crying_baby_by_adelelliethy-d50418n

குழந்தைப் பருவம் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட… பட்டாம்பூச்சிகளின் சிறகு சொருகப்பட்ட..தேனமுது நிரப்பப்பட்ட கனவுகளால் ஆனது என்று பொதுவிதி எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் வாழ்வின் நிலையாமையும், அபத்தமும், நிரம்பிய விசித்திரக் கோடுகள் கலைத்துப் போட்ட ஓவியமாய் பால்யத்தைக் கொண்ட குழந்தைகளும் நம்மிடையே இருக்கிறார்கள் நம்மில் யாரால் உணர முடிகிறது..?

எதனாலும் ஆற்ற இயலா காய வடுக்களை இளம் வயதிலேயே விதி சமைத்த கோரத்தால் பெற்று விட்ட குழந்தைகள் தனித்துவமானவர்கள். பொங்கி வரும் புன்னகை தருணங்களிலும் கண்களில் ததும்பும் காயத்தை மறைக்க முடியாமல் தேம்பி நிற்கும் அவர்களது வாழ்க்கை எப்போதும் மர்மமானது. இயல்பான குழந்தைமைக்கும்… அவர்களுக்கு நேர்ந்து விட்ட வாழ்வியல் முரண்கள் அவர்களுக்கு பரிசளித்திருக்கிற சாபங்களுக்கும் நடுவே அல்லாடுகிற ஊசலாட்டம் அவர்களின் வாழ்வு முழுக்க தொடர்ந்து துரத்தி வரும் நிலையாமையின் வடிவம் கொண்ட வெறி பிடித்த ஓநாய்களுக்கு சமமானது.

சிறு வயதிலேயே எதிர்பாராமல் பெற்றோரை இழந்தவர்கள்… எதன் காரணத்தினாலோ பெற்றோரை இழந்து அனாதையாக்கப் பட்டவர்கள்.. வாழ்வின் ஓட்டத்தில் சுமையாகி கைவிடப்பட்டவர்கள்.. உடனிருந்து உறைகிற நோயின் காரணமாய் பெற்றோரின் நடுவே கதகதப்பாய் உறங்குகிற இரவுகளை தொலைத்தவர்கள் என காயம் பட்ட பால்ய காலத்தை கொண்ட குழந்தைகள் சமூக வெளியில் புறக்கணிக்கப்பட்டவர்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களை எங்கும் எளிதில் அடையாளம் காணலாம்..சற்றே தயக்கத்துடன்..அச்சத்துடன் அவர்களுடன் உறைந்திருக்கிற வித்தியாசமான உடற்மொழி அவர்களை தனித்துக் காட்டும்.

எத்தனையோ அனாதை இல்லங்களில் …சாலை ஓரங்களில் குழந்தைமைக்கான எவ்வித இயல்புமற்று பிறந்து விட்ட காரணத்திலேயே வாழ்ந்தே தீர வேண்டிய நிர்பந்தம் தான் அவர்கள் எதிர் கொள்கிற மாபெரும் துயரம்.ஏதேதோ ஆலயங்களில் புண்ணியத்தை தேடுபவர்கள் இந்த குழந்தைகளோடு ஏதோ ஒரு நாள் செலவிட்டால்….வாழுகின்ற நாளொன்றுக்கு அர்த்தம் ஏற்படும்.

புறக்கணிக்கப்பட்டு …கைவிடப்படும் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் ஆன்மாவில் பெரும் வலியை சுமக்கிறார்கள். அதை யாராலும் போக்க முடியாது. விவாகரத்து வழக்கிற்கென தாயாலோ..தந்தையாலோ அழைத்து வரப்படும் குழந்தைகளின் கண்களை பாருங்கள். வலியை சுமந்து மெளனத்தை சுமக்கும் ஊமை விழிகள் அவை.

எனது பால்யம் சென்னை அடையாறு ஆந்திரமகிள சபா என்று அழைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் கழிந்தது. என்னோடு இருந்த பலர் பெற்றோரை இழந்தவர்கள். மிக நீண்ட வாரண்டாவில் கம்பி வலை அடைக்கப்பட்ட சன்னலோரத்தில் நின்றவாறே எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டே உறைந்து போய் நின்றுகொண்டு இருக்கும் பல சிறுவர்களுக்கு நடுவே நானும் ஒருவனாய் இருந்தக் காலக்கட்டம் அது. எனது நோயின் காரணமாய் நான் பெற்றோரை பிரிந்திருந்தேன். ஆனாலும் மாதத்தின் முதல் வார சனிக்கிழமை அன்று என் அம்மா என்னை பார்க்க வந்து விடுவார். அன்றைய நாளில் பெரும்பாலும் வழிபாட்டு நேரமான காலை 8 மணிக்கு என் அம்மா கும்பகோணத்தில் இருந்து நீண்ட தூரம் பயணித்து வந்து எனக்காக காத்திருப்பார். என் அம்மா என்னை காண வந்திருப்பதை பெரும் பாலும் என்னிடம் புன்னகைப் பொங்க அறிவிப்பது அண்ணன்கள் டேனியலும், கில்பர்ட் ராஜாவும் தான்.

