Ilayaraja-16-2

எப்போதும் இல்லாத அளவிற்கு அந்த இரவு அவ்வளவு அமைதியானதாக என்னுடன் பயணித்துக் கொண்டு இருந்தது. இரவுகள் விசித்திரமானவை. மனித உணர்ச்சிகளை ஒரு இரவால் மூர்க்கம் கொள்ள வைக்கவும், அமைதிப்படுத்தி ஆற்ற வைக்க முடியும் என்பது யாரால் மறுக்க முடியும்.. மனித வாழ்வின் பாடுகளை மனித மனம் அசை போடுவதற்காக இரவு ஒரு நீண்ட அமைதி வெளியை ஏற்படுத்துகிறது.

அப்படி ஒரு இரவில் தான்.. நியான் விளக்குகள் ஒளிர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் எனது மகிழுந்து அமைதியாக விரைந்துக் கொண்டு இருந்தது. தனிமை கொப்பளிக்கும் பயணங்களில் எல்லோருக்கும் வழித்துணையாக வாய்க்கும் இளையராஜா தான் எனக்கும் வழித்துணையாய் வாய்த்திருந்தார். மகிழுந்து ஓட்டப் பழகியதில் இருந்து தனிமையாய் இவ்வளவு நீண்ட தூரம் பயணிப்பது இதுதான் முதன் முறை.ஏறக்குறைய தமிழ்நாட்டை குறுக்கே கடக்கிறேன். இந்த பெருநிலத்தில் நானும் நகரும் புள்ளியாக.. விழிப்புற்ற ஆன்மாவோடு.. துளித்துளியாய் சொட்டும் இரவொன்றில் தனிமையின் விரல் பிடித்து கடப்பது நினைப்பது பரவச வெளியில் உன்மத்தம் கொண்டிருந்தேன்..

எல்லோராலும் கைவிடப்பட்ட..நோயுற்ற ஒரு குழந்தையாய் இந்த உலகத்தில் நான் தோன்றினேன். என் பால்யத்தில் என் அம்மா மட்டும் என் தோழி. அவளின் கலங்கும் விழிகளும்..எதிரே இருக்கும் சாயம் போன வீட்டு வசதி வாரியக் குடியிருப்புச் சுவரும் தான் எனது பால்யக் கால நினைவுகள். அம்மாவின் கதகதப்பான உள்ளங்கைகளுக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்று நம்ப முடியாத எளிய ஆன்மாவை கொண்டிருந்தனாலோ என்னவோ.. இந்த பயணம் எனக்கு மிகப்பெரிய சாகசமாக இருந்தது. வாழவே முடியாது என என்னாலே நம்பப்பட்ட என்னாலும் இந்த உலகில் எந்த புள்ளிக்கும் மிகச்சாதாரணமாக ஒரு பறவைப் போல தனித்து பறந்து போய் விட முடியும் என்கிற பெரு நம்பிக்கையை இந்த பயணமும், என் மகிழுந்தும் எனக்கு தந்திருந்தன..

இரவு விடியலை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. கண்கலங்கியவாறே என்னுள் மகத்தான நம்பிக்கையை ஏற்படுத்திய அந்த பேரன்பின் வெளிச்சத்தில் எனது பயணம் நெகிழ்வின் தாலாட்டோடு நீண்டது. இரவில் மிகப்பெரிய யானை அமர்ந்து இருந்தது போன்ற உறைந்திருந்த அந்த பெருமலைகளும், ஏற்ற இறக்க சாலைகளும் என்னை பரவசத்தில் ஆழ்த்தி இருந்தன..

சற்றே என்னை ஆசுவாசப்படுத்த … சாலையின் ஒரத்தில் இருந்த அந்த தேநீர் கடைக்கு முன்னால் என் மகிழுந்தை நிறுத்தினேன். ஏனோ இறங்க மனமில்லாமல் இருக்கையை சற்று சாய்த்து வேடிக்கை பார்த்தவாறே அமர்ந்திருந்தேன். அது ஒரு எளிய தேநீர் கடை. கடை மூடும் நேரம் போல. அந்த கடைக்காரர் சற்றே கடுகடுப்பும், முணுமுணுப்புகளும் உடைய மனிதராக தெரிந்தார். அந்த கடை வாசலில் அழுக்கு உடைகளோடு அமர்ந்திருந்திருந்த மனநிலை பிசகிய ஒருவரை அவர் ஏசிக் கொண்டிருந்தார். ஏய்..எழுந்து போ.. இனி இங்கே உட்கார்ந்தால் அடிப்பேன்..போ என்றெல்லாம் ஏசிக் கொண்டிருந்தார்.

