mgr-jayalalitha

இன்னும் எனக்கு நினைவிருக்கிறது..

கடும் கூட்டத்திற்கிடையே அந்தப் பெண் அந்த வாகனத்தில் இருந்து உதைத்து கீழே தள்ளப்பட்டார். கண்ணீரும், ஆவேசமும், உற்ற துணையை இழந்த துயரமும், அக்கணத்தில் பட்ட அவமானமும்.. அந்த நொடியை அப்பெண்ணின் ஆழ் மனதிற்குள் உறைய செய்திருக்கக் கூடும்.

இன்று போல் அந் நாட்கள் இல்லை. பல்வேறு செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளால் மின்னும் வரவேற்பு அறைகள் கொண்ட இல்லங்கள் அன்று இல்லை. ஒரே ஒரு தொலைக்காட்சி. தூர்தர்சன் மட்டுமே. கொடைக்கானலில் இருந்து உயரமான ஆண்டனா மூலம் பெறப்படுகிற அலைவரிசை கொண்டு இயங்குகிற ஏதோ ஒரு தொலைக்காட்சி. தெருவிற்கே ஒரு வீட்டில் மட்டுமே. சற்றே கருப்பு வெள்ளையில் தடுமாறும் சிக்னல்களோடு தெரிந்த டிசம்பர் 24 1987-ல் இறந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது நடந்த அந்நிகழ்வினை 80 களில் பால்யம் கொண்ட யாராலும் மறக்க முடியாது.

அன்று நடுத்தரப் பெண்ணாக இருந்த ஜெயலலிதாவை எம்ஜிஆரின் உடல் இருந்த வாகனத்தில் இருந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகி அவர்களின் உறவினர் தீபன் (பெயர்..?) உதைத்து கீழே தள்ளிய காட்சியை கண்டவர்கள் யாரும் அதன் பின்னால் நிகழ இருப்பவைகளை அன்றைய தினம் ஊகித்து இருக்க முடியாது.

ஒரு வித்தியாசமான உறவின் அலைவரிசை விகிதத்திற்குள் எம்ஜிஆரும் ,ஜெயலலிதாவும் அன்றைய நாட்களில் இருந்தார்கள்.அதை இருவர் திரைப்படத்தில் மணிரத்னம் மிக நுட்பமாக திரைமொழி படுத்தி இருப்பார். அக்காலப் பத்திரிக்கைகளில் ஜெ -க்கும், எம் ஜி ஆருக்கும் இடையே பகை, எம்ஜிஆரை கவிழ்க்க ஜெ சதி என்பதான செய்திகள் தொடர்ச்சியாக வந்துக் கொண்டே இருக்கும்.அதிமுகவில் அன்று நிலவிய அதிகார அரசியல் போட்டிகள் காரணமாக திட்டமிட்டு செய்யப்பட்ட லாபி பத்திரிக்கை செய்திகள் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருந்தன.

இவ்வாறான செய்திகள் வந்த போதும் கூட ஜெயலலிதா அதிமுகவின் வெளிச்சப்புள்ளியாகவே அன்று திகழ்ந்தார். ஜெயலலிதா இருக்கும் மேடையில் எம்ஜிஆர் சற்றே புன்னகை கலந்த பெருமிதத்துடனே காணப்பட்டார். குறிப்பாக எம்ஜிஆருக்கு செங்கோல் கொடுக்கும் அந்த புகைப்படம். இதழோரம் கசியும் மெல்லிய புன்னகையோடு எம்ஜிஆர் இருக்க..மலர்ந்த முகத்தோடு ஜெ காட்சியளிக்கும் அப்புகைப்படம் மிகப் பிரபலம்.

எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் எம்ஜிஆர் மனைவி ஜானகியை முன் மொழிந்தார்கள். ஆனால் மக்களோ எம்ஜிஆரின் வாரிசாக ஜெயலலிதாவை வழிமொழிந்தார்கள்.

ஏதோ ஒன்று ஜெயலலிதாவை எம்ஜிஆரோடு பிணைத்திருந்தது. யாருக்கு புரிந்ததோ,இல்லையோ அந்த அலைவரிசையை, வேதியியலை மக்கள் புரிந்து இருந்தார்கள்.அதனால் தான் மக்கள் எம்ஜிஆரின் மறு வடிவமாகவே ஜெ .வை கண்டார்கள். முட்பாதையை தன் அளப்பரிய மனத்திடத்தால் வென்ற ஜெவை ..ஒரு காலக்கட்டத்தில் எம்ஜிஆராகவே பார்க்க தொடங்கினர் மக்கள்.
———————————————————–

போயஸ் தோட்டத்தில் இருந்து தலைமைச்செயலகம் செல்லும் வழியில் இருக்கும் எம்ஜிஆர் சமாதியை பல பொழுதுகளில் ஜெ.கடந்திருப்பார்.மின்னும் விழிகளோடு அந்த இடத்தை கடக்கும் போது அவர் அடைந்திருக்கும் மனப் போராட்டங்களை யார் அறிவார்..?

எந்த டிசம்பர் மாதத்தில் …வாகனத்தை விட்டு உதைத்து கீழே தள்ளப்பட்டரோ, அதே டிசம்பர் மாதத்தில் அதேப் போன்ற வாகனமொன்றில் சகலவிதமான அரசு மரியாதைகளோடு எம்ஜிஆருக்கு அருகிலேயே நிரந்தமாக இருக்க ஜெ.பயணப்பட்டு விட்டார். எம்ஜிஆர் மனைவியான ஜானகிக்கு கூட கிடைக்காத அந்த நிரந்தர இடம்..ஜெ-க்கு.

எம்ஜிஆர்-ஜெயலலிதா என்ற அந்த இருவரில்.. இது யாருடைய விருப்பம்..??

…………………………………..

அவரை உதைத்து தள்ளிய காலம் ..அவரை போற்றி,புகழ்ந்து ,கண்ணீர் விட்டு கதறி முடித்திருக்கிறது.

பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகளை, திடுக்கிடும் திருப்பங்களை , விதியின் சதிராட்டங்களை, சோதனைகளை தன் வாழ்வில் கண்டு களைப்புற்ற அம்மையார் ஜெயலலிதா ..சதா கடலலைகள் போல கொந்தளித்துக் கொண்டிருந்த தன் வாழ்வினை அமைதிப் படுத்திக் கொண்டு விட்டார்.

ஒரு பெளர்ணமி இரவில் ..மெரீனா கடற்கரைக்கு செல்லும் யாரேனும் பார்க்கக்கூடும்.

தூரத்து இருட்டில் யாரோ இருவர் ..கடலலைகள் கால்களில் உரச.. மெல்லிய சொற்களோடு உரையாடிக் கொண்டே நடந்து செல்வதை .

இதயம் பேசும் மொழிகள் புரிந்தவர்களே…

அவர்களை மெல்லிய புன்சிரிப்போடு கடந்து செல்லுங்கள்.

தொந்தரவு செய்யாதீர்கள்.

——————————

மொழிப்பெயர்க்க முடியா
நினைவின் சொற்கள்
வானம் முழுக்க
வசீகர
நட்சத்திரங்களாக..

கண்கொண்டு
அதை வாசிக்க
முடிபவர்
பாக்கியவான்கள்.

ஏனெனில் இந்த
மண்ணுலகமும்..
ஏதோ ஒரு கனிவு
சுரக்கும் இதயமும்
அவர்களுக்கு
இங்கேயே சாத்தியம்.