எப்போதும் என் இரவுகளில் தனிமை தகர வாளியின் மீது சொட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகள் போல அமைதியற்றது. விரிந்த வானில் தனித்து பறக்கும் ஒரு பறவை போல ஆழ் தனிமையை என் இரவுகள் போற்றுகின்றன. கண் மூடி அமைதிக் கொண்டிருக்கிற இமைகளுக்குள் அமர்ந்து தனிமை வயலின் வாசிப்பதை என் இரவுகள் உணர்ந்திருக்கின்றன. ஆதி வனத்தின் விடியற்காலைப் பொழுதைப் போல களங்கமற்ற தனிமையைத் தான் மரணமும், பிறப்பும் சதா நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.
ஒரு சிறு புன்னகை, இடது கையை இறுக்கி பற்றி தோளில் ஆழப் புதையும் முகம், தீரா அன்பினால் வெம்மைக் கொண்டிருக்கும் அந்த விழிகள் என தனிமைத் தேநீரை ருசிக்க விடாமல் துரத்தினாலும், குளிர்காலப் போர்வைப் போல தனிமையை இறுக்கப் போர்த்திக்கொள்ளவே என் இரவுகள் விரும்புகின்றன.
அப்படி ஒரு பனிக்கால தனிமை இரவில் தான் நான் இத்திரைப்படத்தை காண நேர்ந்தது. என் விழிகளுக்கு முன்னால் விரிந்த காட்சிகளால் நான் உள்ளிழுக்கப்பட்ட போது ..நானும் அத்திரைப்படத்தின் ஒரு அங்கமாகி இருந்ததை உணர்ந்தேன். ஒரு படைப்பில் பார்வையாளனும் ஒரு அங்கமாகி துடிப்பதைதான் படைப்பூக்கத்தின் உச்சம் சாதிக்க விரும்புகிறது என்று நினைத்தால்…அந்த நினைப்பிற்கு இத்திரைப்படம் நேர்மை செய்திருக்கிறது. ஏனோ மிகுந்த தனிமை உணர்ச்சியையும், விழிகள் முழுக்க கண்ணீரையும் தந்து …கூடவே சிறு புன்னகையும் பரிசளித்துப் போனது இப்படைப்பு.
அந்த அரண்மனை..மின்சாரம் இல்லாத பொழுதுகளில் கைவிளக்கு ஏந்திய காரிகையாய் ஐஸ்வர்யா ராய், தன் வாழ்வின் துயர் முடிய கருணைக்கொலை வேண்டி காத்திருக்கும் ரித்திக், அவருக்காக வாதாடும் அந்த பெண் வழக்கறிஞர், ரித்திக்கின் மருத்துவர், அவருக்கு சேவகம் செய்யும் இரண்டு பெண்கள், அவரின் மாணவனாக வரும் அந்த இளைஞன் என…மிகச்சில பாத்திரங்களைக் கொண்டு வலிமையான திரைப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி வழங்கி இருக்கிறார்..
ஐஸ்வர்யாவைப் பற்றி ரித்திக்கின் வழக்கறிஞர் விவரிக்கும் போது.. அவள் தோழிக்கு மேலானவள், அவள் காதலியை மிஞ்சியவள், சொல்லப்போனால் அவள் மனைவியையும் தாண்டியவள்.. என்று விவரிக்கிற காட்சியாகட்டும், கொடுமைக்கார கணவனால் முடியாத ரித்திக்கின் முன்னால் ஐஸ்வர்யா தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்படும் காட்சியிலும், அவரை பிரிந்து ரணமாகி ரித்திக் துயர்க் கொள்ளும் காட்சியிலும் சொல்லப்படும் உணர்ச்சியலைகளாட்டும், இப்படம் எந்த அலைவரிசையிலும் பொருந்தாமல் தனித்து மிளிர்கிறது.
Guzaarish -ஒரு திரைப்படம் என்றெல்லாம் சுருங்க வைக்க முடியாது. அது ஒரு விவரிக்க முடியா அனுபவம். படம் முழுக்க அரூவ கதாபாத்திரமாய் இடம்பெற்றிருக்கும் தனிமையுணர்ச்சியே இத்திரைப்படத்தின் ஆழமான அழகியல். மரணம் கூட ஒருவகை புன்னகைதான்..அது ஒரு ஆறுதல் தான்..என்பதை விவாதிக்கும் இத்திரைப்படம் தரும் அனுபவம் உண்மையில் அபூர்வமானது.
மரணத்தை மிஞ்சவும் வாழ்தலின் துயர் கொடியது என்பதைதான் வாழும் போதே உணரும் ஒவ்வொருவரும் பெற தகுந்த மாபெரும் அனுபவம்..
…………..