கடையை மூடி விட்டு கிளம்பும் அவசரத்தில் இருந்த அவருக்கு அந்த மனநிலை தவறியவர் போல இருந்தவர் மிகவும் தொந்தவராக இருந்தார் போல.. கடைக்காரர் ஏதாவது செய்து அவரை விரட்டி விட முயன்றார்.

ஆனால் அந்த ஏச்சு,பேச்சுகளும் அந்த மனநிலை பாதித்தவரை பாதிக்கவில்லை. ஒரு கல்சிற்பம் போல அந்த மனிதர் உறைந்திருந்தார். வெறித்த பார்வையோடும், வாயில் எச்சில் ஒழுக..கலைந்த தலையோடும், தாடியோடும் அவர் அமர்ந்திருந்தது என்னவோ போலிருந்தது. வார்த்தைகளை நீராய் கொட்டி உறைந்திருந்த அந்த மனிதனை அசைக்கப் பார்த்த கடைக்காரர் ஒரு சமயத்தில் அலுத்துப் போனார்.

அருகே இருந்த பண்பலை வானொலியை ஒலிக்க வைத்து விட்டு இருக்கும் நாற்காலிகளை கடைக்காரர் மெதுவாய் அடுக்கி வைக்கத் தொடங்கினார்.

அக்கணத்தில் தான் இளையராஜா பண்பலையில் சோலை பசுங்கிளியே… என்று பாடத்தொடங்கினார். அந்த நள்ளிரவில்.. அப்பாடல் தானாய் தோன்றிய ஊற்றாய் எங்களுக்குள் ஊற தொடங்கியது. அந்த இசையும், அப்பாடலின் வலியும் ஏதோ மனதை பிசையத் தொடங்கினது. அதுவரை கடுகடுப்பாய் இருந்த கடைக்காரர் கூட அமைதியாகி விட்டது போல தோன்றியது. அந்த இரவை தன் வயப்படுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் அந்த பாடல் இழுத்துக் கொண்டே சென்றதை என்னால் உணர முடிந்தது.

பாடல் முடிந்தது. வானொலியை நிறுத்தினார் கடைக்காரர். அந்த நிசப்த வெளியும், கேட்ட இசையும் இந்த உலகை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றிருந்தன. திடீரென பெருங்குரல் எடுத்து கத்தி அழத் தொடங்கினார் அந்த மனநிலை தவறியவர். அவரை வேதனையோடு கடைக்காரர் பார்த்துக் கொண்டிருந்தார்.

மனித வாழ்வு எத்தகையது..? எதற்காக இந்த பாடுகள்… எதற்காக இவ்வளவு வலிகள்… எதை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அதுதானே நம்மை வலித்து கொல்கிறது…? என்றெல்லாம் என் சிந்தனை பல திசைகளில் விரிந்துக் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது..

அதுவரை நிறுத்தி இருந்த அடுப்பை மீண்டும் பற்ற வைத்தார் அந்த கடைக்காரர். ஒரு தேர்ந்த முதிர்ச்சியோடு ஒரு தேநீரை தயாரித்து ஒரு கண்ணாடிக் குடுவையினுள் ஊற்றி அந்த மனநிலை பிசகியவருக்கு அருகே வைத்தார். சாப்பிட்டு இங்கே படுத்துக்கோ.. என்றவாறே விளக்கையும், அடுப்பையும் அணைத்த வாறே அவர் புறப்பட்டார். அடிக்கடி கண்களை துடைத்துக் கொண்டே வேக வேகமாய் நடந்து இருளில் கரைந்துப் போனார் அந்த கடைக்காரர்.

ஆனால் மனநிலை பிசகியவர் அழுகையை நிறுத்தவில்லை. நானும் புறப்பட்டேன். மெதுவாய் மகிழுந்தை ஓட்டிக் கொண்டு போன எனக்கு அந்த அழுகை ஒலியை தாங்க முடியவில்லை.

வலியும்..பாடுகளும்..காயங்களும் இல்லாத ஆன்மா யாருக்கும் இல்லாதது தான் கடவுளை தோற்றுவித்து இருக்கிறது என்று உணர்ந்த தருணம் அது.

இதையெல்லாம் தாண்டி ஒரு இசை..ஒரு குரல்..உயிரை உலுக்கி உள்ளுக்குள் புரையோடிப் போன ஒரு காயத்தை கண்ணீராய் சுரக்க வைக்கிறதே… நரகமாகிப் போன மனித வாழ்வில் ஏதோ ஒரு நொடியில் நம்மை ஆற்றுப்படுத்த கண்ணீர் தானே ஒரே வழி.

இதில் யார் மனநிலை பிசகியவர் என்று யோசித்த போது..நாம் எல்லாருமே தான்.. என்று நினைக்க தொடங்கியது…

இரவின் இருளை கிழித்து..என் மகிழுந்து விரைந்துக் கொண்டிருந்தது.

.