குறிப்பாக அண்ணன் டேனியல். அவருக்கு தாய் தந்தை கிடையாது. விடுதிலேயே வளர்பவர். அப்போது அவர் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

என் அம்மா சனிக்கிழமை வந்து… அன்றைய இரவு என்னுடனேயே தங்கி…மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு திரும்புவார். ஓவ்வொரு முறையும் அம்மா வந்தவுடன் ..என் கூடவே இரும்மா என்று நான் அடம் பிடிப்பதும்..நான் உன் கூடத்தான் இனி இருக்கப் போகிறேன் என அம்மா சொல்வதும் வழக்கமான நிகழ்வுகள். அப்போது டேனியல் அண்ணனும் அம்மா சொல்வதை ஆமோதித்து என்னை தேற்றுவார். ஆனால்..எங்கள் மூவருக்கும் தெரியும்..அது நடக்கப் போவதில்லை என.. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நான் அம்மா என்னுடன் நிரந்தரமாக இருக்கப் போகிறார் என உறுதியாக நம்பி கனவில் திளைப்பேன். சனிக்கிழமை இரவு அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டு அம்மாவின் சேலை வாசத்தை முகர்ந்தவாறே நான் அயர்ந்து நிம்மதியாக தூங்கிய உறக்கத்தை இதுநாள் வரைக்கும் தூங்கியதில்லை.. அந்த இரவுகள் என்றும் மங்காத நட்சத்திரங்களானவை என்பது இன்றளவும் நினைவில் பெருகும் நதியென என்னுள் சலசலத்துக் கொண்டே இருக்கும்.

அம்மா ஊருக்கு திரும்ப வேண்டிய ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து நான் அழத் தொடங்கி விடுவேன். என்னை ஆற்றுப்படுத்த மதிய உணவு முடிந்தவுடன் அம்மா எனக்கு கதை சொல்லத் தொடங்குவார் .. எப்போதும் எனக்கு பிடித்த கதை அது மட்டும் தான். எப்போதும் அதைதான் அம்மா சொல்ல வேண்டும். பறக்கும் குதிரை கதை. வானலோகத்தில் இருந்து பறந்து வரும் வெள்ளைக் குதிரை நிலங்களில் இருக்கிற பயிரை மேய்ந்து விட்டு பறந்து போய் விடுவதையும் …அதை அந்நாட்டின் இளவரசன் கண்டு பிடித்து அடக்கி தன் வயப்படுத்துவதான கதை… பாதி கேட்டுக் கொண்டிருக்கும் போதே நான் உறங்கி விடுவேன். ஏதோ ஒரு நொடியில் திடுக்கிட்டு நான் விழிக்கையில் என்னருகில் படுத்திருந்த அம்மா என் பக்கத்தில் இருக்க மாட்டார். நான் கத்தி கூறியவாறே சன்னலோரம் போய் பார்க்கையில்…தூரமாய் கானல் நீர் போல அம்மா போய்க் கொண்டு இருப்பார்…நான் அம்மா…அம்மா என கத்தி தீர்க்கும் போது டேனியல் அண்ணா தான் என்னை கட்டி அணைத்துக் கொள்வார்.

அவரிடம் இருக்கிற வண்ண வண்ண பென்சீல்களை கொடுத்து என்னை வரையப் சொல்லி என் கவனத்தை மாற்ற முயல்வார். ஒரு கட்டத்தில் நானும் சமாதானமாகி வரைவதில் மும்முரமாவேன். அப்படியே அவரோடு படுத்து உறங்கியும் விடுவேன்.

டேனியல் அண்ணா போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்டு..இரு தோள்களிலும் கட்டை வைத்து நடந்தாலும் கூட..அப்போதே நிறைய வரைவார். பிரார்த்தனை கூட்டங்களில் அவரே பேச்சாளர். கடவுளின் குழந்தைகளான நம்மை கடவுள் என்றும் கைவிட மாட்டார் என உறுதியான குரலில் சொல்லும் போது.. கடவுள் வானிறங்கி வந்து நம் கரங்களை பற்றிருப்பார். அந்த அளவிற்கு உணர்வுகளை சொற்களில் வடிப்பதில் டேனியல் அண்ணா ஒரு தேவதன்.

