால் நிகழ்ந்தது என்று ஒற்றை வரியால் கடக்க முடியாதது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை.

 

‘ஆயிரத்தில் ஒருவன்’ தொடங்கி ‘பட்டிக்காட்டு பொன்னையா’ வரையிலான 28 திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்.உடன் இணைந்து நடித்தபோது அவரது அரசியல் விருப்பங்கள் ஜெயலலிதாவின் ஆழ்மனதில்  தாக்கத்தினை ஏற்படுத்தியது என்றாலும், ஒரு ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பது ஜெயலலிதாவின் உளவியல் விருப்பமாகத் திகழ்ந்தது. ஒரு மாபெரும் கனவு நாயகியாகத் திரையில் ஜொலித்த நட்சத்திரம், அரசியலில் ஒரு ஆக்ரோஷப் பிம்பமாக வெளிப்பட்டது  ஆச்சர்யமான நிகழ்வுதான். பொதுவாக அரசியல் களத்தில் பெண்களின் பங்கு மிக மிகக் குறைவானதே! அதனையும் மீறி அரசியல் களத்தில் நுழைகிற பெண்கள் ஏதோ ஒரு ஆணைச் சார்ந்த பிம்பமாக உருவானார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறு. ஜெயலலிதாவுக்கு முன்னதான அரசியல் பெண் தலைவர்களாக விளங்கிய இந்திரா காந்தி, பெனாசீர் பூட்டோ, சிறீமாவோ பண்டாரநாயகா, சந்திரிகா குமாரதுங்கா போன்ற பல தலைவர்கள் தங்கள் குடும்பத்தில் நிலவிய அரசியல் உணர்வின் காரணமாகவே தலைவர்களாக வெளிப்பட்டார்கள். ஆனால், ஜெயலலிதாவை இந்தப் பட்டியலில் இணைக்க முடியாது. அவருக்கு முன்னதாக அரசியல் ஆர்வமுடைய அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லை.  திரைத்துறையில் ஜொலித்தாலும், அரசியலில் மின்னாத நட்சத்திரங்கள் ஜெயலலிதாவிற்கு முன்னரும் பின்னரும் உண்டு. எம்.ஜி.ஆருடன் இருந்த அவரது உறவு அவருக்கு அதுவரை தொடர்பில்லாத அரசியல் கள நுழைவிற்கு அடிப்படையாக விளங்கியது. உலக இலக்கியங்களை, நல்ல புத்தகங்களை தேடி வாசிக்கும் வாசிப்பாளரான ஜெயலலிதா வாசிப்பு பழக்கம் என்றால் கிலோ என்னவிலை என கேட்கும் திரை நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு ஆச்சர்யம்.1981 –ல் அதிமுகவிற்கு கொள்கைப் பரப்பு செயலாளராக பதவியேற்ற ஜெயலலிதா தொடக்கம் முதலாகவே அவரது கட்சியிலேயே கடும் எதிர்ப்புகளை சந்தித்தார்.

 

1987ல் நிகழ்ந்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுக முடங்கிப் போன நிலையில் இரண்டு அணிகளாகப் பிளவுற்று, அதிமுகவின் இருபெரும் துருவங்களாக ஜானகியும், ஜெயலலிதாவும் திகழ்ந்தார்கள். அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ‘இரட்டைப்புறா’ சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி தலைமையிலான அணி படுதோல்வியைச் சந்திக்கவே, அத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசானார். பிறகு, இரண்டாகப் பிளந்திருந்த அதிமுக ஒன்றானது; முடங்கியிருந்த ‘இரட்டை இலை’ ஜெயலலிதா வசமானது; ஜெயலலிதா நிரந்தரப்(!) பொதுச்செயலாளராக ஆனது என்பதெல்லாம் வரலாற்றின் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தது.

கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சரானார். ஜெயலலிதாவை ஒரு புதிய தலைமையாக ஏற்று வாக்களித்த அன்றைய தமிழக மக்களுக்கு அது மிகப்பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. துதிபாடும் ஆரசியல், எதேச்சதிகாரத்தன்மை, கட்டற்ற,ஊழல் மலிந்த ஆட்சிமுறை, நிர்வாகக் குளறுபடிகள், வளர்ப்புமகன் திருமணம் என்றெல்லாம் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை ஜெயலலிதா ஏற்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய நிர்வாகச்சீர்கேட்டினை அடைந்தது.1991-96 இடையிலான ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு மீறு ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அதற்கான விலையை அடுத்துவந்த சட்டமன்றத்தேர்தலில்(1996) பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா  அடைந்த தோல்வியின் மூலம் பெற்றார்..புதிதாக மூப்பனார் தலைமையில் தோன்றிய ‘தமிழ் மாநிலக் காங்கிரஸ்’ திமுகவுடன் கூட்டணியமைக்க, இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவு குரல்கொடுக்க தமிழகத்தின் அரசியல் நிலைமை தலைகீழாய் மாறிப்போனது. ‘இனி தமிழ்நாட்டை ஜெயலலிதா ஆண்டால் அந்தக் கடவுளே காப்பாற்ற முடியாது’ என்று அப்போது கூறிய ரஜினிகாந்த் பிறகு, ‘தைரியலட்சுமி’, ‘வீரப்புதல்வி’ என அவரைப் புகழ்ந்தது தனிக்கதை.

 

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மிகவும் விந்தையானது.யாரெல்லாம் ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்தார்களோ, அவர்களே பிற்காலத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடிகளாக மாறுவதும், அவரிடமே சரணாகதி அடைவதுமாக நிகழ்ந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக தமிழக அரசியல் வரலாற்றில் நிகழ்ந்து வந்தன.

அடுத்தாக 2002-ல் இருந்து 2006 வரை ஆட்சியை பிடித்த ஜெயலலிதா சென்ற ஆட்சிகாலத்தில் நிகழ்ந்த சறுக்கல்கள் மூலம் பாடம் கற்றதாக தெரியவில்லை.

 

அந்த ஆட்சிக்காலத்தில் சர்வாதிகாரி, காட்டுத்தர்பார் என்றெல்லாம் ஜெயலலிதாவையும், அவரது ஆட்சிமுறையையும் பொடாச் சட்டத்தின் கீழான தன் கைதின்போது கடுமையாக விமர்சித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோகூட, அடுத்துவந்தத் தேர்தலில் (2006)  ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததும், ‘தன்னையும், ஜெயலலிதாவையும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்’ என கூறியதும் அதன் நீட்சியாக நிகழ்ந்த விசித்திரங்கள்.

 

