அன்புள்ள பகல்..
அப்பா எழுதுகிறேன். இந்நொடியில் உன்னை நெஞ்சார்ந்து அணைத்துக்கொள்கிறேன். எப்போதும் மினுமினுக்கும் உன் கண்களில் தான் என்னை தேட வேண்டி இருக்கிறது. எனக்காக நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாய். சகித்துக் கொள்வாய். சில சமயங்களில் என்னையும் கூட..
பல சமயங்களில் எங்கோ அலைந்து விட்டு, கூட்டம் முடித்து விட்டு வீடு திரும்புகையில்.. நீ அயர்ந்து தூங்கி இருப்பாய். வெளிச்சம் பட்டு உன் விழிகள் மெலிதாய் திறந்து பார்க்கும். எனை கண்டதும் சட்டென பூத்து ..அடங்கும் அவ்விழிகள் தான் எவ்வளவு கனிவு மிக்கவை.. ஒவ்வொரு இரவிலும்.. நடுநிசித் தாண்டி நான் படுக்க நுழைகையில்..இயல்பாய் என் கழுத்தை சுற்றி அணைக்கும் உன் பிஞ்சுக் கைகள் தான் எவ்வளவு உயிர்ப்பானவை..
உன்னளவிற்கு எனக்கு நேர்மை செய்வதில் நீ சிறப்பானவன் பகல். இவ்வாழ்வினுடாக நானே அறைந்துக் கொண்ட சிலுவைப் பொழுதுகளில் என்னை தூரத்தில் இருந்து அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாய்.ஒரு கம்பீரமான..உன்னை.. எனக்கு தெரியும் என்பதான அமைதி அது. நீ என்னை கவனிக்கிறாய் என நான் உணர்கிற நொடியில் ஏதோ ஒரு போலி புன்னகையை என் முகத்தில் அணிந்துக்கொண்டு உன்னருகே வரும் போது …எந்த சலனமும் காட்டாமல் என் தோளில் என் ஆறுதலுக்காக சாயும் உனது அன்பினை நினைத்து நான் இந்நொடியில் கலங்குகிறேன். நான் பல சமயங்களில் உன்னை மறந்து..திரிந்து இருக்கிறேன். ஆனால் உறக்கத்தில் கூட அப்பா என்றுதான் நீ முனகுகிறாய் என அம்மா சொல்கிறாள். அதுதான் எனக்கு வலிக்கிறது.
வானத்தைப் போல நீள அகலம் விவரிக்க முடியாத பேரன்புத் தோட்டத்தினை உன் இயல்பிலேயே நீ கொண்டிருக்கிறாய். அதிலிருந்து எப்போதும் பனி படர்ந்த செந்நிற ரோஜாக்களை மட்டுமே நீ பரிசளிப்பாய்..ஆனால் நானோ பாலைவனப் பயணி. வறட்சித் தாகத்தை தவிர என்னிடத்தில் உன்னோடு பகிர என்னதான் உண்டு..??
நீ என்னைப் போல இருக்கிறாய் என அனைவரும் சொல்வது கண்டு நான் அஞ்சுகிறேன் பகல். வேண்டாம். நீ நீயாக இரு. மகிழ்ச்சியின் அலையோடு பொங்கிப்பூரிக்கின்ற பெரு நதியென திகழட்டும் உனது வாழ்வு. விடியலில் தொலைவதற்காக இரவில் மலரும் கனவினை நினைவெனக் கொள்ளும் கானல் காட்சியாளனாய் நீ இல்லாது..அந்தந்த தருணங்களில்.. வாழ் மகனே..
நேர்மையாக இரு. ஏமாளியாக இராதே.. அன்பினை மதி. ஆனால் அன்பினில் தொலையாதே. இரக்கம் கொள். உன்னை விற்று சித்திரம் வாங்காதே. நிறைய படி. பயன்படுத்து. நேசி. ஆனால் உன்னை இழக்காதே. இறுதி வரைக்கும் சரணடையாமல் இரு. தவறான நிலத்தில் விதைக்காதே.தரிசாகி விடும். அனைத்திற்கும் மேலாக உனக்காக வாழ்.
உனக்கு பகலவன் என பெயர் வைத்தவனுக்கு என்றென்றும் மகனாய் இரு.
மொத்தத்தில் நீ என்னைப் போல் இல்லாமல்.. உனக்கென விண்மீன்கள் சுடர் விடும் பாதையை உருவாக்கு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் முடிவிலி முத்தங்களுடன்…
அப்பா
சனவரி 6 – 2018.