ஆழ் கடலின்
வேரில்
ரகசியமாய்
புதைத்து வைத்திருந்த
முத்தம் ஒன்று
ஈரம் அடர்ந்து
ஒரு நள்ளிரவிற்காக
காத்திருந்தது..
வெம்மைப் படர்ந்த
கனவின் மயக்கத்தினில்
விழிகள் சொக்கி
ஆழ்ந்திருந்த
நேற்றிரவில் தான்
பசும் உதடுச் சாயம்
பூசி கழுத்தை
கவ்வியது
அந்த முத்தம்.
மயிர்க்கால்களில்
அனலை மூட்டும்
தீக்கங்கினை
சுமந்த அந்த
தனித்துவ
முத்தத்தினை
உறக்கம் தொலைத்த
நினைவுகளின் கண்கள்
சரியாகவே அடையாளம்
கண்டன…
மாலை நேர
மழைச்சாரலின் வாசம்
துளிர்த்திருந்த
அந்த உதடுகளை..
ஏற்கனவே அறிந்திருந்த
என் இரவு
சற்றே நட்சத்திரத்தை சிந்தி
சிரித்துக் கொண்டது.
ஈரம் மிகுந்த
பாசி படர்ந்த குளம்
போல
ஆழ்ந்திருந்த அந்த
முத்தத்தின் இதம்
குறித்து..
என் உள்ளங்கால்களை
தழுவி கிடந்த
மலைத்தோட்ட
பனிக்காற்று..
பொறாமையின்
சூல் கொண்டது.
…
கனவிலும் நினைவிலும்
நிறுத்த முடியாத
உலரத் துடிக்கும்
விடியல் பனி போல..
உறக்கம் தொலையும் முன்பே
மங்கும்
அந்த குளிர் முத்தத்தை
அனுபவித்த
அந்த குளிர் காலையில் தான்
கவனித்தேன்..
என் கழுத்தோரம் இரண்டு
நீலப் பற்களின் தடம்..
=======
அறிந்தோர்
சொன்னார்கள்
அது அமிர்தம் என..
புரிந்தோர்
மிரண்டார்கள்
அது நஞ்சு என…
================