மதுபானக் கடைகளைத் தெருவுக்கு தெரு திறந்ததோடு, அதனை அரசு நிறுவனமாக்கி, படித்தப் பட்டதாரிகளை சாராயம் விற்கும் ஊழியர்களாக மாற்றியது, எஸ்மா சட்டத்தின் மூலமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, திமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட சாலை பணியாளர்களை டிஸ்மிஸ் செய்தது, முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டது,  ‘எங்கும் அம்மா’, எதிலும் அம்மா’ என அம்மா மயமாக மாற்றியது, அதிகாரத்துஷ்பிரயோகத்தை எதிர்த்த அரசியல் தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையிலான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் ஜெயலலிதாவின் ஆட்சிமுறை சிக்கித்தவித்தது. கடந்த 2011ல் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் அணுகுமுறையில் கொஞ்சம் மாறுதல் தெரியத் தொடங்கியது. அத்தேர்தலில் தமிழுணர்வாளர்கள் ஜெயலலிதாவை ஆதரித்தது அவருடைய சென்ற ஆட்சிக்காலத்து நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வைத்தது. ஆனால் 91-96 ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக  2014-ல் தனி நீதிமனற நீதிபதி குமாரசாமி அளித்த  தீர்ப்பு மீண்டும் ஜெயலலிதாவை சிறைக்குள் அடைத்தது. பிறகு அந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்து நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின் மூலம் விடுதலையானது தனிக்கதை. மீண்டும் 2016-ல் பதவியை பிடித்த ஜெயலலிதா திமுக என்கிற அரசியல் கட்சியின் வரலாற்றில் பெறாத தோல்விக் காட்சிகளை தொடர்ச்சியாக வழங்கி அதிர்ச்சி அளித்தார்.  ஏறக்குறைய முழுமையாக 3 முறையும்,அடுத்தடுத்து ஐந்து முறையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஜெயலலிதா தனது இறுதிக்காலக்கட்டத்தில் ஒருசில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தது ஆச்சர்யம் அளிக்கும் செய்தி. ஈழ இனப்படுகொலைக்கு எதிரானத் தீர்மானம், ராஜீவ் காந்தி கொலையில் சிக்குண்ட ஏழு அப்பாவித்தமிழர்களின் விடுதலையில் காட்டிய தீவிரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காட்டிய உறுதி, கச்சத்தீவை மீட்கக்கோரி நடத்திய சட்டப்போராட்டம், மீத்தேன் எரிகாற்றை எடுப்பதற்குக் காட்டிய எதிர்ப்பு, கெயில் குழாய் பதிப்பை அனுமதியாதது, தமிழகத்தில் இலங்கை இராணுவத்தில் பயிற்சியளிக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தது போன்ற நடவடிக்கைகளால் அனைத்து தரப்பினராலும் வரவேற்பைப் பெற்றது.அதேநேரத்தில், கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் சென்னை மக்களை மீட்கத் தீவிரம் காட்டாதது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, ‘வாக்காளப்பெருமக்களே’ என விளித்தது, நிவாரணப் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற அபத்தக் காட்சிகளும் ஜெயலலிதாவின் இறுதிக்காலக்கட்டத்தில் நடந்தது ‘பழைய’ஜெயலலிதாவை நினைவூட்டிச் சென்றது. உண்மையில், தமிழ்நாட்டு அரசியலானது கருணாநிதி, ஜெயலலிதா என இருவருக்கும் இடையேயான காழ்ப்புணர்ச்சிக்களமாக மாறியதில் தமிழக மக்கள் திண்டாடித்தான் போனார்கள். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு மேலான கருணாநிதி, ஜெயலலிதா என இரும்பெரும் தலைவர்களுக்கு அதிகாரத்தை மாற்றி மாற்றி அளித்து பரிசோதித்து பார்த்திருக்கிறார்கள். இதில் நகைச்சுவை என்னவென்றால், அந்தப் பரிசோதனையில் சிக்கி மாண்ட எலியாகவே தமிழக மக்கள் இருந்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்னமும், உதய சூரியன் சின்னமும் ஒருபோதும் தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை. இருந்தும், தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல தமிழக மக்கள் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்களித்து பொன்னான 50 ஆண்டுகளைத் தொலைத்தார்கள். ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்தாலும், ஜெயலலிதா என்ற தனிநபாரின் மரணம் ஒரு பெரும் சோக நிகழ்வு. பெண்ணடிமைச் சமூகத்தில் தோன்றி, எவ்விதமானப் பின்புலமில்லாது சாதியப்பலம், குடும்பப்பலம் போன்ற எந்த ஆதரவுமில்லாது தனித்துவமாக முளைத்து வளர்ந்து கிளைப்பரப்பிய ஜெயலலிதா தமிழக அரசியலில் மறக்க முடியாதவர். நெடுங்காலமாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு அனைத்துத்துறைகளிலும் வீழ்த்தப்பட்டிருக்கிற தமிழக மக்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிரான வெறுப்புணர்வு வடிவமாக ஜெயலலிதாவைக் கண்டு ஆதரித்து வாக்களித்து மகிழ்ந்தார்கள்.  பாம்பும், ஏணியும் பின்னிப் பிணைந்திருக்கிற பரமப்பதம் போன்ற ஆட்சிமுறையை நிகழ்த்திக் காட்டிய ஜெயலலிதா இன்று தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு காற்றோடு காற்றாகக் கரைந்திருக்கிறார்.

 

தனது ஆரம்பக்காலப் பேட்டியொன்றில், ‘என் தாயார் சந்தியா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன். அப்படி  வராதிருந்தால், சமூகசேவகியாக மாறியிருப்பேன்’என ஜெயலலிதா கூறியுள்ளதை இக்கணத்தில் நாம் நினைவு கூறலாம். ஜெயலலிதாவின் ஆழ்மனதில் தமிழக மக்களுக்கு நன்மைப் பயக்கக்கூடிய ஒரு ஆட்சிமுறையைத் தர வேண்டும் என்ற எண்ணம்கூட இருந்திருக்கக் கூடும். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் ஆட்சிமுறை ஒரு நிகழ மறுத்தக் கனவு.