சொற்களின் ஊடே
ஒளிந்திருக்கும்
முட்கள் நட்சத்திரங்களைப்
போல மின்னி..
பேரன்பின் கதிர்களை
மறைக்கின்றனவா
என்றெல்லாம் நான்
சிந்திப்பதில்லை.
இன்னும் கூட
வார்த்தைப் பின்னல்களால்
உருவேறிய அந்த சாட்டை
ஆன்ம உதிரத்தின்
சுவை பருகுகிறது என்று
நான் கலங்குவதில்லை..
ஏனெனில்..
கொடுங்காயத்தின் வலி
மறைத்துக் கூட
என் உணர்வுகளின் நிலா
வெளிச்சம்..
உன் இருட்பாதையில்
உன் துணையாய்
நகரும் என்பதை நான்
அறிவேன்..
உரையாடல்களற்ற
பொழுதொன்று
கால நதியில் சருகென
மிதக்கும் அந்த நொடியில்..
உன் விழிகள் என்னைத்
தேடும்.
நான் தூரத்து புல்லாங்குழல்
இசையாய் கரைந்திருப்பேன்..
அக்காலைப் பொழுதில்
உன் தேநீர் கோப்பையில்..
உதிரும் உன் ஒரு துளி
கண்ணீரைப் பற்றிதான்
கவலை எனக்கு.
உன் குளிர் கால
போர்வையினுள் பரவும்
வெப்பமாய்.. என் கனவுகளை
அன்று நீ உணர்வாய்..
அதற்கு முன் புல்லின்
நுனியில் பூத்திருக்கும்
எனதன்பின்
பனித்துளி யாரும்
அறியாமல்..
அனலேறிய இவ்வாழ்வின்
சூடு பொறுக்காமல் ஆவியான
கதை..
உனது மிச்ச வாழ்வின்
தேடலாய் இருக்கக்கூடும்
என்கிற அச்சத்தில் தான்
உனது விடியலின்
வெளிச்சக் கீற்றாய்..
நான் எரிந்துக் கொண்டே
இருக்கிறேன்..
…..
அதை நீ
தீப்பந்தம் என்கிறாய்..
நான் மெழுகுவர்த்தி என்கிறேன்..
இந்த புரிதலின்
வேறுபாட்டினில் தான்..
இந்த முடிவிலிக் கவிதை..
சில பூக்களோடும்..
சில புன்னகைகளோடும்..
ரகசிய கண்ணீர் துளிகள்
பலவற்றோடும்..
தொடர்ந்துக் கொண்டே
இருக்கிறது.
……….