ஒரு வெள்ளிக்கிழமை மதியம் என்னை டேனியல் அண்ணா தனியே அழைத்துப் போய் தான் சொல்வதை யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறி நாளை உன் அம்மா வருவாங்களா என கேட்டார். கண்டிப்பாக அண்ணா என்ற என்னை .. எனக்கு ஒரு ஆசை டா .. அம்மா மடியில் ஒரு 5 நிமிடம் நான் படுத்துகிட்டா என தயக்கமாக கேட்டார்.

அந்த வயதில் அக்கேள்வியை எதிர்க் கொள்ள என்னால் முடியவில்லை… என் அம்மா..அவங்க மடியில் இவர் ஏன் படுக்கணும் என எனக்கு கோபம். அதெல்லாம் முடியாது…அது என் அம்மா என்று வெடுக்கென்று சொல்லி விட்டு வந்து விட்டேன். திடீரென டேனியல் அண்ணா எனக்கு எதிரியாகிப் போனதாக நான் நினைத்துக் கொண்டேன்

. அன்றைய இரவு உணவின் போது கூட அவரை பார்க்க விரும்பாமல் தவிர்த்தேன்..

மறுநாள் என்னை காண வந்திருந்த அம்மாவிடம் கோபமாய் இதை தெரிவித்தேன். ஏண்டா இப்படி சொன்ன..அவனும் என் மகன் தானே படுத்துட்டு போறான்..பாவம் இல்லையா அவன்., என கேட்ட அம்மாவிடம் அவருக்கு தான் அப்பா அம்மா இல்லையே… அவர் எப்படி உன் மகனாவார் என கேட்ட என்னை அம்மா கோபமாய் பார்த்து விட்டு டேனியல் அண்ணாவை தேடிப் போனார். எங்கு தேடியும் டேனியல் அண்ணா கிடைக்கவில்லை. அம்மா என்னை திட்டியவாறே ஊருக்கு போய் விட்டார்..

அதன் பிறகு இரண்டு நாள் கழித்து டேனியல் அண்ணாவை பார்த்தேன்..அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.. என்னை பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் எதுவும் பேசாமல் அமைதியாக தலைகுனிந்து சென்று கொண்டிருப்பார்.

அதன் பிறகு சில மாதங்களில் என் மருத்துவ சிகிச்சை முடிந்து ஊருக்கு திரும்பும் போது சொல்லி விட்டுப் போக டேனியல் அண்ணாவை தேடிய போது அவர் சிக்கவில்லை. வேண்டுமென்றே என்னை தவிர்த்திருந்தார்.

கால நதியின் இரக்கமற்ற வேகத்தில் ஆண்டுகள் ஆயின… எனக்கும் திருமணம் ஆகி இரண்டு மகன்களை பெற்றெடுத்தேன்.

ஒரு பணி நிமித்தமாக சென்னை போன போது பல ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர மகிள சபா சென்றிருந்தேன். டேனியல் அண்ணா வை பற்றி விசாரித்த போது அவர் இன்னமும் அங்கு இருப்பதாகவும்,அங்கே ஓவிய ஆசிரியராகப் பணி புரிவதாகவும் சொன்னார்கள்.

அவரை பார்க்க போன போது அவர் வகுப்பறையில் ஏதோ வரைந்துக் கொண்டிருந்தார். முடியெல்லாம் நரைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு வயதாகி இருந்தார்.

அண்ணா…என்று அழைத்த என்னை அவரால் சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. நான் தான்னா என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு அவரது கண்கள் ஒளிர்ந்தன. இறுகிக் கட்டிக்கொண்டார். இன்னமும் திருமணம் ஆகாமல் இருந்த அவர் என் தொழில், திருமணம்,என் குழந்தைகள் என அனைத்தையும் கேட்டார்.

இரண்டு பசங்களடா…எப்படி இருக்காங்க…

ஓடியாடி விளையாடுறாங்கண்ணா…அடம் தாங்கல….. என சொன்ன என்னை உற்றுப் பார்த்த அவர் … விடு… நம்மைப் போல இல்லாம நல்லா விளையாடட்டும். கர்த்தரே… பிள்ளைகளுக்கு நன்மை செய்யப்பா என ஜபம் செய்தார்.

பிறகு அவரிடமிருந்து விடைப்பெற்றேன். சில ஓவிய பயிற்சி புத்தகங்களை என் மகன்களுக்கு பரிசாக அளித்து வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.

ஒரு விஷயம் எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

ஏனோ அவர் இறுதி வரை அம்மாவை பற்றி கேட்கவும் இல்லை.. நான் சொல்லவும் இல்லை.