அவன் இறந்து
ஒரு ஆண்டு
ஓடி விட்டது
என்றார்கள்..
மற்ற நதி எல்லாம்
மணல் அள்ளி
வறண்டு கிடக்க..
காலநதி மட்டும்
பெருக்கெடுத்த
வேகத்தோடு
வறளாமல் ஓடுகிறது..
அழுத கண்ணீர்த் துளி
காய்வதற்குள் அடுத்த
ஆண்டு வந்து விட்டது..
கால,தூர, தேசங்களை
கடந்து…
அலை நழுவும்
கடலாய்..
பரவிக் கொண்டே
இருக்கிறான்..
பேரன்பின்
ஆதி ஊற்றாய்
செவிகளில்
ஊறிக் கொண்டே
இருக்கிறான்..
அவனது
ஆனந்த யாழ்
இசைந்த வண்ணம்
இருக்கும்..
தமிழ் உள்ள வரை..
அவன் மொழி
பறவையாய்
அலைந்துக் கொண்டே
திரியும்…
இசை வானம்
இருக்கும் வரை..
அவன் மொழிப் பருகி
விழிகள் கசிந்துக்
கொண்டே இருக்கும்
நம்
உயிர் உள்ள வரை..
…….,..
அண்ணா..
உனது சிட்டன்
எழுதுகிறேன்.
தாங்காமல் சிட்டாய்
பறந்து ஓடி விடுவதால்
நீ எனை சிட்டன்
என்றாய்..
நானோ என்னை
உன் பித்தன்
என்றேன்.
அதற்கும் அந்த அளவெடுத்த
சிறு புன்னகை..
வாத்தியார் மகனெல்லாம்
இப்படியே பேசி பேசியே
ஊசிப்போக
வேண்டியதுதான் என்றாய்..
நீ மட்டும்
ஊசிப் போகவில்லை
அண்ணா..
மாறாக மொழியின்
விழியானாய்…
உன் உச்சிக்கிளையின்
மேலே
நானும்
ஒரு மழைத்துளியாய்
உன் மொழியை
தீண்டிக் கிடப்பேன்
அண்ணா…
இறந்தவனுக்கு
தான் அண்ணா
புகழ் வணக்கமெல்லாம்…
தமிழாய் வாழும்
உனக்கு என் முத்தங்கள்
அண்ணா..
நீ எப்போதும் என்னிடத்தில்
என் தோளைத்தட்டி
சற்றே கண்டிப்புடன்
சொன்னதை இந்த வருடம்
உறுதியாய்
செய்வேன்.. அண்ணா..
எனது முதல் கவிதை
தொகுப்பு.
உனக்கே அது…
உன்னால் அது..
கண்கள் முழுக்க
கண்ணீரோடும்..
நீ எனக்கு தந்த
கனவுகளோடும்…